தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்

Go down

தட்சிண பத்ராச்சலம் திருத்தலம் Empty தட்சிண பத்ராச்சலம் திருத்தலம்

Post  birundha Sat Mar 30, 2013 8:25 pm

திருஅவதாரங்கள் புரிந்து பக்தர்களுக்கு திருப்பயன் அளித்து வரும் திருமாலின் திருத்தலங்களில் பத்ராச் சலம் திருத்தலம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த தலத்தில் ராம பிரான் பட்டாபிராமராக, தனது இடது மடியில் சீதாபிராட்டியை அமர்த்திய நிலையில், லட்சுமணன் குடை பிடிக்க, ஆஞ்சநேயர் ராமபிரானின் திருப்பாதங்களைத் தாங்கி பிடித்த கோலமாக அருளும் பட்டாபிஷேகக் கோலம் அரியது.

இங்கு பிரதான மூலவராக விளங்கும் கோதண்டராமர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோவில், தட்சிண பத்ராச்சலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் நின்றான், கிடந்தான், அமர்ந்தான் என்ற மூன்று நிலைக் கோலங்களில் பெருமாள் காட்சி தருகிறார்.

மேலும் இத்தலத்தில் கஜேந்திர மோட்சம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. வேண்டும் வரம் தரும் பெருமைகளை கொண்ட பெருமாளாக இங்குள்ள கோதண்டராமர் விளங்குகிறார்.

தட்சிண பத்ராச்சலம் என்று அழைக்கப்படும் மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில், பத்ராச்சலத்தில் உள்ளதைப் போல நின்ற கோலத்தில் அழகுற காட்சி தந்து அருளாசி வழங்கி வருகிறார் பெருமாள். பத்ராச்சலம் ஆலயத்தை ராம தாசர் நிறுவியதைப் போல, அவர் வழிவந்த ஆதிநாராயணதாசர், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலை உருவாக்கினார் என்பது மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த கோவிலின் திருப்பணியை, ராம பக்தராக இருந்த வங்காயல குப்பைய செட்டியார் என்பவர் 1926-ம் ஆண்டில் மேற்கொண்டார்.

மூன்று நிலைகளில் பெருமாள்..

மூலவர் சன்னதியில் கோதண்டராமர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோதண்டராமர் சன்னதியின் வலதுபுறம் ரங்கநாதப் பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. பாம்பணையில் பள்ளிகொண்ட பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் அமர்ந்திருக்க, பிரம்மா நாபிக் கமலத்தில் இருந்து தோன்றிய வண்ணம் காட்சி தருகின்றார்.

இவர்களை வணங்கிய நிலையில் பிருகுமுனிவர் உள்ளார். இடதுபுறம் நரசிம்ம பெருமாள் அமர்ந்ததிருக்கோ லத்தில், யோக நிலையில் அருளாசி செய்கிறார். இங்குள்ள பெருமாள் நின்றான், கிடந்தான், அமர்ந்தான் என்று மூன்று நிலைகளில் காட்சி தருவது சிறப்பு வாய்ந்தது.

வங்காயல குப்பைய செட்டியாருக்கு வாரிசுகள் ஏதும் இல்லை. எனவே அவருக்கு இருந்த ஏராளமான சொத்துக்களையும் அபகரித்துக் கொள்ள அவரது உறவினர்கள் எண்ணம் கொண்டனர். அதற்கு வங்காயல குப்பையரின் ஆயுளை முடிக்கவும் திட்டம் தீட்டினர்.

அதன்படி அவருக்கு மெல்லக் கொல்லும் நஞ்சினை அவரது உணவில் தினமும் கலந்து வந்தனர். தனது அடியவரின் நிலை கண்டு மனம் இறங்கிய ராமபிரான், அவரது கனவில் வந்து உண்மையை கூறியதுடன், உணவில் கலக்கப்பட்ட நஞ்சினையும் முறித்து வைத்தார்.

மேலும் தனக்கு பெரிய அளவில் ஆலயம் எழுப்பும்படியும் வங்காயல குப்பையரை கேட்டுக்கொண்டார். ராமபிரானின் செய்கையால், அந்த அடியார் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் ஆதிநாராயணதாசரால் அமைக்கப்பட்ட கோதண்டராமர் கோவிலை திருப்பணி செய்து விரிவுபடுத்தும் பணியை தொடங்க முடிவு செய்தார்.

அப்போது அந்த ஆலயத்தை நிர்வகித்து வந்த வெங்கட்ரங்கையா அரிதாசர் என்பவருடன் இணைந்து 1926-ம் அண்டு கோவில் திருப்பணிகளை தொடங்கி, ஓராண்டில் நிறைவு செய்தனர். சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் திருப்பணியின் காரணமாக கலியுகத்தில் பக்தர்களை ரட்சித்து அருளும் கண்கண்ட தெய்வம் வாழும் இடமாக மாறியது. கோதண்டராமர் பக்தர்களின் இன்னல்களை போக்கும் ஆபத்பாந்தவனாக அனைத்து மக்களையும் ஆட்கொண்டு வருகிறார்.

ஆலய அமைப்பு...

கிழக்கு நோக்கிய எளிய நுழை வாயிலுடன் அமைந்த இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் அனுமன் தீர்த்தம் உள்ளது. அதன் அருகில் ராமரை வணங்கியபடி சஞ்சீவி மலையைத் தாங்கி நிற்கும் அனுமன் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

அனுமன் சஞ்சீவி மலையை வலது கையில் தாங்கிய நிலையிலும், இடது கையை அபய முத்திரையுடனும் வைத்தபடி காட்சி தருகின்றார். இந்த ஆஞ்சநேயர் குபேர மூலையை நோக்கி இருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்தக் கோலம் அரிதான ஒன்றாகும்.

ரங்கநாயகி தாயார் அமர்ந்த திருக்கோலத்தில் எழிலோடு காட்சி தருகிறாள். அதனை அடுத்து சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் சன்னதி அமைந்துள்ளது. மூலவராக கிழக்கு நோக்கிய கோதண்டராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தந்து அருள் வழங்கி வருகிறார்.

இதுதவிர, சேனை முதல்வர், கருடாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை யாழ்வார், ஸ்ரீராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் சன்னதிகள் அமைந்துள்ளன.

விமானம்- அஷ்டாங்க விமானம். தீர்த்தம் - அனுமன் தீர்த்தம், லட்சுமி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

விழாக்கள்...

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், ராமானுஜருக்கு பத்துநாள் உற்சவம், வைகாசி வசந்த உற்சவம், கோடை உற்சவம், நம்மாழ்வார் சாற்றுமுறை, ஆனியில் யோக நரசிம்மர் கருட சேவை, ஆடிப் பவுர்ணமியில் கஜேந்திர மோட்சம், ஆடிப்பூரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம், ரங்கநாதர் கருடசேவை முதலிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழியில் திருப்பாவை உற்சவம், பரமபதவாசல் திறப்பு, தை மாதம் லட்ச தீபம், தெப்ப உற்சவம், மாசி மகம், ராமர் கருட சேவை, பங்குனியில் ராம நவமி, பங்குனி உத்திரத்தில் தாயார் திருக் கல்யாணம் என மாதந்தோறும் விழாக்களுக்குப் பஞ்சமில்லை.

சென்னை மாவட்டம், மாம்பலம் கிண்டி வட்டத்தில் மேற்கு மாம்பலத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மாம்பலம் ரெயில் நிலையத்திற்கும், தி.நகர் பஸ் நிலையத்திற்கும் மேற்கே வெகு அருகில் இக்கோவில் உள்ளது,

மேட்லி சுரங்கப்பாதை வழியாக எளிதில் இங்கு வரலாம். அதே போல, அசோக் பில்லரில் இருந்து கோவிந்தன் சாலை வழியாகவும் வரலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum