தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்தியான வாழ்வருள்வார் திருத்தாளமுடையார்

Go down

திருப்தியான வாழ்வருள்வார் திருத்தாளமுடையார் Empty திருப்தியான வாழ்வருள்வார் திருத்தாளமுடையார்

Post  amma Fri Jan 11, 2013 1:48 pm

சித்தர்களால் போற்றப்படுவதும் முனிவர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதுமான
இப்புண்ணிய தலம் திருஞான சம்பந்தரின் ஊரான சீர்காழிக்கு அருகில் உள்ளது.
இக்கோயிலில் குடி கொண்டு அருள்பரிபாலிக்கும் ஆண்டவன், சப்தபுரீஸ்வரன்.
இங்குள்ள ஈசன் தன் அடியாருக்கு சித்தி பல தருகின்றான். வாழ்வில் சுகமாய்
ஜீவிக்க நல்ல இல்லற துணை, ஆரோக்கியம், ஆயுள், நல்ல அன்பான சுற்றத்தவர்,
நற்பேறு போன்றன இன்றியமையாதவை. செல்வம் மிக மிக அத்தியாவசியமானது. இவை
அனைத்தையும் தந்து, ராகம், தாளம், பல்லவி போன்ற இசை ஞானத்தையும் தர வல்லான்
இந்த ஈசனாம் தாளேஸ்வரன் என்கின்றார், கொங்கண சித்தர் தமது நாடியில்:

‘‘கண்டோம் - காணற்கரியன
கண்டோம். கோக்காலனை தொழதக்
கால் காணும் மேன்மையோதுவோங்
கேளீர். நற்பேரு தம்மொடு இல்லும்
இனிதேயான சுற்றமும் சோம்பலில்லா
பெரு வாழ்வும் குன்றாதனமும்
கூட கண்டோம். சப்தசுர ஈசனை
அண்டி யடைந்தார் மேன்மை
வோதுதற்கரிதே’’


ஆம்.
கொங்கணரின் கூற்று அப்படியே உண்மை. வியாபாரத்தில் அறிந்தே பல பொய்மொழி
புகன்று தனம் தேடுதலும் சுகம் வேண்டியுறைக்கும் பொய்யுறையும் பெரும் பாவம்
ஆகும். கனவுகள் பல அன்றாடம் நமக்கு வரும். கனவுகள் யாவும் இறைவன் நமக்கு
உறைக்கும் செய்தி, அறிவிப்பு என்பதுதான் உண்மை. அப்படி கெட்ட கனவுகளால்
எந்த பாதிப்பு வராதிருக்கவும் வியாபாரத்தில் லாபம் கருதி செய்யக்கூடிய
தவறுகளை போக்குவதற்கும் ஞானம் விருத்தி அடையவும் கல்வி, கேள்வி, போட்டி,
பரீட்சைகளில் மேன்மை பெறவும் நாம் தொழுதேத்த நிற்கும் கோயில், இப்பூவுலகில்
சித்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட தலமே திருக்கோலக்கா உறை திருத்தாளமுடையார்
கோயில்.

‘‘தாளத்தானை தொழுது யுய்ந்தேன்
தாளாத பாவங்களை யறுத்தேன்
தீராத பிணியெலாம் தீரப்பெற்று
மாளாத செல்வத்துடன் மகிமை கொண்டேன்’’
-என்கிறார், பாம்பாட்டிச் சித்தர்.


திருத்தாளத்தான்
என்ற ஈஸ்வரனைத் தொழுதால் தீராத பிணி தீரும். பிணி என்பன கர்மத்தால்
வருவதும் உண்டு. சாபத்தால் வரும் சில பிணிகள் தவறான செய்கைகளினால் வரும்,
சிலவகை நோய்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு வகை வைத்தியரிடம் செல்வதே மரபு.
ஆனால் எல்லா வகை நோய்களையும் வேருடன் களைவது என சங்கல்பித்து ஈஸ்வரன் குடி
கொண்டிருக்கும் இந்த சப்தபுரீசனை நாடினால், எப்பேற்பட்ட பிணியும் விலகும்
என்று பெரியோர்கள் பேசுகின்றனர். சங்கீத மேதைகள் பலர் தொழுதேத்திய தலமிது.
முத்துசாமி தீட்சிதர், தியாக பிரம்மம், சியாமா சாஸ்திரிகள் போன்ற சங்கீத
சக்ரவர்த்திகள் தொழுத புண்ணிய ஈசன் இவர்.

தேவர்களில் இந்திரன்,
வருணன், யமன், அக்னி, வாயு போன்றோர் இங்குள்ள தீர்த்தக் குளத்தில் ஆனந்தமாக
நீராடி மகிழ்ந்தமையால், பிரம்மதேவர் இக்குளத்திற்கு ‘ஆனந்த தீர்த்தம்’
என்று பெயரிட்டார். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை என்ற தேவமாதர்களால்
தொழப்பட்ட இறைவன் இந்த திருத்தாளமுடைய ஈஸ்வரன். திருஞான சம்பந்தப்
பெருமான், தன்னை மறந்து கை கொட்டிப் பாடி நிற்க, சிவபெருமான், ‘நமசிவாய’
என்ற திரு ஐந்து எழுத்துப் பொறித்த தாளத்தை சம்பந்தப் பெருமானுக்கு
அருளினார். அன்னை பார்வதி தேவியானவர் தெய்வீக ஓசையை -ராகத்தை அருள, அன்னை
பராசக்தியை சம்பந்தப்பிரான் ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றார்.

தொனியைத்
தந்தமையால் கண்வ மகரிஷி, அம்பிகையை ‘தொனிப்பிரதாம்பாள்’ என்றார். அன்று
தொட்டு அன்னை பார்வதி மாதாவுக்கு இங்கு ‘திருத்தாளமுடை தொனி பிரதாம்பாள்’
என்பது பெயராகி நின்றது. அகத்தியனோ, ‘ஓசை ஈந்த மாகாளி’ என்றார்.

‘‘பாலகனாம் முலைப்பாலுண்ட
நாயகன் - திருமுருகனம்சம்
கொண்டானுக்கு மாகாளி
யோசை யீய, வோசையீந்த
மகாகாளி என்போமே’’
-அகத்தியன்.


இறைவன்,
இறைவிக்கு பெயர்கூட ஏதோ ஒரு காரணத்தால்தான் ஏற்பட்டது என்பதனை பக்தர்களான
நாம் மனதில் கொள்ள வேண்டும். இங்குள்ள தல விருட்சம், கொன்றை மரம் ஆகும்.
சிவபெருமானையும் கொன்றைப் பூவையும் பிரித்தல் ஆகாது. நாகலிங்கப்பூ
கிடைக்காதபோது, கொன்றைப் பூவால் அர்ச்சிப்பது, காரிய சித்தியை
துரிதப்படுத்தும். இந்தக் கொன்றை மரத்தை பிரதோஷ காலத்தில் பன்னிரு முறை
வலம் வந்து பிரார்த்தித்தால் கண்டிப்பாக பிரார்த்தனை சித்தியாகும்.
திருமுருகனை நேரில் தரிசிக்க அகத்தியர் ஆவல் கொண்டவராய் இக்கோயிலுக்கு
எழுந்தருளி, குருவாரம் தேய்பிறை பிரதோஷ காலத்தில், இத்தல விருட்சமாம்
கொன்றை மரத்தை பன்னிருமுறை வலம் வந்து பிரார்த்தனை செய்தமையால், பின்
திருமுருகனை மயில்மேல் பொதிகை மலையில் நேரில் தரிசித்தார்.

‘‘கோலக்கா குடிகொண்ட
இறை தொழுதேத்திய பின்னே
தல விருட்சமது கொன்றையாம்
யது தன்னை பிரதோஷ குரு
வாரத்து ஈராறுமுறை வலஞ்செய்து
வேண்டியமையால், தென்பொதிகையில்
பெற்றோம் அழகன் தரிசனமே’’


இறைவனையே
நேரில் பார்க்கக் கூடிய வரம் தரும் இந்த தலவிருட்சம், சாதாரண மானிட
வாழ்வுக்குரிய வளங்களை வழங்கிடாதா என்ன? எனவே, கண்டிப்பாக நம்பிக்கையுடன்
பிரார்த்தித்து, தலவிருட்சத்தை தொழ, வெற்றி நிச்சயம். மந்தாகினி என்ற
அந்தணகுல பெண் ஒருத்திக்கு ஒரே மகன். விஸ்வநாதன் என்று காசி வாழ் ஈசனின்
நாமம். பேசும் சக்தி, கேட்கும் சக்தி அறவே அற்றவன். செல்வம்
மிகுந்திருந்தும் இன்பம் இல்லை அக்குலத்தவருக்கு. கனவில் ஒரு மாது வந்து,
‘‘கொன்றை சுற்றி கொள் சுற்றத்தை’’ என்றாள்.

உடனே மந்தாகினி என்ற
அந்த மாது, இக்கோயிலுக்கு வந்து, ஆனந்த புஷ்கரணி எனப்படும் பொய்கையில்
நீராடி, இறைவனை ஆராதித்து, தல விருட்சமாம் கொன்றை மரத்தை உள்ளம் உருக
பிரார்த்தித்தாள். அன்று இரவே விஸ்வநாதன், ‘‘அம்மா தாகம் தீர ஏதேனும் தா’’
என்றான்!

‘‘தீராத் தாகம் தீர்க்க பிறவி ஊமை
விச்சுவ நாதனும் ஏதேனுந்தா
என்றமை கண்டும் கேட்டும்
மந்தாகினி பூரிக்க யாமும்
பூரித்தனமே’’
- கொங்கண சித்தர்.


இப்படி
பேச்சிழந்த பையன் பேசக் கேட்டு மகிழ்ந்த தாய், ‘பொற்றாளம்’ செய்து
கோயிலுக்குத் தந்து தன் பிரார்த்தனையை செய்தாள். இன்றும் இப்பொற்றாளம்,
‘இறைவனை நம்பு; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்று நமக்கு உற்சாகம்
ஊட்டுகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum