அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோவில்- ஈரோடு
Page 1 of 1
அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோவில்- ஈரோடு
வைகுண்டத்தின் காவலர்களான ஜெயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு, எப்போதும் அவரைப் பிரியாமல் இருந்தனர். ஒருசமயம் மகாவிஷ்ணுவைப் பார்க்க வந்த ரிஷிகள் சிலர் காவலர்களை கடந்து உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை உள்ளே அனுமதிக்காததால் சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து வெளியே வந்த பெருமாள், காவலர்களை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள் இரண்யன்- இரண்யாட்சன், ராவணன்- கும்பகர்ணன், கம்சன் - சிசுபாலன் என பிறந்து மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர்.
இப்பிறவிகள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் திரும்பி அவருக்கு சேவை செய்ய வேண்டி தாழ்பணிந்து நின்றனர். இவ்வாறு அவர்கள் கருவறைக்குள்ளேயே தாழ்பணிந்து நிற்பதை இந்தக் கோயிலில் காணலாம்.
கடவுள்களில் சாத்வீகமானவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் துர்வாச முனிவரிடம் ஒப்படைத்தனர். அவர் கைலாயம் மற்றும் பிரம்ம லோகங்களுக்கு அனுமதியின்றி சென்றபோது தெய்வங்கள் அவரைக் கடிந்து கொண்டனர். ஆனால், வைகுண்டம் சென்று திருமாலின் மார்பில் மிதித்து அவரை துயில் எழுப்பிய போதும் கூட, திருமால் சிரித்துக் கொண்டே அவரை வரவேற்றார்.
பக்தனின் பாதம் பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். துர்வாசர் மகிழ்ந்தார். ஆனால், திருமாலின் மார்பில் இருந்த லட்சுமி தேவியால், தன் கணவரை மிதித்த துர்வாசரை பிடிக்கவில்லை. துர்வாசரைக் கண்டிக்காத பெருமாளை விட்டு பிரிந்து சென்று விட்டாள். ரிஷியே! தங்கள் கோபச் செய்கையால் என் மனைவியைப் பிரிந்தேன். இனியாவது சாந்தகுணம் பெறுங்கள். ரிஷிகளுக்கு சாந்த குணமே சிறந்தது என்றார் பெருமாள். துர்வாசரும் அதை ஏற்றார்.அந்த சாந்தகுண துர்வாசரை இத்தலத்தில் காணலாம்.
கருவறையில் கஸ்தூரி ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பள்ளி கொண்ட கோலத்தில், வலது கையில் தண்டத்தை பிடித்தபடி இருக்கிறார். தலைக்கு மேலே ஆதிசேஷன், ஐந்து தலைகளுடன் குடையாக இருக்கிறார். சுவாமி சன்னதி விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் இருக்கிறது.
சிவனுக்குரிய வில்வம் இத்தலத்தின் விருட்சம். ஆஞ்சநேயரின் பக்தரான வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் பிரகாரத்தில் இருக்கிறார். வலது கையை தூக்கியிருக்கும் இவர் லிங்க வடிவ பாறையில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார்.
சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஆண்டாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இடதுபுறத்தில் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர், கண்ணன் இருக்கின்றனர். பிரகாரத்தில் உள்ள பெருமாள் பாதத்தை சுற்றி ஆதிசேஷன், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளனர். தனிச் சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன், தலையில் அக்னி ஜ்வாலை கிரீடத்துடன் உக்ரமாக இருக்கிறார்.
சுவாமிக்கு தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆனியில் தைலக்காப்பின்போது 48 நாட்கள் சுவாமியின் முகம் மற்றும் பாத தரிசனத்தை மட்டுமே காண முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை கர்ப்பிணிப்பெண்கள், சுகப்பிரசவம் ஆவதற்காக சுவாமிக்கு கஸ்தூரி எனும் மருந்து படைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இதன் காரணமாக சுவாமிக்கு, கஸ்தூரி ரங்கநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது இந்த வழக்கம் நின்றுவிட்டது.
சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் கமலவல்லித்தாயார், தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். திருமணமான பெண்கள் இவளுக்கு தாமரை மலர் படைத்து, நெய்விளக்கு ஏற்றி, வளையல் சாத்தி வழிபடுகிறார்கள்.
இவ்வாறு செய்வதால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். அன்று ஒருநாள் மட்டும் தாயாருடன், சுவாமியை தரிசனம் செய்ய முடியும்.
திருவிழா: புரட்டாசியில் 10 நாள் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி.
பிரார்த்தனை: கோபகுணம் கொண்டவர்கள் கோபம் குறையவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
வழிகாட்டி: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோவில்- ஈரோடு
» கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் - ஈரோடு
» கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் - ஈரோடு
» கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் - ஈரோடு
» கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் - ஈரோடு
» கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் - ஈரோடு
» கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் - ஈரோடு
» கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் - ஈரோடு
» கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில் - ஈரோடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum