தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளின் மனதை அறியும் சைக்கோதெரபி

Go down

குழந்தைகளின் மனதை அறியும் சைக்கோதெரபி Empty குழந்தைகளின் மனதை அறியும் சைக்கோதெரபி

Post  meenu Thu Jan 24, 2013 2:15 pm



ஒழுங்காக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த என் மகன் திடீரென்று பள்ளிக்கு செல்ல மறுக்கிறான். கலகலப்பான என் மகள் இப்போதெல்லாம் தனிமையில் வெகுநேரம் அமர்ந்திருக்கிறாள். எங்கோ பார்த்துக்கொண்டு எதிலும் ஆர்வமின்றி காணப்படுகிறாள். என் குழந்தை அமைதியானது. சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறான்.

அடம்பிடிக்கிறான். அழுகிறான். எங்களால் குழந்தையை சமாளிக்கவே முடியவில்லை. நன்றாக படித்துக்கொண்டிருந்தவன் திடீரென்று படிப்பில் பின்தங்குகிறான். அம்மாவை அடிக்கிறான். நண்பர்களோடு மணிக்கணக்கில் செல்போனில் பேசுகிறான்! .. இப்படி பிள்ளைகள் மீது பெற்றோர்கள் சொல்லும் குறைகள் சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

மன அழுத்தம், மனஉளைச்சல், தூக்கமின்மை, மிதமிஞ்சிய சோகம், வெறித்தனமான கோபம், காரணமற்ற பயம், அபரிமிதமான பிடிவாதம் போன்றவை குழந்தைகளிடம் பெருகிவருகின்றன. அதன் விளைவுகள் வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும், சமூகத்திலும் மிகப் பெரிய பிரச்சினைகளையும், ஆபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன.

குழந்தைகளிடம் இருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? இதற்கெல்லாம் என்ன தீர்வு?’ என்று, சென்னையை சேர்ந்த ‘சைக்கோதெரபிஸ்ட்’ டாக்டர் விமலா அம்பிகாபதியிடம் கேட்டபோது, அவர் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

“பெற்றோர்- குழந்தைகள் இடையேயான உறவு என்பது கருவில் தொடங்கி, கல்லறை வரை நீளுகிறது. அதனால் பெற்றோருக்கும்- குழந்தைகளுக்கும் இடையே இணக்கமான உறவு இருந்தால் மட்டுமே குழந்தைகளின் மனவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும், நடத்தையும், செயல்பாடும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் மேலே சொன்னதுபோன்ற பல் வேறு பிரச்சினைகள் தலைதூக்கும்” என்கிறார்.

குழந்தையின் மனநிலையை பேணுவதற்கு தாய் கர்ப்பக் காலத்தில் இருந்தே கவனம் செலுத்தவேண்டுமா?

“ஆமாம். கருவில் இருக்கும்போது தாயின் ஒவ்வொரு உணர்வும் குழந்தையை பாதிக்கும். கர்ப்பக்காலத்தில் பயம், பதட்டம், கோபம், பழி உணர்வு போன்றவை தாயிடம் இருந்தால் அது வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். தந்தையின் அரவணைப்பும் தாயின் மூலமே கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு கிடைக்கும். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்- தந்தை உறவும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

குழந்தை பிறந்த பின்பு தாய் தன் பராமரிப்பு மூலம் பாதுகாப்பு உணர்வு, நம்பிக்கையை குழந்தைக்கு கொடுக்கவேண்டும். குழந்தை விரல் சப்பினால் அது பாதுகாப்பற்ற உணர்வை அனுபவிக்கிறது என்று அர்த்தம். படுக்கையில் சிறுநீர் கழிப்பதும் குழந்தையின் மனோநிலை தாக்கம் தொடர்புடையதுதான்.

ஒன்று முதல் மூன்று வயதிற்குள் குழந்தையின் மூளை முழு வளர்ச்சியை தோற்றத்திலும், செயல்பாட்டிலும் பெறும். அப்போது பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்கவேண்டும். நன்றாக சிந்திக்கவும், பயமின்றி வாழவும் சொல்லித்தரவேண்டும். சொல்லித்தருவதைவிட பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டும்” இது தொடர்பாக நீங்கள் சந்தித்த கவுன்சலிங் சம்பவம் ஏதாவது சொல்ல முடியுமா?

“ஆறு வயது சிறுவன் ஒருவனை கவுன்சலிங்குக்காக அழைத்து வந்தார்கள். அவன் பெற்றோருடன் ஷாப்பிங் செல்லும்போது, விலை உயர்ந்த விளையாட்டு சாமான் எதையாவது கேட்பானாம். வாங்கி கொடுக்காவிட்டால் உடனே தரையில் விழுந்து புரண்டு அழுது கொண்டு, ‘இதைக்கூட வாங்கிக்தர வழியில்லாத உங்களுக்கு பிள்ளை ஒரு கேடா..!’ என்று கேட்பானாம்.

வீட்டில் அவன் செய்யும் தவறுக்கு தண்டனை கொடுத்தால் உடனே தன் கையை பிளேடால் கீற ஆரம்பித்துவிடுவானாம். அதனால் பெற்றோர் பயந்து அழைத்து வந்தார்கள். அந்த சிறுவனை தனியாக உட்காரவைத்து பேசியபோது உண்மை வெளியே வந்தது. அவனுக்கு மூன்று நான்கு வயதாக இருந்தபோது அவன் முன்னாலே அம்மா, அப்பா இருவரும் சண்டை போடுவார்களாம்.

மனைவி புடவை வாங்கிக் கேட்கும்போது கணவர் மறுப்பாராம். உடனே மனைவி, ‘இதைக்கூட வாங்கித்தர முடியாத உங்களுக்கு பொண்டாட்டி ஒரு கேடா’ என்று கேட்டிருக்கிறார். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டால் மனைவி உடனே தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டிக்கொண்டு கத்தியை எடுத்து கையை கீறுவாராம்.

இதை எல்லாம் பார்த்து வளர்ந்த குழந்தை, தன் பக்கம் பெற்றோரின் கவனத்தை திருப்பவும், தான் நினைத்ததை அடையவும் அம்மா பேசியது போல், ‘உங்களுக்கு குழந்தை ஒரு கேடா’ என்றும், அம்மா செய்ததுபோல் கையை கீறவும் முயற்சிக்கிறான்.

அந்த உண்மைகளை உணர்ந்த பின்பு பெற்றோருக்கு பிரச்சினையின் மூல காரணத்தை விளக்கினோம். பெற்றோருக்கும், சிறுவனுக்கும் ‘சைக்கோதெரபி’ மனநல சிகிச்சை தேவைப்பட்டது” சைக்கோதெரபி என்பது என்ன?

“ஒருவரிடம் முரண்பாடான பழக்கமோ, செயல்களோ இருந்தால் அதை அவரிடம் இருந்து போக்குவதற்கு அவரின் எண்ணம், உணர்வு, செயல் மூன்றிலும் சரியான மாற்றங்களை உருவாக்க வேண்டும். மனோரீதியாக அந்த மாற்றங்களை உருவாக்க கற்றுக்கொடுத்து பழக்கப்படுத்துவதே சைக்கோதெரபி. இதில் விஞ்ஞான ரீதியான முறைப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் இருக்கின்றன.

ஆளுக்கு தக்கபடியும், பாதிப்பிற்கு தக்கபடியும், சூழலுக்கு தக்கபடியும் அதை வழங்கவேண்டும்” சைக்கோதெரபியில் ஒருவருக்கு நேரடியாக என்ன பலன்கள் கிடைக்கும்?

“ஒருவரது பிரச்சினைகளை அடி ஆழமாக கண்டறியலாம். அவரது ஆளுமைத்தன்மை, அறிவுத்திறன், தனித்திறன், ஞாபகசக்தி, விருப்பங்கள் போன்றவைகளை அறிந்து, அவைகளை மேம்படுத்தலாம். சிக்கல்களை தைரியமாக எதிர் கொண்டு செயல்படும் ஆற்றலையும் வளர்க்கலாம்” ஹிப்னோதெரபி என்பது என்ன?

“ஒருவரது மனது மற்றும் உடலை தளர்ச்சியாக்கி, அவரது ஆழ்மனதோடு தொடர்புகொள்ள வேண்டும். அவருக்கு இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் அளவிற்கு அவரது ஆழ்மனதிற்கு சங்கல்பங்களை கொடுப்பதுதான் ஹிப்னோதெரபி” பொதுவாக குழந்தைகளை பாதிக்கும் மனோரீதியான பிரச்சினைகள் என்னென்ன?

“மென்டல் ரிடார்டேஷன் எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு, டிஸ்லெக்சியா எனப்படும் கல்வி கற்க சிரமப்படும் பாதிப்பு, ஆட்டிசம் எனப்படும் தற்சிந்தனை நோய், அட்டென்ஷன் டெபிசிட் ஹைபர் ஆக்டிவ் டிசார்டர் எனப்படும் கவனக்குறைவு பாதிப்பு, மோட்டார் ஸ்கில்ஸ் டிசார்டர் எனப்படும் செயல்திறன் குறைபாடு போன்றவைகள் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் மனோரீதியான பிரச்சினைகளாக இருக்கின்றன.

இவைகளில் டிக்லெக்சியா 2 முதல் பத்து சதவீத குழந்தைகளிடம் காணப்படுகின்றன. இதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ‘காவ்யா ஹெல்த் ஹோம்’ என்ற அமைப்பை நடத்திவருகிறோம்” டிஸ்லெக்சியாவின் அறிகுறிகள் என்ன?

“இது பள்ளி செல்லும் குழந்தைகள் படிப்பில் மந்தமாகவோ, மதிப்பெண் குறைவாகவோ எடுக்கும்போது தெரியவரும் பாதிப்பாகும். படிப்பது, எழுதுவது, கணக்குப்போடுவது போன்ற பலவற்றிலும் இந்த குறைபாடு இருக்கலாம். இவர்கள் படிக்க முடியாமல் தடுமாறுவார்கள். வார்த்தைகளை கண்டுபிடிக்க, புரிந்துகொள்ள, வேகமாக படிக்க சிரமப்படுவார்கள்.

இவர்கள் வார்த்தைகளை இடை இடையே விட்டோ, வரிகளை விட்டோ, மாற்றி மாற்றியோ படிப்பார்கள். எழுதுவதில் சிரமம் உள்ளவர்களின் (டிஸ்கிராபியா) கையெழுத்து மோசமாக இருக்கும். எழுத்துப்பிழையுடன் மெதுவாக எழுதுவார்கள். இலக்கண பிழையும் காணப்படும். எழுதும் போது அடிக்கடி கைவலிப்பதாக கூறுவார்கள்.

கணக்கு பாடத்தை புரிந்துகொள்ள சிரமப்படுகிறவர்களை ‘டிஸ்கால் கூலியா’ என்று அழைக்கிறோம். இவர்கள் கணித விதிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். புரிந்து கொள்ள முடியாமல் கூட்டல், கழித்தலுக்கே திணறுவார்கள். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் ஒன்றிரண்டு விஷயங்கள் தவிர மற்றவற்றில் பிரச்சினை எதுவும் இன்றி இயல்பாக காணப்படுவார்கள்.

சிலர் குறிப்பிட்ட துறையில் மிதமிஞ்சிய திறமை உள்ளவர்களாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. பிரபல விஞ்ஞானிகள், மேதைகள் சிலருக்குகூட இளம் வயதில் இந்த பாதிப்பு இருந்திருக்கிறது. படிப்பில் ஒரு குழந்தை பின்தங்கும்போது அதற்கான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

அதை செய்யாமல் குழந்தைகளை திட்டுவது, அடிப்பது ஆசிரியர்களை குறைசொல்வது போன்றவை குழந்தைகளிடம் இருக்கும் பாதிப்பை அதிகரிக்கவே செய்யும். அதுபோல் அடம்பிடிக்கும் குழந்தைகளையும் அடிக்கிறார்கள். அடித்தால் குழந்தைகள் மனோரீதியாக பாதிக்கப்பட்டுவிடுவார்கள். அதற்கான காரணத்தை மனோரீதியாககண்டறிந்து களைவது எளிது..” என்கிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum