தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மண், நீர் சிகிச்சை

Go down

மண், நீர் சிகிச்சை Empty மண், நீர் சிகிச்சை

Post  birundha Sat Mar 23, 2013 3:26 pm

என் வாழ்க்கை முறையை நான் எளிதாக்கிக்கொண்டு வர வர, மருந்துகளின்மீது எனக்கு நாளாவட்டத்தில் வெறுப்பும் அதிகரித்துக் கொண்டு வந்தது. டர்பனில் நான் வக்கீல் தொழில் நடத்தி வந்தபோது, பலவீனத்தினாலும் வாத சம்பந்தமான எரிச்சலினாலும் சிறிது காலம் பீடிக்கப்பட்டிருந்தேன். என்னைப் பார்க்க வந்திருந்த டாக்டர் பி.ஜே. மேத்தா எனக்குச் சிகிச்சை செய்தார். நானும் குணமடைந்தேன். அதன் பிறகு நான் இந்தியாவுக்குத் திரும்பிய காலம் வரையில் குறிப்பிடக்கூடிய வியாதி எதனாலும் நான் பீடிக்கப்பட்டிருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், ஜோகன்னஸ்பர்க்கில் இருந்தபோது மலச்சிக்கலும், அடிக்கடி தலைவலி உபத்திரமும் இருந்து வந்தன. எப்பொழுதாவது பேதி மருந்து சாப்பிட்டும், சாப்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டும் என் தேக நிலை கெடாமல் பார்த்து வந்தேன். ஆனால், நான் நல்ல தேக சுகத்துடன் இருந்தேன் என்று சொல்லமுடியாது. இந்த பேதி மருந்துகளின் பிடியிலிருந்து எப்பொழுதான் விடுபடுவோமோ ? என்று எப்பொழுதும் ஆச்சரியப்பட்டுக் கொண்டும் இருப்பேன்.

அந்தச் சமயத்தில் மான்செஸ்டரில் காலை ஆகார மறுப்புச் சங்கம் என ஒன்று ஆரம்பமாகியிருப்பதாகப் படித்தேன். இச்சங்கத்தை ஆரம்பித்தவர்களின் வாதம் இதுதான். ஆங்கிலேயர்கள் அடிக்கடியும் அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். நடுநிசி வரையில் அவர்கள் சாப்பிடுகின்றனர். ஆகையால் வைத்தியச் செலவு அதிகமாகியது, இந்த நிலைமை சீர்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் காலை ஆகாரத்தையாவது அவர்கள் கைவிடவேண்டும். இந்த விஷயங்களையெல்லாம் என் விஷயத்திலும் சொல்லி விட முடியாதென்றாலும், ஓரளவுக்கு இந்த வாதம் என் அளவிலும் பொருந்துவதாகிறது என்று எண்ணினேன். மாலையில் தேநீர் குடிப்பதோடு தினம் மூன்று வேளை நன்றாகச் சாப்பிட்டும் வந்தேன். நான் குறைவாகச் சாப்பிடுகிறவன் அல்ல. சைவ உணவாகவும் மசாலை சேராததாகவும் இருந்தால், எத்தனை வகைப் பதார்த்தங்கள் இருந்தாலும் நன்றாகச் சாப்பிடுவேன். காலையில் ஆறு, ஏழு மணிக்கு முன்னால் எழுந்திருப்பதில்லை. ஆகையால் நானும் காலைய ஆகாரம் சாப்பிடாமல் இருந்துவிட்டால், எனக்குத் தலைவலி ஏற்படாமல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன். ஆகவே, இதை அனுசரித்துப் பார்த்தேன். சில தினங்களுக்கு இது கஷ்டமாகவே இருந்தது. ஆனால் தலைவலி அடியோடு மறைந்து போய்விட்டது. இதிலிருந்து, எனக்குத் தேவையானதற்கு அதிகமாக நான் சாப்பிட்டு வந்திருக்கிறேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆயினும் இந்த மாறுதலினால் எனக்கு இருந்த மலச் சிக்கல் உபத்திரவம் நீங்கியபாடில்லை. கூனேயின் ஆசனக் குளியல் முறையை அனுசரித்துப் பார்த்தேன். இதனால், கொஞ்சம் குணம் தெரிந்ததென்றாலும் முழுவதும் குணமாகவில்லை. இதற்கு மத்தியில் சைவ உணவுச் சாப்பாட்டு விடுதி வைத்திருந்த ஜெர்மானியரோ அல்லது வேறு ஒரு நண்பரோ - யார் என்பதை மறந்துவிட்டேன், ஜஸ்ட் என்பவர் எழுதிய இயற்கைக்குத் திரும்புக என்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். மண் சிகிச்சையைக் குறித்து இப் புத்தகத்தில் படித்தேன். மனிதனுக்கு இயற்கையான உணவு பழங்களும் கொட்டைகளுமே என்று அதன் ஆசிரியர் கூறியிருந்தார். பழங்கள் மாத்திரமே சாப்பிடுவது என்ற பழக்கத்திற்கு நான் போய்விடவில்லை. ஆனால், மண் சிகிச்சை முறைகளை உடனே பரீட்சிக்க ஆரம்பித்தேன். அற்புதமான பலனைக் கண்டேன். சுத்தமான மண்ணைக் குளிர்ந்த நீரில் நனைத்துப் பிறகு அதை மெல்லிய துணியில் நன்றாகத் தடவி அதை எடுத்து அடி வயிற்றில் கட்டிக் கொள்ளுவது என்பது மண் சிகிச்சை முறைகளுள் ஒன்று. படுக்கப் போகும்போது இவ்வாறு அடிவயிற்றில் கட்டிக் கொள்ளுவேன். பிறகு இரவிலோ அல்லது காலையிலோ நான் விழித்துக் கொள்ளும்போது அதை நீக்கிவிடுவேன். இதனால் நல்ல குணம் ஏற்பட்டது. அது முதல் இந்தச் சிகிச்சையை என்னுடைய நண்பர்களுக்கும் செய்து வந்திருக்கிறேன். இதற்காக வருத்தப்படுவதற்கு எவ்விதக் காரணமும் ஏற்பட்டதே இல்லை. அதே நம்பிக்கையுடன் இந்தச் சிகிச்சை முறையை அனுசரித்துப் பார்க்க என்னால் முடியாது போயிற்று. இதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்தச் சோதனைகளைச் செய்து பார்ப்பதற்கு ஓர் இடத்தில் நான் தங்கி நிலைபெற்றிருக்க முடியாது போனதேயாகும். என்றாலும் நீர், மண் சிகிச்சையில் எனக்கு இருக்கும் நம்பிக்கை மாத்திரம் எப்போதும்போல் மாறாமல் இருந்து கொண்டிருக்கிறது. இன்றுங்கூட ஓரளவுக்கு எனக்கு மண் சிகிச்சை செய்து கொண்டுதான் வருகிறேன். சமயம் நேரும் பொழுதெல்லாம் என் சக ஊழியர்களுக்கும் இந்த சிகிச்சை முறையை சிபாரிசு செய்து கொண்டும் தான் வருகிறேன்.

என் வாழ்நாளில் இரு முறை கடுமையான நோய்க்கு நான் ஆளாகியிருக்கிறேன். என்றாலும், மருந்து சாப்பிட வேண்டிய அவசியமே மனிதனுக்கு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். நோயுறுவோரில் ஆயிரத்துக்கு 999 பேரை சரியான பத்தியச் சாப்பாடு, நீர், மண் சிகிச்சை, இதே போன்ற குடும்ப வைத்தியமுறை ஆகயவற்றினாலேயே குணப்படுத்திவிடமுடியும். சிறு நோய் வந்து விட்டாலும் டாக்டர், வைத்தியர், அல்லது ஹக்கிமிடம் ஓடி எல்லா வகையான தாவர, உலோக வகை மருந்துகளையெல்லாம் விழுங்கிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் ஆயுளைக் குறைத்துக் கொள்ளுவது மாத்திரமல்ல உடலுக்கு எஜமானர்களாக இருப்பதற்குப் பதிலாக அதற்கு அடிமைகளும் ஆகி விடுகின்றனர். புலனடக்கத்தை இழந்து மனிதர்களாக இல்லாதும் போகிறார்கள். நோயுற்றிருக்கும் சமயத்தில் இதை நான் எழுதுவதால் நான் கூறியிருப்பவைகளை யாரும் அலட்சியமாகக் கருதிவிட வேண்டாம். என் நோய்களுக்குக் காரணம் என்ன என்பதை நான் அறிவேன். அவைகளுக்கு நானே பொறுப்பாளி என்பதையும் நன்றாக அறிந்தே இருக்கிறேன். அப்படி அறிந்திருப்பதனாலேயே நான் பொறுமையை இழந்துவிடவில்லை. உண்மையில் அவை எனக்குப் பாடங்கள் என்பதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். ஏராளமான மருந்துகளைச் சாப்பிடும் ஆசையை எதிர்த்தும் வெற்றி பெற்றிருக்கிறேன். என் பிடிவாதம் அடிக்கடி டாக்டர்களுக்குச் சங்கடமாக இருந்திருக்கிறது என்பதை அறிவேன். அவர்களும் அன்புடன் சகித்துக் கொள்ளுகிறார்கள், என்னைக் கைவிடுவதில்லை.

என்றாலும், விஷயத்தை விட்டு நான் நெடுந்தூரம் போய்விடக் கூடாது. மேற்கொண்டும் கதையைக் கூறுவதற்கு முன்னால் வாசகருக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு ஜஸ்ட் என்பவர் எழுதியிருக்கும் புத்தகத்தை வாங்குகிறவர்கள், அதில் கூறப்பட்டிருப்பது எல்லாமே வேத வாக்கு என்று எடுத்துக் கொண்டுவிடக்கூடாது. ஓர் ஆசிரியர் எப்பொழுதுமே ஒரு விஷயத்தில் ஓர் அம்சத்தை மாத்திரமே எடுத்துக்காட்டுவார். ஆனால் ஒரே விஷயத்தைக் குறைந்தது ஏழு வெவ்வேறு நிலைகளிலிருந்தும் காண முடியும். எல்லாமே அவையவைகளின் அளவில் சரியானவையாகவும் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அதே சமயத்தில், அதே சந்தர்ப்பத்தில் சரியாக இல்லாமலும் இருக்கக் கூடும். அதோடு அநேக புத்தகங்கள் நிறைய விற்க வேண்டும் என்பதற்காகவும் பேரும் புகழும் சம்பாதித்துக் கொள்ளுவதற்காகவும் எழுதப்படுகின்றன. இத்தகைய புத்தகங்களைப் படிக்கிறவர்கள் பகுத்தறிவோடு படிப்பார்களாக. அவற்றில் கூறப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு முறையைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் அனுபவமுள்ளவரின் ஆலோசனையையும் கேட்டுக் கொள்ள வேண்டும், அல்லது புத்தகங்களைப் பொறுமையுடன் படித்துவிட்டு, அதில் கூறியிருக்கிறபடி செய்வதற்கு முன்னால் அதில் கூறியிருப்பது இன்னது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum