தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எளிய வாழ்க்கை

Go down

எளிய வாழ்க்கை Empty எளிய வாழ்க்கை

Post  birundha Sat Mar 23, 2013 2:48 pm

எனது ஆரம்ப வாழ்க்கை சுகமானதாகவும் சௌகரியமானதாகவுமே இருந்தது. ஆனால், அந்தப் பரிசோதனை நீடித்து நிற்கவில்லை. அதிகக் கவனத்துடன் வசதிக்கான சாமான்களை எல்லாம் வீட்டில் வாங்கிப் போட்டிருந்தேன். என்றாலும், அவற்றில் எனக்குப் பற்று ஏற்படவில்லை. ஆகவே, அந்த வாழ்க்கையை ஆரம்பித்ததுமே செலவுகளைக் குறைக்கவும் ஆரம்பித்துவிட்டேன் சலவைச் செலவு அதிகமாகிக் கொண்டிருந்தது. அதோடு ஒழுங்காகக் காலாகாலத்தில் வராமல் இருப்பதிலும் அந்தச் சவலைக்கார் பெயர் பெற்றவர். இதனால் இருபது முப்பது சட்டைகளும் காலர்களும் இருந்தாலும் அவையும் எனக்குப் போதாது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. காலர்களைத் தினந்தோறும் மாற்றியாக வேண்டும். சட்டையைத் தினமும் மாற்றாவிட்டாலும் ஒன்று விட்டு ஒரு நாளாவது மாற்றியாக வேண்டும். இதனால் எனக்கு இரட்டிப்புச் செலவு ஆயிற்று. அது அனாவசியமான செலவு என்று எனக்குத் தோன்றிற்று. ஆகையால், அந்தப் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நானே சலவைச் சாமான்களைச் சேகரித்துக் கொண்டேன் சலவையைப்பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்து, அக் கலையைக் கற்றுக்கொண்டதோடு, என் மனைவிக்கும் சொல்லிக் கொடுத்தேன். இதனால் எனக்கு வேலை அதிகமாயிற்று என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அத்தொழில் எனக்குப் புதுமையான தாகையால் அதைச் செய்வது இன்பமாகவே இருந்தது.

நானே சலவை செய்து போட்டுக்கொண்ட முதல் கழுத்துப் பட்டை (காலர்)யை நான் என்றும் மறந்துவிட முடியாது. தேவைக்கு அதிகமாகக் கஞ்சி போட்டுவிட்டேன். தேய்க்கும் பெட்டியின் இரும்பில் போதுமான சூடு இல்லை. கழுத்துப்பட்டை எங்கே பொசுங்கிவிடுமோ என்ற பயத்தில் அதைச் சரியாக நான் அழுத்தித் தேய்க்கவும் இல்லை. இதன் பலன் என்னவெனில், கழுத்துப்பட்டை ஓரளவு விரைப்பாகத் தான் இருந்தது என்றாலும், அதிகப்படியாக அதற்குப் போட்டுவிட்ட கஞ்சி, அதிலிருந்து உதிர்ந்துகொண்டே இருந்தது. அந்தக் கழுத்துப்பட்டையைக் கட்டிக் கொண்டு கோர்ட்க்குப் போனேன். மற்ற பாரிஸ்டர்களின் பரிகாசத்துக்கு ஆளானேன். ஆனால் அந்த நாளிலேயே நான் பரிகாசத்துக்குப் பயப்படாதவன் ஆகிவிட்டேன். என் கழுத்துப்பட்டைகளை நானே சலவை செய்து கொள்ளுவதில், இது என் முதல் பரிசோதனை. அதனால்தான் கஞ்சி உதிர்ந்து கொண்டிருக்கிறது. அது எனக்கு எவ்விதத் தொல்லையையும் கொடுக்கவில்லை. அதோடு நீங்கள் எவ்வளவு சிரித்து, இன்புறுவதற்கு இது காரணமாகவும் இருக்கிறதுஞ என்றேன். ஆனால், இங்கே சலவைக் கடைகளுக்குப் பஞ்சமே இல்லையே? என்று ஒரு நண்பர் கேட்டார்.

சலவைச் செலவு அதிகமாகிறது. ஒரு கழுத்துப்பட்டையின் விலை எவ்வளவோ அவ்வளவு ஆகிவிடுகிறது அதைச் சலவை செய்யும் கூலி. அப்படியானாலும் ஆகட்டும் என்றால், என்றென்றைக்கும் சலவைத் தொழிலாளியையே நம்பி வாழ வேண்டியதாக இருக்கிறது. ஆகையால் என் துணிகளை நானே சலவை செய்து கொள்ளுவது மேல் என்று எண்ணுகிறேன் என்றேன். ஆனால் தம் வேலைகளைத் தாமே செய்து கொள்ளுவதில் உள்ள இன்பத்தை என் நண்பர்கள் உணரும்படி செய்ய என்னால் ஆகவில்லை. என் சொந்த வேலையைப் பொறுத்த வரையில் நாளாவட்டத்தில் சலவைத் தொழிலில் நான் அதிகத் தேர்ச்சி பெற்றவன் ஆகிவிட்டேன். என்னுடைய சலவை, சலவைத் தொழிலாளியின் சலவைக்கு எந்தவிதத்திலும் குறைவானதாகவும் இல்லை. என்னுடைய கழுத்துப் பட்டைகளைவிட விறைப்பிலும் பளபளப்பிலும் குறைந்தனவாகவும் இல்லை.

கோகலே, தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது, அவர் ஓர் அங்கவஸ்திரம் வைத்திருந்தார். அதை மகாதேவ கோவிந்த ரானடே, அவருக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தார். அந்த அருமையான ஞாபகச் சின்னத்தை கோகலே மிகவும் போற்றிக் கவனத்துடன் பாதுகாத்து வந்தார். விசேட சமயங்களில் மாத்திரமே அதை அவர் உபயோகிப்பார். அப்படிப்பட்ட விசேட சந்தர்ப்பம் ஒன்று வந்தது. ஜோகன்னஸ்பர்க் இந்தியர், கோகலேக்கு அளித்த விருந்துபச்சாரமே அந்தச் சந்தர்ப்பம். இதற்கு அந்த அங்கவஸ்திரத்தைப் போட்டு கொண்டு போக, கோகலே விரும்பினார். ஆனால் அது கசங்கிப் போயிருந்ததால் இஸ்திரி போடவேண்டி இருந்தது. சலவைத் தொழிலாளியிடம் அனுப்பி இஸ்திரி போட்டுக்கொண்டு வருவதற்கு நேரம் இல்லை. எனவே, அதில் என்னுடைய கைத்திறமையைக் காட்டுவதாகக் கூறினேன்.

வக்கீல் தொழிலில் என்றால் உம்முடைய திறமையில் நான் நம்பிக்கை வைக்க முடியும். ஆனால் சலவைத் தொழிலில் உமக்குத் திறமை இருப்பதாக நம்புவதற்கில்லைஞ என்றார் கோகலே. அதைக் கெடுத்து விடுவீராயின் என்ன செய்வது? அது எனக்கு எவ்வளவு அருமையான பொருள் தெரியுமா? என்றும் கூறினார். இவ்விதம் சொல்லி அந்த அன்பளிப்பு தமக்குக் கிடைத்த வரலாற்றையும் அதிக ஆனந்தத்தோடு கூறினார். நானே அவ்வேலையைச் செய்வதாக மீண்டும் வற்புறுத்தினேன். வெகு நன்றாகச் செய்து கொடுப்பதாகவும் வாக்களித்தேன் பிறகு அதை இஸ்திரி போட அனுமதி கிடைத்தது. அதைச் செய்து முடித்து அவருடைய பாராட்டையும் பெற்றேன். அதற்கு பிறகு அவ்வேலைத் திறமைக்கு எனக்கு நற்சாட்சிப் பத்திரம் அளிக்க உலகமே மறுத்து விட்டாலும் எனக்கு கவலை இல்லை.

சலவைத் தொழிலாளிக்கு அடிமையாக இருப்பதிலிருந்த என்னை நான் விடுவித்துக் கொண்டதைப் போலவே க்ஷவரத் தொழிலாளியை எதிர்பார்ப்பதையும் போக்கிக் கொண்டு விட்டேன். இங்கிலாந்துக்குப் போகிறவர்கள் எல்லோரும் க்ஷவரம் செய்து கொள்ளவாவது கற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், நான் அறிந்தவரையில் தங்கள் தலைமுடியையும் தாங்களே கத்தரித்துக் கொள்ளுவது என்பதை யாரும் கற்றக் கொண்டதில்லை. நான் இதையும் கற்றுக் கொண்டுவிட வேண்டியதாயிற்று. நான் ஒரு சமயம் பிரிட்டோரியாவில் ஆங்கிலேயர் ஒருவரிடம் முடி வெட்டிக் கொள்ளப் போனேன். அவர் அதிக வெறுப்புடன் என் தலை முடியை வெட்ட மறுத்துவிட்டார். எனக்கு இது அவமரியாதையாக இருந்தது. உடனே முடிவெட்டும் கத்திரி ஒன்றை வாங்கினேன். கண்ணாடி முன்பு நின்றுகொண்டு, என் தலை முடியை கத்தரித்துக் கொண்டேன் முன் முடியை வெட்டிக்கொள்ளுவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றேன். ஆனால், பின்பக்கத்து முடியை வெட்டிக் கெடுத்து விட்டேன். கோர்ட்டில் இருந்த நண்பர்கள் அதைப் பார்த்துவிட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்.

உமது தலை முடிக்கு என்ன ஆபத்து வந்தது, காந்தி? எலிகள் ஏதாவது வேலை செய்துவிட்டனவா? என்று கேட்டனர். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வெள்ளைக்காரரான க்ஷவரத் தொழிலாளி என் கறுப்பு முடியை தொட இஷ்டப் படவில்லை. ஆகவே, எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி, என் முடியை நானே வெட்டிக் கொள்ளுவது என்று வெட்டிக்கொண்டு விட்டேன் என்றேன். என் பதில் அந்த நண்பர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. தலைமுடியை வெட்ட மறுத்தது அந்த க்ஷவரத் தொழிலாளியின் குற்றமல்ல. கருப்பு மனிதருக்கு அவர் முடி வெட்டி விடுவாரானால் வெள்ளைக்காரர்கள் அவரிடம் முடி வெட்டிக் கொள்ள வர மறுத்துவிடக் கூடும். நமது தீண்டாத சகோதரர்களுக்கு க்ஷவரம் செய்ய, நம் க்ஷவரத் தொழிலாளியை நாம் அனுமதிப்பதில்லையே இந்தப் பாவத்திற்கு, உரிய பலனை நான் தென்னாப்பிரிக்காவில் ஒரு தடவை அல்ல, பல தடவைகளில் அனுபவித்தேன். இதெல்லாம் நாம் செய்த பாவத்திற்குத் தண்டனையே என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் நான் கோபம் அடையவில்லை. எனக்கு வேண்டியவைகளையெல்லாம் நானே செய்து கொள்ளுவது என்பதிலும், எளிய வாழ்க்கையிலும் எனக்கு இருந்த ஆர்வம் எவ்வளவு தீவிரமான முறைகளில் வெளியிடப்பட்டது என்பதைப் பற்றி விவரங்களை அதற்குரிய இடம் வரும்போது கூறுகிறேன். விதை, நீண்ட காலத்திற்கு முன்பே போடப்பட்டு விட்டது. வேர் இறங்கி, அது பூத்துக் காய்க்க, அதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டியதே பாக்கியாக இருந்தது. அதற்குத் தண்ணீர் பாய்ச்சுவதும் உரிய காலத்தில் நடந்தது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum