அம்பாள் சிலை உருவான வரலாறு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
அம்பாள் சிலை உருவான வரலாறு
குலசேகரப்பட்டினத்தில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர். அப்போது அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது. அம்பாளிடம் இதற்காக மனமுருகி அவர்கள் வேண்டினர். அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள்.
"எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு செல். அனைத்தும் நிறைவேறும் என்று கூறினாள் மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள் சிலைகளை நிறைய பேர் செய்து வருகின்றனர்.
இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார். அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள். குலசேகரன் பட்டினத்தில் தான் சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள்.
அதுமட்டுமல்லாமல், தன் உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத் தெரியப்படுத்தினாள். பின்னர், தனது மற்றும் சுவாமியின் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள்.
தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள் சுயம்புவாக முளைத்துள்ள இடத்திற்கு அருகாமையில் அந்தக் கற்சிலையை நிறுவ வேண்டும் என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள். இந்தக் கனவு கலைந்ததும் திடுக்கிட்டார் ஆசாரி. கனவில் முத்தாரம்மன் தனக்கு ஆணை பிறப்பித்ததை உணர்ந்தார்.
குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை அப்படியே கற்களில் சிலையாக வடித்தார். முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர், அவ்வூரைச் சேர்ந்தச் சிலருடன் மைலாடி சென்றார்.
சுப்பையா ஆசாரி பற்றி விசாரித்து அறிந்து அவரைச் சந்தித்தார்கள். சுப்பையா ஆசாரி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார். அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர். முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த அன்னைதான் குலசேகரன் பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தி வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும். இதுபோல் அம்பாளும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.
மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது. மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும் ஒரே நேரத்தில் பூஜை நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும். இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது *
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அம்பாள் சிலை உருவான வரலாறு
» அய்யப்பன் சிலை வரலாறு
» ராகு - கேது உருவான வரலாறு
» ராகு - கேது உருவான வரலாறு
» வாஸ்து பகவான் உருவான வரலாறு
» அய்யப்பன் சிலை வரலாறு
» ராகு - கேது உருவான வரலாறு
» ராகு - கேது உருவான வரலாறு
» வாஸ்து பகவான் உருவான வரலாறு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum