தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீண்ட ஆயுள்-செல்வம் தரும் ஆருத்ரா தரிசனம்

Go down

நீண்ட ஆயுள்-செல்வம் தரும் ஆருத்ரா தரிசனம் Empty நீண்ட ஆயுள்-செல்வம் தரும் ஆருத்ரா தரிசனம்

Post  meenu Fri Jan 18, 2013 1:24 pm

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் மஹோத்சவங்களில் மிக முக்கியமானது மார்கழி ஆருத்ரா தரிசனம். கைலாய மலை பனி படர்ந்தது. அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த, பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு.

மார்கழி ஆருத்ரா தரிசன தினத்தின் மதியப் பொழுதில் (ஸ்ரீ நடராஜர்- பகல் வேளையில் தான் தன் கணங்கள் அனைத்தோடும் வந்திறங்கினார்) சித்ஸபா பிரவேசம் எனும் பொன்னம்பலம் புகும் காட்சியே பெரும் புண்ணியங்களை அளிக்க வல்லது.

மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்சவம் கொடியேற்ற நிகழ்ச்சியுடன், துவங்கி அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நாதஸ்வர இசை முழங்க, வேத பாராயணம் முழங்கிட வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள். மாணிக்க வாசகர் தரிசனம் ஒவ்வொரு நாளிலும் ஸோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி சிறப்பு வாகனங்களில் வலம் வருவர்.

சமய நால்வர்களில் முக்கியமானவர், காலத்தால் முந்தையவர் ஸ்ரீ மாணிக்கவாசகர், பாண்டிய மன்னரின் மந்திரியாக பதவி வகித்து, கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தியால் ஆட்கொள்ளப்பட்டு, பெரும் சிவத் தொண்டு ஆற்றியவர்.

இவருக்காகவே சிவபெருமான் நரிதனை பரியாக்கி, வைகையை பெருக்கச் செய்து, பிட்டுக்கு மண் சுமந்தது போன்ற திருவிளையாடல் களை நிகழ்த்தியவர். இறைவனாலேயே மணிவாசகர் என்று போற்றப்பட்டவர். தில்லையில் அம்பலத்தினுள்ளே இரண்டறக் கலந்தவர்.

இவரின் திருவாசகத்துக்கு உருகாதவர் யாருமில்லை. திருவாசகம்- நெஞ்சை நெக்குருகச் செய்யும் விதத்தில், ஒவ்வொரு வாசகமும் மாணிக்கம் போன்ற அழகுற அமைந்தமையால், மாணிக்கவாசகர் என்று போற்றப்படுபவர். இவர் எழுதிய திருவெம்பாவை- மார்கழி மாதத்தில் மிகச் சிறப்பாக பாடப்பெறும். சிதம்பரத்தில், மாணிக்கவாசகரின் தனிச்சிறப்பு மிக்க மாணிக்கவாசகர் விக்ரகத்திற்கு இந்த மகோத்ஸவ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இங்கு மட்டுமே மாணிக்க வாசகரின் கைகள் மற்ற ஆலயங்களில் உள்ளது போல் அல்லாமல், தெய்வங்களுக்கு உரிய சின் முத்திரையோடு அமைந்திருக்கும். இங்கு மட்டுமே மாணிக்கவாசகர் தெய்வத்திற்கு நிகராக கருதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறார்.

மார்கழி மஹோத்ஸவத்தின் பத்து தினங்களிலும், மாணிக்க வாசகர் தனி மஞ்சத்தில் எழுந்தருளிச் செய்து, பொன்னம்பலத்திற்கு அடுத்த கனகசபையின் வாசலில், ஸ்ரீ நடராஜருக்கு எதிரே நிற்கச் செய்து, மிக சிறப்பான வழிபாடுகள் செய்யப்படும்.

மாலை வேளை சாயரஷை எனும் சாயங்கால கால பூஜை முடிந்த பிறகு, மாணிக்க வாசகருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். அவருடைய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு, ஒவ்வொரு பாடல் முடிவிலும் சிறப்பு நிவேதனங்கள் நைவேத்யம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறும். தீபாராதனைகளோடு நடைபெறும் இக்காட்சி மாணிக்கவாசகர் தீபாராதனை என அழைக்கப்படும்.

தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த பூஜையைக் காண எண்ணற்ற பக்தர்கள் பார்த்து மகிழ்வார்கள். மறுநாள் காலை பஞ்சமூர்த்திகள் (ஸ்ரீஸோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர்) திரு வீதி வலம் வரும்போது, மாணிக்க வாசகர் ஸோமாஸ்கந்தரை வணங்கியவாறே பின் நோக்கி வலம் வரும் காட்சி மிகவும் அற்புதமானது என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார்.

அழகுமிகு நடன காட்சிகள் தேரிலிருந்தும் தெய்வங்கள் கோவிலினுள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் வரவழைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நூறு தீட்சிதர்கள் நின்று, ஏக கால லச்சார்ச்சனை நடைபெறும். ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது.

ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.

அதன் பின், ருத்ராவிஷேச ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆருத்ரா தரிசனம் ஆகும்.

இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தில்லையில் திருநடனம்புரியும் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள். தேர்த்திருவிழா தேர்த்திருநாளான இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குள் புறப்படும் திருக்காட்சி நடைபெற்றது.

மார்கழி திருவாதிரை கர்மாவே பெரிது, கடவுள் இல்லை என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை.

6 அபிஷேகம் உலகையெல்லாம் ஆண்டு கொண்டிருக்கும் நடராஜப் பெருமானுக்கு நாள் தோறும் அபிஷேகம் ஆராதனை என நடந்தாலும், வருடத்திற்கு ஆறு முறை நடைபெறும் அபிஷேகம் சிறப்பு பெற்றது. இதைத்தான் நடராஜர் அபிஷேக வெண்பாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை திருவோணம், சீரான (ஆனி) உத்திரம், தனு (மார்கழி), திருவாதிரை, மாசி, யரி (ஆவணி), கன்னி (புரட்டாசி) ஆகிய மாதங்களில் சதுர்த்தசி, சதுர்த்தசி திதியிலும் செய்யக் கூடிய அபிஷேகமும் ஆராதனையும் சிறப்பு பெற்றது திருவாதிரை களி ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது.

இந்நாளில் நடராஜரை தரிசித்தால் எல்லா நலன்களையும் அள்ளித்தந்திடுவார் நடராஜப் பெருமான். ஆகாய தலம் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர்கோவில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை. இக்கோவில் உள்ளே இறைவனின் சபைகளாகிய சிற்றம்பலம், பொன்னம்பலம் (கனகசபை) பேரம்பலம், நிருத்தசபை, ராசசபை என ஐந்து உள்ளன.

கோவிலில் நுழைந்தவுடன் கண்ணில் தென்படும் பொற்கூரை வேயப்பட்ட சிற்றம்பலம் காட்சிக்கு உகந்தது. இந்த இடத்திலேயே தான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி பக்தர்களுக்குக் காட்சி தந்தார் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. பலன்கள் வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய ஆருத்ரா தரிசனக் காட்சியை அனைவரும் கண்டுகளிப்போம் என்கிறார் சென்னையின் பிரபல ஜோதிடர் சதீஷ்குமார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum