தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உணவே மருந்து

Go down

 உணவே மருந்து  Empty உணவே மருந்து

Post  ishwarya Thu May 09, 2013 11:56 am

எல்.கே.ஜி. தொடங்கி எல்லாவற்றிலும் எங்கேயும் எப்போதும் ‘நம்பர் 1’. எல்லா பெற்றோருக்கும் தம் பிள்ளைகள் இப்படி இருக்கவே ஆசை.

பெற்றோரை ஆட்டிப் படைக்கிற இந்த நம்பர் ஒன் மேனியாவுக்கு எத்தனை ‘நண்பன்’ படம் எடுத்தாலும் விடிவே கிடையாது. எந்தக் குழந்தையும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அந்த உருவாக்கத்தில் அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என உறவுகளுக்கு எத்தனை முக்கியத்துவம் உண்டோ, அதைவிட அதிக முக்கியத்துவம் உணவுக்கும் உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மனிதர்களின் உணர்வுகளுக்கும், அவர்களது உணவுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் பிரபல சித்த மருத்துவரும் உணவியல் நிபுணருமான அருண் சின்னையா.

இந்தத் தொடரில் பேசப்போகிற விஷயங்கள் உணவுக்கும் உணர்வுக்குமான உறவைத் தெரிய வைப்பது மட்டுமின்றி, ஃபாஸ்ட் ஃபுட் மோகத்தில் மூழ்கிப் போயிருக்கும் உங்களைத் தெளியவும் வைக்கப் போகிறது.

என்ன... சாப்பிடப் போகலாமா?

மாமியார்-மருமகள் சண்டை, நடுத்தர வயதில் வருகிற காரணமில்லாத கோப தாபம், சதாசர்வ காலமும் தூக்கம், அடுத்தவர் மீது அனாவசிய பொறாமை, வன்மம்... இப்படி மனிதர்களை ஆட்டிப் படைக்கிற பல உணர்வுகளும் அவர்கள் எடுத்துக்கொள்கிற உணவுகளின் பிரதிபலிப்புகளே என்றால் நம்புவீர்களா?

ஆமாம்.... அதுதான் உண்மை!

சாத்வீக உணவு, ராட்சச உணவு, தாமச உணவு என உணவு மூன்று வகை. புரிகிறபடி சொல்வதானால் மென்மையான உணவு, வன்மையான உணவு மற்றும் சோம்பல் உணவு. கீரை, காய்கறிகள், பழங்கள் எல்லாம் மென்மை உணவு வகையறா... எண்ணெய் பதார்த்தங்கள், அசைவம், கிழங்குகள் எல்லாம் வன்மை உணவுகள். தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம் போன்றவையெல்லாம் சோம்பலைத் தரும் உணவுகள். இந்த அடிப்படை புரியாமல் பெரும்பாலான அம்மாக்களும் செய்கிற தவறுகள் என்ன தெரியுமா?

காலை உணவுக்கு இன்ஸ்டன்ட்டாக ஒரு நூடுல்ஸ் அல்லது ரெடிமேட் உணவுகள்... மதியத்துக்கு வெரைட்டி ரைஸ் என்கிற பெயரில் அவர்களுக்குச் சுலபமான தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம். தொட்டுக்கொள்ள வாழைக்காய் அல்லது ஒரு கிழங்கு வறுவல்... மாலை வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு எண்ணெயில் பொரித்த, வறுத்த நொறுக்குத்தீனிகள், பாக்கெட் உணவுகள்... இரவுக்கு சாதம் அல்லது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என மாவுப்பொருள் அதிகமான பலகாரங்கள்... போதாத குறைக்கு வாரம் முழுக்க விட்டுப்போன ஆகாத உணவுகளை, விடுமுறை நாள்களில் வெளியில் சாப்பிட்டால்தான் திருப்தி.

உங்களுக்குப் பிடித்ததையோ, சமைக்கச் சுலபமானதையோ பிள்ளைகளுக்குக் கொடுத்து வளர்க்காதீர்கள். சுவை அடிப்படையில் உணவு கொடுப்பதைத் தவிர்த்து, வயது அடிப்படையில், உணர்வுகளின் அடிப்படையில் கொடுப்பதே சிறந்தது.

அந்த வகையில் வளரும் பிள்ளைகளுக்கு சாத்வீக உணவே சிறந்தது. உதாரணத்துக்கு உலகில் எல்லாருக்கும் பிடித்த உருளைக் கிழங்கையே எடுத்துக் கொள்வோமே...

பச்சை உருளைக்கிழங்கில் உள்ள நீர்ச்சத்தானது, மினரல் வாட்டரை விட சுத்தமானது. அதே கிழங்கை வேக வைத்தால், அதில் மாவுச்சத்து அதிகமாகிறது. எண்ணெயில் பொரித்தால் கார்பன் அதிகமாகிறது. கார்பன் அதிகமாகிறபோது, பிராண சக்தி குறைந்து, அதன் விளைவாக எதிர்ப்புச் சக்தி குறையும். உடலுக்குள் புதுசு புதுசாக நோய்கள் உற்பத்தியாகின்றன. அதனால் எதை, யாருக்கு, எப்போது, எப்படிக் கொடுக்க வேண்டும் என்கிற மனக்கணக்கு அம்மாக்களுக்கு அவசியம்.

சாப்பாட்டு விஷயத்தில் பெற்றோர், பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். தினமும் இரண்டு, மூன்று வித காய்கறிகள், கீரைகள், பருப்புக் கலந்த உணவு, கொண்டைக்கடலை, பழங்கள் எல்லாம் மெனுவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சூப் குடிப்பதை தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மதிய உணவுக்குப் பிறகு உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் தூங்குவதாகக் கேள்விப்படுகிறீர்களா? தயிர்சாதம், தக்காளி சாதம், புளி சாதங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, கீரை சாதம், கொத்தமல்லி சாதம், புதினா சாதம் என மாற்றிப் பாருங்கள்.

கோபப்படுகிற, ஆக்ரோஷமான பிள்ளைகளுக்கு அசைவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, காய்கறி, பழங்களைப் பழக்குங்கள். வன்முறை நடத்தை மாறுவதோடு, அவர்களது நுட்ப உணர்வுகளும் மேம்படும். நினைவாற்றல் பெருகும். வாரம் ஒரு நாள், ஒரு வேளைக்காவது வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவதை குடும்ப வழக்கமாக்கிப் பாருங்கள். மருத்துவரின் முகவரியே மறந்து போகுமளவுக்கு ஆரோக்கியமாக இருக்கலாம். இரவு உணவுக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டு சேர்த்த சட்னி அல்லது துவையலைக் கட்டாயமாக்குங்கள். செரிமானம் சீராகி, உடலும் மனமும் லேசாகும்.

இவையெல்லாம் உங்கள் சமையலறையில் முதல் கட்டமாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள். குழந்தைகள் எந்த உணவையும் வெறுப்பதோ, விரும்புவதோ இல்லை. நாம்தான் அப்படிப் பழக்குகிறோம். இள வயதிலிருந்தே இயற்கை உணவுகளுக்குப் பழக்கி விட்டால், அவர்களது வளர்ச்சியும் வாழ்க்கையும் வளமாக இருக்கும். எந்தெந்த வயதில், எப்படிப்பட்ட இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அடுத்தடுத்த இதழ்களில் விரிவாகப் பார்ப்போம்.

இயற்கை உணவு என்றதும் ‘அய்யே... இலை, தழை, காய்னு ஆதிவாசிகள் மாதிரி வேகாததை எல்லாம் சாப்பிடணுமா?’ என பயப்படவே வேண்டாம் தோழிகளே...

உங்கள் சுவை உணர்வுகளைத் தொந்தரவு செய்யாத சுவையான, சூப்பரான உணவுகளாக இருக்கும் ஒவ்வொன்றும்... வாங்க சாப்பிடலாம்!

காய்கறி அவியல்

என்னென்ன தேவை?

கேரட், பீட்ரூட், முள்ளங்கி (ஒரே அளவில் சிறுதுண்டுகளாக நறுக்கியது) - மூன்றும் சேர்த்து 100 கிராம், மிளகுப்பொடி - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் - 1 சிட்டிகை, மிளகாய்ப் பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - அரை டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க.

எப்படிச் செய்வது?

காய்கறிகளின் மேல் உப்புத் தண்ணீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி, இட்லித்தட்டில் 10 நிமிடங்கள் வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து, மிளகுப்பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துப் பிரட்டி அப்படியே பரிமாறவும். இந்தக் காய்கறி அவியலை காலை அல்லது மதிய உணவுக்குக் கொடுக்கலாம்.

என்னென்ன சத்து?

கேரட் சருமத்துக்கும் பார்வைக்கும் நல்லது. பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். முள்ளங்கி நீரைப் பிரித்து, உடலை சுத்தப்படுத்தும்.

எள்ளுருண்டை

என்னென்ன தேவை?

கருப்பு எள் - 50 கிராம், வேர்க்கடலை - 50 கிராம், கருஞ்சீரகம் - 10 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய் - 4.

எப்படிச் செய்வது?

வெல்லத்தைப் பொடித்து, தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். மற்ற பொருள்களைப் பொடித்து வைக்கவும். வெல்லப்பாகில் பொடித்ததைக் கொட்டிக் கிளறி, சுருண்டு வந்ததும் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

என்னென்ன சத்து?

எள்ளில் கால்சியமும் இரும்புச்சத்தும் அதிகம். ஹார்மோன்களின் சீரான சுரப்புக்கு உதவும்.
அசைவ உணவு கொடுக்கிற போதெல்லாம், அதன் பாதிப்புகளை ஈடுகட்ட, இந்த எள்ளுருண்டையைக் கொடுக்கலாம்.

முருங்கைக்கீரை சூப்

என்னென்ன தேவை?

முருங்கைக்கீரை - 2 கைப்பிடி, கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 6 பல், எண்ணெய் - 1 டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

முருங்கைக்கீரையை காம்பு நீக்கி, சுத்தம் செய்யவும். 2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, வடித்தெடுக்கவும். உளுந்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். சிறிது எண்ணெயில் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, வடித்து வைத்துள்ள தண்ணீரில் சேர்க்கவும். உளுந்துப் பொடி சேர்த்து, ஒரு கொதி விட்டு சூடாகப் பரிமாறவும்.

என்னென்ன சத்து?

100 கிராம் முருங்கைக்கீரையில் 500 மி.கி. கால்சியம் கிடைக்கும். இரும்புச்சத்து நிறைந்த சூப் இது. காலையிலோ, மாலை 5 மணிக்குள்ளாகவோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 5 மணிக்கு மேல் கீரை உணவு களைத் தவிர்க்க வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum