தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுகாதார சீர்திருத்தமும் பஞ்ச நிவாரணமும்

Go down

சுகாதார சீர்திருத்தமும் பஞ்ச நிவாரணமும் Empty சுகாதார சீர்திருத்தமும் பஞ்ச நிவாரணமும்

Post  birundha Sat Mar 23, 2013 2:46 pm

சமூகத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும், அந்தச் சமூகத்திற்குப் பயன்படாதவராக இருப்பதைச் சகித்துக் கொண்டிருக்க என்னால் எப்பொழுதுமே முடிவதில்லை. சமூகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைப்பதையோ, அக்குறைகளுக்கு உடந்தையாக இருப்பதையோ நான் எப்பொழுதுமே வெறுத்து வந்திருக்கிறேன். சமூகத்தின் குற்றங்குறைகளைப் போக்கிக்கொள்ளாமல் அதன் உரிமைகளைப் பெற மாத்திரம் போராடுவதும் எனக்குப் பிடிக்காது. இந்திய சமூகத்தின் ஒரு குறையைக் குறித்து அதன்மீது குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. அக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இல்லாமலும் இல்லை. ஆகையால் நான் நேட்டாலில் குடியேறியது முதல் அக்குற்றச்சாட்டிலிருந்து நம் சமூகத்தை விடுவிக்க முயன்று வந்தேன். இந்தியர் சுத்தத்தைக் குறித்து கவலைப்படாதவர்கள், தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் அவர்கள் சுத்தமாக வைத்துக் கொள்ளுவதில்லை என்று இந்தியர் மீது குறைகூறப்பட்டது.

சமூகத்தில் முக்கியமானவர்களான இந்தியர்கள், தங்கள் வீடு வாசல்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முன்னமேயே ஆரம்பித்து விட்டனர். ஆனால் டர்பனில் பிளேக் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்ட போதுதான் வீடுதோறும் சென்று பார்க்க ஆரம்பித்தோம். இதில் எங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும் என்று நகரசபை உறுப்பினர்கள் விரும்பினர். ஆகவே அவர்களைக் கலந்து ஆலோசித்து, அவர்கள் அங்கீகாரமும் கிடைத்த பின்னரே இந்த வேலையில் இறங்கினோம். எங்கள் ஒத்துழைப்பு அவர்களுடைய வேலையை எளிதாக்கியதோடு, எங்களுடைய சிரமங்களையும் குறைத்தது. ஏனெனில், தொத்து நோய்கள் பரவும்போதெல்லாம் நிர்வாக அதிகாரிகள் வெகு சீக்கிரத்தில் பொறுமையை இழந்துவிடுகிறார்கள், கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுகின்றனர். தங்களுக்குப் பிடிக்காதவர்களிடம் அவர்கள் அதிகக் கடுமையாக நடந்து கொள்வதும் பொதுவான வழக்கம். இந்திய சமூகம், தானே வலியச் சுகாதார முறைகளை அனுசரிக்க முற்பட்டதால் இப்படிப்பட்ட கொடுமையில் சிக்காமல் மீண்டது.

ஆனால் எனக்கு வருந்தத்தக்க அனுபவங்கள் சில ஏற்படாது போகவில்லை. உரிமையைக் கோருவதில் சமூகத்தின் உதவியைச் பெறுவது எளிது. ஆனால், சமூகம் தன்னுடைய கடமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்பதில் அதே சமூகத்தின் உதவியை நான் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது என்பதைக் கண்டேன். சில இடங்களில் அவமதிக்கப்பட்டேன். மற்ற இடங்களிலோ, என்னிடம் மரியாதை காட்டினார்கள். ஆனால் நான் கூறிய யோசனைகளை அவர்கள் பொருட்படுத்த வில்லை. தங்களைச் சுற்றியுள்ள இடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் முயற்சி எடுத்துக் கொள்ளுவது, மக்களுக்கு அதிகக் கஷ்டமாகவே இருந்தது. இந்த வேலைக்கு அவர்கள் பணம் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கே இல்லை. அளவற்ற பொறுமையினாலன்றி இந்த மக்கள் எந்த வேலையும் செய்யும்படியாகச் செய்வது முடியாத காரியம் என்பதை, மற்ற எல்லாவற்றையும் விட இந்த அனுபவங்கள், எனக்கு நன்றாகப் போதித்தன. சீர்திருத்த வேண்டும் என்ற கவலை சீர்திருத்தக்காரருக்குத்தான் உண்டு. சமூகம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அவர் சமூகத்தினிடமிருந்து எதிர்ப்பையும், வெறுப்பையும், உயிருக்கே அபாயமான கொடுமைகளையும் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. சீர்திருத்தக்காரர், தம் உயிரினும் முக்கியமானது என்று கருதும் ஒரு சீர்திருத்தத்தை மிகவும் பிற்போக்கானது என்று கூடச் சமூகம் கருதிவிடலாம் அல்லவா?

என்றாலும் இந்தக் கிளர்ச்சியின் பயனாக இந்திய சமூகத்தினர், தங்கள் வீடு வாசல்களையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை ஒருவாறு கற்றுக் கொண்டார்கள். அதிகாரிகளின் நன்மதிப்பும் எனக்கு ஏற்பட்டது. இருக்கும் குறைகளை எடுத்துக்கூறி உரிமைகளை வற்புறுத்துவதே என் வேலையாக இருந்தாலும், சுயத் தூய்மையைச் சமூகம் அடைய வேண்டும் என்பதிலும் நான் சிரத்தையுடன் விடாப் பிடியாகவும் இருந்ததை அவர்கள் கண்டார்கள்.

ஆயினும், செய்து தீரவேண்டிய ஒரு வேலை இன்னும் பாக்கியாகவே இருந்தது. நாடு கடந்து வந்திருக்கும் இந்தியர்கள், தாய் நாட்டுக்குத் தாங்கள் செய்தாக வேண்டிய கடமையை உணரும்படி செய்வதே அந்த வேலை. இந்தியா ஏழை நாடு செல்வத்தைத் தேடுவதற்காக இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு வந்தார்கள். தாய்நாட்டு மக்களுக்குக் கஷ்டம் ஏற்படும் சமயத்தில் இந்த இந்தியர், தங்கள் வருவாயில் ஒரு பகுதியை அளித்துத் தாய் நாட்டுக்கு உதவ வேண்டியது அவர்களுடைய கடமையாகும் 1897, 1899ஆம் ஆண்டில் செய்ததைவிட 1899ஆம் ஆண்டில் அதிக உதவி செய்தனர். இதற்கு ஆங்கிலேயரும் பணஉதவி செய்ய வேண்டும் என்று கோரினோம். அவர்களும் தாராளமாக உதவ முன்வந்தனர். இந்திய ஒப்பந்தத் தொழிலாளரும் தங்கள் பங்கைக் கொடுத்து உதவினர். இந்தப் பஞ்சங்கள் தோன்றிய சமயத்தில் ஏற்பட்ட இந்த உதவி முறை, அப்பொழுதிலிருந்து தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. இந்தியாவில் பெரிய துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் பெருந்தொகையை இந்தியாவுக்கு அனுப்பி உதவுவதற்குத் தென்னாப்பிரிக்க இந்தியர் தவறுவதே இல்லை.

இவ்விதம், தென்னாப்பிரிக்க இந்தியரிடையே நான் செய்து வந்த சேவை, ஒவ்வொரு கூட்டத்திலும், சத்தியத்தின் புதிய தன்மைகளை எப்பொழுதும் எனக்குக் காட்டி வந்தது. சத்தியம் என்பது ஒரு பெரிய மரத்தைப் போன்றது. அதை நீர் ஊற்றி நாம் வளர்க்க வளர்க்க அது மேலும் மேலும் கனிகளை அதிகமாகக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. சத்தியத்தின் சுரங்கத்தில் மேலும் ஆழத்தில் போய், நாம் தேடத் தேட அதில் பொதிந்து கிடக்கும், மேலும் மேலும் அதிக விலை மதிப்புள்ள ரத்தினங்களைக் காண்கிறோம். பல வகைகளிலும் சேவை செய்வதற்கு ஏற்படும் வாய்ப்புகளே அந்த ரத்தினங்களாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாதவிலக்கின் போது ஏற்படும் வலியும், நிவாரணமும்
» பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள்
» நாளொன்றுக்கு 7,200 சிசுக்கள் இறந்து பிறக்கின்றன- உலகச் சுகாதார மையம்
» மருத்துவத் தவறுகளால் இறப்புகள் அதிகரிப்பு - உலகச் சுகாதார மையம்
» முருங்கைக்காய் சாப்பிட அறிவுறுத்தும் சுகாதார அமைச்சு! எல்லாத்துக்கும் நல்லதாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum