தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு: கூடங்குளம் விஞ்ஞானிகள் குடியிருப்பு முற்றுகை 300 படகுகளில் சென்று கடலோர கிராம மக்கள் போராட்டம்

Go down

 அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு: கூடங்குளம் விஞ்ஞானிகள் குடியிருப்பு முற்றுகை 300 படகுகளில் சென்று கடலோர கிராம மக்கள் போராட்டம்  Empty அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு: கூடங்குளம் விஞ்ஞானிகள் குடியிருப்பு முற்றுகை 300 படகுகளில் சென்று கடலோர கிராம மக்கள் போராட்டம்

Post  amma Thu Apr 04, 2013 6:06 pm

ராதாபுரம், -

அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 படகுகளில் திரண்டு சென்று, கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் குடியிருப்பை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது கூடங்குளம் முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.சோதனை ஓட்டத்தின் போது நச்சுவாயு வெளியேறுகிறது, பயங்கர சத்தம் கேட்கிறது, எனவே அணு உலையை மூட வேண்டும் என்று கூறி, 3–ந் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்தனர்.கூடங்குளம் அணு விஞ்ஞானிகளின் குடியிருப்புகள் அமைந்துள்ள செட்டிகுளம் அணுவிஜய் நகரை முற்றுகையிடப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேவாலயத்தில் திரண்டனர்

இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், அணுவிஜய் நகருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அணுவிஜய் நகர் அருகே உள்ள கூட்டப்புளி கிராமத்தில் நேற்று முன்தினம் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்திய போது, போலீசார் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதில் 2 அதிரடிப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைத்தார்கள்.எனவே முற்றுகை போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நேரக் கூடாது என்பதற்காக போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.அறிவித்தபடி நேற்று காலை 7.30 மணி அளவில் இடிந்தகரை தேவாலயத்தில் ஊர் மக்கள் திரண்டனர். ஆண்களும், பெண்களுமாக சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் கூடினார்கள்.

கடல் வழியாக...

முற்றுகை குறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசினார். ‘‘அறவழியில் அமைதியாக போராட்டத்தை நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். கடல் வழியாக படகுகளில் சென்று அணுவிஜய் நகரை முற்றுகையிடப்போவதாக கூறினார்.காலை 8 மணி அளவில் உதயகுமார் தலைமையில் இடிந்தகரை மீனவர்கள் தேவாலயத்தில் இருந்து பேரணியாக கடற்கரையை நோக்கிச் சென்றனர். பெண்கள் ஆலய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேரணியாக சென்ற மீனவர்கள் அனைவரும் கடற்கரையில் தயாராக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படகுகளில் ஏறினர். உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், முகிலன், மைபா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் ஒரு படகில் ஏறி அமர்ந்து இருந்தனர். அனைத்து படகுகளிலும் கறுப்பு கொடிகளை போராட்டக்காரர்கள் கட்டினார்கள்.

நூற்றுக்கணக்கான படகுகள்

போராட்டக்குழுவினர் இருந்த படகு காலை 8.20 மணிக்கு இடிந்தகரை கடற்கரையில் இருந்து புறப்பட்டது. அதை பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான படகுகளில் மீனவர்கள் அணிவகுத்துச் சென்றனர். பத்திரிகையாளர்கள், டி.வி. நிருபர்கள் வெள்ளைக் கொடி கட்டிய படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். உணவு பொட்டலங்கள், குடிநீர் வைக்கப்பட்டு இருந்த படகுகளில் பச்சைக் கொடி கட்டப்பட்டு இருந்தது.இடிந்தகரையில் இருந்து படகுகள் புறப்பட்டதும் அருகே உள்ள பெருமணல், கூட்டப்புளி, தோமையார்புரம், கூத்தங்குழி, கூட்டப்பனை, கூடுதாழை, உவரி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் வரத்தொடங்கினர். காலை 9 மணி அளவில் அனைத்து படகுகளும் செட்டிகுளம் அணுவிஜய்நகர் கடற்பகுதிக்கு வந்து சேர்ந்தன.போராட்டக்காரர்கள் கடற்கரைக்கு வந்துவிடாமல் தடுக்கும் வகையில் கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில், கடலில் அடையாள கயிறு போலீசாரால் கட்டப்பட்டு இருந்தது. அந்த கயிற்றில் பெரிய பலூன்கள் கட்டப்பட்டு இருந்தன.

சுருள் முள் வேலி

கயிற்றைத் தாண்டி போராட்டக்காரர்கள் ஒருவேளை கடற்கரைக்கு வந்துவிட்டால், அணுவிஜய் நகருக்குள் சென்றுவிடாதபடி இருக்க சுருள் முள்வேலிகளை போலீசார் அமைத்து இருந்தனர். கடற்கரையில் ஆயிரக்கணக்கான போலீசார், அதிரடிப்படையினர், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், நெல்லை மாவட்ட சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அவ்வப்போது கடற்கரையில் ரோந்து வந்து நிலைமையை கண்காணித்தனர்.போராட்டக்காரர்களின் படகுகளின் நடுவே கடலோர காவல் படையைச் சேர்ந்த 5 கண்காணிப்பு படகுகள் தயார் நிலையில் நின்றன.கூடங்குளம் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.அணுமின் நிலையத்துக்கு கடல் நீர் எடுக்கப்படும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள், யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக, நடுக்கடலில் இருக்கும் அணுமின் நிலைய காம்பவுண்டு சுவரில் சுமார் 500 போலீசார் பாதுகாப்புக்கு நின்றனர்.

கண்டன கோஷங்கள்

கடல் வழி முற்றுகையில் சுமார் 300–க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டனர். ஒரு படகில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டு இருந்தது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் அணு உலை நிர்வாகத்தை கண்டித்து ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.மதியம் 12 மணி அளவில் முற்றுகை போராட்டத்தை நிறைவு செய்வதாக உதயகுமார் அறிவித்தார். போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்று இருப்பதாகவும் கூறினார். பின்னர் படகுகளில் தங்களது ஊர்களுக்கு போராட்டக்காரர்கள் திரும்பிச் சென்றனர். மதியம் 1.15 மணி அளவில் இடிந்தகரையில் இருந்து சென்ற படகுகள் அனைத்தும் கரை திரும்பின.இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கூடங்குளம் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கூடங்குளம் பஜாரில் சுமார் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இடிந்தகரை உள்ளிட்ட மற்ற கிராமங்களிலும் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருந்தனர்.

பஸ்கள் ஓடவில்லை

கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர் வரை கூடங்குளம் மார்க்கமாக கடற்கரை சாலையில், எந்த பஸ்களும் நேற்று இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கூடத்துக்கு சென்ற மாணவர்கள் அவதிப்பட்டனர். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு நடந்தே சென்று வந்தனர்.முற்றுகை போராட்டம் மற்றும் போலீஸ் குவிப்பு காரணமாக கூடங்குளம் பகுதியில் நேற்று பதற்றம் நிலவியது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  கூடங்குளம் அணுஉலை செயல்பட சுப்ரீம் கோர்ட் அனுமதி
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம்: விரைவில் மின் உற்பத்தி
» கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி
» டைரக்டரை அதிர வைத்த கிராம மக்கள்
» மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர் முற்றுகை: கடல் படத்துக்கு நஷ்டஈடு கோரி போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum