காக்கும் தெய்வம் காட்டிக் கொடுத்துவிட்டது
Page 1 of 1
காக்கும் தெய்வம் காட்டிக் கொடுத்துவிட்டது
Tuesday, February 10, 2009
காக்கும் தெய்வம் காட்டிக் கொடுத்துவிட்டது!
சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன்.
இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
தமிழ் உணர்வாளர் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நீங்கலாக ஏனைய இரண்டு தீர்மானங்களின் முக்கிய பகுதி; கீழே தரப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத்தரவும் - அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும் - மக்களாட்சி முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும் ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பின் பெயரால் தமிழகத்தின் பட்டி-தொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பரப்புரை கருவிகளைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப்பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.
முதற்கட்டமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் தன்னாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் இந்தச் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை மக்கள் மன்றத்தில் விளக்கி ஆதரவு திரட்டி வலிமை சேர்த்திட தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பரப்புரை விளக்கப் பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் வருகிற 7 ஆம் நாள் சென்னையிலும் 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்துவதென்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
இந்தத் தீர்மானங்களின் மூலம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சியை இழக்கத் தயாரில்லை என்பதையும் காங்கிரஸ் கட்சியோடான கூட்டணி தொடரும் என்பதையும் சொல்லிவிட்டார்.
மேலும் முதல்வர் கருணாநிதி தனக்கும் மத்திய அரசுக்கும் பகை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது, நாங்கள் வெளியேறி விடுவோம் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள். திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மார் தட்டியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி பழைய குருடி கதவைத் திறவடி என்ற பழமொழிக்கொப்ப 1984 இல் தொடங்கிய தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (வுயஅடை நுநடயஅ ளுரிpழசவநசள ழுசபயnளையவழைn (வுநுளுழு) போன்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கும் இப்போது தொடங்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது. தமிழீழ ஆதரவாளர் அமைப்பு தமிழீழத் தனியரசு அமைவதை ஆதரித்ததோடு இந்தியா, ஸ்ரீலங்காவில் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழீழம் என்ற சொற்பதம் தீண்டப்படாத சொல்லாகக் கருதப்பட்டு அது நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் 'தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் தன்னாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயற்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் இதை விளக்கி பொதுக்கூட்டம், பேரணி நடத்தும் என்பது தான் தீர்மானம்.
இதன் மூலம் தமி;ழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இறுதித் தீர்மானம் உட்பட 3 தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்ட போர் நிறுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் கைகழுவிவிட்டு விட்டார்.
போர் நிறுத்தம் பற்றிச் செயற்குழு தீர்மானத்திலே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சியும், முழுமையான அதிகார பகிர்வு கலந்த அரசியல் தீர்வும் உருவாக்க, செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தீர்மானம் கூறுகிறது.
தமிழீழ மக்கள் வாழும் வட- கிழக்குப் பகுதி தமிழீழம் என்பது மறைக்கப்பட்டுவிட்டது. இது தற்செயலான நீக்கம் அல்ல. இந்திய காங்கிரஸ் அரசின் கொள்கைக்கும் நிலைப்பாட்டுக்கும் இசையச் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தமிழீழ விடுதலைக்கு ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சகோதர யுத்தம் செய்த காரணத்தாலேயே ஆயுதப் போராட்டம் பலவீனம் அடைந்தது என்ற கருத்தை எழுதும் போதும் பேசும் போதும் முன்வைக்கிறார்.
'1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்களாலும், அவரது தளபதியாக விளங்கிய நாவலர் அமிர்தலிங்கம் அவர்களாலும் பிரகடனப்படுத்தப்பட்டதும், வலியுறுத்தப்பட்டதும், தாய்த் தமிழகம் போன்ற பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் ஒருமித்த ஆதரவைத் தேடிப் பெற்றதுமான 'தமிழ் ஈழம்" அமைப்பதற்கான குரல், வலிமை அடைந்து - அந்தக் குறிக்கோளின் வெற்றிக்காக பல போராளிக் குழுக்கள் அமைந்து, அத்தனை போராளிகளும் ஒன்றாக இருந்து சிங்கள அரசை எதிர்த்து சில காலம் - பின்னர் அவை தனித்தனியாகப் பிரிந்து சகோதர யுத்தங்கள் நடத்தி பலவீனப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இப்படி முதல்வர் சொல்வதில் இருந்து அவர் இறந்த காலத்திலியே இன்னமும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இவர் குறிப்பிடும் சகோதர யுத்தம் என்பது அவரது நட்புக்கும் அரவணைப்புக்கும் உரிய ரெலோவின் தலைவர் சபாரத்தினத்தைக் குறிக்கும். முதல்வர் எழுதிய பாலைவன ரோசாக்கள் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாத்திரத்துக்கு (சத்தியராஜ்) அந்தப் பெயரை கலைஞர் வைத்திருந்தார்.
அவர் குறிப்பிடும் சகோதர யுத்தத்துக்குக் காரணம் இந்திய உளவு நிறுவனமான றோ என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார். வி.புலிகளின் வளர்ச்சியை விரும்பாத றோ அதனை அழிக்க ரெலோ அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கியதன் காரணமாகவே சகோதர யுத்தம் வெடித்தது.
றோ மீதுள்ள நம்பிக்கையைச் சோதிக்கவே அதன் பணிப்பின் பேரிலேயே ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிலங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் இருவரையும் கொலை செய்தது. கொலை செய்து விட்டு பழியை வி. புலிகள் மீது சுமத்தியது.
'இலங்கை தமிழர் நலத்துக்காக 50 ஆண்டு காலமாகப் போராடி, சிறை சென்று, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்து, அதற்கும் மேலாக தமிழக ஆட்சியையே இரு முறை இழந்து வீண் பழிச் சொற்களைச் சுமந்து, இப்போது 5 ஆவது முறையாக பொறுப்பேற்று மக்களுக்கான சாதனை சரித்திரத்தையே படைத்து வருகிற ஆட்சியை சாய்த்து விட சதித்திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்" எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக ஆட்சியை இரண்டு முறை இழந்ததாக ஒரு பல்லவியை தமிழக முதல்வர் கருணாநிதி நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார். ஆனால் அது உண்மையல்ல. முதன்முறை ஊழல் குற்றச்சாட்டிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.
1991 இல் திமுக ஆட்சியை கவிழ்த்து விட்டு தேர்தலைச் சந்திக்க விரும்பிய ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய காங்கிரஸ் பிரதமர் சந்திரசேகரருக்கு கொடுத்த நெருக்கடியால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் சந்திரசேகரருக்கு வழங்கிக் கொண்டிருந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்ட போது அவரது ஆட்சியும் கவிழ்ந்தது. இதுதான் நடந்த உண்மை.
இதே போல் 50 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் நலத்துக்காக திமுக போராடி வந்தது என்பதும் உண்மையல்ல.
முதல்வர் கருணாநிதியே கிமு, கிபி என்பது போல வி.புலிகளோடான திமுகவின் உறவை ராஜீPவ் காந்திக்கு முன் ராஜீPவ் காந்திக்குப் பின் எனப் பிரித்து 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வி.புலிகளுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது அவர்களுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். முதல்வர் கொடுத்துள்ள ஆண்டு வாரியான திமுகவின் சாதனைப் பட்டியலில் 1995 நவம்பர் மாதம் 30 ஆம் நாள் முழு அடைப்பு என்ற பதிவுக்குப் பின்னர் எந்தப் பதிவும் பதியப்படவில்லை. உண்மையும் அதுதான்.
திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றிக் கருத்துச் சொன்ன மருத்துவர் இராமதாஸ் நிவாரண நிதி திரட்டுகிறோம் என்று சொல்லி தொடக்க முதலே இலங்கைத் தமிழர் சிக்கலையே முதல்வர் கருணாநிதி திசை திருப்பி விட்டார் என்றும் போர் நிறுத்தம் தொடர்ர்பான கோரிக்கைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 'திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏதோ ராஜபக்ச கட்சித் தீர்மானத்தைப் போல உள்ளது. அது திருப்தி தரவில்லை, ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தமிழ் இனம் இலங்கையில் அழிகிறது, மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்று கடந்த சனவரி மாதம் 23 ஆம் நாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு அவர் சொன்ன விளக்கத்தில் 'கேட்டுக் கேட்டுப் பலன் கிடைக்காததால் இந்த தீர்மானத்தை முன்மொழிவதாக" சொல்லி இருந்தார். உடனே இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அமைதியை நிலவச் செய்யவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டால் திமுகவின் அடுத்த நடவடிக்கையாக செயற்குழு அல்லது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்போம் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். தற்போது அவரது இறுதி வேண்டுகோள் ஒன்றுமே இல்லாமல் போனதால் திமுக.வின் செயற்குழு கூடி தீர்மானம் போட்டிக்கிறது. இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பதன் மூலம் இலங்கை தமிழர் சிக்கலில் திமுக அரை நூற்றாண்டிற்குப் பின்நோக்கி போயிருக்கிறது" என்று மருத்துவர் இராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
எந்தத் தெய்வம் தங்களைக் காக்கும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்களோ அந்தத் தெய்வம் கை விட்டதும் அல்லாமல் காட்டியும் கொடுத்துவிட்டது. இவ்வளவு எளிதாக - எந்த வெட்கமோ துக்கமே இன்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை காற்றில் பறக்கவிட தமிழக முதல்வர் நினைத்தது எதைக் காட்டுகிறது?
அவர் தொடக்க முதல் உள்ளத் தூய்மையோடு தமிழீழ மக்கள் பற்றிய சிக்கலைக் கையில் எடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. முதல்வர் கால் சறுக்குவார், வாக்குத் தவறுவார் என்று சிலர் முன்கூட்டியே எதிர்கூறல் சொன்னார்கள். வைகோ தமிழக முதல்வர் நாடகம் ஆடுகிறார் இது வெறும் கண்துடைப்பு என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டார். அப்போது வைகோ மீது நாம் வருத்தப்பட்டோம். ஆனால் இப்போது அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது.
தனது கடைசிக் காலத்தில் ஏதோ தமிழீழத் தமிழர்களுக்கு உதவி செய்துவிட்டு நல்ல பெயரோடும் புகழோடும் கண்ணைமூடுவார் என்று நாம் எதிர்பார்த்தோம். அந்த எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது. இனி அவர் மீது படிந்து விட்ட வரலாற்றுக் கறையை உலகத்தில் உள்ள அத்தனை சோப் போட்டுக் கழுவினாலும் போக்க முடியாது.
சிறிலங்காவில் சிங்கள இனவாத ஆட்சித்தலைவர் தொடங்கி சாதாரண சிங்கள அரசியல்வாதி வரை முதல்வர் கருணாநிதிக்குச் பாமாலை பாடி புகழ்மாலை சூட்டுகிறார்கள். பசில் ராஜபக்ச தமிழ்நாட்டின் வாயை மூடச் செய்துவிட்டார் என எழுதுகிறார்கள். முதல்வர் கருணாநிதியின் வாலை ஒட்ட வெட்டிவிட்டதாக பௌத்த தேரர்கள் அறிக்கை விடுகிறார்கள். கருணாநிதியின் சரணாகதி சிங்கள இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்று சிங்கள - ஆங்கில ஊடகங்கள் கொக்கரிக்கிறன. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று சிங்கள - பௌத்த இனவெறியன் மகிந்த இராஜபக்ச இலங்கை வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுகிறான்.
இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பால் தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பினரும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் தானியங்கி ஓட்டுநர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் பல்வேறு சட்டவாதிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7,200 பேர் கைது செய்து சிறையில் டைக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேலை நிறுத்தம் சட்டத்துக்கு மாறானது - உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறானது - என முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. உச்ச நீதிமன்றமே தமிழர்கள் தங்கள் தமிழ் உணர்வைக் காட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது முதல்வர் கருணாநிதியின் முகத்தில் கரி பூசி விட்டது.
வேலை நிறுத்தம் வெற்றிபெற மாணவர்களே கடுமையாக உழைத்துள்ளார்கள். அறுபதுகளில் இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களே போர்க்கொடி தூக்கினார்கள். இப்போது மீண்டும் அவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். அதனைப் பார்த்து வெருண்டு போன தமிழக அரசு கல்லூரிகளை மூடிவிட்டது.
தமிழ் உணர்வாளர் முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் அலைமோதிய மக்கள் கூட்டம் அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சாவோலையில் 'என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்" எனக் கேட்டுக் கொண்டார். அவரது ஆசை நிறைவேறிவருகிறது.
தமிழக முதல்வர் தனது ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியை நம்பி இருககிறார். காங்கிரஸ் திமுகவை நம்பி இருக்கிறது. ஆனால் மக்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை புறந்தள்ளப் போகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புதிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உலமாக்கள் முஸ்லிம் சமுதாயத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்! - அஸாத் ஸாலி
» பொது பல சேனா ஹலாலிலிருந்து நீங்கியது முட்டாள்தனம்! - பௌத்தர்களைக் காட்டிக் கொடுக்கும் செயல்!
» பெப்பிலியான வர்த்த நிலைய உரிமையாளர் முஸ்லிம் சமுகத்தை காட்டிக் கொடுத்துவிட்டார். ஹக்கீம் விசனம்.
» பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் உண்ணாவிரதம்!
» உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் கண்கள்!
» பொது பல சேனா ஹலாலிலிருந்து நீங்கியது முட்டாள்தனம்! - பௌத்தர்களைக் காட்டிக் கொடுக்கும் செயல்!
» பெப்பிலியான வர்த்த நிலைய உரிமையாளர் முஸ்லிம் சமுகத்தை காட்டிக் கொடுத்துவிட்டார். ஹக்கீம் விசனம்.
» பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் உண்ணாவிரதம்!
» உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் கண்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum