தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்விச் செல்வம் அளிப்பார் செஞ்சடையப்பர்

Go down

கல்விச் செல்வம் அளிப்பார் செஞ்சடையப்பர்  Empty கல்விச் செல்வம் அளிப்பார் செஞ்சடையப்பர்

Post  meenu Fri Mar 08, 2013 1:58 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் திருப்பனந்தாள்

சிவபெருமான் மேற்கு நோக்கி தரிசனம் தருவது மிகுந்த சிறப்புடையதாகும். சகல தோஷங்களையும் வேரோடு களைபவரே மேற்கு பார்த்த சிவன். தாளவனம் என்ற திருப்பனந்தாளில் குடிகொண்டு அருளும் சிவபெருமானை தாளவனேஸ்வரர், செஞ்சடை அப்பர், ஜடாதரர், அருண ஜடேஸ்வரர் என் றெல்லாம் சித்தர்கள் போற்றுகின்றனர். அன்னை பார்வதி தேவியாரை பிருகந்நாயகி, தாளவனேஸ்வரி, பெரிய நாயகி என்றும் சித்தர் பெருமக்கள் போற்றி வணங்குகின்றனர். மேற்கு நோக்கி அருள்பரிபாலிக்கும் செஞ்சடையப்பரை அமர்நீதி கோரக்கர் என்னும் சித்தர்,

‘‘சூழ்ந்திட்ட வல்வினையும் வூண்வழி
நின்ற பல்பிணியும் பாழ்படுந்திண்ணமே
ஊழ்வினையும் பற்றறுமே - கேடில்லா
வித்தையுங்கல்வியும் வளர்ந்திட
கல்மேல் எழுத்தொப்ப பதியுமகத்து கற்குங்
கல்வியுந் தாமே.’’

என்கிறார். ‘‘இக்காலத்து மாணவ மாணவியர் அதிக அறிவு வளம் உடையவர்கள். ஆனால் நினைவாற்றல் சற்று குறைய, மறதி வந்து கல்வியில் சில ருக்கு சரிவு ஏற்படும். இம்மாதிரி மறதி குணம் கொள்ளும் மாணாக்கர்கள், சிரத்தையுடன் செஞ்சடையப்பரை வழிபட்டால், ஞாபக சக்தி விருத்தி ஆவதுடன், கற்ற கல்வி தன் வாழ்வை உயர்த்த பயன்படும். நோயற்ற வாழ்வு, குறையாத தனம், மகிழ்ச்சி போன்றனவும் கிடைக்கும். சந்தேகமே வேண் டாம்’’ என்கிறார், முனிவர்.

கொங்கணச் சித்தரோ,
‘‘தன் பொழில் சூழ்பனந்தாள்
திருத் தாடகையீச் சரமே நின்று தொழுவார்
குலச் சாபமொடு பீடையு மகலுந் திண்ணமே
மறதி பொழியுஞ் சத்தியமே.’’

-என்கிறார். பனைமரங்கள் சூழ்ந்த வனம். தாளம் என்று பனைக்கு ஒரு பெயர் உண்டு. தாள் என்றால் காடு எனவும் பொருள்படும். பனைமரங்களால் சூழப்பட்ட வனத்தில் கோயில் கொண்டுள்ள பிருஹந் நாயகி சமேத செஞ்சடையப்பரை, தாடகை என்ற அரக்கர் குல அரசி (இவள் ராமாயணத்துத் தடகை அல்ல) போற்றி தொழுது வந்தாள். சுக்கிராச்சாரியார் என்ற அசுரகுல குரு வழிகாட்டுதலின் பேரில் தாடகை சிவபிரானைத் தொழுது, சகல தேவ ரகசிய சாஸ்திர மூலங்களையும் கற்றுக் கொண்டாள். எனவே இத்தலத்தை ரிஷிகளும் முனிவர்களும் ‘தாடகையீச்சரம்’ என்றே போற்றுவர். தாடகை ஒருமுறை சிவபெருமானை பூஜித்தபோது, இறைவனுக்கு சூட்ட இரு கரங்களிலும் மாலையை எடுத்துக் கொண்டு மூலவரிடம் செல்லுகையில், அவளது மேலாடை சரிந்தது. மாலையை கீழே வைப்பது அபசகுனம், ஆடை சரிந்தால் கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் முன் மானபங்கம் ஏற்படும். இதை கண்ணுற்ற சிவன், தன் தலையை சாய்த்து, குனிந்து, அந்த மாலையை தாடகையிடமிருந்து ஏற்றுக்கொண்டார்.

குனிந்து சிவன் மாலையை ஏற்றமை கண்டு தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
‘‘கண்ணிலெல்லாம் குளங் கண்டோம்
விண்ணிலுறை தேவருடன் பல்லா
யிர வானோரும் அண்ட சரங்களும்
ஆரென, நீர் கொட்டினர் தம் விழி
வழியே’’

-என்கிறார் அகஸ்தியர். இப்படி தேவர்கள் ஆனந்தப் பெருக்கினால் வடித்த கண்ணீரே குளம்போல தேங்கி நின்றது. தமது சாபம் தீர நாக கன்னிகை யர், நாக லோகத்திலிருந்து வந்து இதில் முதன் முதலில் நீராடினர். கண்ணீரில் உப்பு சத்து இருக்கும். நாக்ககன்னிகையர் நீராடியமையால் உப்பு சத்து நீங்கிற்று. இதுவே இந்த கோயிலின் தீர்த்தம் ஆகும். இதற்கு நாக்ககன்னிகை தீர்த்தம் எனப் பெயர்.

‘‘வினையறுக்கும் பொய்கையிது
புவியில் ஞானமுங் கல்வியுங்
கூட்டுமிக் குளத்திலே யுறையுது
காந்தக் காடு’’
-எனப் போகர் புலம்புவது வியப்புக்குரியது.

நமது முன்னை பிறவியின் பாவத்தை போக்கும். ஞானம் சேர்க்கும். கல்வி மிகுத்து வரும். அதாவது ஞாபக சக்தி கூடும். மூளை பலம் அதிகரிக்கு மென்பது பொருள். ‘‘பதினாறு கால் மண்டபத்தின் கீழ்புறம் இந்த பொய்கையிருப்பதால், பதினாறு வித செல்வங்களும் சித்திக்கும்’’ என்கிறார், சிவ வாக்யர்.

‘‘சடாதரவனத்துறை ஆரவப் பொய்கை
முழுகுவார் தம்மை செல்வமீரட்டம்
அண்டுவது மெய்யே சொன்னோம்’’

ஜடாதரன் என்பது சிவபெருமான். அரவம் என்றால் நாகம். ஈரட்டம் என்றால் இரண்டு எட்டு பதினாறு என்பதாம். பாண்டவர்கள் சேனையை எதிர்த்து துரியோதனன் சேனைக்கு தலைமை தாங்கினார் பீஷ்மாச்சாரியார். அவர் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள சின்னம் பனைமரம். இந்த தாடகையீச்சர கோயிலின் தல விருட்சமும் பனைமரம்.ஈஸ்வரனின் ஆணைப்படி, இக்கோயிலின் தல விருட்சத்தையே தனது கொடியில் பொதித்து வெற்றி மேல் வெற்றி பெற்றார் பீஷ்மர். பீஷ்மர் கங்காதேவியின் புத்திரன். மகா ஞானி. எனவே இந்த தல விருட்சத்தை தொழுவதும் இதனை படம் எடுத்து மாண வர்கள் மோதிரம், செயினில் கட்டி அணிந்து கொள்வதும், ஞாபக விருத்திக்கு அடிகோலும்.

சிவயோகி என்னும் சித்தர்,
‘‘தாடகை யேத்திய சிவனடி நிற்கும்
பனை தனை யேத்துவார்தம்
இடம் பொடி படும். தன்னோடு
சித்திரந் தீட்டி கணையும், சுட்டியும்
புணந்தாரமும் பூட்ட மதி கூராகும்
சிவனடியான் விஷ்ணு குப்தனை கேளே’’

-என்று பேசுகிறார். விஷ்ணு குப்தர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர். தனது வயோதிக காலத்தில் தன் அறிவு வன்மையால், பலம் பொருந்திய நந்த வம்சத்தை அழித்து, சந்திர குப்த மௌரியனை அரியணையில் ஏற்றி, மாவீரன் அலெக்சாண்டர் ஜெயித்த நாடுகளையும் கைப்பற்றி மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இவர் தொழுதது, இவர் தம் முத்திரை மோதிரத்தில் ஏந்தி நின்றது இந்த தாடகையீச்சுவர கோயிலில் உள்ள தல விருட்சமான பனைமரத்தைதான். புத்திக்கூர்மை, மறதிக்கு முற்றுப்புள்ளி, பேச்சாற்றல் போன்றவை இந்த காந்த சக்தி மிகுந்த நாகக்கன்னிகை தீர்த்தத்தில் நீராடி, தலவிருட்சத்தை மிகவும் சிரத்தையுடன் வழிபட சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. குங்கிலியக் கலையர் என்பவர் அறுபத்து மூவரில் ஒரு நாயன்மார் ஆவர். சிறந்த சிவனடியார். இவர் விநாயகரை நேரில் தரிசித்தவர்.

தாடகை அணி வித்த மாலையை குனிந்து ஏற்றுக்கொண்ட செஞ்சடையான் பிறகு தலையை நிமிர்த்தவே இல்லை. தனது கழுத்தில் கயிரை கட்டி சிவனாரின் செஞ்சட்டையில் இணைத்து இழுத்து தலையை நேராக்கினார், இந்தக் குங்கிலியக் கலையர். இவரது பாலகன் மடிந்தபோது, விநாயகர் இவரை அண்டி, நாகக்கன்னிக்குளத்தில் நீராடி, தல விருட்சம் துதி பாட, பிள்ளை மீள்வான் என்றார். அவ்வண்ணமே செய்ய, இறந்த பிள்ளை உயிர் பெற்றான். ஆககொடிய நோய்களால் அவதியுறும் பிள்ளைகளை காக்க திருப்பனந்தாள் சென்று நாக தீர்த்தத்தில் நீராடி செஞ்சடையப்பரை வணங்கினால், நோய் தாக்கம் குறையும் என்பதில் ஐயமில்லை. ‘‘சாவை துறத்தும் குளமிது, நாக தீர்த்தமே’’ என்கிறார் பரஞ்சோதி முனிவர். தஞ்சாவூரிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது, இந்த தாடகையீச்சரம் என்கிற திருப்பனந்தாள் திருத்தலம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum