தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடவுள் யாரைக் காக்கிறார்?

Go down

கடவுள் யாரைக் காக்கிறார்? Empty கடவுள் யாரைக் காக்கிறார்?

Post  birundha Sat Mar 23, 2013 3:45 pm

வருங்காலத்தில் இந்தியாவுக்குத் திரும்புவது என்ற நம்பிக்கையை எல்லாம் இப்பொழுது அடியோடு கைவிட்டுவிட்டேன். ஓர் ஆண்டில் திரும்பி வந்துவிடுவேன் என்று என் மனைவிக்கு வாக்களித்திருந்தேன். நான் திரும்புவதற்கான ஏது எதுவுமில்லாமலேயே அந்த ஓராண்டும் முடிந்துவிட்டது. ஆகையால், அவளையும் குழந்தைகளையும் வரவழைத்துக்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்துகொண்டிருந்த கப்பலில் என் மூன்றாவது மகன் ராமதாஸ், கப்பல் காப்டனுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் விழுந்து கையை முறித்துக் கொண்டான். காப்டன் அவனை நன்றாகக் கவனித்துக் கொண்டதோடு கப்பல் டாக்டர் அவனுக்குச் சிகிச்சை செய்யும் படியும் ஏற்பாடு செய்தார். கட்டுப்போட்ட கையோடு ராமதாஸ் கப்பலிலிருந்து இறங்கினான். வீட்டுக்குப் போனதும் தக்க டாக்டர் ஒருவரைக் கொண்டு அவன் காயத்திற்குக் கட்டுக்கட்ட வேண்டும் என்று கப்பல் டாக்டர் ஆலோசனை கூறினார். மண் சிகிச்சையில் நான் பூரணமாக நம்பிக்கை வைத்திருந்த சமயம் அது. என்னுடைய அரைகுறை வைத்தியத்தை நம்பிய என் கட்சிக்காரர்கள் சிலரையும் மண், நீர் சிகிச்சை செய்து கொள்ளும்படி தூண்டிவந்தேன்.

இந்த நிலைமையில் ராமதாஸ் விஷயத்தில் நான் என்ன செய்வது? அப்பொழுது அவனுக்கு எட்டு வயது. அவனுக்கு நான் கட்டு கட்டிவிடுவதில் சம்மதந்தானா என்று அவனைக் கேட்டேன். அவன் சிரித்துக்கொண்டு சம்மதம் என்றான். தனக்கு நல்லது இன்னது என்பதை அந்த வயதில் அவன் முடிவு செய்து கொள்ளுவது சாத்தியமில்லை. ஆனால், அரை குறையான வைத்தியத்திற்கும் சரியான வைத்திய சிகிச்சைக்கும் உள்ள பேதம் அவனுக்குத் தெரியும். என்னுடைய வீட்டு வைத்தியப் பழக்கத்தை அவன் அறிவான். தன்னை என்னிடம் ஒப்படைத்து விடுவதில் அவனுக்கு நம்பிக்கையும் இருந்தது. பயந்து நடுங்கிக்கொண்டே அவனுக்குப் போட்டிருந்த கட்டை அவிழ்த்தேன். புண்ணை அலம்பினேன். அதன்மீது சுத்தமான மண் பற்றும் போட்டேன். பிறகு கைக்குக் கட்டுப் போட்டேன். புண் முற்றும் ஆறிவிடும் வரையில் ஒரு மாத காலம் இவ்விதம் கட்டுப்போடுவது தினந்தோறும் நடந்து வந்தது. எந்தத் தொந்தரவுமே இல்லை; சாதாரண சிகிச்சையினால் எவ்வளவு காலத்தில் இப் புண் ஆறிவிடும் என்று கப்பல் டாக்டர் கூறியிருந்தாரோ அதைவிட இப்பொழுது அது ஆறுவதற்கு அதிக காலம் ஆகவில்லை.

இதுவும், என்னுடைய மற்றப் பரீட்சைகளும், வீட்டு வைத்திய முறையில் எனக்கு இருந்த நம்பிக்கையை அதிகப் படுத்தின. நான் இப்பொழுது அதிகத் தன்னம்பிக்கையுடன் இம்முறைகளை மேற்கொண்டும் கையாளலானேன். மற்றும் பல நோய்களுக்கும் இம்முறையைக் கையாண்டேன். புண்கள், ஜு ரங்கள், அஜீரணம், காமாலை ஆகிய நோய்களுக்கெல்லாம் மண், நீர் வைத்தியம் செய்து வந்தேன். அநேகமாகக் குணமாகிக் கொண்டே வந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இதில் எனக்கு இருந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை. இந்தச் சிகிச்சைகளில் அபாயங்களும் உண்டு என்பதை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். ஆகையால், இந்தச் சோதனைகளைக் குறித்து நான் இங்கே கூறியிருப்பது, அவற்றின் வெற்றியை எடுத்துக்காட்டுவதற்காக அன்று. எந்தச் சோதனையும் முழுமையான வெற்றியைக் கண்டது என்று நான் கூறிக் கொள்ளுவதில்லை. வைத்தியர்கள்கூட, தங்கள் சோதனை பூரண வெற்றியை அளித்தது என்று சொல்ல முடியாது. புதிய சோதனைகளைச் செய்ய முற்படுகிறவர், முதலில் அவற்றைத் தம்மிடமே செய்துகொண்டு பரீட்சிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே என் நோக்கம். இதனால், உண்மையைத் துரிதமாகக் கண்டுபிடிப்பது சாத்தியமாகிறது. அத்துடன் யோக்கியமாகப் பரிசோதனை செய்பவரைக் கடவுள் எப்பொழுதும் காப்பாற்றுகிறார்.

இயற்கை வைத்திய சோதனையில் எவ்வளவு ஆபத்துக்கள் உண்டோ, அவ்வளவு ஆபத்துக்கள் ஐரோப்பியர்களுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக்கொள்ளுவதற்குச் செய்யும் சோதனைகளிலும் இருக்கின்றன. அந்த அபாயங்கள் வேறு வகையானவை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால், இந்தத் தொடர்புகளை உண்டாக்கிக் கொள்ளுவதற்குச் செய்த முயற்சியில் ஆபத்துக்கள் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. என்னுடன் வந்து தங்குமாறு போலக்கை அழைத்தேன். சொந்தச் சகோதரர்கள் போல நாங்கள் வாழ ஆரம்பித்தோம். சீக்கிரத்தில் ஸ்ரீமதி போலக் ஆகவிருந்த பெண்ணுக்கும் அவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே விவாகம் நிச்சயமாகியிருந்தது. ஆனால், அனுகூலமான வேளையை எதிர் பார்த்துத் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. மண வாழ்க்கையில் நிலைபெறுவதற்கு முன்னால் கொஞ்சம் பணம் சம்பாதித்து வைத்துக் கொள்ளலாமென்று ஸ்ரீ போலக் விரும்பினார் என்பது என் அபிப்பிராயம். ரஸ்கினின் நூல்களை என்னைவிட அவர் நன்றாக படித்திருந்தார். ஆனால், அவருடைய மேனாட்டுச் சூழ்நிலை, ரஸ்கினின் உபதேசங்களை உடனே அனுபவத்திற்குக் கொண்டுவருவதற்குத் தடையாக இருந்தது.

அவரிடம் நான் பின்வருமாறு கூறி வாதாடினேன்: “உங்கள் விஷயத்தில் உங்கள் இருவருக்கும் இத்தகைய ஒற்றுமை ஏற்பட்டிருக்கும்போது, பொருளாதாரக் காரணங்களுக்காக விவாகத்தை ஒத்தி வைத்துக்கொண்டு போவது நியாயமே அல்ல. வறுமை ஒரு தடையாக இருக்குமாயின், ஏழைகள் மணம் செய்து கொள்ளவே முடியாது. மேலும், இப்பொழுது நீங்கள் என்னுடன் தங்கியிருக்கிறீர்கள். வீட்டுச் செலவைப்பற்றிய கவலையும் இல்லை. ஆகையால், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் மணம் செய்துகொண்டுவிட வேண்டும்.” முந்திய ஓர் அத்தியாயத்தில் நான் கூறியிருப்பதைப்போல, ஸ்ரீ போலக்குடன் ஒரு விஷயத்தைக் குறித்து நான் இரு முறை விவாதிக்க வேண்டி வந்ததே இல்லை. என் வாதத்திலுள்ள நியாயத்தை அவர் ஒப்புக்கொண்டார். அச்சமயம் இங்கிலாந்தில் இருந்த ஸ்ரீமதி போலக்குக்கு இதைக் குறித்து உடனே கடிதம் எழுதினார். அவரும் இந்த யோசனையைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். சில மாதங்களில் ஜோகன்னஸ்பர்க் வந்து சேர்ந்தார். கல்யாணத்திற்குச் செலவு செய்யும் எண்ணம் இல்லை. விசேட ஆடைகள் அவசியம் என்றும் கருதப்படவில்லை தமது பந்தத்திற்கு முத்திரையிட இவர்களுக்கு எந்த மதச் சடங்குகளுங்கூட அவசியப்படவில்லை. ஸ்ரீமதி போலக் பிறப்பினால் கிறிஸ்தவர்; போலக், யூதர். நீதியின் தருமமே இவர்கள் இருவருக்கும் பொதுவான மதம்.

இந்த விவாக சம்பந்தமாக நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைக் குறித்துச் சிறிது கூற விரும்புகிறேன். டிரான்ஸ்வாலில் இருக்கும் ஐரோப்பியரின் கல்யாணங்களைப் பதிவு செய்து கொள்ளும் அதிகாரி, கறுப்பு அல்லது மற்ற நிறத்தினரின் விவாகங்களைப் பதிவு செய்யக்கூடாது. இந்தக் கல்யாணத்தில் நான் மாப்பிள்ளைத்தோழனாக இருந்தேன். இதற்கு ஓர் ஐரோப்பியர் எங்களுக்குக் கிடைக்கமாட்டார் என்பதல்ல. ஆனால், அந்த யோசனையைப் போல ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால், நாங்கள் மூவரும் கல்யாணப் பதிவு அதிகாரியிடம் சென்றோம். நான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒரு விவாகத்தில், தம்பதிகள் வெள்ளக்காரர்கள்தான் என்று அவர் எப்படி நிச்சயமாக நம்பி விடமுடியும்? தம்பதிகள் வெள்ளையர்தானா என்பதை விசாரிப்பதற்காக விவாகப் பதிவை ஒத்தி வைப்பதாக அந்த அதிகாரி கூறினார். மறுநாளோ, ஞாயிற்றுக்கிழமை. அதற்கு அடுத்த நாள் புது வருடப் பிறப்பு நாளாதலால் விடுமுறை நாள். பக்தியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமணத்துக்கு இத்தகைய அற்பமான சாக்குப்போக்குக் கூறித் தேதியை ஒத்திவைப்பதென்றால், அதை யாரும் சகித்துக்கொண்டிருக்க முடியாது. பதிவு இலாகாவின் தலைவரான பிரதம மாஜிஸ்டிரேட்டை எனக்குத் தெரியும். தம்பதிகளுடன் அவர் முன்பு சென்றேன். அவர் சிரித்தார். பதிவு அதிகாரிக்கு ஒரு குறிப்பும் கொடுத்தார். அதன் பேரில் முறைப்படி திருமணம் பதிவாயிற்று.

இதுவரையில் எங்களுடன் வசித்து வந்த ஐரோப்பியர்கள், அநேகமாக எனக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். ஆனால் இப்பொழுதோ எங்களுக்கு முற்றும் புதியவரான ஓர் ஆங்கிலப் பெண் எங்கள் குடும்பத்தில் பிரவேசித்தாள். புதிதாக மணமான இத் தம்பதிகளுக்கும் எங்களுக்கும் எப்பொழுதேனும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஸ்ரீமதி போலக்கும் என் மனைவிக்கும் சில மனஸ்தாபங்கள் அவ்வப்போது இருந்தது உண்டு. ஆனால், அவை சிறந்த வகையில் ஒழுங்காகவும் ஒற்றுமையாகவும் உள்ள குடும்பங்களில் சாதாரணமாக ஏற்படும் மனஸ்தாபங்களைவிட எந்த விதத்திலும் அதிகமானவை அல்ல. இன்னும் ஒன்றும் நினைவில் இருக்க வேண்டும். முக்கியமாக என் குடும்பம் பற்பல வகையானவர்கள் சேர்ந்த கலப்புக் குடும்பம் என்றே கருதவேண்டும். எல்லா வகையானவர்களும், வெவ்வேறு குணாதிசயங்களுள்ளவர்களும் தாராளமாக இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதைக் குறித்தும் நாம் நினைக்கும்போது ஒரே சாதி, வெவ்வேறு இனம் என்பதற்கிடையே உள்ள பேதமெல்லாம் வெறும் கற்பனையே என்பதைக் கண்டு கொள்ளுகிறோம். நாம் எல்லோரும் ஒரே குடும்பமே. வெஸ்டின் விவாகத்தையும் இந்த அத்தியாயத்திலேயே நடத்திவிடுகிறேன்.

என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் பிரம்மச்சரியத்தைப் பற்றிய என் எண்ணம் பூரணமாக வளர்ச்சியடையவில்லை. ஆகவே, என் பிரம்மச்சரிய நண்பர்கள் எல்லோருக்கும் மணமாகிவிட வேண்டும் என்பதில் நான் அதிகச் சிரத்தை கொண்டேன். வெஸ்ட், தமது பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதற்காக லௌத்துக்கு யாத்திரை சென்றார். சாத்தியமானால் விவாகம் செய்துகொண்டு திரும்புமாறு அவருக்குச் சொல்லியனுப்பினேன். போனிக்ஸ் எங்கள் எல்லோருக்கும் பொது வீடு. நாங்கள் எல்லோரும் விவசாயிகளாகவே ஆகி விட்டதாக எண்ணிக்கொண்டதால், விவாகத்தைப்பற்றியும், அதன் சாதாரணமான விளைவுகளைக் குறித்தும் நாங்கள் பயப்படவில்லை. வெஸ்ட் ஸ்ரீமதி வெஸ்ட்டுடன் திரும்பி வந்தார். அவர், லீஸ்டரைச் சேர்ந்த அழகிய இளம்பெண். லீஸ்டர் தொழிற் சாலையில் செருப்புத் தயாரிக்கும் வேலை செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அத் தொழிற்சாலையில் வேலை செய்து ஸ்ரீமதி வெஸ்ட்டுக்கும் கொஞ்சம் அனுபவம் உண்டு. அழகிய பெண் என்று நான் அவரைக் கூறியது, அவருடைய குணசீலத்தின் அழகு என்னை உடனே கவர்ந்திருந்ததனால்தான். உள்ளத்தின் தூய்மையிலேயே உண்மையான அழகு இருக்கிறது. ஸ்ரீ வெஸ்டுடன் அவருடைய மாமியாரும் வந்தார். அவ்வயோதிக மாது இன்றும் உயிருடன் இருக்கிறார். தமது உழைப்பு, உற்சாகம், சந்தோஷமான சுபாவம் ஆகியவைகளினால் அவர், நாங்கள் எல்லோரும் வெட்கப்படும்படிசெய்துவிட்டார். விவாகம் செய்து கொள்ளுமாறு இந்த ஐரோப்பிய நண்பர்களை நான் தூண்டியதைப் போன்றே, இந்தியாவிலிருக்கும் தங்கள் குடும்பங்களைத் தருவித்துக் கொள்ளுமாறு இந்திய நண்பர்களையும் உற்சாகப்படுத்தினேன். இவ்விதம் போனிக்ஸ் ஒரு சிறு கிராமமாக வளர்ந்தது. ஆறு குடும்பங்கள் அங்கே வந்து குடியேறி வளர ஆரம்பித்தன.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum