தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘தாண்டவம்’ கதை விவகாரம்… ‘தம்’ கட்டும் விஜய்!

Go down

‘தாண்டவம்’ கதை விவகாரம்… ‘தம்’ கட்டும் விஜய்! Empty ‘தாண்டவம்’ கதை விவகாரம்… ‘தம்’ கட்டும் விஜய்!

Post  ishwarya Sat Mar 30, 2013 6:07 pm

சென்னை: தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான். உதவி இயக்குநர் பொன்னுசாமியை வைத்து நான் படம் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று இயக்குநர் விஜய் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இயக்குநர் விஜய் பற்றித்தான் ஏகப்பட்ட செய்திகள். படத்தின் கதை தொடர்பாக எழுந்த பிரச்னை குறித்து திரைப்பட இயக்குநர் சங்கம் விசாரணை நடத்தியது. விசாரணை தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் ரூ.5 லட்சம் கொடுத்தார்; ரூ.10 லட்சம் கொடுத்தார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் “தாண்டவம்’ படத்தின் கதை தனது எனக் கூறிய உதவி இயக்குநர் பொன்னுச்சாமியின் இயக்கத்தில் இயக்குநர் விஜய் படம் தயாரிக்கப் போகிறார் என ஒரு நாளிதழில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியாகி இருந்தது.
இதையடுத்து இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாத இயக்குநர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து நீண்ட விளக்கம் அளித்தார்.
அதன் விவரம்:
“தாண்டவம்’ படம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு தடைகளை எதிர்கொண்டுதான் படத்தை உருவாக்கினோம். படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது கடுமையான மழை. 300 வருடங்களுக்குப் பிறகு லண்டனில் பெய்த கடுமையான மழை இதுதான் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்… அதனால் லண்டன் படப்பிடிப்பு செலவு இரு மடங்காகி விட்டது.
அடுத்து படத்தின் சில ‘கிளிப்பிங்ஸ்’ மாயமாகிவிட்டன என செய்திகள் வந்தன. அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. டிஜிட்டல் கேமிராவில் படம் எடுக்கும்போது சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாம் ஷூட் செய்த சில காட்சிகள் பதிவாகாமல் போவதுண்டு. இது சினிமாவில் இருப்பவர்கள் நன்கு அறிந்த ஒன்றுதான். பிலிமில் படமாக்கும்போது கூட புகை மூட்டம் போன்று சில காட்சிகள் அமைந்துவிடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த நிகழ்வைக் கூட சிலர் திரித்துக் கூற ஆரம்பித்துவிட்டனர்.
அடுத்த முக்கியமான விஷயம் படத்தின் கதை பற்றியது. “தாண்டவம்’ படத்தின் கதையை ‘தெய்வத்திருமகள்’ படத்தின் படப்பிடிப்பின்போதே விக்ரமிடம் கூறி சம்மதம் பெற்றிருந்தேன். அந்தப் படத்தை அப்போது வேறு தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. அதையடுத்து யு டிவி நிறுவனத்தினர் ஒரு கதையைக் கேட்டனர். நான் “தாண்டவம்’ கதையைக் கூறினேன். அவர்களுக்குப் பிடித்துப்போனது. தயாரிக்க ஒப்புக்கொண்டனர்.
இது நடந்தது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில். அப்போதே எழுத்தாளர் சங்கத்தில் கதையைப் பதிவு செய்துவிட்டோம். ஆனால் படத்தின் கதையைத் தனது எனக் கூறும் உதவி இயக்குநர் பொன்னுச்சாமி ஆகஸ்ட் மாதத்தில்தான் யு டிவி தனஞ்செயனிடம் கதையைக் கூறியுள்ளார்.
‘தாண்டவம்’ படப்பிடிப்பு தொடங்கி படம் பற்றிய செய்திகள் வெளியானபோதுதான் இது தனது கதையாக இருக்குமோ என்று எண்ணிய பொன்னுச்சாமி எங்களைச் சந்தித்தார். ஏனென்றால் அவருடைய கதையும் பார்வையற்ற ஒருவர் பழிவாங்குவது போல் உருவாக்கப்பட்டிருந்ததுதான் காரணம். அவருடைய சந்தேகம் நியாயமானது. நானாக இருந்தால் கூட அப்படித்தான் செய்திருப்பேன்.
பிறகு அவர் எங்களைச் சந்தித்துப் பேசினார். நாங்களும் விளக்கம் அளித்தோம். அதையடுத்து அவர் இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்தார். அங்கு இரண்டு படங்களின் ஸ்கிரிப்டையும் கொடுத்தோம். இரண்டு படங்கள்; இரண்டிலும் பார்வையற்ற கதாநாயகன் பழி வாங்குவதுதான் கதை. எனவே பொதுவாக சில அம்சங்கள் பொருந்தியிருந்தன.
ஆனால் ஒட்டுமொத்தக் கதையே வேறு; ஒரே விஷயம் பார்வையற்றவன் பழிவாங்குகிறான் என்பதுதான். இதை வைத்து அவருடைய கதையை நாங்கள் எடுத்துக்கொண்டோம் என எப்படிக் கூற முடியும்? ஒரு போலீஸ் கதை, ஒரு த்ரில்லர் கதை, ஒரு காமெடி கதை என ஒரே ஜர்னரில் வெளியாகும் படங்களில் சில விஷயங்கள் எதேச்சையாக ஒத்துப்போவது இயல்புதான்.
இதே கருத்தைத்தான் இயக்குநர் சங்கத்தில் ஜனநாதனும் அமீரும் கூறினர். ஆனாலும் பொன்னுச்சாமி நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டார். வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டதால் அதைப் பற்றி எந்தக் கருத்தும் கூற முடியவில்லை. அதையடுத்து படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்து படமும் வெளியாகிவிட்டது. இதுதான் நடந்த உண்மை.
இதில் இன்னொரு விஷயம். உதவி இயக்குநர் பொன்னுச்சாமி பணத்துக்காகவோ வேறு விஷயங்களுக்காகவோ வழக்கு தொடுத்ததாகக் கருத முடியாது. அவருடைய உழைப்பு, கனவு சிதைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றத்துக்கு சென்றார். படம் வெளிவருவதற்கு முன்பு எப்படியோ… இப்போது அவரே படத்தைப் பார்த்திருப்பார்; உண்மை என்ன என்பதைப் புரிந்திருப்பார். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் பொன்னுச்சாமிக்கு தெரிந்தால் போதும். ஏனென்றால் ஒரு படைப்பாளியின் கனவும் லட்சியமும் இன்னொரு படைப்பாளிக்குப் புரியும்.
தன்னுடைய ஸ்கிரிப்ட்டையும் பொன்னுச்சாமி என்னிடம் படிக்கக் கொடுத்தார். நான் முழுவதும் படித்துப் பார்த்தேன். அதற்கும் “தாண்டவம்’ ஸ்கிரிப்ட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. நான் படித்தவரை அவருடைய ஸ்கிரிப்ட்டும் உண்மையிலேயே நன்றாக இருந்தது. நிச்சயமாக அவரும் இயக்குநராக சாதிப்பார்.
அடுத்ததாக, பொன்னுச்சாமியையோ இயக்குநர் சங்கத்தையோ வளைத்துப் போட நான் யாருக்கும் பைசா காசு கூட தரவில்லை. அது பற்றி வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே.
அதே போல பொன்னுச்சாமியை வைத்து நான் படம் தயாரிக்கப்போகிறேன் என்று வெளிவந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை.
அடுத்த படம் விஜய்யுடன்…
என்னுடைய அடுத்த படத்தில் விஜய் நடிக்கிறார். காதலும் ஆக்ஷனும் கலந்த கதை. எங்கள் இருவரின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும். மிஸ்டரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள். “தலைவன்’ என்ற ஒரு பெயரைப் பதிவு செய்திருக்கிறோம். ஆனால் அதே தலைப்பில் வேறு சில படங்கள் வருவதாகக் கேள்விப்பட்டோம். அதனால் தலைப்பை இன்னும் உறுதி செய்யவில்லை. பாடல் கம்போஸிங்கை தொடங்கியிருக்கிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துக்கொள்கிறார். கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்து விரைவில் முறையாக அறிவிக்கிறோம்,” என்றார்.

படம் ரிலீசாகி, சத்தமில்லாமல் தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்தின் கதை குறித்து மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை பப்ளிசிட்டிக்கு உதவும் என நினைக்கிறார்களோ என்னமோ…

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum