தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேளாங்கண்ணி ஒரு கண்ணோட்டம்

Go down

வேளாங்கண்ணி ஒரு கண்ணோட்டம் Empty வேளாங்கண்ணி ஒரு கண்ணோட்டம்

Post  amma Sat Jan 12, 2013 3:49 pm

இயேசுவின் தாயான மரியா, வேளாங்கண்ணியில் காட்சி அளித்து நான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்டாலும் அந்த தாயைத் தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையை நம்பிக்கையோடு நாடிச் சென்ற எவரும் கைவிடப்பட்டதாக வரலாறு கூறவில்லை. அந்த அன்னையின் திருத்தல வளாகத்தைப் பார்வையிட இதோ ஒரு சிறிய வழிகாட்டுதல்...

நடுத்திட்டு ஆலயம்:

வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் இறங்கியதும் கிழக்கு திசை நோக்கி சிறிது தூரம் சென்றால், இடது புறத்தில் நடுத்திட்டு என்ற இடம் உள்ளது. தரை மட்டத்தில் இருந்து சற்று உயரமாக காணப்படும் இந்த இடத்தில்தான் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவனுக்கு அன்னை மரியா காட்சி அளித்து, அவனை எழுந்து நடக்கச் செய்தார்.

அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இங்கு ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நமது உடல் நோய்களை குணமாக்குமாறு அன்னையின் உதவியை மன்றாட நடுத்திட்டு ஆலயம் சிறந்த இடம். முழு நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டால் அன்னை கேட்ட வரத்தை தராமல் இருந்ததில்லை என்பது பக்தர்களின் அனுபவம்.

முதன்மைப் பேராலயம்:

நடுத்திட்டு ஆலயத்தில் இருந்து வெளியேறி, மேலும் சற்று தூரம் கிழக்கு நோக்கிச் சென்று வலது பக்கமாக திரும்பும் சாலையில் சென்றால், வேளாங்கண்ணிப் பேராலயத்தின் முன்புறத்தை அடையலாம். இங்கு அமைந்துள்ளதுதான் வேளாங்கண்ணியில் கட்டப்பட்ட முதல் பெரிய ஆலயம். இந்த ஆலயத்தின் நடுவில் வேளாங்கண்ணி அன்னையின் அழகான சொரூபம் அமைந்துள்ளது.

போர்ச்சுக் கீசியர்களால் கட்டப்பட்ட பீடத்தின் மேற்கூரையில் அன்னை மரியாவின் வாழ்க்கை நிகழ்வுகள் அழகான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பக்தர்களின் தரிசனத்துக்கு மிகவும் புகழ்பெற்ற ஆலயம் இது. இந்த ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ள கொடிமரம்தான், மரியன்னையால் புயலில் இருந்து காப்பாற்றப்பட்ட போர்ச்சுக் கீசியர்களின் பாய்மரத் தூணாக இருந்தது.

ஆலயத்தின் தென்புறத்தில் குடும்ப உறவு நிலைத்திருக்க பக்தர்கள் பூட்டுப்போட்டு வேண்டுதல் செய்வதைக் காணலாம். தலைமுறை நிலைக்க தென்னங் கன்றுகளை காணிக்கை செலுத்தும் வழக்கமும் பாரம்பரியமாக உள்ளது.

வியாகுல அன்னை ஆலயம்:

வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயத்தின் எதிரே கிழக்கில் கடலுக்கு செல்லும் வழியில் வியாகுல அன்னை சிற்றாலயம் உள்ளது. மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் இறந்த இயேசுவை மடியில் சுமந்து, சோகத்துடன் காணப்படும் அன்னை மரியாவின் சொரூபம் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை இந்த ஆலயத்தில் கண்ணீருடன் அன்னையிடம் கூறுவதைக் காண முடிகிறது. இறைமகன் இயேசுவுக்காக தனது வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்தித்த அன்னை மரியா, நம் வாழ்வின் துன்பங்களுக்காக கடவுளை வேண்டி உதவி பெற்றுத் தருவார் என்பது இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தின் அருகிலேயே திருத்தல முடித்திருத்தகம் உள்ளது. வேண்டுதல் மொட்டைப் போடும் பக்தர்கள் அங்கு தங்கள் முடியைக் காணிக்கை செலுத்துகின்றனர்.

காணிக்கை காட்சியகம்:

முதன்மைப் பேராலயத்தின் நேர் எதிரே உள்ள கட்டிடத்தில் காணிக்கைப் பொருட்கள் காட்சியகம் அமைந்துள்ளது. வேளாங்கண்ணி மாதாவிடம் வேண்டியதால் தங்களுக்கு கிடைத்த நன்மைகளுக்கு நன்றியாக பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பொருட்கள் இங்கு காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

வீடு கட்டியதற்கு நன்றியாக, மருத்துவ படிப்பு கிடைத்ததற்கு நன்றியாக, குழந்தை பிறந்ததற்கு நன்றியாக, திருமணம் நடைபெற்றதற்கு நன்றியாக, வேலை கிடைத்ததற்கு நன்றியாக, இதய நோய் குணமானதற்கு நன்றியாக, பார்வை கிடைத்ததற்கு நன்றியாக, கால் சரியானதற்கு நன்றியாக, விபத்தில் தப்பி உயிர் பிழைத்ததற்கு நன்றியாக... என்று காணிக்கைப் பொருட்களோடு இணைந்திருக்கும் குறிப்புகள் அன்னையின் கருணையையும், ஆற்றலையும் அனைவருக்கும் எடுத்துரைக்கும் சான்றுகளாக அமைந்துள்ளன.

பின்புற ஆலயங்கள்:

வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயத்தின் பின்புறம் சென்றால், இரண்டு ஆலயங்களை தரிசிக்கலாம். தரையிலும் மாடியிலும் உள்ள இந்த இரண்டு ஆலயங்களும் முதன்மைப் பேராலயத்தோடு இணைந்த வண்ணம் அமைந்துள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்க வசதியாக முதன்மைப் பேராலயத்தில் இருந்து இவை விரிவுபடுத்திக் கட்டப்பட்டன.

பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்பதற்காக இந்த ஆலயங்களில் திருப்பலி நிகழ்த்தப்படுகிறது. இந்த பின்புற ஆலயங்களுக்கு நடுத்திட்டு ஆலயத்துக்கு எதிரே அமைந்துள்ள சாலை வழியாகவும் வர முடியும். அந்த பாதையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்நாளில் பெறுகின்ற ஏழு திருவருட்சாதனங்களை விளக்கும் காட்சிகள் உள்ளன.

திருப்பயணப் பாதை:

பின்புற ஆலயங்களில் இருந்து மாதா குளம் ஆலயத்திற்கு மேற்கு நோக்கி செல்லும் வழி திருப்பயணப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதையின் ஒரு பக்கத்தில் இயேசுவின் சிலுவைப் பயணத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் அமைந்துள்ளன.

கத்தோலிக்க நம்பிக்கையின் அடிப்படையில், இயேசுவைத் தீர்ப்பிட்டது முதல் இயேசு சிலுவையில் இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்தது வரையிலான 15 நிலைகள் வரிசையாக இடம் பெற்றுள்ளன.

மற்றொரு பக்கத்தில் இயேசுவின் பிறப்பு, குழந்தைப்பருவம், துன்பங்கள், இறப்பு, உயிர்ப்பு, அன்னை மரியாவின் விண்ணக மகிமை ஆகியவற்றை விளக்கும் செபமாலை மறையுண்மைகளின் 15 காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வழியின் நடுவில் அமைந்துள்ள மணல் பரப்பில், வேண்டுதல் நிறைவேறுவதற்காக பக்தர்கள் முழங்காலிட்டபடியே மாதா குளம் ஆலயத்தை நோக்கி பக்தியுடன் நகர்ந்து செல்வதை எப்பொழுதும் காண முடிகிறது.

மாதா குளம் ஆலயம்:

திருப்பயணப் பாதையின் முடிவில் மாதா குளம் ஆலயம் அமைந்துள்ளது. பால்க்கார சிறுவனுக்கு அன்னை மரியா காட்சி அளித்த இடத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் மனதுருகி அன்னையிடம் வேண்டும் காட்சியை இங்கு காண முடிகிறது. வேளாங்கண்ணியில் அன்னையின் முதல் காட்சி நிகழ்ந்த இந்த இடத்திற்கு சாட்சியாக, ஆலயத்தின் முன்புறம் கிணறு போன்று சுருங்கி காட்சியளிக்கும் மாதா குளம் உள்ளது.

இந்த குளத்தின் மூடியில் பொறிக்கப்பட்டுள்ள `மரியே வாழ்க!' என்ற வார்த்தைகளை மூடியின் துளைகள் வழியாக காண்பதற்கு பக்தர்கள் தனி ஆர்வம் காட்டுகின்றனர். ஆலயத்தின் தெற்கில் அமைந்துள்ள மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில்களும், திருமண வேண்டுதல்களுக்காக மஞ்சள் கயிறுகளும் கட்டப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. மாதா குளத்தின் தண்ணீரும், புனித எண்ணெயும் அருகில் விற்பனை செய்யப்படுகின்றன.

விடியற்கால விண்மீன் ஆலயம்:

மாதா குளம் ஆலயத்துக்கு செல்லும் திருப்பயணப் பாதையின் வடக்கில் விடியற்காலை விண்மீன் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. `விடியற்காலை விண்மீன்' அல்லது `மார்னிங் ஸ்டார்' என்பது `மரியா' என்ற பெயரின் பொருள் ஆகும். கடலில் பயணம் செய்பவர்கள் திசை அறிய உதவும் விடிவெள்ளியை இது குறிக்கிறது. பெருமளவிலான பக்தர்கள் ஒரே இடத்தில் வழிபாட்டில் பங்கேற்க உதவும் விதத்தில் இந்த பிரமாண்ட ஆலயம் புதிதாக கட்டப்படுகிறது.

ஆராதனை ஆலயம்:

திருப்பயணப் பாதையில் பயணம் செய்து மீண்டும் வேளாங்கண்ணிப் பேராலயத்தின் பின்புற ஆலயங்களை நோக்கிச் சென்றால், வலது பக்கத்தில் ஆராதனை ஆலயம் உள்ளது. பாதையில் இயேசுவின் பணி வாழ்வை விவரிக்கும் ஒளியின் மறையுண்மை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாளில், தனது சீடர்களோடு இறுதி இரவுணவு அருந்திய வேளையில், அப்பத்தை தன் உடலாகவும், திராட்சை ரசத்தை தன் ரத்தமாகவும் சீடர்களுக்கு கொடுத்தார். அந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையிலேயே, கத்தோலிக்க திருப்பலி வழிபாடு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பலியில் அர்ப்பணிக்கப்பட்ட அப்பம் இயேசுவின் சதையாக மாறுகிறது என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. எனவே அது நற்கருணை என்று அழைக்கப்படுகிறது. நற்கருணையை ஆராதிக்கும் வழக்கம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே உள்ளது. இத்தகைய ஆராதனைக்காகவே நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்ட ஆராதனை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மெழுகுவர்த்தி, சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது.

ஜெப பூங்கா கண்காட்சி:

ஆராதனை ஆலயத்தின் அருகில் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்ற இயேசுவுக்கு யோவான் சான்று பகர்வது போன்ற காட்சி அருவி பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் நீரூற்றுகள், புல்வெளிகளுடன் அழகாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா அமைதியான செப சூழலை உருவாக்கித் தருகிறது.

பக்தர்கள் பலரும் செபம், தியானம் ஆகியவற்றில் ஈடுபடவும், இயற்கையை ரசிக்கவும் இந்த பூங்காவுக்கு வருகை தருகின்றனர். செப பூங்காவுக்கு அருகில் மீட்பின் வரலாறு கண்காட்சி கூடம் உள்ளது. மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்க, இயேசு இந்த உலகிற்கு வந்ததன் வரலாற்றை இங்கு காணலாம்.

பைபிளின் அடிப்படையில் ஆதாம், ஏவாள் முதல் இயேசுவின் உயிர்ப்பு வரையிலான பல காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கீழே வேளாங்கண்ணியில் அன்னை மரியா காட்சியளித்த வரலாற்றையும் ஓவியங்களாக காண முடிகிறது.

கடைகள் - விடுதிகள்:

வேளாங்கண்ணிப் பேராலயத்தைச் சுற்றிலும் பல இடங்களில் சிறிய, பெரிய கடைகள் அமைந்துள்ளன. அவற்றில் கிறிஸ்தவ சமயம் சார்ந்த படங்கள், சொரூபங்கள் போன்றவற்றோடு, ஃபேன்சி கடைகளில் கிடைக்கும் அனைத்து விதமானப் பொருட்களும் கிடைக்கின்றன. கடற்கரைக்கு செல்லும் வழியில் பொரித்த மீன்களை விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன.

வேளாங்கண்ணிப் பேராலய நிர்வாகத்தின் சார்பில், பல விடுதிகள் கட்டப்பட்டு திருப்பயணிகளின் வசதிக்காக நியாயமான வாடகைக்கு விடப்படுகின்றன. தனியார் பலரும் இங்கு விடுதிகளை நடத்தி வருகின்றனர்.

திருவிழா மற்றும் விடுமுறைக் காலங்களில் பலருக்கும் விடுதிகளில் இடம் கிடைப்பதில்லை என்றாலும், சாதாரண நாட்களில் வேளாங்கண்ணி செல்வோர் அனைவருக்கும் விடுதிகள் கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழா காலத்தில் பக்தர்கள் இலவசமாக தங்குவதற்காக, இலவச அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum