தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கஸ்தூரிபாயின் தீரம்

Go down

கஸ்தூரிபாயின் தீரம் Empty கஸ்தூரிபாயின் தீரம்

Post  birundha Sat Mar 23, 2013 3:38 pm

என் மனைவி தனது வாழ்க்கையில் மும்முறை கடுமையான நோய்வாய்ப்பட்டு மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தாள். குடும்ப வைத்திய முறைகளினாலேயே அவள் குணமடைந்தாள். சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்த போதோ அல்லது ஆரம்பம் ஆவதற்கிருந்த சமயத்திலோ அவள் முதல் முறை கடுமையாக நோயுற்றாள். அவளுக்கு அடிக்கடி ரத்த நஷ்டம் ஏற்பட்டு வந்தது. ரண சிகிச்சை செய்வது அவசியம் என்று ஒரு வைத்திய நண்பர் ஆலோசனை கூறினார். முதலில் கொஞ்சம் தயங்கினாள் எனினும் பிறகு சம்மதித்தாள். அவள் அதிகப் பலவீனமாக இருந்ததால் மயக்க மருந்து கொடுக்காமல் டாக்டர் ரண சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. கிசிச்சை வெற்றிகரமானதாயிற்று. ஆனால், அவள் அதிக நோவை அனுபவிக்க நேர்ந்தது. நானே அதிசயிக்கத்தக்க தீரத்துடன் அதை அவள் சகித்துக்கொண்டாள். டாக்டரும், அவருக்குத் தாதியாக இருந்து பணிவிடை செய்த அவருடைய மனைவியும் அதிகக் கவனத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டார்கள். இது டர்பனில் நடந்தது. பிறகு நான் ஜோகன்னஸ்பர்க் போக டாக்டர் அனுமதித்தார். அவளைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னார்.

ஆனால், அவளுடைய உடல்நிலை அதிக மோசமாகி விட்டது என்று சில தினங்களுக்கெல்லாம் எனக்குக் கடிதம் வந்தது. படுக்கையில் உட்காருவதற்குக் கூட அவளுக்குப்பலமில்லை என்றும் ஒரு சமயம் பிரக்ஞை இல்லாமல் இருந்தாள் என்றும் அறிந்தேன். என்னுடைய சம்மதமில்லாமல் அவளுக்கு மதுவாவது, மாமிசமாவது கொடுக்கக்கூடாது என்பது டாக்டருக்குத் தெரியும். எனவே, ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் என்னுடன் டெலிபோனில் பேசி, அவளுக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்க அவர் அனுமதி கேட்டார். இதற்கு நான் அனுமதி கொடுக்க முடியாது என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டேன். ஆயினும், இது விஷயமாக அபிப்பிராயம் கூறக்கூடிய நிலையில் அவள் இருந்ததால், அவளைக் கலந்து ஆலோசிக்கலாம் என்றும், அவள் இஷ்டம்போல் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னேன். ஆனால், டாக்டரோ, “இவ்விஷயத்தில் நோயாளியின் விருப்பத்தைக் கேட்க நான் மறுக்கிறேன். நீங்கள் தான் இதில் அபிப்பிராயம் கூறவேண்டும். நான் கொடுக்க விரும்பும் ஆகாரத்தைக் கொடுக்கும் சுதந்திரத்தை எனக்கு அளிக்க நீங்கள் மறுப்பதானால், உங்கள் மனைவியின் உயிருக்கு நான் பொறுப்பாளியாகமாட்டேன்” என்றார். அன்றே ரெயிலில் டர்பனுக்குப் புறப்பட்டேன். அங்கே போனதும் டாக்டரைச் சந்தித்தேன். அவர் நிதானத்துடன் சமாசாரத்தை என்னிடம் கூறினார். “தங்களுடன் டெலி போனில் பேசுவதற்கு முன்னாலேயே ஸ்ரீமதி காந்திக்கு மாட்டு மாமிச சூப் கொடுத்துவிட்டேன்” என்றார். டாக்டர், நீங்கள் செய்தது பெரும் மோசம்” என்றேன். “ஒரு நோயாளிக்கு மருந்தோ, ஆகாரமோ இன்னது கொடுப்பதென முடிவு செய்வதில், மோசம் என்பதற்கே இடமில்லை. நோயுற்றிருப்போரையோ, அவர்கள் உறவினரையோ இவ்விதம் ஏமாற்றிவிடுவதன் மூலம் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடிவதாயின், டாக்டர்களாகிய நாங்கள் ஏமாற்றுவதையே புண்ணியமாகக் கருதுகிறோம்” என்றார் டாக்டர்.

இதைக் கேட்டதும் நான் பெரிதும் மனவேதனை அடைந்தேன். என்றாலும், அமைதியுடன் இருந்தேன். டாக்டர் நல்லவர்; என் சொந்த நண்பர். அவருக்கும், அவருடைய மனைவிக்கும் நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். என்றாலும், அவருடைய வைத்திய தருமத்தைச் சகித்துக் கொள்ள நான் தயாராயில்லை. டாக்டர், இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம் என்பதைச் சொல்லுங்கள். என் மனைவி சாப்பிட விரும்பினாலன்றி, என் மனைவிக்கு ஆட்டிறைச்சி அல்லது மாட்டு இறைச்சி கொடுப்பதை நான் அனுமதிக்கவே மாட்டேன். இதனால், அவள் இறந்துவிட நேர்ந்தாலும் சரிதான்” என்றேன். உங்களுடைய தத்துவத்தை நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனைவி என்னிடம் சிகிச்சையில் இருக்கும் வரையில் நான் விரும்பும் எதையும் அவருக்குக் கொடுக்கும் உரிமை எனக்கு இருக்க வேண்டும். இது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், அவரை அழைத்துக்கொண்டு போய்விடும்படியே வருத்தத்துடன் நான் கூற வேண்டியிருக்கும். என் வீட்டில் அவர் சாக நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்றார், டாக்டர். அப்படியானால், அவளை உடனே அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும் என்கிறீர்களா?” அவரை அழைத்துக்கொண்டு போய்விடவேண்டும் என்று நான் எப்பொழுது சொன்னேன்? இதில் எனக்குப் பூரண உரிமையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றே கூறுகிறேன். அப்படிக் கொடுத்தால் நானும் என் மனைவியும் அவருக்காக எங்களாலானதை எல்லாம் செய்யத் தயாராக இருக்கிறோம். அவரைப்பற்றி நீங்களும் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் திரும்பிப் போகலாம். இந்தச் சிறு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், என் இடத்திலிருந்து அவரை அழைத்துக் கொண்டு போய்விடுங்கள் என்று சொல்ல என்னைக் கட்டாயப்படுத்தியவர்களாவீர்கள்”.

என் புதல்வர்களில் ஒருவனும் என்னுடன் இருந்தான் என்று நினைக்கிறேன். என் கருத்தை அவனும் முற்றும் ஆதரித்தான். தன் தாயாருக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்கக் கூடாது என்றான். பிறகு நான் கஸ்தூரிபாயிடமே இதைக் குறித்துப் பேசினேன். உண்மையில் அவள் அதிகப் பலவீனமாக இருந்தாள். இதுபற்றிக் கலந்து ஆலோசிக்கும் நிலையிலும் அவள் இல்லை. என்றாலும், அவளுடன் ஆலோசிக்க வேண்டியது என் வருந்தத்தக்க கடமை என்று எண்ணினேன். டாக்டரும் நானும் பேசிக்கொண்டிருந்த விவரத்தை அவளிடம் கூறினேன். அவள் தீர்மானமாகப் பதில் சொல்லி விட்டாள். “நான் மாட்டு மாமிச சூப் சாப்பிடமாட்டேன். இவ்வுலகில் மானிடராய்ப் பிறப்பதே அரிது. அப்படியிருக்க இத்தகைய பாதகங்களினால் இவ்வுடலை அசுத்தப்படுத்திக் கொள்ளுவதைவிட உங்கள் மடியிலேயே இறந்து போய்விட நான் தயார்” என்றாள். அவளுக்குச் சொல்லிப் பார்த்தேன். என்னைப் பின்பற்றித் தான் நடக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்றேன். மதுவையும் மாமிசத்தையும் மருந்தாகச் சாப்பிடுவதில் தவறு இருப்பதாக நினைக்காமல் நண்பர்களான ஹிந்துக்கள் சிலர் சாப்பிட்டிருக்கும் உதாரணங்களையும் அவளுக்கு எடுத்துக் கூறினேன்.
அவள் பிடிவாதமாக இருந்தாள். “தயவு செய்து என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடுங்கள்” என்றாள்.

நான் மிகுந்த ஆனந்தமடைந்தேன். எனக்குக் கொஞ்சம் மனக்கலக்கமும் ஏற்பட்டது. என்றாலும், அவளை எடுத்துக் கொண்டு போய்விடத் தீர்மானித்தேன். நான் செய்துவிட்ட இம்முடிவை டாக்டருக்கு அறிவித்தேன். அவருக்கு ஒரே கோபம் வந்து விட்டது. அவர் சொன்னதாவது: “எவ்வளவு ஈவிரக்கமில்லாத மனிதர் நீங்கள்! இப்பொழுது அவருக்கு இருக்கும் தேக நிலையில் இந்த விஷயத்தை அவரிடம் சொல்லவே நீங்கள் வெட்கப்பட்டிருக்க வேண்டும். இங்கிருந்து எடுத்துக்கொண்டு போகக் கூடிய நிலையில் உங்கள் மனைவி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். கொஞ்சம் உடம்பு அசங்கினாலும் அவரால் தாங்க முடியாது. வழியிலேயே அவர் இறந்துவிட நேர்ந்தாலும்கூட நான் ஆச்சரியப்படமாட்டேன். அப்படியிருந்தும் நீங்கள் பிடிவாதம் செய்வதானால், உங்கள் இஷ்டம்போல் செய்து கொள்ளுங்கள். அவருக்கு மாட்டு மாமிச சூப் கொடுக்கக் கூடாது என்றால், அவரை ஒருநாள் கூட என் இடத்தில் வைத்துக்கொண்டு அந்த ஆபத்துக்கு உடன்பட நான் தயாராக இல்லை. ஆகவே, அந்த இடத்தைவிட்டு உடனே புறப்பட்டுவிட முடிவு செய்தோம். மழை தூறிக்கொண்டிருந்தது. ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கொஞ்ச தூரம் போக வேண்டும். டர்பனிலிருந்து போனிக்ஸு க்கு ரெயிலில் போய் அங்கிருந்து எங்கள் குடியிருப்புக்கு இரண்டரை மைல் போகவேண்டும். நான் பெரும் அபாயகரமான காரியத்தையே மேற்கொண்டேன் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால், கடவுளிடம் நம்பிக்கை வைத்து இவ்வேலையில் இறங்கினேன். முன் கூட்டிப் போனிக்ஸு க்கு ஓர் ஆள் அனுப்பினேன். ஓர் ஏணை, ஒரு புட்டி சூடான பால், ஒரு சுடு நீர்ப் புட்டி ஆகியவைகளுடன் ஸ்டேஷனுக்கு வந்து எங்களைச் சந்திக்குமாறு வெஸ்ட்டுக்குச் சொல்லியனுப்பினேன். ஏணையில் வைத்துக் கஸ்தூரிபாயைத் தூக்கி செல்ல ஆறு ஆட்களும் வேண்டும் என்று அறிவித்தேன். அடுத்த ரெயிலில் கஸ்தூரிபாயை அழைத்துச் செல்ல ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போக ஒரு ரிக்ஷõவை அமர்த்தினேன். அபாய நிலையிலிருந்த அவளை அதில் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

கஸ்தூரிபாயை உற்சாகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஆறுதல் கூறினாள். “எனக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்றாள். பல நாட்களாக ஆகாரமே இல்லாததனால் அவள் எலும்பும் தோலுமாக இருந்தாள். ஸ்டேஷன் பிளாட்பாரம் மிகப் பெரியது. ரிக்ஷõவைப் பிளாட்பாரத்திற்குள் கொண்டு போக முடியாததனால் கொஞ்ச தூரம் நடந்துதான் ரெயில் நிற்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும் ஆகையால், அவளை என் கைகளிலேயே தூக்கிக் கொண்டுபோய் ரெயில் வண்டியில் ஏற்றினேன். போனிக்ஸ் ஸ்டேஷனிலிருந்து ஏணையில் வைத்துக் கொண்டு போனோம். அங்கே நீர்ச் சிகிச்சை செய்ததில் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று வந்தாள். நான் போனிக்ஸ் போய்ச் சேர்ந்த இரண்டு மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரு சாமியார் அங்கே வந்து சேர்ந்தார். டாக்டர் கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ள நாங்கள் எவ்விதம் பிடிவாதமாக மறுத்துவிட்டோம் என்பதை அவர் அறிந்தார். கஸ்தூரிபாயின் நிலைக்காக அனுதாபம் கொண்டு, எங்களுடன் வாதாடி எங்களைத் திருப்பிவிடுவதற்காகவே அவர் வந்தார். சாமியார் அங்கே வந்தபோது என் இரண்டாவது மகன் மணிலாலும், மூன்றாவது மகன் ராமதாஸு ம் அங்கே இருந்ததாக எனக்கு ஞாபகம். மாமிசம் சாப்பிடுவது மத விரோதமாகாது என்று அவர் வாதித்தார். இதற்கு மனுஸ்மிருதியிலிருந்து ஆதாரங்களையும் எடுத்துக் கூறினார்.

என் மனைவியின் முன்னிலையில் அவர் இவ்வாறு விவாதம் செய்தது எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால், மரியாதைக்காக நான் அவரைத் தடுக்காமல் இருந்தேன். மனுஸ்மிருதியின் சுலோகங்கள் எனக்குத் தெரியும். என்னுடைய நம்பிக்கையைப் பொறுத்தவரையில் அவை தேவையும் இல்லை. அந்தச் சுலோகங்களெல்லாம் இடைச் செருகல்கள் என்று கருதும் ஒரு சாராரும் இருக்கிறார்கள். அப்படி இவை இடைச் செருகல்கள் அல்ல என்றே வைத்துக்கொண்டாலும் என்னுடைய சைவ உணவுக் கொள்கை சமய நூல்களை ஆதாரமாகக் கொள்ளாமல் சுயேச்சையாகக் கைக்கொள்ளப்பட்டதாகும். கஸ்தூரிபாயின் மன உறுதியும் அசைக்க முடியாதது. சாத்திரங்களைப்பற்றி அவள் எதுவும் அறியாள். தன்னுடைய மூதாதையரின் பாரம்பரிய தருமமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. குழந்தைகளும் தந்தையின் கொள்கையில் உறுதி கொண்டிருந்தன. ஆகையால், அவர்கள் சாமியாரின் வாதங்களை அலட்சியமாகக் கருதி எதிர்த்துப் பேசினர். இந்தச் சம்பாஷணைக்குக் கஸ்தூரிபாய் உடனே ஒரு முடிவு கட்டிவிட்டாள். “சுவாமிஜி, நீங்கள் என்ன சொன்னாலும் சரி, மாட்டு மாமிச சூப் சாப்பிட்டுக் குணமடைய நான் விரும்பவில்லை. தயவுசெய்து என்னை மேற்கொண்டும் தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் விரும்பினால் என் கணவருடனும் குழந்தைகளோடும் விவாதித்துக் கொள்ளுங்கள். ஆனால், நான் ஒரு தீர்மானம் செய்து கொண்டு விட்டேன்” என்று சொல்லிவிட்டாள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum