தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதல் இரவு

Go down

முதல் இரவு                            Empty முதல் இரவு

Post  birundha Sat Mar 23, 2013 3:46 pm

போனிக்ஸிலிருந்து இந்தியன் ஒப்பீனியனின் முதல் இதழை வெளியிடுவது எளிதான காரியமாகவே இல்லை. இரு முன்னெச்சரிக்கையான காரியங்களை நான் செய்யாது இருந்திருப்பேனாயின், முதல் இதழை நிறுத்திவிடவே நேர்ந்து இருக்கும்; அல்லது வெளியாவது தாமதப்பட்டிருக்கும். அச்சு இயந்திரத்தை ஓட்ட ஓர் இன்ஜின் வைத்துவிடுவது என்ற யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. விவசாய வேலையையும் கையினாலேயே செய்யவேண்டியிருக்கும் ஓர் இடத்தில், அச்சு இயந்திரமும் கையினாலேயே சுற்றப்படுவதாக இருப்பதே அந்த சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்த யோசனை சரியானதாகத் தோன்றாது போகவே ஓர் எண்ணெய் இன்ஜினை அமைத்தோம். இன்ஜின் சரியாக வேலை செய்யாது போனால், உடனே செய்வதற்கான வேறு ஏற்பாடும் தயாராக இருக்கட்டும் என்று வெஸ்டுக்கு யோசனை கூறி இருந்தேன். ஆகவே கையினால் சுற்றக்கூடிய ஒரு சக்கரத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார். பத்திரிகையின் அளவு, தினப் பத்திரிகையின் அளவாக இருப்பது, போனிக்ஸ் போன்ற ஒதுக்குப்புறமான இடத்திற்கு வசதியானதல்ல என்று யோசிக்கப்பட்டது. அவசர நிலைமை ஏற்பட்டால் டிரடில் அச்சு இயந்திரத்திலேயே பத்திரிகையை அச்சிட்டு விடுவதற்குச் சௌகரியமாக இருக்கட்டும் என்பதற்காகப் பத்திரிகை, புல்ஸ்காப் அளவுக்குக் குறைக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் பத்திரிகை வெளியாவதற்கு முன்னால் நாங்கள் இரவில் வெகுநேரம் கண் விழிக்கும்படி ஆயிற்று. இளைஞர்களும், கிழவரும் ஒவ்வொருவரும் பத்திரிகைத் தாள்களை மடிக்க உதவவேண்டியிருந்தது. வழக்கமாக இரவு பத்து மணிக்கு மேல் பன்னிரெண்டு மணிக்குள் வேலையை முடிப்போம். ஆனால், முதல் நாள் இரவு என்றுமே மறக்க முடியாது. பக்கங்களை முடுக்கியாயிற்று; இயந்திரமோ வேலை செய்ய மறுத்துவிட்டது. இன்ஜினை முடுக்கி அதை ஓட்டிக்கொடுப்பதற்காக டர்பனிலிருந்து ஒரு இன்ஜினீயரைத் தருவித்து வைத்திருந்தோம். அவரும் வெஸ்டும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் பயன்படவில்லை. எல்லோருக்கும் ஒரே கவலையாகி விட்டது. எல்லா முயற்சியும் முடியாது போய்க் கடைசியாகக் கண்களில் நீர் வழிய வெஸ்ட் என்னிடம் வந்தார். “இன்ஜின் வேலை செய்யாது. உரிய காலத்தில் பத்திரிகையை நாம் வெளியிடமுடியாது என்றே அஞ்சுகிறேன்” என்றார். அதுதான் நிலைமையென்றால் இதில் நாம் செய்வதற்கு எதுவுமில்லை. கண்ணீர் விட்டு ஒரு பயனும் இல்லை. மனிதப் பிரயத்தனத்தில் சாத்தியமானதையெல்லாம் செய்வோம். கைச்சக்கரம் இருக்கிறதல்லவா”? என்று அவருக்கு ஆறுதல் அளித்துச் சொன்னேன். அதைச் சுற்றுவதற்கு நம்மிடம் ஆட்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று அவர் கேட்டார். “அந்த வேலையைச் செய்வதற்கு நாம் போதாது. நான்கு நான்கு பேராக மாற்றி மாற்றிச் சுற்ற வேண்டும். நம் ஆட்களோ, களைத்துப் போயிருக்கின்றனர்” என்றார்.

கட்டிட வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. ஆகையால், தச்சர்கள் அந்த வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் அச்சுக் கூடத்திலேயே படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். நான் அவர்களைச் சுட்டிக்காட்டி, “இந்தத் தச்சர்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியாதா? நமக்கு இரவு முழுவதும் வேலை இருக்கும். இந்த உபாயம் நமக்குப் பாக்கியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றேன். தச்சர்களை எழுப்ப எனக்குத் தைரியமில்லை. நம் ஆட்களோ உண்மையில் மிகவும் களைத்துப் போயிருக்கின்றனர்” என்றார் வெஸ்ட். சரி, அவர்களோடு நான் பேசிக்கொள்ளுகிறேன்” என்றேன். “அப்படியானால், வேலையை முடித்துவிடுவது சாத்தியமே” என்றார், வெஸ்ட். தச்சர்களை எழுப்பினேன். ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. “அவசரத்திற்கு எங்களைக் கூப்பிட்டுக் கொள்ளுவதற்கில்லையென்றால் நாங்கள் இங்கே இருந்துதான் என்ன பயன்? நீங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள். சக்கரத்தைச் சுற்றும் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம். அது எங்களுக்குச் சுலபம்” என்றார்கள். எங்கள் சொந்த ஆட்களும் தயாராக இருந்தனர்.

வெஸ்ட்டுக்கு ஒரே ஆனந்தம். நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும் அவர் ஒரு தோத்திரப் பாடலைப் பாட ஆரம்பித்து விட்டார். தச்சர்களுடன் நானும் சேர்ந்துகொண்டேன். மற்றவர்களெல்லாம் அவரவர்கள் முறையில் கலந்து கொண்டு வேலை செய்தார்கள். இவ்வாறு காலை ஏழு மணி வரையில் வேலை செய்தோம். இன்னும் வேலை எவ்வளவோ பாக்கியாக இருந்தது. ஆகவே, வெஸ்ட்டிடம் ஒரு யோசனை கூறினேன். இன்ஜினீயரை எழுப்பி இயந்திரத்தை ஓட்டச் சொல்லிப் பார்க்கலாம் என்றேன். இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டால் காலத்தில் வேலையை முடித்துவிடலாம். வெஸ்ட் அவரை எழுப்பினார். எழுந்ததும் இன்ஜின் அறைக்குப் போனார். என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவர் தொட்டவுடனேயே இன்ஜின் ஓட ஆரம்பித்துவிட்டது. அச்சுக் கூடம் முழுவதும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது. “இது எப்படி? இரவெல்லாம் நாம் கஷ்டப்பட்டும் முடியாமல் போயிற்று. ஆனால், இன்று காலையிலோ அதில் எந்தவிதமான கோளாறுமே இல்லாதது போல அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதே?” என்று விசாரித்தேன். “இது எப்படி என்று கூறுவது கஷ்டம். நம்மைப் போலவே தனக்கு ஓய்வு தேவை என்பதுபோல இயந்திரமும் சில சமயம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது போல் இருக்கிறது” என்று வெஸ்ட்டோ, இன்ஜினீயரோ கூறினார்கள்.

சொன்னது யார் என்பதை மறந்துவிட்டேன். இன்ஜின் கோளாறு ஆகிவிட்டது எங்கள் எல்லோருக்கும் ஒரு சோதனையாக ஆயிற்று என்றும், எங்களுடைய யோக்கியமான, மனப்பூர்வமான உழைப்பின் பலனாகவே இன்ஜின் வேலை செய்யத் தொடங்கியது என்றும் எனக்குத் தோன்றிற்று. பிரதிகளும் உரிய காலத்தில் அனுப்பப்பட்டன. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம். ஆரம்பத்தில் காட்டிய இந்தப் பிடிவாதம், பத்திரிகை ஒழுங்காக வெளியே வந்து கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. போனிக்ஸில் சுயபலத்தில் நிற்கும் சூழ்நிலையையும் உண்டாக்கியது. வேண்டுமென்றே இன்ஜினை உபயோகிப்பதை நாங்கள் நிறுத்தி விட்டு, ஆள் பலத்தைக் கொண்டே வேலை செய்த சமயமும் உண்டு. போனிக்ஸில் குடியேறியிருந்தவர்களின் தார்மிக குணம் உச்ச நிலைக்கு எட்டியிருந்த சமயமே அது என்பது என் கருத்து.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum