தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாஞ்சாலத்தில்

Go down

பாஞ்சாலத்தில் Empty பாஞ்சாலத்தில்

Post  birundha Sat Mar 23, 2013 4:26 pm

பாஞ்சாலத்தில் நடந்தவைகளுக்கெல்லாம் நானே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் கூறினார். ஆத்திரமடைந்த சில இளம் பஞ்சாபிகளும், ராணுவச் சட்ட அமுலுக்குப் பொறுப்பாளி நான்தான் என்றனர். சாத்விகச் சட்ட மறுப்பை நான் நிறுத்தி வைக்காமல் இருந்தால், ஜாலியன் வாலாபாக் படுகொலையே நடந்திராது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களில் சிலரோ, நான் பாஞ்சாலத்திற்கு வந்தால், என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தும் அளவுக்கும் போய்விட்டார்கள். ஆனால், நான் செய்தது சரியானது என்றும், ஆட்சேபிக்க முடியாதது என்றும், எண்ணினேன். புத்தியுள்ளவர்கள் யாரும் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளுவதற்கில்லை என்றும் கருதினேன். பாஞ்சாலத்திற்குப் போகவேண்டும் என்று நான் பரபரப்புடன் இருந்தேன். இதற்குமுன் நான் அங்கே போனதே இல்லை. இதனாலேயே அங்கே போய் நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாயிற்று. பாஞ்சாலத்திற்கு வருமாறு என்னை அழைத்த டாக்டர் சத்தியபால், டாக்டர் கிச்லு, பண்டித ராம்பாஜ் தத் சௌத்ரி ஆகியோர் அச்சமயம் சிறையில் இருந்தார்கள். ஆனால், அவர்களையும் மற்றக் கைதிகளையும் அரசாங்கம் நீண்ட காலம் சிறையில் வைத்திருக்கத் துணிய முடியாது என்று கருதினேன்.

நான் பம்பாயிலிருந்த சமயங்களில் ஏராளமான பஞ்சாபிகள் என்னை வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வந்தேன். நான் அவர்களுக்கும் ஆறுதலை அளித்தது. அச்சமயம் எனக்கு இருந்த தன்னம்பிக்கை மற்றவர்களுக்கும் தொத்திக்கொண்டு விடுவதாக இருந்தது. ஆனால், நான் பாஞ்சாலத்திற்குப் போவதை அடிக்கடி ஒத்திப்போட வேண்டியதாயிற்று. அங்கே போவதற்கு நான் அனுமதி கேட்கும் போதெல்லாம் வைசிராய், பொறுங்கள்! என்று கூறி வந்தார். ஆகையால், நான் போவது காலம் தள்ளிக்கொண்டே வந்தது. இதற்கு மத்தியில் ராணுவச் சட்டத்தின் கீழ் பாஞ்சால அரசாங்கம் செய்தவைகளின் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு ஹண்டர் கமிட்டி நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ ஸி.எப்.ஆண்டுரூஸ் இதற்குள் அங்கே போய்விட்டார். அங்கே இருந்த நிலைமையைக் குறித்து அவர் எழுதிய கடிதங்கள் உள்ளத்தைப் பிளப்பனவாக இருந்தன. ராணுவச் சட்ட அமுல் அட்டூழியங்கள், பத்திரிக்கைகளில் வெளியான விவரங்களைவிடப் படுமோசமாக இருக்கின்றன என்ற அபிப்பிராயம் எனக்கு உண்டாயிற்று. உடனே புறப்பட்டு வரும்படி அவர் என்னை வற்புறுத்தினார். அதே சமயத்தில் மாளவியாஜியும், உடனே பாஞ்சாலத்திற்குப் புறப்படுமாறு எனக்குத் தந்தி கொடுத்தார். இப்போதாவது நான் பாஞ்சாலத்திற்குப் போகலாமா? என்று மற்றோர் முறையும் வைசிராய்க்குத் தந்தி கொடுத்துக் கேட்டேன். ஒரு தேதியைக் குறிப்பிட்டு அந்தத் தேதிக்குப் பிறகு நான் பாஞ்சாலத்திற்குப் போகலாம் என்று பதில் வந்தது. எனக்கு இப்பொழுது அத்தேதி சரியாக ஞாபகம் இல்லையென்றாலும், அக்டோபர் 17-ஆம் தேதி என்று நினைக்கிறேன்.

நான் லாகூர் போய்ச் சேர்ந்ததும் கண்ட காட்சியை என் ஞாபகத்திலிருந்து என்றும் அழித்துவிட முடியாது. ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு கோடியிலிருந்து மற்றோர் கோடிக்கு ஒரே ஜனசமுத்திரம். நீண்டகாலம் பிரிந்திருந்து விட்ட உறவினரைச் சந்திப்பதற்குக் கிளம்பிவிடுவதைப் போல லாகூர் மக்கள் எல்லோரும் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்து ஆர்வத்துடன் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனந்த மிகுதியால் அவர்கள் தலைகால் புரியாதவர்களாகிவிட்டனர். நான், காலஞ்சென்ற பண்டித ராம்பாஜ் தத்தின் பங்களாவில் தங்கினேன். என்னை உபசரிக்கும் பாரம் ஸ்ரீ மதி சரளாதேவிக்கு ஏற்பட்டது. உண்மையில், அது பெரிய பாரமேயாகும். ஏனெனில், இப்பொழுது இருப்பதைப் போன்று அக்காலத்திலும் நான் தங்கும் இடம் பெரிய சத்திரமாகவே ஆகி வந்தது. பாஞ்சாலத்தின் முக்கியமான தலைவர்களெல்லோரும் சிறையில் இருந்ததால், அவர்களுடைய ஸ்தாபனங்களைப் பண்டித மாளவியா, பண்டித மோதிலால்ஜி, காலஞ் சென்ற சுவாமி சிரத்தானந்தஜி ஆகியோர் பொருத்தமாகவே வகித்து வந்தார்கள். சுவாமி சிரத்தானந்தஜியையும் மாளவியாவையும் இதற்கு முன்பே நான் நன்றாக அறிவேன். ஆனால், மோதிலால்ஜியுடன் முதன் முதலாக இப்பொழுதுதான் நான் நெருங்கிப் பழகினேன்.

இந்தத் தலைவர்களும், சிறை செல்லும் பாக்கியத்திலிருந்து தப்பிய உள்ளூர்த் தலைவர்களும், தங்கள் மத்தியில் நான் என் சொந்த வீட்டில் இருப்பதாகவே உணரும்படி செய்தனர். இதனால், அவர்களின் நடுவே நான் அந்நியனாக உணரவே இல்லை. ஹன்டர் கமிட்டியின் முன்பு விசாரணைக்குச் சாட்சியம் அளிப்பதில்லை என்று நாங்கள் ஏகமனதாக முடிவு செய்த விஷயம், இப்பொழுது சரித்திரப் பிரசித்தமானது. இவ்விதம் முடிவு செய்ததற்கான காரணங்கள், அப்பொழுது வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆகையால், அவற்றை இங்கே திரும்பக் கூறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒன்றை மாத்திரம் சொன்னாலே போதும். இவ்வளவு காலமான பிறகும் அந்த நிகழ்ச்சிகளைக் குறித்து எண்ணிப் பார்க்கும்போது, அக் கமிட்டியைப் பகிஷ்கரிப்பதென்று நாங்கள் செய்த முடிவு முற்றும் சரியானதும் பொருத்தமானதுமாகும் என்றே இப் பொழுதும் நான் எண்ணுகிறேன். ஹன்டர் கமிட்டியைப் பகிஷ்கரிப்பதென்று நாங்கள் முடிவு செய்து விட்டதன் விளைவாகக் காங்கிரஸின் சார்பாக அதேபோல விசாரணையை நடத்த உத்தியோகஸ்தரல்லாதவர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமிப்பது என்று தீர்மானித்தோம். பண்டித மோதிலால் நேரு, காலஞ்சென்ற தேசபந்து ஸி.ஆர்.தாஸ், ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி, ஸ்ரீ எம்.ஆர். ஜெயகர் ஆகியோரும் நானும் அக்கமிட்டிக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம். உண்மையில் எங்களை நியமித்தவர் பண்டித மாளவியாஜியே. விசாரிப்பதற்காக நாங்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றோம். கமிட்டியின் வேலைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதோடு அதிகப்படியான இடங்களில் விசாரிக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. இதனால், பாஞ்சால மக்களையும் பாஞ்சாலத்தின் கிராமங்களையும் நெருங்கிப் பழகி அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

இந்த விசாரணையை நான் நடத்தி வந்தபோது பாஞ்சாலத்தின் பெண்களிடமும் நான் நெருங்கிப் பழகினேன். எவ்வளவோ காலமாக ஒருவருக்கொருவர் நன்றாகத் தெரிந்தவர்களைப் போன்றே நாங்கள் பழகினோம். நான் சென்ற இடங்களிலெல்லாம் பெண்கள் ஏராளமாக வந்து கூடினார்கள். அவர்கள், தங்கள் கையினால் நூற்ற நூல்களையும் என் முன்பு கொண்டு வந்து குவித்தார்கள். கதர் வேலைக்குப் பாஞ்சாலத்தில் அதிக இடமுண்டு என்ற உண்மையை, நான் செய்து வந்த விசாரணை வேலையின் மூலம் தெரிந்து கொண்டேன். மக்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அட்டூழியங்களைக் குறித்து என் விசாரணையை மேலும் மேலும் நான் நடத்திக் கொண்டு போகப் போக, அரசாங்கத்தின் கொடுமைகளைப் பற்றியும், அதன் அதிகாரிகளின் எதேச்சாதிகார அக்கிரமங்களைக் குறித்தும், ஏராளமான விவரங்களை அறியலானேன். இவற்றையெல்லாம் அறியவே எனக்கு மன வேதனை அதிகமாயிற்று. பாஞ்சாலம், யுத்தத்தின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏராளமான சிப்பாய்களைக் கொடுத்துதவிய மாகாணம். அப்படியிருக்க, இந்த மாகாணம் இவ்வளவு மிருகத்தனமான அட்டூழியங்களுக்கு எப்படிப்பணிந்து பொறுத்துக் கொண்டிருந்தது என்பதே எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுதுகூட அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கமிட்டியின் அறிக்கையைத் தயாரிக்கும் வேலையும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாஞ்சால மக்களிடம் எந்தவிதமான அட்டூழியங்கள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புவோர், இக்கமிட்டியின் அறிக்கையைப் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன். அதைக் குறித்து இங்கே நான் சொல்ல விரும்புவதெல்லாம், அந்த அறிக்கையில் மனமார மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பது ஒன்றுமே இல்லை. அதில் கூறப்பட்டிருப்பது ஒவ்வொன்றும் சாட்சியங்களைக் கொண்டே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான். மேலும், பிரசுரமாகி இருக்கும் சாட்சியங்கள், கமிட்டியினிடமிருக்கும் சாட்சியங்களில் மிகச் சிலவேதான். எங்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களில் ஒரு சிறிது சந்தேகத்திற்கு இடமுள்ளதாக இருந்த எதுவும், அறிக்கையில் வர நாங்கள் அனுமதிக்கவில்லை. உண்மை ஒன்றையே, அசல் உண்மையை மாத்திரமே, வெளிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் பேரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆகையால், பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னுடைய ஆட்சி நிலைத்திருக்கும்படி செய்வதற்காக எந்த அளவுக்குப் போகக்கூடியதாக இருக்கிறது, எவ்வளவு ஜீவகாருண்யமற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களைச் செய்யக் கூடியது என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்கள் அறிய முடியும். எனக்குத் தெரிந்த வரையில், இந்த அறிக்கையில் கூறப்பட்ட ஒரு விஷயமாவது, தவறானது என்று இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum