தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரியபாளையம் கோயில்

Go down

பெரியபாளையம் கோயில் Empty பெரியபாளையம் கோயில்

Post  meenu Mon Jan 14, 2013 2:53 pm

சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. அங்கு அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள். பாளையம் என்றால் படை வீடு என்று பொருளாகும். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும்.

பெரியபாளையத்தில் அமர்ந்து பக்தர்களின் பாவங்களை தீர்த்து அருளுகின்றாள் ஆரணி ஆற்றங்கரை பெரியபாளையத்தம்மன். பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அம்மனை வழிபாடு செய்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தியுடன் அம்மனின் பெயரைக் கூறி வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது.

இங்கு மற்ற இடங்களில் காண இயலாத வித்தியாசமான சிறப்பு ஒன்று உண்டு. அது அம்மனுக்கு பிரியமான வேப்பிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வேப்பிலை சரத்தை உடம்பில் கட்டிக்கொண்டு ஆலயத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான். பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள்.

இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.

உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரியபாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் கணவன் நோய்வாய் பட்டிருந்தால் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

பெரியபாளையம் தல வரலாறு:

பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளையாடல் நடத்தி தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.

இதன் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பலிஜா நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் வளையல் விற்பதற்காக சென்னைக்கு வருவார்கள். வளையல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி கால்நடையாகவே வந்து செல்வார்கள். பெண்களின் கையில் வளையல் போட்டு விட்டவுடன் மங்களகரமாக வாழ்த்துவதற்கு அறிகுறியாக, வளையல் அணிந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள்.

இதற்காகவே அவர்கள் பொட்டலங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு வருவார்கள். ஒரு சமயம், ஒரு வளையல் வியாபாரி, சென்னையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடை பயணமாக ஆந்திராவுக்குத் திரும்பி கொண்டிருந்தார். ஆரணி ஆறு பகுதி வந்ததும் மதிய உணவு சாப்பிட்டார். பிறகு பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார். சிறிது நேரம் கழித்து கண் விழித்தார்.

அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அங்கும் இங்கும் தேடினார். வளையல் மூட்டை கிடைக்கவில்லை. அப்போது அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட்டது. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டை அங்கு கிடந்தது. ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முயன்றார்.

அவரால் முடியவில்லை. நீண்டநேரம் போராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை. அதற்கு மேலும் அங்கு நிற்க துணிவு இல்லாத அவர் ஆந்திராவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பி சென்றுவிட்டார். அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, அவருக்கு ஒரு கனவு வந்தது.

கனவில் பவானி அம்மன் தோன்றினாள். ``நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா. அங்கு வந்து என்னை தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு'' என்று உத்தரவிட்டாள்.

திடுக்கிட்டு விழித்த வளையல்காரருக்கு வியர்த்துக் கொட்டியது. மறுநாளே வளையல், மஞ்சள், குங்குமம் மூட்டைகளுடன் சென்னைக்கு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், அந்த புற்றைப் பார்த்தார். அந்த பகுதி ஊர் மக்களை அழைத்து, அம்மன் கனவில் உத்தரவிட்டதை கூறினார். அந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக, அந்த புற்றை அகற்றிவிட்டு, அதில் வயல் உண்டாக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர்.

வளையல் வியாபாரி சொன்னதும் கடப்பாரை எடுத்து வந்து புற்றை இடித்து அகற்ற தொடங்கினார்கள். பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் ``ணங்'' என்று ஒரு சத்தம் கேட்டது. கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது. அதோடு புற்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து போனது.

இதைப் பார்த்து அந்த பகுதி மக்களுக்கு கூடுதல் பயம் வந்துவிட்டது. நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றிப் பார்த்தனர். அதற்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதன் மேல் பகுதியில் இருந்து தான் ரத்தம் குபுகுபு என்று வந்து கொண்டிருந்தது. உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுநிமிடம் ரத்தம் நின்று போனது.

இதையடுத்து அந்த இடத்தில் சுயம்புவை மூலமாகக் கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது. கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. தற்போதும் அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவைக் காணலாம்.

இப்படி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பெரியபாளையத்து பவானியம்மன், தன்னை நம்பி, நாடி வரும் லட்சோப லட்ச பக்தர்களுக்கு வேண்டும் வரம்களை வாரி, வாரி வழங்கி ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறாள்.

கோவில் அமைப்பு:

பெரியபாளையத்தில் ஆரணியாற்றங்கரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் பவானி அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புற்றுக்குள் சுயம்புவாக தோன்றி விட்டாள். அந்த இடத்தை மூலமாக கொண்டு கோவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ச்சிப் பெற்றுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த கோவில் கருவறை மற்றும் ஒரு மண்டபத்துடன் மட்டுமே இருந்தது.

பக்தர்கள் எண்ணிக்கை பெருக, பெருக கோவிலும் வளர்ச்சி அடைந்தது. தற்போது கோவிலை சுற்றி மிக அழகான பிரகார மண்டபம் கட்டி உள்ளனர். இன்னும் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முழுமையாக முடிந்து விட்டால், பக்தர்கள் எல்லா நவீன வசதிகளையும் இந்த ஆலய வளாகத்தில் பெற முடியும்.

கோவிலுக்குள் நுழையும் பகுதி இரு பக்கமும் கடைகளால் நிறைந்துள்ளது. அதை கடந்து சென்றால் முதலில் விநாயகரை வணங்கலாம். பிறகு விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும். அதில் இருந்து பிரகார மண்டபத்துக்கு வந்து விடலாம். முன் பக்க வாசல் வழியாக வந்தால் கருவறையில் பவானி அம்மனின் `பளீர்' தோற்றத்தை கண்டு மனம் உருகி தரிசிக்கலாம்.

இதையடுத்து உள்ள சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. உற்சவரை வணங்கி விட்டு அருகில் உள்ள வாசல் வழியாக பெரிய பிரகாரத்துக்கு வரலாம். அந்த பிரகாரத்தை வலப்புறமாக சுற்றி வருதல் வேண்டும். அந்த பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதி உள்ளன. இந்த சன்னதிகளுக்கும் சென்று தவறாது வழிபட வேண்டும்.

கோவில் வலது பக்கத்தில் சற்றுத் தொலைவில் புற்று மண்டபம் உள்ளது. அங்கு சென்றும் வழிபட வேண்டும். பிறகு கோவில் வளாகத்தில் அமர்ந்து வழிபாட்டை நிறைவு செய்யலாம். கோவில் மூலஸ்தானம் மீதும், முன் பகுதியிலும் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.

என்றாலும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் பிரமாண்ட ராஜகோபுரம் இருந்தால் பக்தர்கள் மனம் மகிழ்ச்சி பெறும். கோவிலுக்குள் நுழையும் பகுதியில் உள்ள நடைபாதை கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிக்காதபடி வேறொரு இடம் கொடுத்து விட்டு அங்கு மிக உயரமான ராஜகோபுரம் கட்டினால் பாளையத்தம்மன் கோவிலுக்கு அது ஒரு முத்திரையாக இருக்கும்.

ஜலமூர்த்தி அவதாரம்:

பெரியாபளையம் அன்னை பவானி அம்மன் பரமசிவனின் அட்டமூர்த்திகளில் ஜலமூர்த்தியான `பவர்' என்ற அம்சத்தின் தேவி என்று கருதப்படுகிறார். வாழ்வின் வடிவமாய், வாழ்விற்கு மூலமாய், வாழ்வினை அளிப்பதாய் உள்ளது தண்ணீர். தண்ணீருக்கு அத்தன்மையை அளித்து, திகழும் அன்னை பவானி, தன்னை வழிபடும் அன்பர்கட்கு வாழ்வினை அளிப்பவள் என்று கருதப்படுகிறார்.

இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள். உயிர்ப்பலி இடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் இவ்வன்னைக்கு ஆடு, கோழி முதலியவற்றை உயிருடன் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

ஆடி பெரு விழா நிகழ்ச்சி:

ஆடி 22 (7-8-2011 ஞாயிற்றுக்கிழமை) 4-ம் வாரம்:

காலை 4.00-5.00 மணிக்கு ஊஞ்சல் மாலை 6.00-8.00 மணிக்கு `சிம்ம வாகனத்தில்' உற்சவர் பவானி அம்மன் மகிஷா சூரமர்த்தினி அலங்கா ரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

ஆடி 29 (14-8-2011 ஞாயிற்றுக்கிழமை) 5-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கேடயத்தில் உள் பிரகார புறப்பாடு. மாலை 6.00-8.00 மணிக்கு `அன்ன வாகனத்தில்' உற்சவர் பவானி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

ஆவணி 4 (21-8-2011 ஞாயிற்றுக்கிழமை) 6-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, கேடயத்தில் உள் பிரகார புறப்பாடு. மாலை 6.00-8.00 மணிக்கு `சந்திரபிரபையில்' உற்சவர் பவானி அம்மன் கெஜ லட்சுமி அலங்கா ரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

ஆவணி 11 (28-8-2011 ஞாயிற்றுக்கிழமை) 7-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, கேடயத்தில் உள் பிரகார புறப்பாடு. மாலை 6.00-8.00 மணிக்கு `சூரிய பிரபையில்' உற்சவர் பவானி அம்மன் திரிபுரசம்மாரம் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

ஆவணி 14 (31-8-2011 புதன்கிழமை):

மாலை 4.30-6.00 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழை மர பூஜை, முதல் கால யாக சாலை பூஜை.

ஆவணி 15 (1-9-2011 வியாழக்கிழமை):

அதிகாலை 12.30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விசேஷ கணபதி ஹோமம், அஷ்டோத்ர சதகலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை. மாலை 6.00 மணிக்கு உற்சவர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

ஆவணி 18 (4-9-2011 ஞாயிற்றுக்கிழமை) 8-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கேடயத்தில் உள்பிரகார புறப்பாடு மாலை 6.00-8.00 மணிக்கு குதிரை வாகனத்தில் உற்சவர் பவானி அம்மன் சூரிய அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

ஆவணி 25 (11-9-2011 ஞாயிற்றுக்கிழமை) 9-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கேடயத்தில் உள்பிரகார புறப்பாடு மாலை 6.00-8.00 மணிக்கு `சூரிய பிரபையில்' உற்சவர் பவானி அம்மன் பார்வதி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

புரட்டாசி 1 (18-9-2011 ஞாயிற்றுக்கிழமை) 10-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கேடயத்தில் உள்பிரகார புறப்பாடு மாலை 6.00-8.00 மணிக்கு `சூரிய பிரபையில்' உற்சவர் பவானி அம்மன் காமாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

புரட்டாசி 8 (25-9-2011 ஞாயிற்றுக்கிழமை) 11-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கேடயத்தில் உள்பிரகார புறப்பாடு மாலை 6.00-8.00 மணிக்கு `அன்ன வாகனத்தில்' உற்சவர் பவானி அம்மன் பத்மாசனி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

புரட்டாசி 15 (2-10-2011 ஞாயிற்றுக்கிழமை) 12-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கேடயத்தில் உள்பிரகார புறப்பாடு மாலை 6.00-8.00 மணிக்கு `சூரிய பிரபையில்' உற்சவர் பவானி அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

புரட்டாசி 19 (6-10-2011 வியாழக்கிழமை):

மாலை 6.00-8.00 மணிக்கு விஜய தசமியை முன்னிட்டு விசேஷ ஓமங்கள், பூர்ணாஹூதி, சோடச தீபாராதனை பரிவேட்டை உற்சவம் நடைபெறும். உற்சவர் பவானி அம்மன் `குதிரை வாகனத்தில்' திருவீதி உலா நடைபெறும்.

புரட்டாசி 22 (9-10-2011 ஞாயிற்றுக்கிழமை) 13-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கேடயத்தில் உள்பிரகார புறப்பாடு மாலை 6.00-8.00 மணிக்கு `சூரிய பிரபையில்' உற்சவர் பவானி அம்மன் காயத்திரி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.

புரட்டாசி 29 (16-10-2011 ஞாயிற்றுக்கிழமை) 14-ம் வாரம்:

காலை 12.30-4.00 மணிக்கு மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, கேடயத்தில் உள்பிரகார புறப்பாடு மாலை 6.00-8.00 மணிக்கு `குதிரை வாகனத்தில்' உற்சவர் பவானி அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

அறிவிப்புகள்:

இத்திருக்கோவிலில் உற்சவம் செய்ய விரும்பும் அன்பர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் அனுமதி பெற்று உற்சவத்தை நடத்திக் கொள்ள வேண்டும். பூஜை விவரங்கள், கட்டண விவரங்கள் முதலியன திருக்கோயில் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். உற்சவத்தை முன்னிட்டு உபயதாரர்கள் அம்பாள் பெயராலும், கோயில் பெயராலும், பொதுமக்களிடமிருந்து எந்த விதமான நன்கொடையும் வசூலிக்கக் கூடாது.

இத்திருக்கோயிலுக்கு மன்றமோ, குறிமேடையோ, சபாவோ, சங்கங்களோ, கமிட்டிகளோ எதுவும் கிடையாது. மேலும் தனிப்பட்ட நபர் எவரும் ஆலயத்தின் சார்பாக தொடர்பு கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் தனி நபர்கள் எவரும் அருள்மிகு பவானி அம்மன் பெயரால் பணமாகவோ, பொருளாகவோ, நன்கொடை பெயரில் ஆலயத்தின் சார்பாக பெறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆலயத்திற்கு நன்கொடை காணிக்கை செலுத்துபவர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ளுமாறும், உண்டியல் காணிக்கைகளை ஆலயத்தின் உண்டியல்களில் மட்டுமே செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முடிகாணிக்கை, வேப்பஞ்சேலை, அடிதண்டம் தேங்காய், காது குத்துதல், கரகம் அலங்கரித்தல் போன்ற பிரார்த்தனைகளை திருக்கோயிலில் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பக்தர்கள் ஆலயத்திற்கும் மற்றும் குத்தகைதாரர்களுக்கும் செலுத்தும் அனைத்து கட்டணங்களுக்காக பெறும் ரசீதுகள் அனைத்திலும் ஆலய முத்திரையுள்ளதா? என சரிபார்த்துக் கொள்ளவும். உபயதாரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து உற்சவங்களை நடத்தி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வர தாமதமானாலும் உற்சவம் குறிப்பிட்ட நேரத்தில் நடை பெறும். நடைப்பெற்று வரும் திருப்பணி வேலைகள், விரைவில் துவக்கப்பட உள்ள அன்னதான திட்டத்திற்கு பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

பக்தர்களுக்கு நவீன வசதி:

பெரியபாளையம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கில் தான் மக்கள் திரள்வார்கள். ஆனால் தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். எதிர்காலத்தில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும்.

இதை கருத்தில் கொண்டு பெரியபாளையம் கோவிலை, மற்ற பெரிய கோவில்களுக்கு இணையாக மேம்படுத்தும் முயற்சிகளில் தமிழக இந்து அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இந்து அறநிலையத்துறையின் திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையரும், தக்காருமான என்.வி.பத்மநாபன், ஆலய செயல் அதிகாரி எஸ்.லட்சுமிகாந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து கொடுத்துள்ளனர்.

செய்தும் வருகிறார்கள். பக்தர்கள் இதுவரை கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்து வந்தனர். இது பக்தர்கள் திரளும் போது அசவுகரியத்தை ஏற்படுத்தியது. இதைத் தவிர்ப்பதற்காக பொங்கல் வைக்க பிரமாண்ட மண்டபம் கட்டி உள்ளனர். ஒரே சமயத்தில் 200 பேர் அங்கு பொங்கல் வைக்க முடியும். அதற்காக 200 அடுப்புகளுடன் மண்டபத்தில் வசதிகள் உள்ளது. அது போல முடிகாணிக்கை செலுத்த தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்கும் ஒரே நேரத்தில் 200 பக்தர்களுக்கு மொட்டை போட முடியும். மொட்டை போடும் பக்தர்கள் அமர வசதியாக டைல்ஸ் பதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்கள் உடைகளை களைந்து வேப்பஞ்சேலை கட்டுவதற்கு வசதியாக ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தனி தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 48 பெண்கள் வேப்பஞ்சேலை கட்ட முடியும். பொங்கல் மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், வேப்பஞ்சேலை மண்டபம், மூன்றும் 87 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக 59 லட்சம் ரூபாய் செலவில் இரண்டடுக்கு மண்டபம் கட்டி வருகிறார்கள். இந்த மண்டபத்தில் பக்தர்கள் இலவசமாக தங்கி இளைப்பாறலாம்.

ஆண்கள், பெண்களுக்கு தனி தனியாக நவீன கழிவறைகள், குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு தொகுப்பில் மட்டும் 48 குளியல் அறைகள் இருக்கின்றன. ரூ.83 லட்சம் செலவில் இந்த பணி செய்யப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டமாக திருப்பதியில் இருப்பது போல காற்றோட்ட வசதியுடன் பக்தர்கள் வரிசையில் வரும் கியூ காம்ப்ளக்ஸ் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அது போல ரூ.2.4 கோடி செலவில் கோவிலுக்கு தங்க ரதம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடைகளையும் ஒழுங்குபடுத்தும் திட்டம் வைத்துள்ளனர். அருகில் உள்ள புற்று மண்டபத்தை பக்தர் ஒருவர் 10 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து மேம்படுத்தி கட்டிக் கொடுத்து வருகிறார். இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு கோவிலை சுத்தமாக வைத்திருக்க தினமும் பராமரித்தால் பக்தர்கள் மனதில் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கோவில் சுற்றுச்சூழல் மாறும். கோவில் சுற்றுப் புறங்களிலும் தூய்மை பணி மேற்கொண்டால் தேசிய அளவில் பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கி விடுவார்கள்.

கோவிலை தொடர்பு கொள்ள...

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவில் நடை திறப்பு, வசதிகள், மற்றும் பிரார்த் தனைகள் தொடர்பாக மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ஆலய நிர்வாகத்தை
044-27991631 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

14 வாரம் ஆடிவிழா:

பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிக விமரிசையுடன் 14 வாரங்கள் நடைபெறுகிறது.

ஆடிமாதம் முதல்வாரம் -சூரியபிரபை

இரண்டாவது வாரம் -குதிரை வாகனம்

மூன்றாவது வாரம் -நாகவாகனம்

நான்காவது வாரம் -சிம்ம வாகனம்

ஆவணி மாதம் 5-வது வாரம் -அன்னவாகனம்

ஆறாவது வாரம் -சந்திரப்பிரபை

7-வது வாரம் முதல் 10-வது வாரம் வரை அன்னை பவனி வரும் ரதோற்சவம்.

இது வாண வேடிக்கைகளுடன், மேள வாத்தியங்களுடன் விமரிசையாக நடைபெறும். இவ்விழாவின் முடிவாக நான்கு வாரங்கள் தொடர்ந்து விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum