தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில்

Go down

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் Empty குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில்

Post  birundha Sun Mar 31, 2013 2:34 pm

ஸ்தல வரலாறு.........

வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில், முருகபெருமான் வள்ளியை மணமுடித்த திருத்தலம் என்ற தனிச்சிறப்புடன் திகழ்கிறது குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில். நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் வழியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்தகோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் 8 அடி 8 அங்குல உயரத்தில் முருகபெருமான் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவில் பற்றி பல்வேறு வரலாற்று கதைகளை கூறுகின்றனர். குமாரகோவில் அமைந்துள்ள வேளிமலையை சங்க காலத்தில் ஆய் மன்னர்கள் ஆண்டுள்ளனர்.

முருகனுக்கும், வள்ளி குறத்திக்கும் காதல் வேள்வி நடந்த மலை வேளிமலையானதாகவும், திருமண பருவமான குமார பருவத்தில் முருகபெருமான் இங்கு குடிகொண்டதால் குமாரகோவில் என பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. `ஏரகம்' என அழைக்கப்பட்ட வேளிமலையில் தான் முருகன் வேடனாகவும், விருத்தனாகவும் வந்து வள்ளியை மணமுடித்ததாக புராணக் கதை கூறுகிறது.

வள்ளிதேவி நெல்லை மாவட்டம் திருக்குறுங் குடியில் தோன்றினார் என்றும், நம்பி ராஜன் என்ற வேடர் தலைவ ரால் வளர்க்கப்பட்ட அவர் தினை புனங்காக்க வேளி மலைக்கு வந்ததாகவும், இங்கு வள்ளியை சந்தித்த முருகன் அவர் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

வனப்பிரதேசமான வேளி மலையில் தினைப்பயிருக்கு காவல் காத்த குறத்தி இன பெண்ணான வள்ளிதேவியின் அழகில் மயங்கிய முருக பெருமான் திருமணம் செய்வதற்காக வள்ளியை காதலித்ததாகவும், முதலில் வள்ளி சம்மதிக்காததால் கிழவன் வேடத்தில் வந்து காதல் கதைகள் கூறி வசப்படுத்தியதாகவும் செவிவழி கதைகள் கூறுகின்றன.

வள்ளிதேவி திருமணத்துக்கு சம்மதித்த பிறகும் பெற்றோரும், சகோதரர்களும் சம்மதிக்காமல் போனதால் வள்ளிதேவியை மலையில் இருந்து முருகபெருமான் அழைத்து வந்த போது வள்ளி தேவியின் சகோதரர்கள் சண்டை போட்டதாகவும், இறுதியில் முருகபெருமானிடம் தோல்வி கண்டு அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

இதற்கு சான்றுகளாக வேளிமலையில் வள்ளிகுகை, கல்யாண மண்டபம், வள்ளிசுனை, வள்ளிகாவு போன்றவை இன்றும் காட்சி தருகின்றன. இவை திருக்கல்யாண நிகழ்ச்சியில் பின்பற்றப்படும் சம்பிர தாயங்கள் மேற்கண்ட சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. மலையில் இருந்து வள்ளிதேவியோடு முருகபெருமான் வரும் போது உறவினர்கள் சண்டை போடும் சம்பவத்தை இப்போதும் குறவர் இன மக்கள் நினைவுபடுத்தி வருகின்றனர்.

குறவர் படுகளம் என்ற நிகழ்ச்சி விழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது. இது போல், முருகபெருமானுக்கு வள்ளிதேவியின் பெற்றோர் சீதனமாக வள்ளி சோலை, வட்டச்சோலை, கிழவன்சோலை, வள்ளிக் காவு நந்தவனம், வாணியங் கோட்டுகோணம் போன்ற இடங்களை கொடுத் ததாக விழாவின் போது தேவசம் போர்டு அதிகாரிகளால் சொத்துப் பட்டியல் பொதுமக்கள், பக்தர்கள் முன்னிலையில் வாசித்து காட்டும் வழக்கம் காணப்படுகிறது.

குமாரகோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மலையின் மேல் திருக்கல்யாண மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு அமைந்துள்ள ஒரு சிறு குகையில் வள்ளியம்மனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகபெருமான் வள்ளியை மணமுடித்த இத்திருத்தலத்துக்கு வந்து முருகபெருமானை மனமுருகி வழிபட்டால் திருமண தடை நீங்கி விரைவிலே திருமணம் நடக்கும் என நம்புகின்றனர்.

அதன்படி இங்கு திருமண வரம் வேண்டி ஏராளமான இளம் பக்தர்கள் வந்து முருகபெருமானை வழிபட்டுச் செல்கின்றனர். இவ்வாறு வழிபடும் பக்தர்கள் தங்களுக்கு வேண்டியபடி விரைவில் திருமண வரம் கிடைத்தால் பரிகாரமாக திருமணத்தை கோவிலிலேயே நடத்துவதாக வேண்டுகின்றனர். அதன்படி வேண்டுதல் நிறைவேறி ஏராளமானோர் இங்கு திருமணத்தை நடத்தி முருகபெருமானின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.

வெள்ளிக்கிழமை தோறும் கஞ்சிதர்மம்.........

இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். வெள்ளிக் கிழமை தோறும் நடக்கும் கஞ்சிதர்மம் பிரசித்திப் பெற்றது. நோய்கள் தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களால் கருதப்படும் கஞ்சியை கொடுப்பதற்கான கஞ்சிப்புரை கோவிலின் வலதுபுறம் உள்ளது.

6 அடி உயர வள்ளி சிலை.......

குமாரகோவிலில் முருகபெருமானின் இடதுபுறத்தில் வள்ளி தேவி காட்சியளிக்கிறார். வள்ளி சிலை 6 அடி 2 அங்குல உயரமாகும். கருவறைக்கு அருகே சிவன் சன்னதி உள்ளது. நந்தீஸ்வரரின் உருவமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடராஜர் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

கோவிலின் முன்புறம் முழு முதற்கடவுளான விநாயகர் சன்னதி உள்ளது. அதன் பின்பு அமைந்துள்ள மண்டபத்தில் இருந்து தான் கோவிலுக்கு எடுத்து செல்லும் காவடி கட்டப்படும். கோவில் வளாகத்தில் ஸ்ரீதர்மசாஸ்தா, மயில் மண்டபம், ஊட்டுப் புரை, கொடிமரம், கல்யாண விநாயகர், இளையநயினார், சாந்தி தருமபீடம், உற்சவ மூர்த்தி, தலவிருட்சமாக 100 ஆண்டுகள் பழமையுடைய வேங்கைமரம் போன்ற முக்கிய பகுதிகளும் உள்ளது.

அதிக திருமணங்கள் நடைபெறும் கோவில்.......

குமரி மாவட்டத்தில் இந்த கோவிலில் தான் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடைபெறுகிறது. திருமண வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து முருகபெருமானை மனமுருகி வேண்டிய சில நாட்களிலேயே வரம் கிடைப்பதால் அதற்கு பரிகாரமாக கோவிலில் வைத்தே திருமணத்தை நடத்துகின்றனர். இதில் ஏழை, பணக்காரர் எனற பாகுபாடு இல்லை.

பல பணக்காரர்களும் கூட வேண்டிய வரம் கிடைத்தததால் இங்கு எளிமையாக திருமணத்தை நடத்தி உள்ளனர். கேரளாவில் குருவாயூர் கோவிலில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடப்பது போல குமரி மாவட்டத்தில் இந்த கோவிலில் திருமணங்கள் அதிகமாக நடப்பதாகவும், தை, மாசி, சித்திரை மாதங்களில் முகூர்த்த நாட்களில் ஒரே நாளில் 10 திருமணங்கள் வரை நடைபெற்றிருப்பதாகவும் பக்தர்கள் கூறினர்.

திருவிதாங்கூர் மன்னரின் வேண்டுகோளை நிறைவேற்றிய வேளிமலை முருகன்.......

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இந்த பகுதியில் அதிக அளவில் கொலை, கொள்ளைகள் நடைபெற்றுள்ளது. அப்போது மன்னர், குற்றங்கள் நடைபெறாமல் இருந்தால் காவலர்களே காவடி எடுப்பார்கள் என வேண்டினார். அவரது எண்ணப்படி சில நாட்களிலேயே குற்றச் சம்பவங்கள் இல்லாமல் போனது.

மன்னரின் ஆணைப்படி அன்றிலிருந்து இந்த கோவிலில் கார்த்திகை மாத திருவிழாவின் போது போலீசார், பொதுப்பணித்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து பறக்கும் காவடி, வேல்காவடி, என பல்வேறு விதமான காவடி எடுத்து வழிபடுகிறார்கள்.

நாளை கும்பாபிஷேகம்....

தனிச்சிறப்பு வாய்ந்த வேளிமலை முருகன் கோவிலில் நாளை (27-ந் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை காலை மகா கணபதி ஹோமம் நடக்கிறது. முகூர்த்த சமயத்தில் கொடிமரத்தில் வாகனத்தை பிரதிஷ்டை செய்து முருகனுக்கும், பரிவாரங்களுக்கும் கலசாபிஷேகம், சாஸ்தா புனர் பிரதிஷ்டை கலசம், அபிஷேகம், மங்களபூஜை, மகா நைவேத்தியம், தீபாராதனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

முருகனுக்கு பக்தர்களின் பரிகாரங்கள்.........

துலாபாரம், அங்கபிரதட்சணம், முடிகாணிக்கை வேண்டுதலை நிறைவேற்றிய முருகனுக்கு பக்தர்களின் பரிகாரங்கள். திருமண வரம் மட்டுமல்லாது குழந்தை வரம் வேண்டியும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து முருகபெருமானை தரிசிக்கின்றனர்.

இவ்வாறு வேண்டும் பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் துலாபாரம் செலுத்துவதாகவும், இன்னும் சிலர் முடி காணிக்கை செய்வதாகவும், சிலர் அங்கபிரதட்சணம் செய்வதாகவும் வேண்டுகின்றனர். பக்தர்கள் வேண்டுதல்கள் பலித்தவுடன் இங்கு வந்து துலாபாரம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum