தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும்

Go down

ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும் Empty ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும்

Post  amma Sat Jan 12, 2013 12:31 pm

இறைநம்பிக்கையும் நவீன அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி …..

கேள்வி: பழங்கால யக்ஞங்கள் போன்றவை இக்காலத்தில் கடைபிடிக்கக் கூடியவையா?

அம்மா: யக்ஞம் என்பது எந்தத் தேசத்திலும், எந்தக் காலத்திலும், எல்லா மக்களும் பரஸ்பரம் அன்புடனும், ஒற்றுமையுடனும், இயற்கை நியதிகளுக்கேற்ப வாழக் கற்றுத் தருகின்ற தத்துவமாகும். இயற்கையிடமிருந்து பெறுவதில் ஒரு அம்சத்தையாவது இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்க நாம் கடமைப்பட்டவர்கள் என்ற கருத்திலிருந்தே பஞ்ச யக்ஞங்கள் தோன்றின. ரிஷி யக்ஞம் (ஆன்மிக சாஸ்திரக் கல்வி), தேவ யக்ஞம் (பூஜை, ஹோமம் போன்ற வழிபாட்டு முறைகள்), நரயக்ஞம் (அதிதி உபசாரம்), பித்ரு யக்ஞம் (பெற்றோரைப் பேணுதல்,மூதாதையரை வழிபடுதல்), பூத யக்ஞம் (பறவை-மிருகங்களைப் பேணுதல்) போன்றவையே கிரகஸ்தாஸ்ரமிகள் (இல்லறத்தார்) அனுஷ்டிக்க வேண்டிய பஞ்ச யக்ஞங்களாகும்.

வாழ்க்கையை நன்றாக வாழ்வது எவ்வாறு என்றும், உலகத்தின் இயல்பு என்ன என்றும், நமக்கு எதிரான சூழ்நிலைகளில் மனம் தளராமல் அவற்றைக் கடந்து செல்வது எவ்வாறு என்பதையும் ஆன்மிக சாஸ்திர நூல்கள் கற்றுத் தருகின்றன. விவசாயக் கல்வி படித்த ஒருவன் செடிக்கு நோய் வருவதற்கு முன் அதற்குத் தேவையான பரிகாரம் செய்திருப்பான். எந்தச் செடிக்கு எந்த மண் ஏற்றது, என்ன உரம் தேவை என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். இவற்றில் எதுவும் தெரியாமல் விவசாயம் செய்ய முனைந்தால் சில சமயம் விளைச்சல் முழுவதும் நாசமாகக் கூடும். இதுபோல் வாழ்க்கை என்றால் என்ன என்று சரியாகப் புரிந்துகொள்ள நல்ல நூல்களைப் படிப்பது நமக்கு உதவுகிறது. நாம் அறியாதிருக்கையில் திடீரென வெடி வெடிக்கும் சப்தத்தைக் கேட்டு நாம் திடுக்கிடலாம். அதே சமயம், வெடி வெடிக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொண்டு கேட்கும்போது அவ்வளவாகப் பயம் தோன்றுவதில்லை. நீந்தத் தெரியாத ஒருவன் கடல்அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுத் தளர்ந்து போகும்போது, நீச்சலறிந்தவன் அந்த அலைகளில் ஆனந்தமாக நீந்தி மகிழ்கிறான். இதுதான் சாஸ்திரம் படிப்பதால் ஏற்படும் நன்மையாகும். ஒரு இயந்திரத்தை உபயோகிக்கும் முறையை அறியாமல் அதை உபயோகித்தால் இயந்திரம் பழுதாகிவிடும். ஆசைகளை வென்ற நமது ரிஷிகள் உபதேசித்த வாழ்க்கைத் தத்துவங்களையே ஆன்மிக நூல்கள் நமக்குப் புகட்டுகின்றன. அவற்றைத் தினந்தோறும் படிக்கவும், வாழ்வில் பின்பற்றவும் செய்வதன் மூலம் ரிஷிகளுக்கு நாம் பட்டுள்ள கடனைத் தீர்க்கிறோம். படிப்பது மட்டும் போதாது; அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். சமையல்கலைப் புத்தகத்தைப் படித்து யாராவது பசியைத் தீர்த்துக்கொள்ள முடியுமா? ரிஷிகள் கூறியுள்ள ஆன்மிகத் தத்துவங்களை நமது வாழ்வின் அங்கமாக மாற்றக் கற்றுத் தருவதே தேவ யக்ஞமாகும். பூஜை, ஜபம், தியானம், விரத அனுஷ்டானங்கள் இவை அனைத்தும் தேவயக்ஞத்தில் அடங்கும். மன ஒருமைப்பாடு, புத்திக் கூர்மை, மனமலர்ச்சி, சத்துவகுணம் இவற்றைப் பெறுதலே இவற்றின் லட்சியம். மந்திர ஜபத்தின் மூலம் மனதில் பல்வேறு சிந்தனைகள் வராது தடுத்து நிறுத்த முடியும். தியானத்தின் மூலம் அறிவில் தெளிவும், கூர்மையும் வருவதுடன், மனதின் சலனங்கள் அடங்கி அமைதியும், நிம்மதியும் ஏற்படுகின்றன.

பூஜையையும், ஹோமத்தையும் தத்துவமறிந்து செய்வது மிக நல்லது. ஹோமத் தீயில் பொருட்களை ஆஹூதியாக அளிக்கும்போது விருப்பமுள்ள பொருட்கள்மீது நமக்கு இருக்கும் விருப்பத்தையே அக்னியில் அர்ப்பிப்பதாகப் பாவனை செய்யவேண்டும். பூஜை சமயத்தில் ஊதுவத்தி ஏற்றுகையில், அதுபோல், தான் எரிந்து உலகிற்கு நறுமணம் அளிப்பதாக தனது வாழ்வு அமையவேண்டும் என்று சங்கல்பிக்க வேண்டும். ஆரதிக்குக் கற்பூரம் ஏற்றும்போது, தனது அகந்தை ஒரு துளியும் மீதமின்றி முற்றும் ஞான அக்னியில் எரிந்துபோவதாகப் பாவனை செய்ய வேண்டும். மந்திர உச்சரிப்பும், ஹோமப்புகையும் அதைச் செய்பவருக்கு மனத்தூய்மை அளிப்பதுடன், சுற்றுப்புறத் தூய்மைக்கும் உதவுகிறது. ஒவ்வொரு பொருளையும் இறைவடிவமாகக் கருதுகிற காரணத்தால், எந்தப் பொருளை எடுக்கும்போதும் சிரத்தையும், பக்தியும் தோன்றும். ஏற்றிவைத்த குத்துவிளக்கைக் காணும்போது, யாராயிருந்தாலும் தம்மை அறியாது கைகூப்பி வணங்குவது, அதில் இறைசாந்நித்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கை பரம்பரையாக இருந்து வருவதால்தான்.

அதேபோல், உண்ணாவிரதமும், மற்ற விரதங்களும் மனக்கட்டுப்பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுபவை ஆகும். பெரும்பாலான விரத நாட்கள் அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் வருவதைக் காணலாம். சந்திரனின் வளர்ச்சியும், தேய்வும் மனதைப் பாதிக்கின்றன என்பதை இப்போது அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மன நோயாளிகளின் நோய் அதிகரிக்கும்; கோபம் கூடும்; மன உணர்ச்சிகள் அதிகரிக்கும். அவ்வேளையில் பிரார்த்தனை மற்றும் பிற ஆன்மிக சாதனைகளின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துவதாலும், உணவைக் குறைத்து, பழவகைகளை அருந்துவதாலும் மனதின் சஞ்சலம் குறையும்; ஆயுளும், ஆரோக்கியமும் கூடும். விரத அனுஷ்டானங்களை ஒரு சமுதாயம் முழுவதும் பின்பற்றுவதால் அது இயற்கையிலும் அனுகூலமான அலைகளை உருவாக்கும். பருவம் தவறாது தேவையான மழையும், வெயிலும் கிடைக்கும். இதுதான் யக்ஞத்தின் மூலம் தேவதைகளைத் திருப்திப்படுத்தி மழை பெய்யச்செய்வது என்று கூறுவதன் பின்னே உள்ள தத்துவம்.

பித்ரு யக்ஞம் என்றால் தர்ப்பணம் போன்ற கர்மங்கள் மட்டுமல்ல; பெற்றோர்மீது நமக்குள்ள அன்பையும், மரியாதையையும் அவர்களுக்குத் தொண்டு செய்வதன்மூலம் வெளிப்படுத்துவதே சரியான பித்ரு யக்ஞமாகும். வயதாகி, தளர்ந்திருப்பவர்களை நாம் சரியான முறையில் கவனிக்கவில்லை என்றால் அவர்களது மனதின் சாபம் சுற்றுப்புறத்தில் தங்கி இருக்கும்; இயற்கையில் பதிவாகி இருக்கும் அவர்களின் உள்ளப் புலம்பல் என்றாவது நம்மைத் திருப்பித் தாக்கும். பெற்றோருக்கு முழு மனதுடன் சேவை செய்யும் ஒருவன் வேறு எந்த இறைவழிபாடும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றே கூறப்படுகிறது.

அதிதிகளை (விருந்தினர்களை) இறைவனாகக் கருதி மரியாதை செலுத்துமாறு நமது பண்பாடு வலியுறுத்துகிறது. குடும்ப அங்கத்தினரிடம் நாம் காட்டும் அன்பானது, பற்றால் வருவதாகும். நம்மைப் பரந்த மனமுடையவராக ஆக்க இது உதவாது. ஆனால், அதிதி பூஜை, பிரதிபலனை எதிர்பாராத அன்பிலிருந்து உருவாவதாகும். உலகையே ஒரு குடும்பமாகக் கருதி அன்பு செய்ய அது நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குகிறது.

மரம், செடி-கொடிகளுக்கும், பறவை-மிருகங்களுக்கும் தெய்வங்கள் மற்றும் இறை வாகனங்களின் இடத்தை நாம் அளித்திருக்கிறோம். வளர்ப்பு மிருகங்களுக்குத் தீனி கொடுத்த பிறகும், துளசி, ஆல், வில்வம் போன்ற மரம்-செடிகளுக்கு நீர்விட்ட பிறகும் தான் பழங்காலக் குடும்பத்தினர் உணவு உண்டனர். பூஜை மலர்களுக்காகப் பூச்செடி நடும்போதும், அதைக் கவனித்து வளர்க்கும்போதும், அதில் பூ மலர்வதைக் காணும்போதும், பூப்பறித்து மாலை கட்டும்போதும் என எப்போதும் நமது மனம் நாம் செய்யும் செயலைச் சிந்திக்காமல், இறைவனிடமே நிலைத்துள்ளது. நாம் நண்பனுக்குக் கடிதம் எழுத நினைக்கிறோம். காகிதத்தையும், பேனாவையும் எடுக்கும்போதெல்லாம், ‘இன்னாருக்குக் கடிதம் எழுதப் போகிறேன்‘ என்ற உணர்வு மனதில் இருக்கும். பேனா, தாள் இவை எல்லாம் வேறு வேறு என்ற போதும் அவையனைத்திலும் ஒன்றை, அதாவது நண்பனையே நாம் காண்கிறோம். அதுபோல், எச்செயல் புரியும்போதும் இறைவனை மட்டும் தரிசிக்கவேண்டும். எச்செயலையும், ‘இது இறைவனுக்காக‘ என்ற நினைவுடன் செய்யுங்கள். இதன்மூலம் பல செயல்கள் மூலமாகவும், விஷயங்கள் மூலமாகவும் ஒருமையைத் தரிசிக்கிறோம். அத்வைதம் பற்றிப் பலரும் பேசுகின்றனர். யாரும் அதைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. ஆனால், சரியான பக்தன் பூதயக்ஞத்தின் மூலம் சகல சராசரங்களிலும் ஒரே மெய்ப்பொருளையே தரிசிக்கிறான். தன்னை அறியாமல் அவன் அத்வைதத் தத்துவத்தில் வாழ்கின்றான்.

ஆன்மிகம் என்பது நம் வாழ்விலிருந்து வேறுபட்ட ஒரு பொருளல்ல. ஒவ்வொருவரிடமும் உள்ளதே ஆகும். அதை உணர்வுநிலைக்குக் கொண்டுவர ஆசார அனுஷ்டானங்கள் உதவுகின்றன; அவ்வளவே. தினமும் பல் தேய்ப்பதும், குளிப்பதும் நமக்கு எவ்வளவு இயல்பாக உள்ளதோ, அதுபோல் இந்தச் சாதனை முறைகள் நமது இயல்பாக மாற வேண்டும். இந்த மதத் தத்துவங்களைப் புரிந்துகொள்ள மனிதனுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தால், பெரும்பாலான மக்களின் வாழ்வு இயந்திர மனிதனுடைய இயக்கத்தைப்போல ஆகியிருக்கும். மதமின்றியும் வாழலாம். ஆனால், அது பிணத்திற்கு அலங்காரம் செய்து பார்ப்பது போலாகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum