தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பைபிளில் அன்னை மரியா

Go down

பைபிளில் அன்னை மரியா Empty பைபிளில் அன்னை மரியா

Post  birundha Sat Apr 13, 2013 8:44 pm



இயேசுவின் தாய் மரியா உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவுக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்து, அவருக்கு மேலான வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் ஆலயங்கள் அனைத்தும் மாதா கோவில் என்ற பெயரால் அழைக்கப்படுவதே இதற்கு சான்று. அந்த அன்னையைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை இங்கு காண்போம்.

தாழ்ச்சி மிகுந்தவர்:-

அன்னை மரியா உலக மீட்பராம் இறைமகன் இயேசுவைத் தனது திருவயிற்றில் சுமந்து பெற்றத் தாய். கடவுள் அனுப்பிய கபிரியேல் வானதூதர் கன்னி மரியாவின் முன் தோன்றி, "மரியா, அஞ்சவேண்டாம்ë கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்ë அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

அவர் பெரியவராயிருப்பார் உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்'' என்றார். அதற்கு மரியா, "இது எப்படி நிகழும்ப நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ''தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். உடனே மரியா, "நான் ஆண்டவரின் அடிமை உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். (லூக்கா 1:26-38) கடவுளின் திருவுளத்தை எப்பொழுதும் நிறைவேற்றும் மனநிலையில் மரியா இருந்தார். கன்னி கருத்தாங்குவது என்பது தனக்கு புரியாத ஒன்றாக இருந்தாலும், கடவுளின் முன்னிலையில் அவர் தாழ்ச்சியோடு கீழ்ப்படிந்ததை இங்கு காண்கிறோம்.

பணிவிடை செய்பவர்:-

மரியா இறைமகனின் தாயாகப் போவதை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த ஒரு பெண்ணும் கடவுளின் தாய் என்ற பெருமையைப் பெற்றால், அவர் துள்ளிக் குதித்திருப்பார். தனக்கு பணிவிடை செய்யுமாறு பலரிடமும் அந்த பெண் கட்டளையிட்டிருப்பார். அதற்கு மாறாக மரியா தன்னடக்கம் மிகுந்தவராக இருந்ததைக் காண்கிறோம்.

கன்னி மரியா தான் கருவுற்றிருந்தாலும், தனது உறவினரான எலிசபெத்து முதிர்ந்த வயதில் கருவுற்றிருப்பதை அறிந்து, அவருக்கு பணிவிடை செய்ய பல மைல் தூரம் தொலைவிலுள்ள ஓர் ஊருக்கு சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர் உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார். (லூக்கா 1:39-56) இறைமகனின் தாயாகப் போகும் நிலையிலும் பிறருக்கு பணிவிடை செய்பவராக மரியா திகழ்ந்ததை பைபிள் இவ்வாறு நமக்கு எடுத்துரைக்கிறது.

துன்பங்களை ஏற்றவர்:-

இயேசுவின் தாயாக, இறையன்னையாக மரியா தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் சாதாரணப் பெண்களைப் போல, ஏன் அதற்கும் மேலாகவே பல்வேறு துன்பங்களை ஏற்க வேண்டியது இருந்தது. பெத்லகேமில் இயேசுவைப் பெற்றெடுத்தபோது, மரியாவுக்கு மாடுகளைக் கட்டும் தொழுவத்தில்தான் இடம் கிடைத்தது.

எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். (லூக்கா 2:7) இயேசுவை எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்க சென்றபோது, மரியாவின் துன்பங்கள் சிமியோன் என்பவரால் முன்னறிவிக்கப்பட்டன. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.

இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்'' என்றார். (லூக்கா 2:28-35) சிமியோன் கூறியபடியே மரியாவின் துன்பங்கள் இயேசுவின் மரணம் வரைத் தொடர்ந்தன.

அன்போடு தேடுபவர்:-

தாய் மரியாவுக்கும், வளர்ப்புத்தந்தை யோசேப்புக்கும் தெரியாமல் பன்னிரண்டு வயது சிறுவன் இயேசு எருசலேம் ஆலயத்தில் தங்கிவிட்டார். இது அன்னை மரியாவுக்கு எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. மரியாவும், யோசேப்பும் மூன்று நாள்களுக்குப்பின் இயேசுவைக் கோவிலில் கண்டார்கள்.

அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அப்பொழுது இயேசுவின் தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய் இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே'' என்றார்.

அவர் அவர்களிடம், "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா'' என்றார். பின்பு இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.

அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். (லூக்கா 2:28-35) மரியா எப்பொழுதும் கடவுளின் திட்டத்தைப் புரிந்துகொண்டு வாழ விரும்பினார் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

அன்னையின் பரிந்துரை:-

இயேசு திருமுழுக்கு பெற்று தனது பணி வாழ்வைத் தொடங்கிய வேளையில், அவரை முதல் அற்புதம் செய்யத் தூண்டியது அன்னை மரியாவின் பரிந்துரைதான். கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.

திருமண விழாவில் திராட்சை ரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது'' என்றார். இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும் எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார்.

யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.

அவர்களும் அவ்வாறே செய்தார்கள். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். (யோவான் 2:1-11) இறைமகன் இயேசுவை அற்புதம் செய்யத் தூண்டுவதாக அன்னை மரியாவின் பரிந்துரை இருப்பதாலே, பக்தர்கள் அனைவரும் கேட்ட வரங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

பேறுபெற்ற அன்னை:-

இயேசுவை அறிந்திருந்த அனைவரும், அவரது தாய் மரியாவையும் அறிந்து வைத்திருந்தனர். "இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே!'' (மாற்கு 6:3) "இவருடைய தாய் மரியா என்பவர்தானே'' (மத்தேயு 13:55) இயேசுவின் வல்ல செயல்களைப் பார்த்த அனைவரும் இப்படி தான் வியந்து கேள்வி எழுப்பினார்கள்.

இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'' என்றார். (லூக்கா 11:27-28) இங்கு இயேசு தனது தாய் மரியாவை அதிகமாக பெருமைப்படுத்துவதைக் காண்கிறோம்.

ஏனெனில் இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால்தான் மரியா இறைமகனின் தாயாக மாற முடிந்தது. மரியாவும் இதைக் குறித்து பின்வருமாறு பாடுகிறார்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.

என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்.'' (லூக்கா 1:47-48)

கிறிஸ்தவர்களின் தாய்:-

வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றவர் அன்னை மரியா. ஒருமுறை இயேசு போதனை செய்து கொண்டிருந்தபோது, "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்'' என்று மக்கள் அவரிடம் சொன்னார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார். (மாற்கு 3:31-35) கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றியதாலேயே அன்னை மரியா தனக்கு தாயாகும் பேறுபெற்றார் என்பதை இயேசு இங்கு எடுத்துரைப்பதைக் காண்கிறோம்.

சிலுவை வரை அன்னை மரியா இயேசுவைப் பின்பற்றிச் சென்றதை பைபிள் நமக்கு எடுத்துரைக்கிறது. சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்'' என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்'' என்றார். (யோவான் 19:25-27) இயேசு தன் சீடரை முதலில் அன்னை மரியாவிடம் ஒப்படைக்கிறார்.

பின்பு தன் தாயை ஏற்றுக்கொள்ளுமாறு இயேசு சீடரிடம் கூறுகிறார். இயேசுவின் சீடர்களாகிய கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே தாயாக மரியா வழங்கப்பட்டிருக்கிறார் என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்துகிறது. இயேசு விண்ணகம் சென்ற பிறகு, அவரது சீடர்கள் அனைவரும் இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

(திருத்தூதர் பணிகள் 1:14) என்று விவிலியம் கூறுகிறது. அந்த தாயின் அரவணைப்பில்தான் தொடக்க கிறிஸ்தவ சமூகம் தோன்றி வளர்ந்தது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

விண்ணக மாட்சி:-

மரியாவின் விண்ணக மாட்சி பற்றிய பகுதி திருவெளிப்பாடு நூலில் காணப்படுகிறது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது பெண் ஒருவர் காணப்பட்டார் அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார் நிலா அவருடைய காலடியில் இருந்தது அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.

அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார். (திருவெளிப்பாடு 12:1-6) இந்த வார்த்தைகளை சித்தரிக்கும் வகையிலேயே, வேளாங்கண்ணி மாதாவின் சொரூபம் அமைந்துள்ளது. அன்னை மரியா இதைக் குறித்து பின்வருமாறு முன்னறிவித்துள்ளார்: "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்ë உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.''

(லூக்கா 1:49-52) இவ்வாறு கடவுளால் பெருமைப்படுத்தப்பட்டவராக அன்னை மரியா திகழ்வதை பைபிள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. எனவே அந்த அன்னையைப் பெருமைப்படுத்துவது, அவரது பிள்ளைகளாகிய நமக்கும் கடமையாகிறது.*
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum