தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜயதசமியன்று கிடைத்த வடபழனி வேங்கீஸ்வரர் தரிசனம்!

Go down

விஜயதசமியன்று கிடைத்த வடபழனி வேங்கீஸ்வரர் தரிசனம்! Empty விஜயதசமியன்று கிடைத்த வடபழனி வேங்கீஸ்வரர் தரிசனம்!

Post  ishwarya Mon Feb 18, 2013 2:01 pm

சென்னையில் வடபழனி என்றதும் நம் நினைவுக்கு வருவது முருகன் கோவில் தான். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் பலர் மறக்காமல் செல்லும் கோவில்களில் வடபழனி முருகன் கோவிலும் ஒன்று. ஆனால் அதே வடபழனியில் தொன்மையான சிவாலயம் ஒன்று இருப்பது பலருக்கு தெரியாது. சென்னையில் உள்ள அதிகம் அறியப்படாத கோவில்களில் இதுவும் ஒன்று.

வடபழனி சிக்னல் அருகே நூறடி சாலையை ஒட்டி அமைந்துள்ளது சாந்தநாயகி உடனுறை வேங்கீஸ்வரர் சிவன் கோவில்.

வியாக்ரபாத முனிவர் பல புனித தலங்களை தரிசித்த பின், இப்பகுதியில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி வழிப்பட்டு வந்துள்ளார். வண்டுகள் தீண்டிய மலரை கொண்டு இறைவனை பூஜிக்கலாகாது என்று அதிகாலையிலேயே எழுந்து, மரங்களின் மீது ஏறி வண்டு தீண்டு முன்னர் மலர் பறித்து இறைவனை பூஜித்தார். இவரது பக்தியைப் போற்றும் வகையில், அவர் பூஜை விருப்பம் நிறைவேற அவர் எளிதாக மரம் ஏற அவருக்குப் புலிக்கால்களாக மாற்றித் தந்தான் இறைவன்.

அது முதல் வியாக்ரபாதர் புலிக்கால் முனிவரானார். வேங்கைக் கால் முனிவர் வழிபட்ட ஈசனாததால், மூலவர் வேங்கீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். சிவபெருமானின் திருநடனங்களைக் காண விரும்பி, அத்திரி முனிவர் அநசூயைக்கு மகனாக அவதரித்தார் ஆதிசேஷன். இவரும் வியாக்கிரபாதரும் சேர்ந்து சிவப்பரம் பொருளை வழிபட்ட தலம்தான் இந்த வேங்கீச்சரம்.

அம்மன் சாந்தநாயகி, கர்ப்பகிரகம் கஜபிருஷ்ட விமானமாகக் கட்டப்பட்டுள்ளது தனிச் சிறப்பு. வேண்டும் வரமருளுகிறார் வேங்கீஸ்வரர்.

அடுத்த முறை வடபழனி செல்பவர்கள் வடபழனி சிக்னலுக்கு அருகேயுள்ள இந்த ஆலயத்திற்கும் சென்று வாருங்கள்.

நேற்றைக்கு விஜயதசமியை முன்னிட்டு நிச்சயம் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு செல்லவேண்டும் என்று விரும்பினேன். காலையில் வீட்டில் எழுதுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை முடித்து அலுவலகத்துக்கு செல்லவே நேரம் சரியாக இருந்தபடியால், மாலை போய்க்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

என்னுடைய முதல் சாய்ஸ் மயிலை கபாலீஸ்வரர் கோவில் தான். ஆனால் அந்தக் கோவிலில் கூட்டம் அலைமோதுமே…. என்ன செய்வது? என்று யோசித்தபோது தோன்றியது தான் இந்த வேங்கீஸ்வரர் கோவில். அலுவலகத்திலிருந்து வீட்டிக்கு செல்லும் வழியிலேயே அமைந்திருப்பதால் எனக்கு மிகவும் சௌகரியமாக தோன்றியது.

நான் போகும்போது 7.30 PM இருக்கும். சன்னதி அமைந்திருக்கும் தெருவுக்குள் செல்லும்போதே தெரிந்தது… திருவிழாக் கோலம் பூண்டிருந்தது அந்த தெருவே. கோவிலுக்குள் சரியான கூட்டம் என்று புரிந்துவிட்டது. அர்ச்சனை தட்டை வாங்கி உள்ளே நுழைந்தால்.. கூட்டம் கூட்டம் அப்படியொரு கூட்டம்.

பொதுவா கோவில்களை பொருத்தவரைக்கும், நாம போகும்போது கூட்டம் இல்லேன்னா அது ஒரு வகை சந்தோஷம். ஃப்ரீயா கொஞ்சம் நேரம் நின்னு எந்த அரிபரியும் இல்லாம இறைவனை தரிசித்துவிட்டு வரலாம். கூட்டமாக இருந்தால் அது ஒரு வகையில் சந்தோஷம். அதுக்கு காரணம் என்னன்னு என்னால சொல்ல முடியலே. ஆனா கூட்டத்தை பார்த்தவுடனே அப்படியொரு சந்தோஷம்.

பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு வரிசையில் நின்னேன். கொஞ்சம் கொஞ்சமா வரிசை நகர ஆரம்பித்தது. கர்ப்பகிரஹத்துக்கு அருகே சென்றவுடன்… வாவ்.. என்ன ஒரு அற்புதமான தரிசனம் தெரியுமா? சந்தன அலங்காரத்தில் வில்வத்தை சூடிக்கொண்டு, சாமந்தி மாலையில் திவ்ய அலங்காரம் ஈசனுக்கு.

அர்ச்சனை பையை கொடுத்தேன். என்னுடன் சேர்த்து வேறு சிலரின் பைகளை வாங்கிக்கொண்ட அர்ச்சகர், “அர்ச்சனைக்கு கொடுத்தவா எல்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க…” அப்படின்னார். ‘ஆஹா… இன்னும் கொஞ்ச நேரம் பகவானை பார்க்க அற்புதமான வாய்ப்பு’ என்று எண்ணிக்கொண்டு ஓரமாக நின்றேன். அடுத்த சில நிமிடங்களில் அர்ச்சனை முடிய, வெளியே வந்து பிரகாரத்தை வலம் வரத் துவங்கினேன்.

கோவிலின் பசுக்களை அப்போது தான் பார்த்தேன். கன்றுடன் கூடிய பசுக்கள். “அடடா..இவங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வராம விட்டுட்டோமே…” என்று தோன்றியது. எல்லாத்தையும் முடிச்சுட்டு போறதுக்கு முன்னாடி ஏதாவது வாங்கிக்கொண்டு வந்து கொடுப்போம் என்று முடிவு செய்து பிரகாரத்தை சுற்றி வருதலை தொடர்ந்தேன்.

பிரகாரத்தை வலம் வந்து அம்பாளை தரிசித்தேன். அம்பாளுக்கு திவ்ய அலங்காரம்.

அம்பாளின் கருவறைக்கு முன்னே மேலே,

ஒளியாகி உயிராகி உருவாகி திருவாகி கலையாகி
நிலையாகி கண்ணாகி விண்ணாகி மலையாகி விளங்குகின்ற
வடபழனி சாந்தநாயகியே! அலையாத அமைதி தரும்
அன்பே நீ அருள்வாயே!

என்ற அற்புத பாடல் காணப்பட்டது.

தரிசித்துவிட்டு குங்குமப் பிரசாதம் பெற்றுக்கொண்டுவிட்டு வெளியே வந்த பின்னர், கொடிமரத்தின் கீழே விழுந்து நமஸ்கரித்துவிட்டு, நவக்கிரகங்களை வலம் வரச்சென்றேன். அங்கே பார்த்தால், சர்க்கரை பொங்கலும் சுண்டலும் பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பிரசாத பந்தலை நவக்கிரகங்களை சுற்றி வந்து வெளியே வரும்போது கொடுப்பது போல, அமைத்திருந்தார்கள். க்யூவில் விட்ட மாதிரியும் ஆச்சு, நவக்கிரகங்களை சுற்றியது போலவும் ஆச்சு. நல்ல ஐடியா… யார் கொடுத்ததுன்னு தெரியலே.

பிரசாதத்தை வாங்கிட்டு வந்து, ஒரு விண்டு சாப்பிட்டேன். வீட்டுல அப்பா அம்மா ஞாபகம் வந்தது. அப்படியே ஒரு கவர்ல எடுத்து பத்திரமா வெச்சிகிட்டேன்.

வெளியே வந்து பசுமாட்டுக்கு ஏதாவது வாங்க கிடைக்குமான்னு தேடினேன்…. அட்லீஸ்ட் அருகம்புல் ஒரு கட்டு கிடைச்சாக்கூட ஓ.கே.ன்னு தோணிச்சு. அங்கே பார்த்தா கடைக்கு கடை அகத்திக்கீரையே கிடைச்சது. ஒரு கட்டு வாங்கிட்டு வந்து பசுக்களுக்கு கொடுத்தேன். (அதுக்கு முன்னாடி மறக்காம பசுமாட்டை பராமரிக்கிறவர் கிட்டே கேட்டேன். அவர் ‘ஒ… தாராளமா கொடுங்க சார்’.. அப்படின்னு சொன்ன பிறகு தான் கொடுத்தேன்.) கன்றுக்கு வாழைப்பழம் கொடுக்கும்போது கையை கடிச்சிட்டது. நம்ம வீட்டு குழந்தைக்கு ஊட்டும்போது கையை கடிக்குமே அது மாதிரி தான் இருந்திச்சு. வலிக்கலை.

இவ்வளவும் நடக்கிறது ஒரு மிகப் பெரிய ஜனத்திரளுக்கு நடுவுலே!

நிறைய பேர் பிரசாதம் சாப்பிட்ட பேப்பர் கப்பை அங்கங்கே கீழே போட்டிருந்தாங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. என்னால என்ன செய்ய முடியும்… ஒரு நாலஞ்சு கப்பை எடுத்து குப்பைக்கூடையில போட்டேன்.

எல்லாத்தையும் முடிச்சிட்டு வெளியே வர்ற சமயத்துல சுவாமி பிரகாரத்தை வலம் வந்தார். விஜயதசமி என்பதால் நேற்று ‘அம்பு எறிதல்’ நிகழ்ச்சி வெகு விமரிசையா நடந்துச்சு. அப்புறம் சுவாமியோட திருநடனம்… பார்க்க பார்க்க கண்கொள்ளா காட்சி… ரெண்டு மூன்று பேர் அதை மொபைல்ல சூட் பண்ணினாங்க… பிரகாரம் தானே என்பதால் நானும் காமிராவை எடுத்து அந்தக் காட்சியை க்ளிக்கிவிட்டேன். (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)

வெளியே வரும்போது மனசு மிகவும் அமைதியாக இருந்தது. ஆயிரம் சொல்லுங்க பாஸ்…. கோவிலுக்கு போய்விட்டு வந்தவுடனே நம் மனசுல ஒரு அமைதி ஏற்படும் பாருங்க…. அது சான்சே இல்லே…. வேற எந்த செயல்லயும் சரி… வேற எங்கே போனாலும் சரி… கிடைக்காத ஒரு உன்னதம் அது.

வேறு என்ன சொல்ல? விஜயதசமி திருநாளில் வேங்கீஸ்வரரை தரிசிக்கும் பேறு பெற்றுவிட்டேன்! நீங்க எப்போ தரிசிக்கிறதா உத்தேசம்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum