தீப ஒளி மகிமை பற்றிய கதைகள்
Page 1 of 1
தீப ஒளி மகிமை பற்றிய கதைகள்
1.முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்தார். தன்னை அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெயை குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நின்று விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.
2.ஒரு சமயம் பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே ''லிங்கோத்பவ மூர்த்தி'' ஆகும். இதைப் பற்றி ரிக்வேதம், பாஸ்கரசங்கிதை, சரபஉபநிடதம் முதலிய நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.
3.கார்த்திகைப் பௌர்ணமியில் பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் காட்சி அளிக்கிறார்.
நெல்பொரி நைவேத்தியம்.......
தீப வழிபாட்டில் சிறப்பானது "கார்த்திகை தீபம் ஆகும்''. இது கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது. `அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருது சிந்தை இடுதிரியா என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நாள்' என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.
கார்த்திகை தீபம் ஏற்றும்போது......
"துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை, அன்பர்தமை வாவென்று அழைக்கும் மலை. தன்பகத்தைக் காட்டும் மலை தன்னைக் கருத்தில் உறும் அன்பர் இடம் வாட்டுமலை அண்ணாமலை.'' பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளைகளைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும், தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் நிறுத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே. இந்தப் பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
புதன்கிழமை கிருத்திகை விரதம்.........
நாளை மாலை 6.26 மணிக்கு பவுர்ணமி தொடங்கு கிறது. புதன்கிழமை இரவு 8.29 வரை பவுர்ணமி உள்ளது. எனவே கிருத்திகை விரதம் கடைபிடிப்பவர்கள் புதன் கிழமைதான் அந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஜோதிர் லிங்க பூஜை......
இறைவனை ஜோதி வடிவமாகவும், லிங்க வடிவமாகவும் வழிபடுகிறோம். எனவே நாளை ஜோதிர் லிங்க வழிபாடு செய்தல் வேண்டும். தென்மாவட்டங்களில் ஜோதிர் லிங்கர் ஏற்றி சொக்கர்பனை ஏற்ற வேண்டும். அதிலிருந்து தீபம் பெற்று கோவில்களில் இரவு 7.45 மணி முதல் 9.00 மணிக்கு பூஜைகள் நடத்தி முடிக்கலாம்.
பூஜைக்கு ஏற்ற விளக்குகள்.....
குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடை யது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.
சொக்கப்பனை.....
வீட்டளவில் தீபம் என்பது ஊரளவில் சொக்கபனை. சொக்கப்பனையின் உள்ளர்த்தம் மன இருள் அகன்று அக ஒளி ஏற்பட்டால் தீயன கருகும் ஞான ஒளி மனதில் உண்டாகும். தீயன தூசாகும் என்பதே. கார்த்திகை பவுர்ணமியன்று பல ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. அதில் பனை ஓலை கொளுத்தப்படுகின்றது. பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மற்றவர்களுக்காக பயன்படுகின்றது. கொழுத்தப்பட்ட பனை ஓலையின் சாம்பல் கூட புனிதமானது. அதுவும் நமக்கு பயன்படுகின்றது. அது போல நாமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது.
குப்பைக் கார்த்திகை.......
கார்த்திகைப் பண்டிகையின் முதல் நாள் பரணி தீபம். இரண்டாம் நாள் கார்த்திகைத் தீபத்திருவிழா. மூன்றாம் நாள் `குப்பைக் கார்த்திகை' என்று கொண்டாடப்பட வேண்டும். அன்று, மாட்டுக் கொட்டகை, கொல்லைப்புறம், குப்பைத் தொட்டி ஆகிய எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றுவதை தமிழர்கள் பல நூற்றாண்டு பாரம்பரிய பழக்கமாக வைத்துள்ளனர்.
ஜோதி பெருமாள்.......
கார்த்திகையன்று காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளி பெருமாள் கோவிலிலும் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பூமியில் தனக்கு கோவில் இல்லை என்பதால் பிரம்மன், சிவனை நோக்கி யாகம் நடத்தினார். அப்போது அவர் தன் மனைவி சரஸ்வதியை உடன் வைத்துக் கொள்ளவில்லை. இதனால் யாகம் முழுமை பெறவில்லை.
யாகத்துக்கு அழைக்காததால் கோபத்தில் இருந்த சரஸ்வதியை விஷ்ணு பகவான் சமாதானம் செய்தார். பிறகு விஷ்ணு ஜோதியாக மாறி நின்றார். இதனால் யாகம் தடையின்றி நடந்து முடிந்தது. எனவே காஞ்சீபுரம் பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. கார்த்திகை தினத்தில் இந்த பெருமாள் சன்னதியில் தீபம் ஏற்றி வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum