தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெற்றி, மகிழ்ச்சி, ஆயுள், ஆரோக்கியம்.. அட்சய பாத்திரம் போல அள்ளி தரும் சூரியன்

Go down

 வெற்றி, மகிழ்ச்சி, ஆயுள், ஆரோக்கியம்.. அட்சய பாத்திரம் போல அள்ளி தரும் சூரியன் Empty வெற்றி, மகிழ்ச்சி, ஆயுள், ஆரோக்கியம்.. அட்சய பாத்திரம் போல அள்ளி தரும் சூரியன்

Post  ishwarya Fri May 24, 2013 12:18 pm

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைந்தாலும் அதன் கோணமானது 6 மாதங்களுக்கு சற்று வடக்கு நோக்கி நகர்ந்தும், 6 மாதங்களுக்கு சற்று தெற்கு நோக்கி நகர்ந்தும் இருக்கும். இவ்வாறு தெற்கு, வடக்காக சூரியன் நகர்வதை குறிப்பதே தட்சிணாயனம், உத்தராயனம். தட்சிண என்றால் தெற்கு. உத்தர என்றால் வடக்கு. அயனம் என்றால் பயணம். தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரையிலான 6 மாத காலம் உத்தராயனம். ஆடி தொடங்கி மார்கழி வரையிலான 6 மாதம் தட்சிணாயனம். உத்தராயன புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை. சனீஸ்வரரின் வீடான மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இதில் அமாவாசையில் இருந்து வளர்பிறை ஏழாம் நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சப்தமி எனும் ஏழாம் நாளில் வருவதால் ரத சப்தமி என எல்லோராலும் அறியப்படுகிறது. ‘சப்த’ என்றால் ஏழு. சப்த என்ற பதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சப்த ரிஷிகள், சப்த மாதர்கள், சப்த ஸ்வரங்கள், சப்த கன்னியர், சப்த கிரி என ஏழின் பெருக்கங்கள் பல உள்ளன. அந்த வகையில் ரதசப்தமி சிறப்புமிக்கதாகும். இன்றைய தினத்தில்தான் சூரிய பகவான் கச்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாக பிறந்தார். சூரிய பகவான் ஏழு குதிரை பூட்டிய தனது ரதத்தை வடக்கு நோக்கி திருப்பி தன்னுடைய பயணத்தை வடகிழக்கு நோக்கி தொடர்கிறார். சூரியனின் ரதத்தில் உள்ள ஏழு குதிரைகள் வான வில்லின் ஏழு நிறங்களையும், வாரத்தின் ஏழு நாட்களையும் குறிப்பதாக கருதப்படுகிறது.

சூரியன், சூரிய ஒளி இல்லாவிட்டால் உலக உயிர்கள் அழிந்துவிடும் என்பது அறிவியல் உண்மை. தினமும் நம் பார்வையில் படும் பகவானான சூரியனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி ‘ஓம் நமோ ஆதித்யாய ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று சொல்லி பிரார்த்திக்கலாம். ஏனென்றால் அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன் ஆவார்.

நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். சகல ஜீவ ராசிகள், பயிர், பச்சைகளை தன் ஒளிக்கதிர்களால் வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். ஆட்சி, அதிகாரம், தலைமை பதவி, ஆளுமை போன்றவற்றின் கர்த்தா. ஜாதக அடிப்படையில் சூரியனின் தயவு இல்லாமல் தலைமை பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், அதிகாரிகள், அதிகார மையங்கள், தலைமை செயலாளர்கள் போன்ற பதவிகளில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் இந்த ரத சப்தமி.

ரதசப்தமியை புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின், தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறை. அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு 7 எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள், காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். ‘அருக்கன்’ என்பதில் இருந்து மருவி வந்ததே ‘எருக்கன்’ என்பதாகும். அருக்கன் என்றால் சூரியன். இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது. எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்க இலையை தலையில் வைத்து குளிக்கும் சம்பிரதாயம் ஏற்பட்டது.

தினகரன், பாஸ்கரன், அருக்கன், சூரியநாராயணன் என சூரியனுக்கு பல்வேறு விதமான பெயர்கள் உண்டு. இதில் சூரிய நாராயணன் என்ற பெயர் விஷ்ணுவை குறிப்பதாகும். இந்த ரதசப்தமி நாளில் அனைத்து சிவன், பெருமாள் கோயில்களிலும் சிறப்பு உற்சவங்கள் நடைபெறும். ஏழுமலைகளை உள்ளடக்கிய சப்தகிரி எனும் திருப்பதியில் அதிகாலை சூரிய உதயத்தில் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை எந்த நாளும் இல்லாத வகையில் பெருமாள் சப்த வாகனங்களில் அமர்ந்து அருள்பாலிப்பார். முதலில் சூரிய பிரபையில் ஆரம்பித்து, சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வபூபால வாகனம் கடைசியாக சந்திர பிரபையில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

இந்த நாள் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல புண்ணிய பலன்களை தரும் நாளாக புராணங்கள் போற்றுகின்றன. இந்நாளில் துவங்கும் புதிய முயற்சிகள், அரசாங்க விஷயங்கள் முக்கிய சந்திப்புகள், சுபமுயற்சிகள், தொழில் தொடங்குதல், எல்லா விஷயங்களுக்கும் பிள்ளையார் சுழி போடுதல், தானதர்மம் செய்தல் போன்றவை நல்ல வளர்ச்சியையும் பலனையும் அளிக்கும். தியானம், மந்திர ஜெபம், யோகா, கல்வி, கலை, வித்தை, பயிற்சிகள் போன்றவற்றை துவக்குவதற்கும் இது நல்ல நாளாகும். இன்று செய்யப்படும் உதவிகள், தானங்கள், தர்மங்கள் ஒன்றுக்கு பத்தாக புண்ணியத்தை சேர்க்கும்.

சூரியனின் அம்சங்கள்

சூரியன்: பிதுர்க்காரகன்
கிழமை: ஞாயிறு
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
ராசி: சிம்மம்
உச்சம்: மேஷம்
நீசம்: துலாம்
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை: சிவப்பு

‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

வழிபாடு - பரிகாரம்

சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் சூரியனை அர்ச்சனை செய்து வழிபடலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரவை போன்றவற்றை இல்லாதோர், நோயாளிகளுக்கு தரலாம். கோதுமை பலகாரத்துடன், பழங்கள், கீரை, வெல்லம் சேர்த்து பசுவுக்கு கொடுக்கலாம். சூரிய காயத்ரி மந்திரம் சொல்லலாம். ‘ஓம் அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். சூரிய ஸ்தலமான ஆடுதுறை சூரியனார்கோயிலுக்கு சென்று வரலாம்.

நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரியனுக்கான பிரார்த்தனை ஸ்தலமாகும். ‘ஆரோக்யம் தருபவன் சூரியன்’ என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சூரியனை வணங்குவதால் உடல்நலம் சிறக்கும் என்று அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. இந்நாளில் பூஜை அறையிலும், வீட்டு வாசலிலும் தேர்வடிவ கோலமிட்டு சூரியனை வழிபடுவது விசேஷம். இந்நாளில் விரதம் இருந்து சர்க்கரை பொங்கல், வடை, இனிப்பு பலகாரங்கள், கோதுமை பண்டங்களை சூரியனுக்கு நிவேதனம் செய்து தானம் தருவது புண்ணியமாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum