தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 13 - மூன்றாம் பாவம்

Go down

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 13 - மூன்றாம் பாவம் Empty புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 13 - மூன்றாம் பாவம்

Post  meenu Wed Feb 06, 2013 1:39 pm



ஆனமூன்றா மிடத்தினரும்பலன்
மானவீரியம் மற்றுயர்சேர்க்கையும்
தானயோகந் தயிரியஞ்சோதரர்
ஈனவேலை இருங்கலன் வீரமே.


மூன்றாம் இடத்தின் பலன்களாவன; மானவீரம், உயர்ந்தவர்கள் நட்புக்கொள்ளுதல், தானத்தில் ஈடுபாடு மேலானதாகக் கொள்ளும் யோகமும், வீரமும் வேகமும் கொண்ட சோதரர் ஸ்தானம் என்றும், ஈனவேலையில் வீறுடனும் வீரத்துடன் செயல்படுதலும் ஆன பலன்களைக் கூறலாம். (எ-று)

இப்பாடலில் மூன்றாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 14 - நான்காம், ஐந்தாம் பாவம்


வித்தை வாகனம் வீடுசுபஞ்சுகம்
மெத்தையன்னை மிகுசுகநான்கதாம்
பத்தின்பாதி பழையசீமான் கந்திரம்
வித்தை புத்திபுத்திரர் செல்வமே


நான்காவது பாவகத்தின் மூலம் வித்தை, வாகனம், வீடு, சுபம் மற்றும் மெத்தை, தழுவணை மிகுவதும் ஆன சுகபோகங்களையும் அறியலாம்.பத்தில் பாதியான ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானமானதால் முன்னோர் பெருமை கல்வி, வித்தை நலம், சிறந்த புத்தி மற்றும் புத்திரர் செல்வம் ஆகியன பற்றித் தெற்றென எழுதலாம். (எ-று)

இப்பாடலில் நான்காவது, ஐந்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 15 - ஆறாம் பாவம்


ஆறா மிடத்தின் னதுபலன் றானப்பா
ஆயுதத்தால் ரணஞ்சொல்லு ஞாதிதுன்பம்
வீரான யுத்தமொடு திரவியநஷ்டம்
மிகுதிருடர் ஜலமடந்தை விளையுஞ்சோர்வும்
கூறான மெய்வாதை பெண்ணால்கண்டம்
கூடுமேபெரும்பாலும் நோயுமென்று
பேரான சிறைச்சாலை கிட்டுமென்று
பேசினேன் புலிப்பாணி பிரியத்தோட


ஆறாம் இடத்தினால் அரியத் தரும் பலன்களாவன: ஆயுதத்தால் ஏற்படும் அபாயம், தாயாதிகளால் ஏற்படும் துன்பம், யுத்தபயம், திரவிய நஷ்டம், திருடர்களால் ஏற்படும் தொல்லை, ஜலகண்டம், பெண்களால் ஏற்படும் துன்பங்கள், செய்வினைகளால் சோர்வுறுதல், உடலுபாதை, பெண்ணால் ஏற்படும் கண்டம் நோய்கள் மற்றும் சிறை வயப்படும் தொல்லைகள் ஏற்படுமென் பிரியமாக புலிப்பாணி குருவருளாலே கூறினேன். (எ-று)

இப்பாடலில் ஆறாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 16 - ஏழாம் பாவம்


சப்தமத்தின் பலன்கேளூ மணமதாகும்
தகுமடந்தை புதல்வர்க்குச் சான்றுமின்பம்
சித்தமுள வுபகார மனஞ்சுற்றத்தார்
அபிமானமரசரது சேர்சன்மானம்
தத்துகயல் விழிமாது சேர்க்கைநன்றாய்
சதிருடனே தான் வந்து சேருமென்று
கொத்தாக நீயறிந்து கூறுவாயேல்
குறிதப்பா பலன் வந்து கூடுமன்றே.


சப்தமஸ்தானம் என்னும் ஏழாம் இடத்தினால் ஏற்படும் பலன்களாவன: மணம் நிகழ்தலும் நல்ல மனைவியும், புதல்வர்கள் வாய்த்தலும் அவர்களால் இன்பம் வாய்த்தலும் சுற்றத்தார் உறவு அதிகமாதலும் அவர்களது அபிமானம் நேருதலும் அரச சன்மானம் வாய்த்தலும் போகஸ்திரீகள் வாய்த்தலும் நிஷ்களங்கமின்றி வந்து சேரும்மென்று ஆராந்து அறிந்து கூறின் புலிப்பாணி குருவருளால் குறித்துச் சொன்ன குறி தப்பாது. [எ-று]

இப்பாடலில் ஏழாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 17 - எட்டாம் பாவம்


அஷ்டமயோக மரும்பிணி சண்டையும்
நஷ்டங்கிலேசம் பகைநன்மரணமும்
துஷ்டடம்பமும் துன்றுமலையேறி
கஷ்டப்பட்டு கலங்கி விழுதலே


அஷ்டம பாவகத்தால் அரிய நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும் மனம்பேதலித்தலையும், பகைமையையும், மரணசம்பவத்தையும், துஷ்டத்தனத்தையும், வீண்டம்பத்தையும், மலைமீதுஏறிமிகுந்த துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.

இப்பாடலில் எட்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 18 - ஒன்பதாம் பாவம்


ஒன்பதாம்பல னாகுமுபதேச
மின்பகூப மிகும் பணிகூபமும்
வன்வதான பரியும் வளப்பமும்
தன்மதானந் தனங்களுஞ்சாற்றுவர்


ஒன்பதாம் பாவகத்தால் ஏற்படும் பலன்களாவன: ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும் ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம் கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும். [எ-று]

இப்பாடலில் ஒன்பதாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 19 - பத்தாம் பாவம்


பத்தாகு மிடத்தினது பலனைக்கேளு
பட்டணங்கள் தாபித்தல் பலங்களோடு
வித்தான பலபுண்ணியந் தேசாபிமானம்
வீறான அரசனொடு கருமம் ஞானம்
சித்தமதி லிரக்கமிகு தெய்வபக்தி
சேருகின் றசவுரியமுங் கொப்பமூணும்
நத்துகின்ற பூசையோடு மனைவிசேர்க்கை
நலமாக விப்பலனை நவிலுவாயே.


பத்தாம் பாவகத்தின் பலன்களாவன: பட்டினங்கள் ஸ்தாபித்தலும், நல்லூழோடு பல புண்ணியம் செய்தலும் தேசாபிமானமும், அரசரோடு இணக்கமுறுதலும் நற்கருமம் ஞானம் முதலிய வாய்த்தலும், மனத்தில் இரக்க உணவு இழையோடுதலும் மிகுந்த தெய்வ பக்தியும் சிறந்த செளகரியமும் கருப்பம் வாய்த்தலும் நல்ல உணவு வாய்த்தலும் வெகுவான பூசைகளைச் செய்வதோடு துணைவி சேர்க்கையும் நலமாகக் குறித்தறிந்து கூறுவாய். [எ-று]

இப்பாடலில் பத்தாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 20 - பதினோராம் பாவம்


பத்தின்மேலொன்றாகும் பலனைநன்றாய்
பகருகிறேன் பயிர் வளப்பம் பரிநல்வேழம்
வித்தைமிகு லாபங்கல் லறிவுசேர்க்கை
மிகுமனதிற்றூக்கமொடு சிவிகைசேரும்
உத்தரியஞ் செறிந்தபசும் பொன்னையொத்த
உயர்மனைவி யோகமது முதலாயுள்ள
மெத்தவே நீயறிந்து விளம்புவாயேல்
வேதமா யுன்வார்த்தை விரும்புவாரே


பதினோராம் இடத்தின் பலன்களாவன: விவசாய அபிவிருத்தி ஏற்படுதலும், பரியொடு யானை முதலியன வாய்த்தலும் (வாகனங்கள் அமைதலும்) நல்ல வித்தைகள் வாய்த்தலும், மிகுந்த இலாபங்கள் வாய்த்தலும், நல்ல அறிவுடையோர் தொடர்பு வாய்த்தலும், மனத்தில் ஊக்கமும் சிவிகை சேர்தலும், உத்தரியம் மகரகண்டிகை வாய்த்தலும், நன்மனைவி யோகமும் இது போன்ற நன்மையானவை யெல்லாம் நன்கு ஆராய்ந்து குறித்துக்கூற உன்றன் வார்த்தைகளை வேதமாய், எண்ணிக் கொண்டாடுவார்கள். [எ-று]

இப்பாடலில் பதினோராம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 21 - பன்னிரண்டாம் பாவம்


பத்தின்மேல் இரண்டாகும் பெயரைக்கேளு
பரதேச வுத்தியோகம் பணத்தின்சோர்வு
சத்தான பலியோக சயனம் தியாகம்
தர்மமொடு கர்மபலன் சவுக்கியமாக
வித்தான பலபுண்ணிய விவாதமோடு
விளைந்திடுமே தொழிலான பலதானங்கள்
கத்தாதே போகருட கருணையாலே
கரைந்திட்டேன் புலிப்பாணி கருத்தைத்தானே.


பன்னிரண்டாம் பாவகத்தின் பலன்களாவன: பிறதேச செளக்கியம், உத்தியோகம், பணத்தால் ஏற்படும் சோர்வு பலயோகங்கள் வாய்த்தலும் சயன சுகம், தியாகம், தர்மம் ஆகியவற்றோடு கர்மபலனும் மற்றும் சுகமடைதலும், பல புண்ணிய சம்பந்தமும் விவாதத்தில் வல்லமையும் ஏற்படக் கூடிய தொழில்களும் பற்பல தானங்களும் வாய்த்தலை உணர்ந்து கூறினால் நன்மை பயக்கும் எனக் குருவருள் கொண்டு புலிப்பாணி கூறினேன். [எ-று]

இப்பாடலில் பன்னிரண்டாம் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 22


சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன்
சொலிக்கின்ற கதிர்மதிசேய் கணக்கன்பாம்பு
ஆதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளே
அடக்கிவைத்தார் கோள்களையும் ஆயன்தானும்
வாதியென் ஞானியும் பலவாறாக
வையகத்தில் பூட்டிவைத்தார் வரிசையாக
சாதகமாய் சென்மனுக்கு சுட்டிக்காட்டி
சமர்த்தாகப் பலன் சொல்லும் குறியைக்கேளே.


சோதிவடிவான குருவும், சுக்கிரன்,நீலனும் சனியும் ஒளி வீசுகின்ற சூரியனும்,சந்திரனும், செவ்வாய்க் கிரகமும், இன்னும் புதபகவானும் பாம்பிரண்டும் ஆகிய இந்த நவகோள்களையும் ராசிமண்டலமான பன்னிரு ராசிகளுக்குள்ளே அடக்கி வைத்தார் பேரொளிப்பிழம்பான இறைவன்.இது குறித்து வாதிட்டுக் கணித்த ஞானியர் பூவுலகில் வரிசைப்படுத்தி கூறிவைத்துள்ளார்கள். எனவே [ஒருவன் தன் ஜென்மஜாதகம் குறித்துக் கேட்க வருவானேல்] அவனுக்குச் சாதகத்தைக் கூறும் சமர்த்தான முறையினைக் கூறுகிறேன். எனது குறிப்பினை நன்கு உணர்ந்து கூறும் வகையைக் கேட்பாய்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர்

கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜெனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள்குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் 1,5,9, ஆகிய கோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாகக் கேந்திரத்தில் அ·தாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால் கெடுபலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமிகடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது திசாபுத்திகளில் சொல்க. [எ-று]

இப்பாடலில் மேஷ இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/mesha_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர்



சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு

சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.

அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற

அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு

தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம்

தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு

குள்ளப்பா குருமதியுங் கோணமேற

கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே


அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குருபகவான் கேந்திரத்தில் [1,4,7,10 ஆகிய இடங்களில்] நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம்,உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக. [எ-று]

இப்பாடலில் ரிஷபம், மிதுன இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/rishaba_lagna.jpg


http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/mithuna_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 25 - கடக இலக்கின ஜாதகர்


கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு
கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி
வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து
வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே
சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க
சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு
கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா
கொற்றவனே நிலைசமயம் கூற்ந்துபாரே


கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீயபலன்களைத்தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரசித்தும் இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவபரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது. [எ-று]

இப்பாடலில் கடக இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/kadaka_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர்


பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு
பவுமனுமே திரிகோண மேறிநிற்க
சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி
சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு
வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க
வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்
கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே
கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.


சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்மலக்கின ஜாதகருக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவபரம்பொருளின் பேரருளேயாகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக. [எ-று]

இப்பாடலில் சிம்ம இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/simma_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர்


குறித்திட்டேன் கன்னியிலே உதித்தபேர்க்கு
குற்றம்வந்து நேருமடா குருவினாலே
பரித்திட்டேன் பண்டுபொருள் நிலமும்சேதம்
பகருகின்ற குருபதியும் கோணமேற
சிரித்திட்டேன் சென்மனுக்கு வேட்டலுண்டு
செந்திருமால் தேவியுமே பதியில் வாழும்
குறித்ததொரு மனை தனிலே தெய்வமுண்டு
குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே


கன்னியா லக்கினத்தில் உதித்த பேர்க்குக் குருவினால் வெகு துன்பம் வாய்த்திடுதல் உண்மையேயாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வர். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணியாகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.

இப்பாடலில் கன்னி இலக்கின ஜாதகர் இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/kanni_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 28 - துலாம் இலக்கின ஜாதகர்


கூறினேன் கோலுட யில்லு மாகில்
கொற்றவனே கதிரவனும் கோணமேற
சீரி§¨ன் சென்மனுக்கு யோகம்மெத்த
சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு
மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க
மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா
தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே
திடமான புலிப்பாணி தெரிவித்தேனே


இலக்கினம் துலாம் ஆக இருக்க அவ்விலக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான1,5,9-இல் சூரியன் நிற்கப் பிறந்தஜாதகணுக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால்கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திசாபுத்திகள் மிகவும் தொல்லை தருவனவேயாகும். இதுவே என் குருநாதர் போகரது அருட்கருணை கொண்டு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெறஎடுத்துச் சொன்னேன். உணர்க! [எ-று]

இப்பாடலில் துலாம் இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/thula_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 29 - விருச்சிக இலக்கின ஜாதகர்



தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம்பொருளும் அடிமைசெம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே


தேள்சின்னம் கொண்டவிருச்சிக இலக்கினத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன். நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும், அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும் அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான். ஆனால் 1,4,7,10 ஆகிய கேந்திரஸ்தானத்தில் அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும். இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன். நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க. [எ-று]

இப்பாடலில் விருச்சிக இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/virichaga_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர்


பாரப்பா வில்லதனில் உதித்தபேர்க்கு
பகருவேன் புந்தியுமே பகையுமாவர்
சீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்
சிவசிவா செம்பொன்னும் சேதமாகும்
நீரப்பா நெடுமாலும் கோணமேற
நீணிலத்தில் பேர்விளங்கும் நிதியுமுள்ளோன்
ஆரப்பா போகருட கடாக்ஷத்தாலே
அப்பனே புலிப்பாணி பாடினேனே


இராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையாக்கொண்ட தனுசு ராசியைஇலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகலப்படும் புதபகவான் பகையானவர். அவரால், செம்பொன்விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யவசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் 1,5,9 ஆகிய் திரிகோணஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன். [எ-று]

இப்பாடலில் தனுசு இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/danusu_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 31 - மகர இலக்கின ஜாதகர்


அறைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு
அப்பனே மகரத்தில் உதித்தசேய்க்கு
திரந்திட்டேன் திரவியமும் மனையும் சேதம்
தேசமா ளரசனுட பகையுண்டாகும்.
குறைந்திட்டேன் கொடுஞ்சேயும் கோணமேற
கோவேறு கழுதைகளும் காவல் மெத்த
பரந்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
பதியறிந்து புவியோர்க்குப் பாடினேனே


இன்னுமொன்றையும் சொல்வேன்; நன்கு ஆராய்ந்து கேட்டுத் தெரிந்து கொள்வாயாக! மகர லக்கினத்தில் பிறந்த சாதகனுக்கு திரவிய நாசமும் மனை நாசமும் தேசத்தை ஆளும் மன்னரின் பகையுமுண்டாகும். ஆனால் சனி, சேய் [செவ்வாய்] ஆகிய கிரகங்கள் கோணத்தில் வீற்றிருந்தால் நிறைந்த பதி வாகனப் பிராப்தியும், பாதுகாவல் மிகுதியும் உண்டென்றும் எனது குருவான போகரின் கருணை கொண்டே கூறுகிற புலிப்பாணி ஆகிய என்றன் கருத்தை கிரக நிலவரத்தை ஆய்ந்தறிந்து கூறவேண்டியது நன்மை தரும்.

இப்பாடலில் மகர இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/makara_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 32 - கும்ப இலக்கின ஜாதகர்


பாடினேன் இன்னமொரு புதுமைகேளு
பாங்கான கும்பத்தி லுதித்த சேய்க்கு
ஆடினேன் அசுரர்குரு கோணமேற
அப்பனே உப்பரிகை மேடையுண்டு
தேடினேன் திரவியமும் சென்னல் பூமி
திடமாகச் சேருமடா செல்வமுள்ளோன்.
கூடினேன் கேந்திரமும் நட்புமே
கொற்றவனே துர்ப் பலனைக் கூறுவாயே


நான் என்கவியில் பாடுகின்ற இன்னொரு புதுமையையும் மனங்கொண்டு கேட்பாயாக! மிக அழகிய கும்ப லக்கினத்தில் உதித்த மகனுக்கு அசுரர் தம் குருவான சுக்கிராச்சாரியார் திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால் உப்பரிகையும் சிறந்த மேடையும், இணையற்ற திரவியமும் செந்நெல் விளையும் நறுவிய பூமியமைதலும் நிச்சியமாக நேரும். மிகு தனவானாக சிறந்து வாழ்வான். ஆயினும் கேந்திர [1,4,7,10] நட்பு ஸ்தானங்களில் சுக்கிரபகவான் இருந்தால் மேற்குறித்த பலனுக்கு நேர்மாறான பலன்களைக் குறித்து கிரக நிலவரம் அறிந்து கூறுவாயாக! [எ-று]

இப்பாடலில் கும்ப இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/kumba_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 33 - மீன இலக்கின ஜாதகர்


கூறேநீ மீனத்தில் குழவிதோன்ற
கொற்றவனே மாலோடு வெள்ளியாகா
ஆரேநீ அகம் பொருளும் நிலமுஞ்சேரும்
அப்பனே அங்கத்தில் மச்சமுண்டு
பாரேநீ கோணத்தி லிருந்த பேர்க்கு
பகருவாய் நற்பலனை யறிந்துநீதான்
யேரேநீ போகருட கடாக்ஷத்தாலே
யெமலோகஞ் சேர்வனடா இயம்பினேனே


மீன இலக்கினத்தில் பிறந்த சாதகனுக்கு புதனும், சுக்கிரனும் தீமை செய்யும் கிரகங்களேயாகும். அவர்களால் வீடு, திரவியம், நிலபுலன் வாய்த்தல். நேர்தலும் அங்கத்தில் மச்சமுண்டாதலும், இவர்கள் திரிகோணஸ்தானத்தில் நின்ற பேர்க்கு வாய்க்கும். இத்தகைய நற்பலன்களை கிரக நிலவரங்களை நன்கு ஆராய்ந்து கூறுக. என் குருநாதராகிய போகமா முனிவரது அருளாணையால் நான் அறிந்து கொண்ட வண்ணம் இச்சாதகன் எமலோகம் சேர்வது திண்ணம் என நான் உரைத்தேன். [எ-று]

இப்பாடலில் மீன இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
http://www.tamilkalanjiyam.com/astrology/pulippani/images/meena_lagna.jpg
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 34 - இலக்கினத்தில் மாந்தி


காணப்பா இன்னுமொரு செயலைக்கேளு
கனமுள்ள குளியனுமே பதியில்நிற்க
ஆணப்பா அகம்பொருளும் நிலமுங்காடி
அப்பனே அயன்விதியும் தீர்க்கஞ்சொல்லு
கூணப்பா குளியனுமே துதியில்நிற்க
கொற்றவனே கலகனடா நேத்திரரோகன்
தாணப்பா தனவிரயம் தோடம் சொல்லு
தரணிதனில் துஷ்டனென்று கூறுகூறே


சோதிடம் கூறப்புகும் மகனே! இன்னுமொன்றையும் நன்கு உணர்ந்து கொள்வாயாக. சனியின் மைந்தனும் மாந்தி என்றும் குளிகன் என்றும் கூறப்படும் கிரகமானது லக்கினத்தில் அமைந்தால் அச்சாதகனுக்கு நல்ல மனை வாய்த்தலும் நிறைதனமும், நிலம் முதலியன அமைதலோடு அவனது விதியும் தீர்க்கமானதாக அமையும் என்று கூறுக. ஆனால் தனஸ்தானமான இரண்டாமிடத்தில் அமைய அவன் கலகன் எனவும் நேத்திர ஊனம் உறுவோன் என்றும் அதாவது கண்களில் ரோகம் பெறுபவன் என்றும், தனவிரயம் செய்வன் என்பது மட்டுமல்லாமல் தரணியில் துஷ்டன் எனவும் பெயர் வாங்குவன் என நீ துணிந்து கூறுவாயாக. [எ-று]

இப்பாடலில் இலக்கினத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum