தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

Go down

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை Empty கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

Post  ishwarya Mon Apr 29, 2013 2:33 pm

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.

இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர். பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.

கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா? ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.

தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும். அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.

சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நிராடி முருகனை வணங்கிப் பராணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும்.

ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாரணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு.

இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது. முருகபெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா?

தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது. சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.

இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.

கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அநுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டும்.

கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum