தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை வரம் தரும் பொல்லா பிள்ளையார் கோவில்

Go down

குழந்தை வரம் தரும் பொல்லா பிள்ளையார் கோவில் Empty குழந்தை வரம் தரும் பொல்லா பிள்ளையார் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 1:49 am

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரில் பொல்லா பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருக்கோவிலை சுற்றி 4 மாட வீதிகள் உள்ளன. திருக்கோவில் எதிரில் காருணிய தீர்த்தக்குளம் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே புன்னை மரம் உள்ளது.

அங்கு சுயம்பிரகாச ஈஸ்வரர் வீற்றிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் இத்தலத்தில் வழிபட்டு சென்றார். ராமன் லட்சுமணன் இங்கு வழிபட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் குறித்து கூறப்படும் வரலாறு வருமாறு:-

மிருகண்டு முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அப்போது காந்த வர்மன் என்பவன் முனிவரின் தவத்தை கலைத்துவிட்டான். கண் விழித்த முனிவர் உடனே காந்தவர்மனை நாரையாக மாற சாபம் கொடுத்து விட்டார். காந்தவர்மன் தான் செய்த தவற்றை நினைத்து வருந்தி பாவ விமோசனம் வேண்டினான். புன்னை வனத்தில் இருக்கும் சுயம்புலிங்கமான சுயம்பிரகாச ஈஸ்வரரை காசிதீர்த்தம் கொண்டு தினமும் வழிபட்டால் பாவவிமோசனம் கிடைக்கும் என கூறினார்.

அன்று முதல் நாரையாக இருந்த காந்தவர்மன் காசிதீர்த்தம் கொண்டு வந்து தொடர்ந்து வழிபட்டு வந்தார். இறைவனும் நாரை முன் தோன்றி அகம் மகிழ்ந்து பாவவிமோசனம் அளித்தார். அவ்வாறு நாரை வழிபட்ட ஸ்தலமானதால் திருநாரையூர் என்று அழைக்கப்பட்டது.

நம்பி ஆண்டார் நம்பி......

இத்திருக்கோவிலில் பொல்லா பிள்ளையாருக்கு ஆதிசைவ மரபைச் சேர்ந்த அருள்தேச சிவச்சாரியார் பூஜை செய்து வந்தார். ஒருநாள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தால் தன் மகனை பூஜை செய்ய பணித்து சென்றார். தன் தந்தை சொன்ன படியே பூஜையை முடித்துப் பொல்லா பிள்ளையாரிடம் அமுது உண்ண வேண்டினான். நேரம் கடந்தும் உணவு அப்படியே இருந்தது. இதைகண்ட அவர் தான் ஏதோ தவறாக பூஜை செய்ததால் தான் பிள்ளையார் உண்ணவில்லை என்று வருந்தி தன் தலையை பிள்ளையார் பீடத்தில் மோதிக் கொண்டான்.

உனே பிள்ளையார் நம்பியாண்டார் என அழைத்து சிறுவன் படைத்த அமுதை உண்டார். நம்பிக்கு ஞானத்தை கொடுத்தார். வெளியூர் சென்ற தந்தை வந்தவுடன் நடந்ததை கூறினான் நம்பி. ஆனால் நம்பியின் தந்தையோ அதை நம்பவில்லை. மறுநாள் நம்பியை பூஜையை செய்ய சொல்லி அனுப்பிவிட்டு தந்தை அவனுக்கு தெரியாமல் நடப்பதை கவனித்தார்.

நம்பி முதல்நாள் போலவே பூஜையை முடித்து பொல்லா பிள்ளையாரை அமுதுண்ண வேண்டினான். பிள்ளையாரும் அமுதை உண்டார். இக்காட்சியை மறைந்திருந்து பார்த்த நம்பியின் தந்தை தன் தவறை உணர்ந்து வருந்தினார். அன்று முதல் நம்பியை பூஜை செய்ய வேண்டினார். நம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது.

தேவார பாடல்கள்......

இராசராச அபய குல சேகர சோமகாராச பூபதி மன்னன் சிவனடியார்கள் சிலர் தேவாரப் பாடல்களை இசையோடு பாடுவதை கேட்டு மகிழ்ந்தார். இப் பாடல்கள் இருக்கும் இடம் தேடினார். திருநாரையூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் சிறப்பை அறிந்து அவரை சந்தித்தார். தாம் கேட்ட தேவார பாடல்களையும் எங்கு தேடியும் கிடைக்காததையும் சொல்லி தாங்கள் தான் பொல்லா பிள்ளையாரிடம் கூறி பாடல்கள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கேட்டார்.

நம்பியும் மன்னரும் பொல்லா பிள்ளையாருக்கு பலவகை அமுது படைத்து தேவார பாடல்கள் இருக்கும் இடத்தை காட்டவும் என்று உளமுருக வேண்டினார்கள். அமுதுண்ட பொல்லா பிள்ளையார் தேவாரப் பாடல்கள் அடங்கிய ஓலை சுவடிகள் தில்லை நடராஜர் திருக்கோவிலில் வடமேற்கு மூலையில் ஒரு அறையில் இருக்கிறது என்றார். அங்கு சென்று பார்த்த போது அறைக்கதவை திறக்க மறுத்தனர்.

பொல்லா பிள்ளையார் அந்தணர் நால்வரையும் அங்கு எழுந்தருள செய்து தானும் தில்லை நடராஜர் திருக்கோவிலில் எழுந்தருளினார். நால்வர் எழுந்தருளியதும் தில்லைவாழ் அந்தணர்கள் கதவை திறந்தனர். அந்த அறையில் தேவார பாடல்கள் இருந்த ஓலை சுவடிகள் கரையாம் புற்றால் மூடப்பட்டு இருந்தன. மன்னரும் மனம் தளராமல் கரையானை அகற்றினார். தேவாரபாடல்கள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளை சேகரித்தார். இவ்வாறு வரலாறு கூறப்படுகிறது.

குழந்தை வரம்......

பொல்லா பிள்ளையார் கோவிலில் வைகாசி மாதம் 14-ந்தேதி விழா சிறப்பாக நடைபெறும். இங்கு வழிபட்டால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழில் விருத்தியாகும். நேர்த்திக் கடனாக வைகாசி மாதம் 14-ந்தேதியில் இருந்து 14 நாட்கள் பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம் செய்யப்படும். குமராட்சி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum