தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடல்

Go down

கடல்                                                    Empty கடல்

Post  ishwarya Thu Mar 28, 2013 12:53 pm

தேவதைக்கும், சாத்தானுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் ஒரு இளைஞன் உள்ளே புகுகிறான். அவனை சாத்தான் தன் பக்கம் இழுத்ததா? இல்லை தேவதை பக்கம் அவன் வந்தானா? என்பதே படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்தில், ஒரு பாதிரியார் பயிற்சி பள்ளிக்கு அரவிந்த்சாமி பாதிரியராக சேவை புரிய பயிற்சி எடுக்க வருகிறார். கடவுள் மீது பற்று கொண்ட அரவிந்தசாமி, அந்த பள்ளியில் தன் குடும்ப வறுமை காரணமாக சற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் பாதிரியாராக பயிற்சி எடுத்து வரும் அர்ஜுனை சந்திக்கிறார். ஆரம்பம் முதலே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இந்நிலையில், ஒரு பெண்ணுடன் அர்ஜுன் நெருக்கமாக இருப்பதை பார்த்துவிட்ட அரவிந்த்சாமி தலைமை பாதிரியாரிடம் அதை தெரிவித்து விடுவதாக சொல்கிறார். ஆனால், அர்ஜுனோ யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்று மன்றாடுகிறார். ஆனால், தனது நிலைப்பாடில் அரவிந்த்சாமி பிடிவாதமாக இருக்கிறார். ஆத்திரத்தில் அரவிந்த் சாமியை கொன்றுவிட நினைக்கும் அர்ஜுன் பாவத்தின் வேதனையை அரவிந்த்சாமி அனுபவிக்க வேண்டும் என்றுகூறி அவரை விட்டுவிடுகிறார். தப்பு செய்ததற்கு பிரயாச்சித்தமாக அந்த பயிற்சி பள்ளியை விட்டு வெளியேறுகிறார் அர்ஜுன்.

சில வருடங்கள் கழிகிறது. நாகர்கோவில் அருகே ஒரு கடற்கரை கிராமத்தில் விலைமாது என்ற பட்டத்துடன் ஒரு பெண் இறந்து போகிறாள். அவளது குழந்தையை அந்த கிராமமே அனாதை, விலைமாது மகன் என்று கூறி உதாசீனப்படுத்துகிறது.

இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் ஆலயத்திற்கு பாதிரியராக வருகிறார் அரவிந்த்சாமி. கடவுள் பற்று அற்ற அந்த கிராம மக்கள் அவரை அந்த கிராமத்தை விட்டு வெளியேற சொல்கிறார்கள். ஆனாலும், அவர்களை கடவுள் பக்கம் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அந்த ஊரிலேயே தங்குகிறார் அரவிந்த்சாமி.

குப்பைக் கிடங்காக காட்சியளிக்கும் ஆலயத்தை சுத்தம்செய்து புனித இடமாக மாற்றுகிறார். சில நாட்களில் பாதிரியாரின் நடவடிக்கைகள் கிராம மக்களுக்கு பிடித்துப்போகவே அவரை சாமியாக ஏற்றுக்கொள்கிறார்கள். அனாதையாக சுற்றித்திரியும் நாயகனுக்கும் முதலில் பாதிரியார் மீது கோபம் வருகிறது. அதன்பின் அரவிந்த்சாமி சில அறிவுரைகளை கூறும்போது அதை அவன் ஏற்று நல்லவனாக மாறுகிறான். பின், அரவிந்த்சாமியே அவனை மீன்பிடித் தொழிலில் சேர்த்துவிட்டு பெரியவனாக்குகிறார்.

பெரியவனாகும் நாயகன் கௌதம் கார்த்திக் எதேச்சையாக ஒரு பஸ் பிரயாணத்தில் துளசியை சந்திக்க, பார்த்தவுடனே காதல் கொள்கிறார். அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள். குழந்தைத் தனத்துடன் வெகுளியாகும் பேசும் துளசியின் பேச்சில் மயங்கும் கௌதம் அவளை ஒருதலையாக காதலிக்கிறான்.

ஒருநாள், அந்த கிராமத்துக் கடற்கரையில் குண்டு பாய்ந்து கிடக்கும் அர்ஜுனுக்கு யாருக்கும் தெரியாமல் சிகிச்சை செய்கிறார் அரவிந்த்சாமி. இவருக்கு உதவியாக அந்த கிராமத்திலேயே இருக்கும் ஒரு பெண்ணும் வருகிறாள். சிகிச்சையில் உயிர்பெறும் அர்ஜுன், தான் திருந்திவிட்டதாகவும், ஒரு பெண்ணை மனதார நேசிப்பதாகவும், அவளுடன் இணைந்து வாழ்ந்தால் கடவுள் வழியிலேயே தான் சென்றுவிடுவதாகவும் கூறி அரவிந்த்சாமியை நம்ப வைக்கிறார். அரவிந்த்சாமியும் அதனை நம்பி அர்ஜுன் விரும்பிய பெண்ணை அழைத்துவந்து அர்ஜுடனேயே சேர்க்கிறார்.

அர்ஜுனை பார்க்க அடிக்கடி அரவிந்த்சாமியும், அந்த கிராமத்து பெண்ணும் உடைந்த கப்பலுக்கு செல்வதை அந்த கிராம மக்கள் பார்த்துவிடுகிறார்க்ள். ஏதோ, தப்பு நடக்கிறது என்ற எண்ணத்தில் அவர்களை கையும் களவுமாக பிடிக்க எண்ணுகிறார்கள். ஒருநாளில் அர்ஜுன் தான் விரும்பிய பெண்ணை விட்டுவிட்டு தப்பித்து விடுகிறார். இதை அறியும் அரவிந்த்சாமி ஓடிவந்து அந்தப் பெண்ணிடம் என்னவென்று கேட்பதற்குள், ஊர்க்காரர்கள் வந்துவிடுகிறார்கள். அங்கு அரவிந்த்சாமியுடன் இரு பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு தவறாக நினைத்து மூவரையும் அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

அவர்களை அங்குள்ள ஆலயத்திற்கு கொண்டு சென்று தலைமை பாதிரியாரிடம் முறையிடுகிறார்கள். விசாரணையில் அர்ஜுனை விரும்பிய பெண் அரவிந்த்சாமியுடன் தனக்கு தவறான உறவு இருப்பதாக பாதிரியாரிடம் பொய் சொல்கிறாள். இதை சற்றும் எதிர்பாராத அரவிந்த்சாமியை அந்த ஊரே அடித்து உதைக்கிறது. அந்த சண்டையில் கிராமத்து இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்தின் மணி தாக்கி கீழே விழுந்து உயிர்விடுகிறார். இதற்கும் அரவிந்த்சாமிதான் காரணம் என்று கூறி அவரை தாக்கும் கிராம மக்களிடமிருந்து அரவிந்த்சாமியை மீட்டு சிறையில் தள்ளுகிறது போலீஸ்.

ஆதரவாக இருந்த பாதிரியார் சிறைக்கு சென்றதற்கு கிராம மக்கள்தான் காரணம் என்று அவர்களிடம் சண்டைக்கு போகிறான் கௌதம் கார்த்திக். இறுதியில், அவனை அடித்து தூக்கிப் போடுகிறார்கள் கிராம மக்கள். அதன்பின், அர்ஜுன் முன் நிறுத்தப்படும் கௌதம் கார்த்திக் தனக்கு ஆதரவாக யாருமே இல்லாத பட்சத்தில் அர்ஜுனனிடமே சேருகிறான். பாவம் ஒன்றை மட்டுமே செய்யவேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட அர்ஜுனனிடம் சேர்ந்த கார்த்திக்கும் தொடர்ந்து பாவங்கள் செய்கிறான். ஆனாலும், துளசியிடம் இவன் கொண்ட காதல், இவனை அந்த பாவத்திலிருந்து வெளியே வர துணிவு கொடுக்கிறது.

இறுதியில், அர்ஜுன் என்ற சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கௌதம் அதிலிருந்து விடுபட்டனா? ஜெயிலுக்கு போன அரவிந்த்சாமி என்ன ஆனார்? கௌதம்- துளசி காதல் என்னவாயிற்று என்பதே மீதிக் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் மறுபிரவேசம் எடுத்திருக்கும் அரவிந்த்சாமிக்கு, இந்த படத்தில் தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடுகிற கதாபாத்திரம்தான். அதையும் சரியாக, கனகச்சிதமாக செய்திருக்கிறார். இன்னும் சிரிப்பில் வசீகரத்தை அள்ளி வைத்திருக்கிறார். மேஜைக்காராக அர்ஜுன், பாவம் என்ற வழியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற கதாபாத்திரம், கண்ணில் உக்கிரம், உதடுகளில் ஆக்ரோஷமான பேச்சு என மிரட்டியிருக்கிறார்.

கௌதம் கார்த்திக் அழகாக இருக்கிறார். காதல், சண்டை, ஆட்டம் என இளமை துடிப்புடன் மிடுக்கான தோற்றத்தில் நம்மை வசீகரிக்கிறார். இதுதான் முதல் படம் என்ற சுவடே தெரியாத அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திறமையான இயக்குனர் கண்டெடுத்த இந்த முத்து, வெள்ளித்திரையில் பளிச்சிடும் என நம்பலாம். துளசி நாயர், மனவளர்ச்சி குன்றிய பெண்ணாக நடித்திருத்திருக்கிறார். பேச்சில் குழந்தை தனம் காட்டும் இவரது நடிப்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு நடிப்பில் கவனம் செலுத்தவில்லை என தோன்றுகிறது.

இயக்குனர் மணிரத்னம் படங்களிலேயே சற்று வித்தியாசமான படமாக இப்படம் வெளிவந்திருக்கிறது. வட்டார வழக்கு மொழியை படம் முழுவதும் நேர்த்தியாக கையாண்டு, கடைசிவரை கொண்டுபோய் கரை சேர்த்திருக்கிறார். ஆனால், இவருடைய படங்களுக்கே உரித்தான ஒரு வரி வசனங்கள், நெஞ்சைத் தொடும் காட்சிகள் இப்படத்தில் மிஸ்ஸிங். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நேரடியாக படம் எடுத்ததால், கொஞ்சம் திணறியிருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

பாடல்களிலும் அதிக கவனம் செலுத்தவில்லை. ஜெயமோகனின் நாவலின் ஒரு பகுதிதான் இப்படத்தின் கதை. தனது வட்டார மொழியில் வசனம் எழுவதில் வல்லவர் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார் ஜெயமோகன்.

ராஜீவன் ஒளிப்பதிவுதான் இப்படத்தின் ஹைலைட். படத்தின் கதையோடு நம்மை ஒன்ற வைப்பது இவரது ஒளிப்பதிவுதான். மீனவ கிராமம், பாழடைந்த ஆலயம் என எல்லாவற்றையும் தன் கேமரா கண்களால் அழகாக காட்டியிருக்கிறார். இப்படத்திற்கு இவரது ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறதென்றால் அது மிகையல்ல.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கெனவே பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருந்தன. ஆனால், அதை எப்படி காட்சிப்படுத்தப் போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. அதை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக, ‘மூங்கில் தோட்டம்’, ‘ஏலே கீச்சான்’ ஆகிய பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.

மொத்தத்தில் ‘கடல்’ கரை சேரும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum