பண்டிகை காலங்களில் மட்டும் "ஸ்டார்' படங்கள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு
Page 1 of 1
பண்டிகை காலங்களில் மட்டும் "ஸ்டார்' படங்கள்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு
சென்னை, ஜன. 9: பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டுமே இனி ஸ்டார் படங்களை வெளியிட வேண்டுமென தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவு வரும் பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் மொத்தம் "ஏ' "பி' மற்றும் "சி' உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 1,400 தியேட்டர்கள் வரை உள்ளன. இதில் நேரடியாக படத்தை வெளியிடும் திரையரங்குகள் சுமார் 800. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இதன் எண்ணிக்கை சுமார் ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. திருட்டு வி.சி.டி., உள்ளூர் கேபிள் டி.வி.க்களின் ஆதிக்கம் ஆகியவற்றின் காரணமாக திரையரங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய ஆரம்பித்தன.
திரைப்பட வெளியீட்டில் தொடர்புடையை பிரபல தயாரிப்பாளர்களும், மாவட்டங்களில் பிரபலமாக விளங்கிய விநியோகஸ்தர்களும் தங்கள் தொழிலைக் கை விடும் நிலை ஏற்பட்டது.
சிறிய திரையரங்குகள் மூடுவிழா கண்டதால், சின்ன பட்ஜெட்டில் புதுமுகங்கள் நடித்த படங்களை வெளியிட திரையரங்குகள் இல்லாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 130 திரைப்படங்கள் திரைக்கு வந்தன. இதில் சொல்லிக் கொள்ளும்படியாக "ஆடுகளம்', "கோ', "எங்கேயும் எப்போதும்', "மௌனகுரு' உள்ளிட்ட சில படங்கள்தான் வெற்றி வாகை சூடின. பெரிய பட்ஜெட்டில் உருவான படங்களுடன் ஏறக்குறைய 80-க்கும் மேற்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. படைப்பாளிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்த "வெங்காயம்', "ஆரண்ய காண்டம்' உள்ளிட்ட நல்ல படைப்புகளும், சில நம்பத் தகுந்த படைப்பாளிகளின் படங்களும் இதில் சிக்கிக் கொண்டதுதான் பெரும் சோகம்.
திமுக ஆட்சி மாற்றத்துக்குப் பின் பொறுப்புக்கு வந்த திரையுலக சங்க நிர்வாகிகள் தமிழக அரசின் ஆலோசனையின்படி, சில முக்கிய முடிவுகளை தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு எடுத்து வருகின்றனர்.
இதில் முதலாவதாக சின்ன பட்ஜெட் படங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படங்களின் மானியத் தொகையை அரசிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் இதில் அடக்கம்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை மற்றும் முக்கிய விடுமுறை நாள்களில் மட்டும் பெரிய நட்சித்திரங்கள் நடித்த படங்கள் வெளியிடப்படும்.
அடுத்த மாதம் முதல் அந்த முடிவு நடைமுறைக்கு வருகிறது. அதை தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்களும் இதை ஏற்றுக் கொண்டுவிட்டதால் பிப்ரவரி முதல் கண்டிப்பாக இது அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் "அம்மா கிரியேஷன்ஸ்' சிவா கூறியது:
""பண்டிகைக் காலங்களில் மட்டும்தான் ஸ்டார் படங்கள், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை வெளியிட வேண்டுமென பல ஆண்டுகளாக சிறு தயாரிப்பாளர்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கு ஒப்புதல் அளித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பல முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அது கொள்கை அளவிலேயே நின்று போய்விட்டது. ஆனால் இப்போது இதை கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காரணம், கடந்த ஆண்டு வெளியான மொத்த படங்களில் 70-க்கும் மேற்பட்டவை சின்ன பட்ஜெட்டில், புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படங்கள். ஆனால் ஒரு படம் கூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியையோ, வசூலையோ பெறவில்லை. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் நடித்த படங்களையே அதிக அளவிலான விளம்பரங்களினால் ஓடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால், சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிப்பவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.
இதனால்தான் சின்ன பட்ஜெட் படங்களால் ரசிகர்களின் கவனத்தைப் பெற முடியாமல் போய்விடுகிறது. இதற்காகத்தான் ஸ்டார் படங்களை வெளியிடுவதில் கால வரையறை வேண்டும் என நினைக்கிறோம். அப்போதுதான் சின்ன பட்ஜெட் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கும் நிலையைக் கொண்டு வரலாம். பொங்கல் பண்டிகை, தமிழ்ப் புத்தாண்டு, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை, முக்கிய விடுமுறை நாள்களில் மட்டும் ஸ்டார் படங்களை வெளியிட முடிவெடுத்திருக்கிறோம்'' என்றார்.
வருமா பழைய நடைமுறை?
பிப்ரவரி மாதம் முதல் அமலாகும் இந்த புதிய நடைமுறை திரையரங்க உரிமையாளர்களுக்கு சாதகமானதாக இருக்குமா? என திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனிடம் கேட்டபோது, ""பண்டிகைக் காலங்களில் மட்டுமே ஸ்டார் படங்கள் என்பது எந்தளவுக்கு திரையரங்க உரிமையாளர்களுக்கு சாதகம் என்பது தெரியவில்லை. அப்படி ஒரே நாளில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் நிலை ஏற்பட்டால், எப்படி போட்ட பணத்தை எடுப்பது என்பதை யோசிக்க வேண்டும். அது மாதிரியான சூழலில் கடந்த தீபாவளி பண்டிகையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தார்கள். சூர்யாவின் ஏழாம் அறிவும், விஜய்யின் வேலாயுதமும் ஒரே நேரத்தில் திரைக்கு வர, போட்ட பணத்தை எடுக்க கொஞ்ச நாள்தான் ஆனது. இதற்கு மாற்று விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது வாரத்துக்கு ஒரு பெரிய படம்; இரண்டு சிறிய படங்கள் என்றும், பண்டிகை காலங்களில் 2 பெரிய படங்கள், மூன்று சிறிய படங்கள் என்றும் ஒரு நடைமுறை இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த நடைமுறை இது. இதை ஃபிலிம் சேம்பரும் ஆதரித்தது. இந்த நடைமுறையை இப்போது மீண்டும் பரிசீலித்துப் பார்க்கலாம்'' என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!
» பெப்சி-தயாரிப்பாளர் பிரச்சினை: நடுநிலையில் நடிகர் சங்கம்
» புதிய சங்கம் உருவாக்க தயாரிப்பாளர்கள் முடிவு!
» இலவசமாக படம் காட்ட ரெடி! போராட்டகாரர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு!!
» நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கன்னட தயாரிப்பாளர் சங்கம்!
» பெப்சி-தயாரிப்பாளர் பிரச்சினை: நடுநிலையில் நடிகர் சங்கம்
» புதிய சங்கம் உருவாக்க தயாரிப்பாளர்கள் முடிவு!
» இலவசமாக படம் காட்ட ரெடி! போராட்டகாரர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு!!
» நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கன்னட தயாரிப்பாளர் சங்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum