தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நவ ஜீவன், எங் இந்தியா

Go down

நவ ஜீவன், எங் இந்தியா Empty நவ ஜீவன், எங் இந்தியா

Post  birundha Sat Mar 23, 2013 4:27 pm

இவ்வாறு அகிம்சையைப் பாதுகாப்பதற்கான இயக்கம், மெதுவாகவே எனினும் நிதானமாக, ஒரு பக்கம் அபிவிருத்தி அடைந்துகொண்டு வந்த சமயத்தில், மற்றோர் பக்கத்தில் அரசாங்கத்தின் சட்ட விரோதமான அடக்கு முறைக் கொள்கை அதிகத் தீவிரமாக இருந்து வந்தது. பாஞ்சாலத்தில் அந்த அடக்குமுறை, தனது பூரண சொரூபத்தையும் காட்டி வந்தது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராணுவச் சட்டம் அமுல் நடத்தப்பட்டது. அதாவது, சட்டம் என்பதே இல்லை என்றாயிற்று. விசேட நீதிமன்றங்களை அமைத்தார்கள். இந்த விசேட நீதி மன்றங்கள், எதேச்சாதிகாரியின் இஷ்டத்தை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் கருவிகளாகத்தான் இருந்தனவே அன்றி உண்மையில் நீதி வழங்கும் மன்றங்களாக இல்லை. நீதி முறைக்கெல்லாம் முற்றும் மாறாகச் சாட்சியத்திற்குப் பொருந்தாத வகையில் தண்டனைகள் விதிக்கப்பட்டன. அமிர்தசரஸில் ஒரு பாவமும் அறியாத ஆண்களும் பெண்களும், புழுக்களைப் போல் வயிற்றினாலேயே ஊர்ந்து செல்லும்படி செய்யப்பட்டனர். ஜாலியன் வாலா பாக் கொலையே உலகத்தின் கவனத்தையும், முக்கியமாக இந்திய மக்களின் கவனத்தையும் அதிகமாகக் கவர்ந்ததென்றாலும், இந்த அட்டூழியத்தின் முன்பு அப்படுகொலை கூட என் கண்ணுக்கு அவ்வளவு பெரியதாகத் தோன்றவில்லை.

என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் உடனே பாஞ்சாலத்திற்குப் போகும்படி வற்புறுத்தப்பட்டேன். அங்கே செல்ல அனுமதி அளிக்குமாறு வைசிராய்க்கு எழுதினேன்; தந்தியும் அடித்தேன். ஆனால், ஒரு பலனும் இல்லை. அவசியமான அனுமதியில்லாமல் நான் போவேனாயின், பாஞ்சால எல்லையைத் தாண்டி உள்ளே போக நான் அனுமதிக்கப்படமாட்டேன். சாத்விகச் சட்ட மறுப்புச் செய்தேன் என்ற திருப்தியோடு இருந்துவிட வேண்டியதுதான். இவ்விதம் என்ன செய்வதென்று தோன்றாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இருந்த நிலைமைப்படி பார்த்தால், பாஞ்சாலத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை மீறுவது சாத்விகச் சட்ட மறுப்பு ஆகாது என்றே எனக்குத் தோன்றிற்று. ஏனெனில், நான் எந்த வகையான அமைதியான சூழ்நிலையை விரும்பினேனோ அதை என்னைச் சுற்றிலும் நான் காணவில்லை. பாஞ்சாலத்தில் நடந்துவந்த அக்கிரமமான அடக்குமுறையோ மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கிவிட்டது. ஆகையால், அப்படிப்பட்ட சமயத்தில் நான் சாத்விகச் சட்ட மறுப்புச் செய்வது சாத்தியமென்றாலும், அது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது போன்றே ஆகும் என்று எண்ணினேன். எனவே, போகுமாறு நண்பர்கள் கூறிய போதிலும், பாஞ்சாலத்திற்குப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். இத்தகைய முடிவுக்கு நான் வரவேண்டியிருந்தது எனக்கே அதிக கஷ்டமாகத்தான் இருந்தது. அட்டூழியங்களையும் அநீதிகளையும் பற்றிய செய்திகள் தினமும் வந்து கொண்டே இருந்தன. ஆனால், நானோ எதுவும் செய்ய இயலாதவனாக உட்கார்ந்துகொண்டு பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

அச்சமயத்தில் ஸ்ரீ ஹார்னிமனின் கையில் பம்பாய்க் கிரானிகிள் பத்திரிகை பலமான சக்தியாக இருந்து வந்தது. அதிகாரிகள் திடீரென்று அவரைப் பிடித்து வெளியேற்றிவிட்டார்கள். அரசாங்கத்தின் இச்செய்கை அதிசயம் நிறைந்த காரியம் என்று எனக்குத் தோன்றியது. அச் செய்கையை இப்பொழுதும் மிக்க அருவருப்பான செய்கையாகவே எண்ணுகிறேன். சட்ட விரோதமான கலவரங்களை ஸ்ரீ ஹார்னிமன் என்றும் விரும்பியதில்லை என்பதை நான் அறிவேன். பாஞ்சால அரசாங்கம் எனக்குப் பிறப்பித்த தடை உத்தரவைச் சத்தியாக்கிரகக் கமிட்டியின் அனுமதியில்லாமல் நான் மீறியது அவருக்குப் பிடிக்கவில்லை. சாத்விகச் சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பது என்ற முடிவை அவர் பூர்ணமாக ஆதரித்தார். சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பதாக நான் அறிவிப்பதற்கு முன்னாலேயே, சட்ட மறுப்பை நிறுத்தி வைக்குமாறு யோசனை கூறி அவர் எனக்குக் கடிதமும் எழுதினார். நான் அப்பொழுது அகமதாபாத்தில் இருந்ததால், பம்பாய்க்கும் அதற்கும் உள்ள தூரத்தின் காரணமாக நான் அறிவித்த பிறகே அக்கடிதம் எனக்குக் கிடைத்தது. ஆகவே அவர் திடீரென்று நாடு கடத்தப்பட்டது எனக்கு மனவேதனை மட்டுமன்றி ஆச்சரியத்தையும் அளித்தது. இவ்விதமான நிலைமைகள் ஏற்பட்டுவிடவே பம்பாய்க் கிரானிகிளின் டைரக்டர்கள், பத்திரிக்கையை நடத்தும் பொறுப்பைஏற்றுக் கொள்ளும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீ பிரெல்வி ஏற்கனவே அப்பத்திரிகையில் இருந்தார். ஆகவே, நான் செய்யவேண்டியது அதிகமில்லை. ஆனால், என் சுபாவத்தை அனுசரித்து இப்பொறுப்பு என்னுடைய சிரமத்தை அதிகமாக்கியது. ஆனால், எனக்குச் சிரமம் இல்லாதபடி செய்ய வந்தது போல்
அரசாங்கமும் முன் வந்துவிட்டது. அரசாங்கத்தின் உத்தரவினால் கிரானிகிள் பத்திரிக்கையை நிறுத்திவைத்து விட வேண்டியதாயிற்று.

கிரானிகிள் நிர்வாகத்தை நடத்தி வந்த நண்பர்களான ஸ்ரீ உமார் ஸோபானியும், ஸ்ரீ சங்கரலால் பாங்கரும், இதே சமயத்தில் எங் இந்தியா என்ற பத்திரிக்கையையும் நிர்வகித்து வந்தார்கள். கிரானிகள் நிறுத்திவைக்கப்பட்டு விட்டதால், அதனால் ஏற்பட்டிருக்கும் குறை நீங்குவதை முன்னிட்டு, எங் இந்தியாவின் ஆசிரியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். வாரப் பத்திரிக்கையாக நடந்து வந்த எங் இந்தியாவை, வாரம் இருமுறைப் பத்திரிகையாக்கலாம் என்றார்கள். நானும் அதைத் தான் எண்ணினேன். சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைப் பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நான் ஆவலோடு இருந்தேன். அதோடு இம்முயற்சியால் பாஞ்சால நிலைமையைக் குறித்தும் ஓரளவுக்கு என் கடமையைச் செய்யலாம் என்றும் நம்பினேன். ஏனெனில், நான் என்ன எழுதினாலும், அதன் முடிவு சத்தியாக்கிரகமே. அரசாங்கத்திற்கும் அது தெரியும். ஆகையால், இந்நண்பர்கள் கூறிய யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு விட்டேன். ஆனால், ஆங்கிலத்தை உபயோகித்து, சத்தியாக்கிரகத்தில் பொது மக்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும்? நான் முக்கியமாக வேலை செய்து வந்த இடம் குஜராத். ஸ்ரீ ஸோபானி, ஸ்ரீ பாங்கர் கோஷ்டியுடன் அச்சமயம் ஸ்ரீ இந்துலால் யாக்ஞிக்கும் இருந்தார்.

குஜராத்தி மாதப் பத்திரிக்கையான நவஜீவனை அவர் நடத்தி வந்தார். இந்த நண்பர்கள் அதற்குப் பணவுதவி செய்து வந்தார்கள். அந்த மாதப் பத்திரிக்கையையும் அந்நண்பர்கள் என்னிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீ இந்துலாலும் அதில் வேலை செய்வதாகக் கூறினார். அந்த மாதப் பத்திரிக்கை வாரப் பத்திரிக்கையாக மாற்றப் பட்டது. இதற்கு மத்தியில் கிரானிகிள் புத்துயிர் பெற்றெழுந்தது. ஆகையால், எங் இந்தியா முன்பு போலவே வாரப் பத்திரிக்கையாயிற்று. இரண்டு வாரப் பத்திரிக்கைகளை, இரண்டு இடங்களிலிருந்து பிரசுரிப்பதென்பது, எனக்கு அதிக அசௌகரிய மானதோடு செலவும் அதிகமாயிற்று. நவஜீவன் முன்பே அகமதாபாத்திலிருந்து பிரசுரமாகி வந்ததால் என் யோசனையின் பேரில் எங் இந்தியாவும் அங்கேயே மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு இதல்லாமல் வேறு காரணங்களும் உண்டு. இத்தகைய பத்திரிகைகளுக்குச் சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தியன் ஒப்பீனியன் அனுபவத்திலிருந்து அறிந்திருந்தேன். மேலும், இந்தியாவில் அப்பொழுது கடுமையான அச்சுச் சட்டங்கள் அமுலிலிருந்தன. ஆகையால், என்னுடைய கருத்துக்களைத் தங்கு தடையின்றி வெளியிட நான் விரும்பினால், லாபம் கருதியே நடத்தப் பட்டவையான அப்பொழுதிருந்த அச்சகங்கள், அவற்றைப் பிரசுரிக்கத் தயங்கும். எனவே, சொந்தத்தில் ஓர் அச்சகத்தை அமைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமாயிற்று.

அகமதாபாத்திலேயே சௌகரியமாக அச்சகத்தை அமைத்துக் கொள்ளலாமாகையால், எங் இந்தியாவையும் அங்கே கொண்டு போனோம். சத்தியாக்கிரகத்தைக் குறித்துப் பொதுமக்களுக்கு இப் பத்திரிக்கைகளின் மூலம் என்னால் இயன்ற வரையில் போதிக்கும் வேலையைத் தொடங்கினேன். இரு பத்திரிக்கைகளுக்கும் ஏராளமானவர்கள் சந்தாதாரர்களாயினர். ஒரு சமயம் ஒவ்வொரு பத்திரிக்கையும் நாற்பதினாயிரம் பிரதிகள் செலவாயின. நவஜீவன் சந்தாதாரர்கள் தொகை ஒரேயடியாகப் பெருகிய போதிலும் எங் இந்தியாவின் சந்தாதார்கள் தொகை நிதானமாகவே அதிகரித்தது. நான் சிறைப்பட்ட பிறகு, இரு பத்திரிக்கைகளின் சந்தாதாரர் தொகையும் அதிகமாக குறைந்து விட்டது. இன்று எண்ணாயிரம் பிரதிகளே போகின்றன. இப்பத்திரிக்கைகளில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதை ஆரம்பத்திலிருந்தே மறுத்துவிட்டேன். இதனால் அப்பத்திரிகைகள் எந்த நஷ்டத்தையும் அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இதற்கு மாறாக, அப்பத்திரிக்கைகள் சுதந்திரமாக இருந்துவருவதற்கு என் தீர்மானம் பெரிய அளவுக்கு உதவியாக இருந்தது என்பதே என் நம்பிக்கை. என் அளவில் நான் மன அமைதியை அடைவதற்கும் இப்பத்திரிக்கைகள் எனக்கு உதவியாக இருந்தன. சாத்விகச் சட்டமறுப்பை உடனே ஆரம்பிப்பதற்கு இடமில்லை என்று ஆகிவிட்டபோது, என் கருத்துக்களைத் தாராளமாக எடுத்துக் கூறவும், மக்களுக்குத் தைரியம் ஊட்டவும் அவை உதவியாக இருந்தன. மக்களுக்கு அதிகக் கடுமையான சோதனை ஏற்பட்டுவிட்ட காலத்தில் அவர்களுக்கு இவ்விரு பத்திரிக்கைகளும் சிறந்த சேவை செய்ததோடு, ராணுவ ஆட்சிக் கொடுமையைத் தணிக்கவும் தங்களாலானதை அவை செய்தன என்று எண்ணுகிறேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum