தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதி பிரம்மனுக்கு ஆயுதபூஜை வணக்கம்!

Go down

ஆதி பிரம்மனுக்கு ஆயுதபூஜை வணக்கம்!  Empty ஆதி பிரம்மனுக்கு ஆயுதபூஜை வணக்கம்!

Post  amma Fri Jan 11, 2013 1:31 pm

சென்னை - பாரிமுனை

யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் நின்றன்
செயல்களின்றி இல்லை
போதும் இந்த மாந்தர் வாழும்
பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதி சக்தி தாயே-என் மீது
அருள் புரிந்து காப்பாய்


இது
மகாகவி பாரதி எழுதிய பாடல். யாரிடம் இப்படி உரிமையாய் கோரிக்கை வைத்தார்?
சென்னை, பாரிமுனை, மண்ணடி பகுதி, தம்புச்செட்டித் தெருவில் கோயில்
கொண்டிருக்கும் அன்னை காளிகாம்பாளிடம்தான். இத்தல அன்னையைக் கண்டவுடன்
உள்ளத்தில் பொங்கிய வார்த்தைகள் மந்திரப் பூக்களாய் மாறி, அன்னைக்கு
அர்ச்சனையாகி, பாமாலையாய் இன்றும் பாரில் நிலைத்துள்ளன. அன்னையின் அருளால்
பாரதி சுதந்திர வேள்வியில் ஆகுதியாக்க எழுச்சிமிகு பல பாடல்களை
இயற்றினார்; இந்தக் கோயிலுக்கு வந்த பிறகுதான், பாரதி நெற்றியில்
குங்குமத்தை நிரந்தரமாக அணிய ஆரம்பித்தார். கவிராஜன் பாரதிக்கு மட்டுமா
இந்த அன்னை அருள் செய்தாள்? மராட்டிய இளஞ்சிங்கம் சத்ரபதி சிவாஜி
மகாராஜாவுக்கும்தான்.

1677ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ந்தேதி
சென்னைக்கு வருகை தந்த சிவாஜி, முகலாய-அந்நிய ஆக்கிரமிப்புக்கு முற்றுப்
புள்ளி வைக்க இத்தல அன்னையின் அருள் வேண்டி நின்றார் என்கிறது சரித்திரம்.
இப்படி மண்ணாளும் வேந்தனும் பண்ணாளும் புலவனும் பணிந்து நின்ற அன்னையின்
அருள் பிரதேசத்தினுள் நுழையும் போதே மனம் மகிழ்ச்சி யால் நிறைகிறது.
பிராகார முகப்பில் அன்னைக்கு அணிவித்து மகிழ தாமரையும் எலுமிச்சையும்
குவித்திருக்கும் பூக்கடைகள். எலுமிச்சம்பழ மணமும் பூக்களின் வாசனையும்
இணைந்து, கோயில் நுழைவாயிலிலேயே தெய்வீக சூழலை உருவாக்கியிருக்கின்றன. முன்
மண்டபம் தாண்டி உள்ளே செ ன்று, அன்னையின் அலங்கார மண்டபத்தை அடைகிறோம்.
அன்னையின் உற்சவ மூர்த்தியை அழகாய் அலங்கரித்து வைத்துள்ளார்கள். இங்கே
காளி காம்பாளோடு சரஸ்வதியும் லட்சுமியும் சேர்ந்து முப்பெரும் தேவியராய்
அருள்கிறார்கள்.

வலமாய் வந்து, காளிகாம்பாள் கருவறைக்குச்
செல்லலாம். வழியில் அருணாசலேஸ்வரர், நவகிரகம், வள்ளி-தெய்வானை சமேத
சுப்ரமணியர், வீரபிரம்மங்காரு, அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை,
தல நாயகர் கமடேஸ்வரர், துர்க்கா, சண்டிகேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம்.
கருவறையில், மேலிரு கரங்களில் தாமரையும், அங்குசமும் தரித்திருக்கும்
அன்னை, கீழிரு கரங்களால் அபய-வரதம் அருள்கிறாள். இடது காலை மடித்து வலது
காலை தாமரை மீது இருத்தி அமர்ந்திருக்கும் அன்னையின் அழகு முகம் மெல்லிய
விளக்கொளியில் பிரகாசிக்கிறது. அவளது இதழோ ரப் புன்னகை நம் மனக்கவலைகளை
மாயமாக்குகிறது. அன்னையின் காலடியில் இருக்கும் மகாமேரு, அம்பிகையின்
அந்தந்த இடத்தில் உள்ள அந்தந்த தேவதைகளுக்குரிய பீஜாட்சர மந்திரங்கள்
பொறிக்கப்பட்டு அருள் பரப்பி வருகிறது. இது போன்ற அமைப்பில் உலகில் வேறு
எங்குமே மேரு இல்லை என்பது கு றிப்பிடத்தக்கது.
இங்கே அர்ச்சனை இல்லை.
மலர் சாத்தி வழிபடலாம். மனதால் பேசலாம். புவனமெல்லாம் ஆளும் அன்னையிடம்,
‘இது என் பிரச்னை. யாரிடம் சொல்ல? நீதான் கதி’ என சொல்லிப் புலம்பலாம்.
‘நீ எத்தனை அழகு. என் கண்ணே பட்டுடும் போலிருக்கே’ எனக் கொஞ்சலாம். அத்தனை
நெருக்கத்தை அன்னையிடம் உணரமுடிகிறது. குழந்தை இல்லாதவர்கள் இவளுக்கு
மஞ்சள் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை தினமும் பிரசாதமாய் உட்கொள்ள
அன்னையின் அருள், மஞ்சளில் மாயம் செய்து மழலை வரமாய் மலர வைக்கிறது.
இவளிடம் வேண்டும் எதுவும் கற்பக மரத்திடம் கேட்ட வரமாய் உடனே கிடைக்கிறது
என்பது பக்தர்கள் அனுபவம். குபேரனே, ‘‘எனக்கு செல்வம் தா தாயே’’ என்று
இவளைப் பணிந்துதான் செல்வம் பெற்றான். அதனால்தானே இது சொர்ணபுரி என புராணம்
கொண்டாடுகிறது!

தவமிருந்து காஞ்சியில் அரனை அடைந்த அன்னை,
தன்னுடலில் பாதியைக் கொடுத்த சிவபெருமானின் விருப்பப்படி தன் இச்சா
சக்தியால் 12 திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள் புரிந்தாள் அல்லவா,
அதிலொன்றுதான் இத்தலம்! எளியவர்களுக்கெல்லாம் எளியவளாய் அருளும் அன்னை
மீனவர்களுக்கு செல்வ மகள். அந்தக் காலத்தில் மீனவர்கள் செந்தூரம் சாற்றி
அன்னையை கொண்டாடுவார்கள். அதனால் அன்னைக்கு சென்னியம்மன் என்றொரு பெயரும்
உண்டு. மேற்கு நோக்கி அருளும் இந்த அன்னையை பிருங்கி மகரிஷி, பராசரர்,
வியாசர், அகத்தியர், ஆங்கிரசர், புலஸ்தியர் ஆகிய முனிவர்களும் சூரியன்,
சந்திரன், சனிபகவான் உள்ளிட்ட நவகிரகங்களும் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.

வெளிபிராகார
வலத்தில், சித்தி-புத்தி விநாயகர், கொடிமரம், முருகன் சந்நதி,
வீரபத்திரர், நாகேந்திரர் வரிசையில் விஸ்வபிரம்மாவும் அருள்கிறார்.
யார்
இந்த விஸ்வபிரம்மா? உலகத்தின் தோற்றுவிக்கும் முழுமுதல் சக்தியாகவும்
உலகத் தந்தையாகவும் விளங்குபவர். தனது அனைத்து புறங்களிலும் விழிகளையும்
வதனங்க ளையும் புஜங்களையும் பாதங்களையும் உடையவர் என்கிறது, ரிக் வேதம்.
விராட் விஸ்வகர்மா அல்லது விஸ்வ பிரம்மா என போற்றப்படும் இவர், தனது ஐந்து
முகங்களில் இருந்து ஐந்து பிரம்மாக்களைப் படைத்தார். சனகரிஷி, சநாதனரிஷி,
அஹபூனஸ ரிஷி, ப்ரதனஸ ரிஷி, ஸுபர்ணஸ ரிஷி ஆகிய இவர்களை பஞ்ச பிரம்மாக்கள்
என்று சொல்கிறது வசிஷ்ட புராணம். கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்
நுட்பங்களைத் தோற்றுவிப்பவர், கடவுள்களின் சிற்பி, புதுமை விரும்பி
என்றெல்லாம் கொண்டாடுகிறது, மகாபாரதமும் ஹரிவம்சமும்.

சொர்க்கம்,
நரகம் இவற்றோடு பதினான்கு உலகங்களையும் படைத்த ஆதிபிரம்மனும் இவரே.
சிவ-பார்வதி திரும ணத்தின் போது லங்கா பட்டினத்தை கடலின் மத்தியில்
படைத்தவர் இவரே. ராமனுக்கு உதவ கடலில் ராமசேதுவை கட்ட, நளன் என்னும்
வானரத்துக்கு அருளியவரும் இவரே என இவர் புகழ் நீள்கிறது. படைப்பை,
படைக்கும் கருவிகளை தெய்வமென போற்றும் விதமாக ஆயுத பூஜையை கொண்டாடும்
நன்நாளில் படைப்பின் ஆதிபிரம்மனான விஸ்வ பிரம்மனை தொழுவது முறைதானே
என்றெண்ணி விழுந்து வணங்குகிறோம். இதே பிராகாரத்தில் காயத்ரி, துர்க்கா,
நடராஜர், மகாமேரு ஆகியோருக்கான சந்நதிகளையும் பிரத்யங்கரா தேவியையும்
தரிசிக்கிறோம். காளிகாம்பாளுக்கு அர்ச்சனை செய்வதற்கென்று தனியாக ஒரு
சந்நதியும் பிராகாரத்தில் உள்ளது.

இந்தத் தலத்தின் மற்றொரு
சிறப்பு, கிண்ணித்தேர். வெண்கல கிண்ணங்களால், மகாமேரு வடிவத்தில்
அமைந்துள்ளது இந்தத் தேர். ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்தில்
தீர்த்தவாரியன்று இந்தக் கிண்ணித் தேரில் அன்னை ஆலய வலம் வந்தருள்கிறாள்.
ஆன்மிக அதிசயங்கள் நிறைந்த அன்னையின் ஆலயத்தை வலம் வந்து கொடிமரத்தின்
முன்னால் நிலம்பட விழுந்து வணங்குகிறோம். யாதுமாகி நின்ற காளி கருவறையில்
இருந்து நம் மன பீடத்திற்கு வந்து அமர்ந்து சிரிக்கிறாள். ஆலயத்
தொடர்புக்கு: 044-25229624.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum