தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதன் அலை எழுச்சி

Go down

அதன் அலை எழுச்சி Empty அதன் அலை எழுச்சி

Post  birundha Sat Mar 23, 2013 4:23 pm

கதர் இயக்கம் அடைந்த அபிவிருத்தியைக் குறித்து விவரிப்பதற்கு மேலும் சில அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருக்கக் கூடாது. நான் பற்பல காரியங்களில் ஈடுபட்டு இருந்திருக்கிறேன். அவை பொதுஜனங்களுக்கு நன்றாகத் தெரிந்த பிறகு அவற்றின் சரித்திரத்தைக் குறித்து இந்த அத்தியாயங்களில் நான் கூறிக் கொண்டிருப்பது இவற்றின் நோக்கத்திற்கே புறம்பானதாகும். நான் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும் எழுதிக் கொண்டிருந்தால், அதற்கே தனி நூல் எழுத வேண்டியிருக்கும். அதை முன்னிட்டே அம்முயற்சியை நான் செய்யக்கூடாது. என்னுடைய சத்திய சோதனையின் ஊடே சில விஷயங்கள், தாமே வந்தவைகளைப் போன்றே எனக்கு எப்படி வந்து சேர்ந்தன என்பதை விவரிப்பதுதான் இந்த அத்தியாயங்களை நான் எழுதுவதன் நோக்கம். ஆகவே, ஒத்துழையாமை இயக்கக் கதைக்கே திரும்புவோம். அலி சகோதரர்கள் ஆரம்பித்த பலம் பொருந்திய கிலாபத் கிளர்ச்சி தீவிரமாக நடந்துவந்த சமயத்தில், அகிம்சை விதியை ஒரு முஸ்லிம் எந்த அளவுக்கு அனுசரித்து நடக்க முடியும் என்ற விஷயத்தைக் குறித்து மௌலானா அப்துல் பாரி முதலிய உலாமாக்களுடன் நான் விரிவாக விவாதித்தேன்.

இஸ்லாம், தன்னைப் பின்பற்றுகிறவர்கள் அகிம்சை கொள்கையாக அனுசரிப்பதைத் தடுக்கவில்லை என்றும், அக்கொள்கையை அனுசரிப்பதென்று அவர்கள் விரதம் கொண்டிருக்கும் போது அந்த விரதத்தை அவர்கள் நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றும் முடிவாக எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். கடைசியாகக் கிலாபத் மகா நாட்டில் ஒத்துழையாமைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேறியது. ஒரு சமயம் அலகாபாத் கூட்டத்தில் இந்த விஷயத்தின்மீது இரவெல்லாம் விவாதம் நடந்தது, எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. அகிம்சையோடு கூடிய ஒத்துழையாமை, காரிய சாத்திய மாகுமா? என்பதில் காலஞ்சென்ற ஹக்கீம் சாகிபுக்கு ஆரம்பத்தில் சந்தேகமே இருந்தது. ஆனால், அவருடைய சந்தேகம் நீங்கிய பின்னர் அந்த இயக்கத்தில் அவர் முழு மனத்துடன் ஈடுபட்டார். அவர் உதவி, இயக்கத்திற்கு மதிப்பிடற்கரிய பலனை அளித்தது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பிறகு குஜராத் ராஜீய மகாநாட்டில் ஒத்துழையாமை தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன். அதை எதிர்த்தவர்கள், பூர்வாங்கமாக ஓர் ஆட்சேபத்தைக் கூறினார்கள்.

இதைப்பற்றிக் காங்கிரஸ் ஒரு முடிவு செய்வதற்கு முன்னால், இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு மாகாண மகாநாட்டுக்குத் தகுதி கிடையாது என்பது அவர்களுடைய வாதம். இந்த வாதத்தை எதிர்த்த நான், பின்னோக்கிப் போகும் இயக்கம் சம்பந்தமாகத்தான் இந்தத் தடை பொருந்தும் என்றும், முன்னோக்கிப் போகும் விஷயத்தில் அதற்குப் போதிய நம்பிக்கையும் உறுதியும் நம்மிடம் இருக்குமானால், இத்தகைய தீர்மானம் செய்வதற்கு கீழ்ப்பட்ட ஸ்தாபனங்களுக்குப் பூரணமான தகுதி இருப்பதோடு அப்படிச் செய்வது அவைகளின் கடமை என்றும் கூறினேன். தாய் ஸ்தாபனத்தின் கௌரவத்தை அதிகரிப்பதற்குச் செய்யும் முயற்சியை, ஒருவர் அம்முயற்சியை தமது சொந்தப் பொறுப்பிலேயே செய்வாராயின், அதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என்றும் வாதித்தேன். பின்னர் அந்த யோசனையின் தன்மைமீது விவாதம் நடந்தது. விவாதத்தில் சிரத்தை முக்கியமாக இருந்ததெனினும், இனிய நியாயத்திற்கு ஏற்றசூழ்நிலையிலேயே விவாதம் இருந்தது. முடிவில் தீர்மானத்தின் மீது வாக்கெடுத்தபோது அது மிக அதிக ஆதரவுடன் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியதற்கு ஸ்ரீ வல்லபாய், ஸ்ரீ அப்பால் தயாப்ஜி ஆகிய இருவரின் செல்வாக்கே முக்கியமான காரணமாகும்.

ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜியே அம்மகாநாட்டின் தலைவர். அவருடைய ஆதரவு முழுவதும் ஒத்துழையாமைத் தீர்மானத்திற்குச் சாதகமாகவே இருந்தது. இந்த விஷயத்தைக் குறித்து விவாதிப்பதற்காகக் கல்கத்தாவில் 1920 செப்டம்பரில் காங்கிரஸ் விசேஷ மகாநாட்டைக் கூட்டுவது என்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது. அம்மகாநாட்டிற்காகப் பெருமளவில் முன்னேற்பாடுகளெல்லாம் நடந்தன. லாலா லஜபதிராயை அம்மகா நாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். பம்பாயிலிருந்து காங்கிரஸ், கிலாபத் ஸ்பெஷல் ரெயில்கள் சென்றன. கல்கத்தாவில் பிரதிநிதிகளும், வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ஏராளமாகக் கூடியிருந்தார்கள். மௌலானா ஷவுகத் அலி கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்துழையாமைத் தீர்மானத்தின் நகலை நான் ரெயிலிலேயே தயாரித்தேன். அச்சமயம் வரையில் நான் தயாரிக்க நகல்களில் பலாத்காரமற்ற என்ற சொல்லை அநேகமாக நான் தவிர்த்து வந்தேன். ஆனால், என்னுடைய பிரசங்கங்களில் மாத்திரம் அதை அடிக்கடி உபயோகித்து வந்தேன். இவ்விஷயத்தைக் குறித்து உபயோகிக்க வேண்டிய சொற்களை நான் அப்பொழுதுதான் சேகரித்துக் கொண்டு வந்தேன்.

முற்றும் முஸ்லீம்களையே கொண்ட கூட்டத்திற்குப் பலாத்காரமற்ற என்பதற்குச் சரியான சமஸ்கிருதச் சொல்லை உபயோகிப்பதினால், நான் கூறுவதன் பொருளை அவர்கள் சரியானபடி அறிந்து கொள்ளும்படி செய்ய முடியாது என்பதைக் கண்டேன். ஆகையால், அதற்குப் பொருத்தமான வேறு ஒரு சொல்லை எனக்குக் கூறும்படி மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தைக் கேட்டேன். பா அமன் என்ற சொல்லை அவர் கூறினார். அதேபோல, ஒத்துழையாமைக்கு தர்க்-ஈ-மவாலாத் என்ற சொற்றொடரை உபயோகிக்கலாம் என்று அவர் யோசனை கூறினார். இவ்வாறு ஒத்துழையாமை என்பதற்குச் சரியான ஹிந்தி, குஜராத்தி, உருதுச் சொற்றொடர்களைக் கண்டுபிடிப்பதிலேயே நான் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில், அந்த முக்கியமான காங்கிரஸ் மகாநாட்டிற்கு நான் ஒத்துழையாமைத் தீர்மானத்தைத் தயாரிக்க வேண்டி வந்தது. அசல் நகலில் பலாத்காரமற்ற என்ற சொல்லை நான் விட்டுவிட்டேன். இவ்வாறு விட்டுப் போய் விட்டதைக் கவனிக்காமல், அதே வண்டியில் என்னுடன் பிராயணம் செய்த மௌலானா ஷவுகத் அலியிடம் அந்த நகலைக் கொடுத்தேன். அன்றிரவு தவறைக் கண்டுகொண்டேன்.

அச்சகத்திற்கு நகலை அனுப்புவதற்கு முன்னால், விட்டுப் போனதைச் சேர்த்துவிட வேண்டும் என்ற செய்தியுடன் காலையில் மகாதேவை அனுப்பினேன். ஆனால், விட்டுப் போனதைச் சேர்த்துவிடுவதற்கு முன்னாலேயே நகல் அச்சாகிவிட்டது என்று எனக்கு ஞாபகம். விஷயாலோசனைக் கமிட்டி, அன்று மாலையே கூட வேண்டும். ஆகையால், அச்சான நகல் பிரதிகளில் அவசியமான திருத்தங்களை நான் செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய நகலுடன் நான் தயாராக இல்லாதிருந்திருந்தால், அதிகக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதைப் பின்னால் கண்டுகொண்டேன். என்றாலும், என் நிலைமை உண்மையில் பரிதபிக்கத்தக்கதாகவே இருந்தது. இத்தீர்மானத்தை யார் ஆதரிப்பார்கள், யார் எதிர்ப்பார்கள் என்பதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. லாலா லஜபதிராய் எந்தவிதமான போக்குக் கொள்ளுவார் என்பதும் எனக்குத் தெரியாது. பிரசித்தி பெற்ற போராட்ட வீரர்கள், போருக்கு ஆயத்தமாகப் பெருங்கூட்டமாக வந்து, கல்கத்தாவில் கூடியிருப்பது ஒன்றையே நான் கண்டேன். டாக்டர் பெஸன்ட், பண்டித மாளவியாஜி, ஸ்ரீ விஜயராகவாச்சாரியார், பண்டித மோதிலால்ஜி, தேசபந்து ஆகியோர் அவர்களில் சிலர். பாஞ்சால, கிலாபத் அநியாயங்களுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளும் நோக்கத்துடன் ஒத்துழையாமையை அனுசரிப்பது என்று மாத்திரமே என் தீர்மானத்தில் கண்டிருந்தது. ஆனால், அது ஸ்ரீ விஜயராகவாச்சாரியாருக்குத் திருப்தியளிக்கவில்லை.

ஒத்துழையாமைப் பிரகடனம் செய்வதென்றால், குறிப்பிட்ட அநீதிகளைப் பொறுத்ததாக மாத்திரம் அது ஏன் இருக்க வேண்டும்? நாடு அனுபவித்துக் கொண்டு வரும் பெரிய அநீதி, அதற்குச் சுயராஜ்யம் இல்லாதிருப்பதேயாகும். ஆகையால், ஒத்துழையாமைப்
போராட்டம் அந்த அநீதியை எதிர்த்து நடத்துவதாகவே இருக்க வேண்டும் என்று அவர் விவாதித்தார். தீர்மானத்தில் சுயராஜ்யக் கோரிக்கையையும் சேர்த்துவிட வேண்டும் என்று பண்டித மாளவியாஜியும் விரும்பினார். அதற்கு நான் உடனே சம்மதித்து, சுயராஜ்யக் கோரிக்கையையும் தீர்மானத்தில் சேர்ந்தேன். தீர்மானம், நீண்ட, விரிவான, ஓரளவுக்குக் கடுமையான விவாதத்திற்குப் பிறகு நிறைவேறியது. இந்த இயக்கத்தில் முதலில் சேர்ந்தவர் மோதிலால்ஜி. தீர்மானத்தின் பேரில் அவருடன் நான் நடத்திய இனிமையான விவாதம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சொல்லமைப்பில் சில மாற்றங்களை அதில் செய்யவேண்டும் என்று அவர் யோசனை கூறினார். அவ்வாறே நான் செய்தேன். தேச பந்துவையும் இந்த இயக்கத்தில் தாம் சேர்த்துவிடுவதாகச் சொன்னார்.

தேசபந்துவின் உள்ளம் தீர்மானத்திற்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால், வேலைத் திட்டத்தை நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் பொதுமக்களுக்கு இருக்குமா என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்தது. நாகபுரி காங்கிரஸில்தான் அவரும் லாலாஜியும் அதை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். லோகமான்யர் இல்லாத தன் நஷ்டத்தைக் குறித்து விசேஷ மகாநாட்டில் நான் மிகுந்த மன வருத்தத்துடன் உணர்ந்தேன். லோகமான்யர் அன்று உயிரோடிருந்திருப்பாராயின், அச்சமயம் அவர் நிச்சயம் எனக்கு ஆசி கூறியிருப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இன்றும் இருக்கிறது. அது வேறு விதமாக இருந்து, ஒத்துழையாமை இயக்கத்தை அவர் எதிர்த்திருந்தாலும், அவருடைய எதிர்ப்பை எனக்கு ஒரு பாக்கியமாகவும், போதனையாகவுமே நான் மதித்திருப்பேன். எங்களிடையே எப்பொழுதும் அபிப்பிராய பேதம் இருந்திருக்கிறது. ஆனால், அது மனக்கசப்பை உண்டாக்கியதே இல்லை. எங்களுக்குள் இருந்த பந்தம் மிகவும் நெருக்கமானது என்று நம்பிக் கொள்ளுவதற்கு அவர் எப்பொழுதும் என்னை அனுமதித்து வந்தார். இதை நான் எழுதும்போது கூட, அவர் மரணத்தைப் பற்றிய சந்தர்ப்பங்கள் என் கண் முன்பு மிகத் தெளிவாக நிற்கின்றன. அப்பொழுது நடுநிசி நேரம்.

என்னுடன் அப்பொழுது வேலை செய்து வந்த பட்டவர்த்தன், அவர் மரணமடைந்தார் என்ற செய்தியை டெலிபோன் மூலம் எனக்கு அறிவித்தார். அச்சமயம் என்னுடைய சகாக்கள் என்னைச் சூழ்ந்து இருந்தனர். அச்செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே, என் மிகப்பெரிய துணைவர் போய் விட்டார் என்பதை என் உதடுகள் தாமே ஒலித்தன. அப்பொழுது ஒத்துழையாமை இயக்கம் முழு வேகத்துடன் நடந்து கொண்டிருந்தது. அவரிடமிருந்த ஆதரவையும் உற்சாகமூட்டும் சொல்லையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒத்துழையாமையின் முடிவான கட்டத்தைக் குறித்த அவருடைய போக்கு எவ்விதம் இருக்கும் என்பது. எப்பொழுதும் வெறும் ஊகமாகவும், அதைப்பற்றிச் சிந்திப்பது வீண் வேலையாகவுமே இருக்க முடியும். ஆனால், அவருடைய மரணத்தால் ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத நஷ்டத்தைக் கல்கத்தாவில் கூடியிருந்த ஒவ்வொருவரும் அதிகமாக உணர்ந்து வருந்தினார்கள் என்பது மாத்திரம் நிச்சயம். நாட்டின் சரித்திரத்தில் ஏற்பட்டிருந்த அந்த நெருக்கடியான சமயத்தில் அவருடைய ஆலோசனைகள் கிடைக்காது போனதைக் குறித்து ஒவ்வொருவரும் வருந்தினார்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum