தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவசாய நிலங்கள் வழியாக

Go down

விவசாய நிலங்கள் வழியாக Empty விவசாய நிலங்கள் வழியாக

Post  meenu Tue Mar 26, 2013 5:30 pm

விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிப்பது தொடர்பான பிரச்சினை குறித்து சட்டசபையில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீது உறுப்பினர்கள் டில்லிபாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), கம்பம் ராமகிருஷ்ணன் (தி.மு.க.), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் பேசினார். இதற்கு பதில் அளித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்

‘‘நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எப்போதும் எல்லா உரிமையும் உண்டு’’ என்றார் அண்ணா. ர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வழியில் ஆட்சி நடத்தி வரும் எனது தலைமையிலான அரசு, மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூர் வரை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாய நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் திட்டமிட்டது.

விவசாயிகள் கடும் எதிர்ப்பு

மேற்படி திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் 310 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 20 மீட்டர் அகலத்திற்கும் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதற்காக பெட்ரோலியம் மற்றும் மினரல்ஸ் பைப்லைன் 1962 என்ற சட்டத்தின் கீழ் 5,842 பட்டாதாரர்களுக்கு சொந்தமான சுமார் 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பெறுவதற்கு கெயில் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக வழங்கப்படும் இழப்பீட்டு தொகை நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் ஆகும்.

இந்த திட்டம் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது என்றும், தற்போது கெயில் வகுத்துள்ள திட்டப்படி இது செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்து, இந்த திட்டத்திற்கு 7 மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளின் கவலை எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் கடந்த மாதம் 28–ந்தேதி அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடனும் நான் ஆலோசனை நடத்தினேன்.

கருத்து கேட்பு கூட்டங்கள்

இக்கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளை முதலில் கேட்டறிவது அவசியம் என்று நான் எடுத்துக் கூறியதுடன், சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவின் அடிப்படையில் அரசு தலைமைச்செயலாளரால் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டேன்.

எனது ஆணைப்படி கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்காக பொதுகருத்து கேட்பு கூட்டங்கள் கடந்த 6, 7, 8 ஆகிய நாட்களில் சென்னை–ராஜா அண்ணாமலைபுரம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையிலுள்ள, அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தலைமையில் நடத்தப்பட்டன.

இந்த பொதுகருத்து கேட்பு கூட்டங்களில் மேற்குறிப்பிடப்பட்ட 7 மாவட்டங்களின் 134 கிராமங்களை சார்ந்த 2,428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும், கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்.

வாழ்வாதாரம் பாதிக்கும்

1.கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைப்பதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படும்.

2.கெயில் நிறுவனம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாய நிலத்தின் பெரும்பகுதியின் நிலப் பயன்பாட்டு உரிமையினை பெறுவதால் விவசாயிகள் தங்களது நிலத்தில் உரிய விவசாயம் செய்ய இயலாமல் நிலத்தின் பெரும்பகுதியினை இழக்க நேரிடுவதுடன், எதிர்காலத்தில் நில மேம்பாட்டிற்கு தேவையான எதையும் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும்.

3.சிறு மற்றும் குறு விவசாயிகளின் வேளாண் நிலங்களின் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிப்பதனால் அந்த விவசாயிகளின் பொருளாதார நிலைமை மிகக்கடுமையாக பாதிப்படைவதுடன், அவர்கள் எரிவாயு குழாய் பதிக்கப்படும் நிலத்தில் தேவையான விவசாய பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்படும்.

நிலங்களின் மதிப்பு வீழ்ச்சியடையும்

4.விவசாய நிலங்களின் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிப்பதனால் அந்நிலங்களின் மதிப்பு மிகக்கடுமையாக வீழ்ச்சியடையும்.

5.கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் திட்டத்தில் கவரப்படும் விவசாய நிலங்களுக்கு வங்கிகள் கடன் தர முன்வருவதில்லை.

6.கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் திட்டத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல சாத்தியப்படக்கூடிய பகுதிகளிலும் விவசாயிகளின் கோரிக்கைகள் கெயில் நிறுவனத்தால் கருத்தில் கொள்ளப்படாமல், விவசாய நிலங்களின் வழியாகவே எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனம் முனைந்துள்ளது.

வீடுகள், கோழிப்பண்ணைகள் கடும் சேதம்

7.இத்திட்டம் விவசாயிகளின் முழு மனதான ஒப்புதல் பெறாமலும், விவசாயிகளுக்கும் நில உரிமையாளர்களுக்கும் முறையான தகவல் அளிக்காமலும், கெயில் நிறுவனத்தினால் செயலாக்கம் செய்யப்பட்டது.

8.இக்குழாய்கள் பதிப்பதனால் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு உருவாக்கிய அவர்களின் வீடுகள், கோழிப்பண்ணைகள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகும்.

பெரும் விபத்து ஏற்படும் அபாயம்

9.விவசாயிகளின் நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கப்படும் பகுதியில் ஆழமாக வேரூன்றும் மரங்கள் வளர்க்கக்கூடாது என கெயில் நிறுவனம் தடை செய்வதால் தென்னை மரம் மற்றும் பழவகை மரங்களை சார்ந்துள்ள இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படும்.

10.கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்த் தடம் சில இடங்களில் அனுமதி பெறப்பட்ட வீட்டுமனைப்பிரிவுகள், கல்வி நிறுவனங்கள் வழியாக செல்வதால் அவ்விடங்களில் எரிவாயு கசிவு அல்லது பெரும் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

கெயில் நிறுவனத்தின் கடிதம்

இதுதொடர்பாக, கடந்த 8–ந்தேதி கெயில் நிறுவனம் தமிழக அரசின் தலைமைச்செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டால் அந்தப் பணிகள் முடியும் வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுவாக அனுமதி வழங்காது என்றும், எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பு மேற்கொள்ள இயலாது என்றும்,

ஒவ்வொரு எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதல் வால்வு நிலையம் அமைக்க வேண்டியிருப்பதால் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் போது பாறைகள் உள்ள இடங்களில் பாறைகளை வெடிக்கச்செய்யும் போது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே வாங்கப்பட்ட பொருட்கள், குழாய்கள் மற்றும் திட்ட வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

கவனமாக பரிசீலனை

விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் ஆட்சேபணைகள் மற்றும் கெயில் நிறுவனத்தின் கருத்துகள் ஆகியவற்றை எனது தலைமையிலான அரசு கவனமாக பரிசீலித்தது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாததற்கு வலுவான தொழில் நுட்பக் காரணங்கள் எதையும் கெயில் நிறுவனம் தெரிவிக்கவில்லை. மாறாக, விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறியுள்ளனர்.

விவசாயிகளின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை நியாய உணர்வு கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமெனில், அதனால் யாருக்கு, எவ்வளவு பாதிப்பு என்பதையும், தேசநலன் எவ்வளவு என்பதையும் கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட வேண்டும்.

அரசின் முடிவு

அந்த அடிப்படையில், இந்த திட்டத்தைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்து தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால் திரவ எரிவாயு தொழிற்சாலைகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு எனது தலைமையிலான அரசு கீழ்க்காணும் முடிவுகளை எடுத்துள்ளது.

உடனடியாக கைவிட வேண்டும்

1.கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் தற்போதைய திட்டத்தினை உடனடியாக கைவிடவேண்டும்.

2.இத்திட்டத்திற்கான குழாய்களை தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு கெயில் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

3.கெயில் நிறுவனம் ஏற்கனவே நிலங்களில் குழாய்களை பதிக்க தோண்டியுள்ள குழிகளை உடனடியாக சமன்படுத்தி அந்நிலங்களை அதன் முந்தைய நிலையில் விவசாயிகளிடமும் நில உரிமையாளர்களிடமும், ஒப்படைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு

4.விவசாயிகள் தங்களது விவசாயப்பணிகளை தொடரும் வகையில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை கெயில் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

5.இந்த திட்டத்தினால் பழவகை மரங்களையும் மற்றும் பிற கட்டுமானங்களையும் இழந்து, தற்போது வரை இழப்பீடு அளிக்கப்படாத விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் உடனடியாக கெயில் நிறுவனம் உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும்.

மேற்கண்ட தமிழக அரசின் முடிவுகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும்.

மக்களுக்காகத்தான் திட்டம்

தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பு நடவடிக்கைகளை கெயில் நிறுவனம் மேற்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு திரவ எரிவாயு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் கெயில் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். ‘‘கெயில்’’ திட்டம் தொடர்பாக விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம் என்பதில் எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதையும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றைக்கும் உடந்தையாக இருக்காது. இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum