தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேட்ட வரங்கள் அருள்வார் கோட்டாற்று நாதர்

Go down

கேட்ட வரங்கள் அருள்வார் கோட்டாற்று நாதர் Empty கேட்ட வரங்கள் அருள்வார் கோட்டாற்று நாதர்

Post  amma Fri Jan 11, 2013 3:56 pm

பசு மரங்களும் பூஞ்சோலைகளும் நெல்வயல்களும் சூழ்ந்த அற்புதமான பதி
திருக்கோட்டாறு! குருவ மலரும் கோங்கு மலரும் பூத்துக் குலுங்கும் இந்த
தலம், சோழ தேசத்தில் காவிரித் தென்கரையின் 53வது தலமாகப்
போற்றப்படுகின்றது. ‘இரங்காய் உனது இன்னருளே’ என சம்பந்தரால் பாடப்பெற்ற
இத்தலப் பெருமானை துர்வாச முனிவரது சாபத்தினால் நிலைகுலைந்த ஐராவதம் எனும்
வெள்ளை யானை வழிபட்டுள்ளது. இந்த வெண் யானை தனது கோட்டினால் (கொம்பு)
மேகத்தினை இடித்து, மழையைப் பேரருவியாகப் பெய்வித்து, நதியாக்கி, அந்நதி
தீர்த்தத்தால் இப்பதி ஈசனை வழிபட்டுள்ளது. கோட்டினால் ஆறு ஏற்படுத்தி,
இங்கு பரமனை பூஜித்ததால் இத்தலம் கோட்டாறு என்றானதை ஆளுடையப்பிள்ளையின்
அருந் தமிழ்ப் பாடல் விவரிக்கிறது. அகத்திய மாமுனியும் சுப மகரிஷியும்
இங்கு சிவனாரை பூஜித்துள்ளனர். சுபர் ஒருநாள் இறைவனை தரிசிக்கத் தாமதமாக
வந்ததனால் கோயில் நடைக்கதவு சாத்தப்பட்டுவிட்டது. உடன் சுபர் தேனீ வடிவம்
கொண்டு உள்ளே சென்று ஈசனை தரிசித்தார். அதன் பொருட்டு, ஆண்டுக்கொருமுறை
இங்கு இறைவனுக்கு தேன் அபிஷேகம் சிறப்புற செய்யப்படுகின்றது. இப்போதும்
மூலவர் சந்நதி முன் தேன்கூடு உள்ளது கண்டு மெய் சிலிர்க்கலாம். இன்றும் சுப
மகரிஷி தேனீயாய் இங்கு சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

திருஞானசம்பந்தர்
இரண்டு பதிகங்களை இத்தலத்தின் மீது பாடியுள்ளார். சுந்தரரும் தனது ஊர்த்
தொகையில் இப்பதியை நினைவு கூர்ந்துள்ளார். தேவர்களும் சித்தர்களும் இங்கு
வந்து வழிபட்டதாகக் கூறுகின்றார் சம்பந்தர். இப்பரமனைப் பாடித் தொழும்
அடியவர்களின் வருத்தமும் வீண்பழியும் நீங்குவதோடு சிறந்த ஞானமும் புகழும்
அடைவார்கள் என்று பாடியுள்ளார். ரம்மியமான சூழலில் அமைந்த திருக்கோயில்.
அழகிய மூன்று நிலை கிழக்குமுக ராஜகோபுரத்துடன் நாற்புறங்களிலும் மதில் சூழ
கவினுற விளங்குகின்றது. உள்ளே, கொடிமரமும் துவாரகணபதி சிலையும் உள்ளன.
கொடிமரத்தின் வடபுறம் அகத்தியலிங்கம் கொண்ட தனிச் சந்நதி. இச்சந்நதி மேற்கு
முகம் கொண்டு திகழ்கிறது. அதன் பின்னே கிழக்கு திருமாளிகைப் பத்தியில்
சூரியன், சந்திரன், பைரவர் சிலாரூபங்களும் நவகோள் நாயகர் சந்நதியும் உள்ளன.
வடகிழக்கில் யாகசாலை அறையுள்ளது. தென்கிழக்கில் மடப்பள்ளி. கொடிமரத்தின்
நேரே மண்டப வாயிலின் மேலே சுதைவடிவ கயிலை தரிசனம் கண்குளிர வைக்கிறது.
வாயிலின் இடப்புறம் பாலகணபதி வீற்றுள்ளார். வலப்புறம் மதில் மேலே பழமையான
கண்டாமணியொன்று காணப்படுகின்றது.

முதலில் இருபது தூண்களை உடைய முன்
மண்டபம் வௌவால் நெத்தியமைப்புடைய கூரையைக் கொண்டு திகழ்கிறது. அதனுள்
வலப்புறம் அம்பாள் சந்நதி, அர்த்த மண்டபமும் மூலஸ்தானமும் கொண்டு
விளங்குகின்றது. அம்பாள் அதியற்புத நின்ற திருக்கோலத்தில் நம்மை
ஆட்கொள்கிறாள். வண்டார்குழலியென்று அழைக்கப்படும் இந்த அன்னையை சம்பந்தர்
கோலவார்க்குழலாள் என்று வர்ணிக்கிறார். எழிலுடன் திகழும் அம்பிகையை வணங்கிய
பின், முதல் வாயிலுள் நுழைந்து, மகாமண்டபத்தை அடையலாம். அங்கே உற்சவர் அறை
உள்ளது. நடுவாக நடராஜப் பெருமானும் சிவகாமித் தாயாரும் வீற்றிருக்க, எதிரே
ஒரு வாயில் உள்ளது. இங்கே செம்புத் திருமேனியாக, முருகன் வில்லேந்தி அருள்
புரிகின்றார். உடன் சோமாஸ்கந்தரும் தரிசனமளிக்கிறார். அடுத்து ஸ்நபன
மண்டபம். அதன் இருபுறங்களிலும் கணபதியும் நாகராஜரும் வீற்றுள்ளனர்.

பின்
அர்த்த மண்டபம். அதன் வடமேற்கு மூலையில் போக சக்தி உற்சவ விக்கிரகமாக
காட்சியளிக்கிறாள். கருவறையுள் சுயம்புநாதனாய் சிறிய லிங்கமாக நமக்கு
அருட்பெருந் தரிசனம் தருகின்றார், ஐராவதேஸ்வரர். ஆலய வலம் வருகையில்
மடப்பள்ளியை ஒட்டி தல விருட்சமான பாரிஜாத மரம் மணம் வீசுகிறது. தென்மேற்கு
மூலையில் கன்னிமூல கணபதி தனியே சந்நதி கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார்.
மேற்குத் திருமாளிகைப் பத்தியில் கிழக்கு பார்த்தவாறு சுந்தரர், பரவை
நாச்சியார், கைலாசநாதர், நால்வர், சுபமகரிஷி, நாகராஜர், சிவலிங்கம் என
வரிசையாக வீற்றருள் புரிகின்றனர். மேற்கில் முருகப் பெருமான் சந்நதியும்
வடமேற்கில் கஜலட்சுமி சந்நதியும் உள்ளது. வடக்கு பிராகாரத்தில் சண்டேசர்
சந்நதியும் அதனருகே கிணறும் உள்ளன. மூலவர் கருவறை இரண்டு அடுக்குகளைக்
கொண்டு அழகிய விமானத்தோடு மனதை ஈர்க்கின்றது.

இந்து சமய அறநிலையத்
துறையின் பராமரிப்பில் துலங்கும் இவ்வாலயம் காலை 7 முதல் 11:30 மணிவரையும்
மாலை 5 முதல் 8:30 மணி வரையும் திறந்திருக்கும். நித்தமும் நான்கு கால
பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தமாக வாஞ்சியாறு மற்றும் சூரிய
தீர்த்தம் உள்ளன. ஒரு காலத்தில் கோட்டாறு என்று வழங்கப்பட்ட நதியே இன்று
வாஞ்சியாறு என்று அழைக்கப்படுவதாகக் கூறுவர். கி.பி.1243ம் ஆண்டு
குலோத்துங்கச் சோழனால் இவ்வாலயம் கட்டப்பெற்றுள்ளது. இம்மன்னனை கல்வெட்டு
ஒன்று சோழமண்டலத்து மண்ணிநாட்டு முழையூர் உடையான் மதுராந்தகனான்
குலோத்துங்க சோழன் எனக் குறிப்பிடுகின்றது. இங்கு அனைத்து சிவாலய
விசேஷங்களும் எளிய முறையில் நடத்தப்படுகின்றன. இத்தல ஈசனுக்கும்
அம்பிகைக்கும் தேனால் அபிஷேகம் செய்து பாரிஜாத மலர்களால் அர்ச்சனை செய்து
வழிபடுபவர்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறப் பெறுவர்.
காரைக்கால்-மயிலாடுதுறை சாலையில் உள்ள வேலங்குடியிலிருந்து ஒரு கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது, திருக்கொட்டாரம் எனும் இத்தலம்.
அம்பகரத்தூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தினை ஆட்டோ மூலமும்
சென்றடையலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum