தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உபவாச விரதம்?

Go down

உபவாச விரதம்?  Empty உபவாச விரதம்?

Post  ishwarya Wed May 22, 2013 5:28 pm

எல்லா மதங்களிலும் உபவாச விரதம் அல்லது உண்ணா நோன்பு சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்துக்கள் ஏகாதசி போன்ற குறிப்பிட்ட தினத்திலோ, வெள்ளிக்கிழமை போன்ற குறிப்பிட்ட கிழமைகளிலோ, சில விசேஷ நாட்களிலோ சாப்பிடாமல் உபவாச விரதம் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரம்ஜான் சமயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள்.

அது அவர்களுக்குக் கடமையாக்கப்பட் கிறிஸ்தவர்களும் உபவாசம் இருந்து ஜெபிப்பதை விசேஷமானதாக எண்ணுகிறார்கள். எனவே உபவாசம் என்பது மதம், இனம் கடந்து அனைத்து தரப்பினரிடத்திலும் சிறப்பிடத்தைப் பெற்று இருப்பது தெளிவாகிறது. சமஸ்கிருதத்தில் 'உப' என்றால் 'அருகில்' என்று பொருள். 'வாசம்' என்றால் வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள்.

ஆகவே உபவாசம் என்பதற்கு 'இறைவனுக்கு அருகில் இருத்தல்' என்று பொருள் சொல்லப்படுகின்றது. சிலர் இறையருளைப் பெறவும் தங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உபவாசம் இருக்கிறார்கள். சிலர் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், மனவலிமையை மேம்படுத்திக் கொள்ளவும் உபவாச விரதம் இருக்கிறார்கள்.

உண்மையில் உபவாசம் என்பது முழுமையாக பட்டினி கிடத்தல் என்பதாகும். என்றாலும், தண்ணீர் மட்டும் குடித்து உபவாசம் இருப்பதிலிருந்து குறிப்பிட்ட உணவை மட்டும் உண்டு அல்லது குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தவிர்த்து உபவாசம் இருப்பது வரை பல வித உபவாசங்களும் உபவாசமாகவே கருதப்படுகின்றன.

நமது நேரமும், சக்தியும் உணவைத் தயாரிப்பதிலும், பெறுவதிலும், உண்பதிலும், செரிப்பதிலுமே அதிகம் செலவாகிறது. சில வகை உணவுகள் நம் மூளையை மந்தமாக்கி நம்மை சஞ்சலப்படுத்துகின்றன. எனவே தான் சில நாட்களில் நம் நேரத்தையும், சக்தியையும் அதிகம் வீணாகாமல் தவிர்க்க எளிதில் செரிக்கக் கூடிய உணவை உட்கொண்டோ அல்லது உணவை முற்றிலும் தவிர்த்தோ உண்ணாவிரதம் இருக்கின்றோம்.

இதனால் நேரமும் சக்தியும் சேமிக்கப்படுகின்றன. புத்தி கூர்மையாகிறது. மனம் தூய்மையாகி ஒருமுகப்படுகிறது. எந்த அளவிற்கு நாம் நமது ஐம்புலன்களின் விருப்பங்களுக்கு அடிமையாகி செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு அவற்றின் வேட்கையும் தூண்டுதலும் அதிகரிக்கும். உண்ணா நோன்பு இருக்கையில் புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

அதனால் ஆசைகளும், விருப்பங்களும் கீழ்நிலையிலிருந்து விலகி உன்னதமானவையாக மாறுகின்றன. இறைவனை நினைக்கவும், சிந்திக்கவும் இதை விடச் சிறந்த சூழல் வேறென்ன இருக்க முடியும்?. ஆனால் உபவாசம் இருப்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல என்பதில் எல்லா மதங்களும் உறுதியாக இருக்கின்றன.

உபவாச காலத்தில் மனதைக் கட்டுப்படுத்தி காம குரோதங்களை விட்டொழித்து முழு மனதையும் இறைவனிடத்திலும், உயர்ந்த விஷயங்களிலும் செலுத்துதல் வேண்டும் என்று இந்து மதம் சொல்கிறது. 'நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது' என நபிகள் நாயகம் (ஸல்) வலியுறுத்துவதாக இஸ்லாம் கூறுகிறது.

'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அறிவுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஒருபடி போய் 'நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல' என்று நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கிறார்.

ரம்ஜானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரம்ஜானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் அதன் பொருள். எனவே அத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.

விரதம் முடிந்த பின் நாக்கின் தீவிர வேட்கைக்கு ஆளாகி விடக் கூடாதென்றும், உண்ணா நோன்பின் நோக்கம் உயர்வானதாக இருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. உணவின்றி உபவாசம் இருத்தல் அதிக நேரம் ஜெபத்தில் இருக்கவும், சுய ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவும் உதவும் ஆன்மிக வழிமுறையாக கிறிஸ்துவம் கருதுகிறது

ஆனால் அது சம்பிரதாயமாகவும், போலித்தனமாகவும் மாறி விடக் கூடாதென்று இயேசு கிறிஸ்து வலியுறுத்துகிறார். 'உபவசிக்கும் போது மனுஷருக்குக் காணப்படாமல் அந்தரங்கத்தில் இருக்கிற பிதாவுக்கு மட்டும் காணும்படியாக இருக்க வேண்டும்' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

மனிதப் பிறவி எடுத்தவர்கள் மெய்ஞானத்தை அடைய வேண்டுமென்றால் சில உடல், மனக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஆக வேண்டும். அதன் ஒரு பகுதி தான் உபவாசம். எந்த ஒரு எந்திரமும் ஓய்வின்றி உழைத்தால் பழுதடைவது இயல்பு. உடலுக்கும், உள்ளத்திற்கும் அவ்வப்போது பூரண ஓய்வு என்பது அவசியம். உண்ட உணவை செரிக்க நேரிடும் ஜீரண வேலைக்கு, உயிராற்றலின் பெரும் பகுதியை செலவழிக்க நேரிட வேண்டியுள்ளது.

தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் போது உடலின் உயிராற்றலும் ஓயாது இயங்குகிறது. இதற்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட ஓய்வு உடலுக்கு உபவாச காலத்தில் கிடைப்பதால் உண்ணா விரதம் இருப்பது ஆரோக்கிய ரீதியாகவும் பயனளிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தொடர்ச்சியாக விரதங்களைக் கடைப்பிடிப்பவர்களின் இதயத்துக்கு உபவாசம் நன்மை செய்கின்றதாக அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது. உதா (Utah) மாநிலத்தில் மருத்துவர்கள் 200 நோயாளிகளிடம் நடத்திய அந்த ஆய்வில் விரதம் கடைப்பிடித்த நோயாளிகள் விரைவில் இருதய நோய்களில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனை ஆஞ்சியோகிராம், ரத்த நாளங்களின் எக்ஸ்ரே போன்றவற்றின் ஊடாக உறுதியும் செய்துள்ளனர். அமெரிக்காவில் மோர்மோன் என்னும் மதப்பிரிவினர் மாதத்தில் ஒரு நாள் கண்டிப்பாக உபவாசம் கடைப்பிடிப்பது வழக்கமான ஒன்றாகும். இப்படியாக அந்த நோன்பு இருப்பவர்களுக்கு பிற நோயாளிகளைக் காட்டிலும் 58 சதவீதம் இதய நோய் அறிகுறிகள் குறைவாகக் காணப்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பதும் கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக இன்னொரு ஆய்வு மூலமாக அமெரிக்கன் ஜர்னல் ஆப்கார்டியாலஜி தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆய்வில் எவ்வளவு கால நோன்பு, எப்படியான இதய ஆரோக்கியத்துக்கு வழி செய்கின்றது என்பதை உறுதியாக இன்னும் ஆராய்ந்து அறிய முடியவில்லை என மருத்துவர் பெஞ்சமின் டி. ஹோர்ன் தெரிவித்திருக்கிறார்.

'நோயிலே படுப்பதென்ன கண்ணபெருமானே நீ நோன்பிலே உயிர்ப்ப தென்ன கண்ணபெருமானே' என்று பாடுகிறான் பாரதி. அதாவது 'நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத் தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன' என்று வியக்கிறான் பாரதி.

உண்மையில், உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மையடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதியும் சுட்டிக் காட்டுகிறான்.

'லங்கணம் பரம் ஒளஷதம்' என்று நம் முன்னோர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதன் பொருள் 'உபவாசம் இருப்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்து' என்பது தான். இப்படி ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பயனளிக்கும் உபவாச விரதத்தை நாமும் இருந்து இருவகையிலும் பயனடையலாமே!


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum