தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னை செடல் மாரியம்மன் ஆலயம்

Go down

 அன்னை செடல் மாரியம்மன் ஆலயம் Empty அன்னை செடல் மாரியம்மன் ஆலயம்

Post  ishwarya Thu May 23, 2013 6:11 pm

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு கிழக்கே ஒரு கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது அருள்மிகு அன்னை செடல் மாரியம்மன் ஆலயம். இங்கு அமைதியாகக் குடி கொண்டு அருள்பாலிக்கிறாள் அன்னை. முகப்பில் மூன்றடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க, உள்ளே நுழைந்ததும் அகன்று விரிந்த பிரகாரம்.

எதிரே கொடிமரம், சூலம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. வலதுபுறம் மதுரை வீரன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து உள்ளது மகாமண்டபம். நுழைவுவாசலின் முன்னே வலதுபுறம் முருகன், வள்ளி, தெய்வானையும் இடதுபுறம் செல்வ விநாயகரும் அருள் பாலிக்கின்றனர். உட்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் ஆலயத்தின் தலவிருட்சமான அத்திமரம் தழைத்தோங்கி நிற்கிறது.

தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். மேற்கு பிரகாரத்தில் பட்டவன் சன்னதி உள்ளது. மகாமண்டபத்தின் உள்ளே இடதுபுறம் சங்கிலியாண்டவர் அருள் பாலிக்கிறார். அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலின் இருபுறமும் துவார சக்தியின் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன.

அடுத்துள்ள கருவறையில் அன்னை அருள்மிகு செடல் மாரியம்மன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் மலர்ந்த முகத்துடன் சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு தினசரி இரண்டுகாலம் பூஜைகள் தட்சிணாமூர்த்தி நடக்கின்றன.

காலை 6.30 முதல் 11 மணி வரையிலும் மாலை 5.30 முதல் 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். அன்னையின் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்கள் ஏராளம்.

மஞ்சள் பிரசாதம்......... ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் 12 மணியளவில் அம்மனுக்கு உச்சிகால பூஜை நடைபெறும். அப்போது அன்னைக்கு மஞ்சள் சாந்தை சாத்தி, அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். அந்த மஞ்சள் பிரசாதத்தை வாங்க பெண்கள் கூட்டம் அலைமோதும்.

திருமணத் தடை நீங்கி விரைந்து திருமணம் நடைபெற வேண்டும் என்று வேண்டுபவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை அம்மனின் சன்னதிக்கு வந்து, மஞ்சள் பிரசாதத்தை பெறுவதால் தங்களது கோரிக்கைகள் நிறைவேறுகின்றன என அந்த பக்தர்களும் பக்தைகளும் நம்புகின்றனர். ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு பாலாபிஷேகமும் சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றன.

புரட்டாசி மாதத்தில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்கள் கொலு வைக்கப்பட்டு, 10ம் நாள் அன்னை குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் முருகன் திருக்கல்யாணம் அமர்க்களமாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை அன்று சொக்கப்பனை ஒன்று ஆலயத்தின் எதிரே அமைக்கப்பட்டு தீயிட்டு தீபம் ஏற்றும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

தை வெள்ளிகளில் அம்மனுக்கு விதவிதமாக அற்புதமாக அலங்காரம் செய்கின்றனர். அந்த அலங்காரத்தைக் காணவே இந்த ஆலயத்தில் கணிசமாக கூட்டம் கூடுவது வாடிக்கை. மார்கழியில் சபரிமலைக்குச் செல்வோர் நூற்றுக்கணக்கில் இந்த ஆலயத்திற்கு வந்துதான் இருமுடி கட்டுகின்றனர் என்பது வியக்க வைக்கும் செய்தி.

மார்கழி முதல் நாள் அன்று அய்யப்ப பக்தர்கள் ஒன்று கூடி இங்கு அன்னதானம் செய்கின்றனர். அந்த அன்னதானத்தில் சுமார் 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் கலந்துகொள்கின்றனர். சித்திரை ஆண்டுப் பிறப்பு அன்று ஆலயம் சார்பில் நடை பெறும் அன்னதானத்திலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அன்று அன்னைக்கு பூச்செரிதல் விழா, திருவிழா கோலத்துடன் நடைபெறுகின்றன. அது சமயம் நவ தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து, அதை ஒரு சட்டியில் வைத்து தூக்கி வந்து, அதனை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி தங்களது பிரார்த்தனைகளை இங்கு பக்தர்கள் நிறைவேற்றுவது காணக் கிடைக்காத காட்சி.

தவிர ஒவ்வொரு மாத பவுர்ணமியின் போதும் இங்கு அன்னதானம் நடைபெறும். 9 வாரங்கள் புதிய அகல் விளக்கில் தீபம் ஏற்றி அன்னையை வழிபட்டால் வெளிநாடு செல்ல நினைப்போரின் பிரார்த்தனைகள் நிறைவேறுவது நிஜம் என நம்புகின்றனர் பக்தர்கள். அன்னையின் மேல் இடது கையில் உடுக்கையும், மேல் வலது கையில் பாசமும், கீழ் வலது கையில் கத்தியும், கீழ் இடது கையில் கபாலமும் உள்ளன.

அன்னையின் பாதத்திற்கு கீழ் தாமரை மலர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அம்மன் விக்கிரகங்கள் சாதாரணமாக வலது கையில் உடுக்கையும், இடது கையில் பாசமும் இருக்கும். ஆனால், இந்த அன்னையின் விக்கிரகத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும். கருவறையில் உள்ள அன்னையின் விக்கிரகம் கருங்கல்லில் நல்ல கலை மற்றும் சிற்ப நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விக்கிரகம் உருவாக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கருதுகின்றனர். திருச்சியை நவாப் ஆண்டபோது இந்தப்பகுதி பீமநாயக்கன் பாளையம் என்று அழைக்கப்பட்டு வந்தது. (தற்போது இது மருவி பீமநகர் என்று அழைக்கப்படுகிறது.) நவாப் காலத்தில் இங்கு யுத்தம் மூண்டது.

அப்போது இந்தப் பகுதி மக்கள் கொள்ளையர்களுக்கு பயந்து அன்னையின் விக்கிரகத்தை தற்போது ஆலயம் உள்ள பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு அன்னையை ஓரிடத்தில் மறைத்து வைத்து வழிபாடும் செய்துள்ளனர். அதை நினைவுபடுத்தும் விதமாக இன்றும் வைகாசி 3வது செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருவிழாவுக்கு முதல் நாள் பட்டவன் எழுப்புதல் என்ற விழாவினை நடத்துகின்றனர்.

இந்த ஆலயம் கட்டப்பட்டு 1973ம் ஆண்டு குடமுழுக்குத் திருவிழா முதன் முதலில் நடைபெற்றுள்ளது. மீண்டும் இந்த ஆலயம் சிறப்பாக வடிவமைத்து 13.06.2003ல் கும்பாபி ஷேகம் நடந்தேறி உள்ளது. சித்திரை மாதம் அக்னி நட்சத்திற்கு முதல் ஞாயிற்றுக் கிழமை கொடியேற்று விழாவும், காப்பு கட்டும் திருவிழாவும் நடைபெறும்.

அப்போது குறிப்பிட்ட இஸ்லாம் குடும்பத்தினர் ஐந்து பேர் காப்பு கட்டும் விழாவுக்காக மஞ்சள், தேங்காய், பழம், நல்லெண்ணெய், அம்மன் உடைகள் மற்றும் பூஜை பொருட்களுடன் ஆலயம் வந்து அன்னைக்கு பூஜை செய்து அன்பு செலுத்துகின்றனர். ஆலயத்தில் அவர்களுக்கு முதல் மரியாதை செய்து அனுப்பி வைக்கின்றனர்.

இது ஆண்டாண்டு காலமாக இந்த ஆலயத்தில் நடைமுறையில் இருக்கும் வினோதமான பழக்கம். மங்கையரின் மனம் கவரும் அன்னையாக அவர்களது குறைகளை தீர்த்து வைக்கும் தாயாக இந்த அருள்மிகு செடல் மாரியம்மன் திகழ்கிறாள் என்பதில் ஐயமில்லை.

செடல் குத்தி மாரியம்மன்......... செடல் குத்தி மாரியம்மன் என்று ஆதிகாலத்தில் அழைக்கப்பட்டாள் இந்த அன்னை. இந்த ஆலயத்தின் எதிரே சுமார் 30 அடி உயரமும் 2 அடி பருமனும் உள்ள கருங்கல் ஸ்தூபி ஒன்று உள்ளது. இதில் இரும்புக் கம்பம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

விமான அலகு அல்லது செடல் அலகு என்று அழைக்கப்படும் அலகுகள் பூட்டி, பறக்கும் நிலையில் வரும் பக்தர்கள் இந்த இரும்பு கம்பத்தை மையமாக வைத்து சுற்றி வருவார்கள். இந்த ஸ்தூபியை செடல் கல் என்று அழைக்கின்றனர் பக்தர்கள்.

அலகுகள் பூட்டி வரும் நிகழ்ச்சிக்கு செடல் குத்துதல் என்று பெயர். எனவே, ஆரம்பத்தில் செடல் குத்தி மாரியம்மன் என்று அழைக்கப்பட்ட இந்த அன்னை பின்னர் காலப்போக்கில் செடல் மாரியம்மன் என்று அழைக்கப்படலானாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum