அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அரசுதான் கருணாநிதி அறிக்கை
Page 1 of 1
அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அரசுதான் கருணாநிதி அறிக்கை
தி.மு.க. ஆட்சியில்தான், அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு 3 சதவீதம் வழங்கப்பட்டது. என்னை அன்றாடம் பராமரிப்பதில் முழு அளவில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பவரே அருந்ததியர்தான் என்று கருணாநிதி கூறினார்.இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு
ஆதி திராவிட மக்களுக்குள், அருந்ததியினர் சமூக மற்றும் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்கு சிறப்பு சலுகைகள் அளிப்பது அவசியம் என கருதி, ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முடிவு 27–11–2008 அன்று தி.மு.க. ஆட்சியில்தான் எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, ‘‘தமிழ்நாடு அருந்ததியர்கள் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்தல் சட்டம்’’ இயற்றப்பட்டு, 29–4–2009–ல் இது தொடர்பான விதிகளும் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சுந்தரலிங்கம், ஒண்டிவீரன்
வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் இறுதியில் தன்னையே மாய்த்துக்கொண்ட வரலாறு ஒருபுறம் என்றால்; மற்றொருபுறம்; வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே, நெல்லைச் சீமையின் நெல்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன் வெள்ளையரை எதிர்த்துப்போரிட்டார். வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் பூலித்தேவனுக்கு முதன்மை படைத்தலைவராக இருந்தவர், அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த ‘‘ஒண்டி வீரன்’’.கட்டபொம்மனுக்கும், பூலித்தேவனுக்கும், சுந்தரலிங்கத்துக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்பிய கழக அரசு, அருந்ததிய சமுதாயத்தினரான விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவை போற்றும் வகையில் தக்கதோர் நினைவு சின்னம் ஒன்றினை நெல்லைச் சீமையில் எழுப்பும் என்று கழக ஆட்சியிலேதான் நிதிநிலை அறிக்கையிலேயே 19–3–2010 அன்று அறிவிக்கப்பட்டது.
அருந்ததியர்களுக்கு அவர்தம் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நிதிஉதவி வழங்குவதற்கென தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் 8.6.2007 அன்று தொடங்கப்பட்டு, 22 ஆயிரத்து 811 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுள் 1,133 உறுப்பினர் குடும்பங்களுக்கு 17 லட்சத்து 86 ஆயிரத்து 440 ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியிலே தான்.
அடைப்பு நீக்கும் எந்திரங்கள்
மேலும், மனித கழிவை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளில் முன்னர் ஈடுபட்டிருந்தோருக்கு மாற்றுத்தொழிலில் ஈடுபட உதவுவதற்காக 22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மறுவாழ்வு திட்டம் ஒன்றும் கழக அரசால் செயல்படுத்தப்பட்டது. இப்பணியாளர்கள் கழிவுநீர் குழாய்களில் இறங்கி பணிபுரிவதை தவிர்க்க, மாநகராட்சிகள் அனைத்திலும் அடைப்புகளை அகற்றும் எந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டது.
சென்னை மாநகரை பொறுத்தவரை 3 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில், 47 தூர்வாரும் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. மற்ற 9 மாநகராட்சிகளுக்கும் தேவையான அடைப்பு நீக்கும் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
என்னை பராமரிப்பதில்...
இன்னும் கூற வேண்டுமேயானால், அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதா பேரவையிலே நிறைவேற்றப்படவிருந்த நாளன்று ராமச்சந்திரா மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த நான் 26–2–2009 அன்று என் கைப்பட பேரவை தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், ‘‘ஆரம்பகால பொதுவுடைமை வாதி என்ற முறையிலும் அய்யா, அண்ணா, காமராஜர், அண்ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும் –அடி மட்டத்துக்கெல்லாம் அடி மட்டமாகக்கிடந்து அவதியுறும் ‘‘மனித ஜீவன்கள்’’– ‘‘அருந்ததி’’ மக்கள், புதிய உலகம் –புரட்சியுகம்–காண்பதற்காக; இன்று அவையில் நான் முன் வைக்கும் சட்ட முன்வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்’’ என்று எழுதியிருந்தேன்.அருந்ததியர் சமுதாயத்தின்பால் எனக்கு எந்த அளவிற்கு ஈடுபாடு உண்டு என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு கூறவேண்டுமேயானால், என்னுடைய அணுக்க தொண்டராக – என்னை அன்றாடம் பராமரிப்பதிலே தன்னை முழு அளவிலே ஈடுபடுத்திக்கொண்டவராக பணியாற்றும் தம்பி நித்யாவே அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஏன், கழகத்தின் மூன்று துணை பொதுச்செயலாளர்களிலே ஒருவரே அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» விஸ்வரூபம் தொடர்பாக கருணாநிதி அறிக்கை
» ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)
» இட ஒதுக்கீடு
» ஆதிபகவனுக்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு
» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு
» ஞானாஸார தேரரால் இனிமேல் அறிக்கை வழங்க முடியாது..! - பொது பல சேனா (அறிக்கை இணைப்பு)
» இட ஒதுக்கீடு
» ஆதிபகவனுக்கு ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு
» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum