தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோகலேயுடன் ஒரு மாதம் 3

Go down

கோகலேயுடன் ஒரு மாதம் 3 Empty கோகலேயுடன் ஒரு மாதம் 3

Post  birundha Sat Mar 23, 2013 2:42 pm

மதத்தின் பெயரால் காளிக்கு அளிக்கப்பட்ட கொடூரமான பலி, வங்காளிகளின் வாழ்க்கையை அறிந்த கொள்ள வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது. பிரம்ம சமாஜத்தைக் குறித்து அதிகமாகப் படித்திருக்கிறேன் நிறையக் கேள்விப் பட்டும் இருக்கிறேன். பிரதாப் சந்தி மஜும்தாரின் வாழ்க்கையைப் பற்றியும் சிறிது அறிவேன் அவர் பேசிய சில கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன். கேசவசந்திரசேனரின் சிரத்தையுடன் படித்தேன் சாதாரணப் பிரம்ம சமாஜத்திற்கும் ஆதி பிரம்ம சமாஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டேன். பண்டித சிவநாத சாஸ்திரியைச் சந்தித்தேன். பேராசிரியர் கதாவடேயுடன் மகரிஷி தேவேந்திரநாத டாகுரையும் பார்க்கப் போனேன். அச் சமயம் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப் படாததனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. ஆனால், அவர் இருப்பிடத்தில் நடந்த பிரம்ம சமாஜ விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தோம். அங்கே இனிய வங்காளி சங்கீதத்தைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது முதல் நான் வங்காளி சங்கீதப் பிரியனானேன்.

பிரம்ம சமாஜத்தைக் குறித்து வேண்டிய அளவு தெரிந்து கொண்டேன். ஆனால், சுவாமி விவேகானந்தரைப்பார்க்காமல் என்னால் திருப்தியடைய முடியவில்லை. ஆகவே, அதிக உற்சாகத்தோடு பேளூர் மடத்திற்குப் போனேன். அநேகமாக முழுத்தூரமும் நடந்தே அங்கே சென்றதாக ஞாபகம். மடம் அமைந்திருந்த ஏகாந்தமான இடம், என் மனதைக் கவர்ந்து இன்பம் ஊட்டியது. சுவாமி, தமது கல்கத்தா வீட்டில் இருக்கிறார் நோயுற்றிருப்பதால் அவரைக் காண்பதற்கில்லை என்று சொல்லக் கேட்டு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன். பிறகு சகோதரி நிவேதிதா இருக்கும் இடத்தை விசாரித்து தெரிந்து கொண்டு, கௌரிங்கி மாளிகையில அவரைச் சந்தித்தேன். அவரைச் சுற்றி இருந்த ஆடம்பரங்கள் என்னைத் திடுக்கிடச் செய்தன. அவரிடம் பேசியப் பிறகு, நாங்கள் இருவரும் அநேக விஷயங்களில் ஒத்துப் போவதற்கு இல்லை என்பதைக் கண்டேன். இதைக் குறித்து கோகலேயிடம் பேசினேன். அவரைப் போன்ற உணர்ச்சி வேகமுள்ள ஒருவருக்கும் எனக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கருத்து ஒற்றுமை ஏற்பட முடியாது போனதில் ஆச்சரியமில்லை என்று கோகலே கூறினார்.

ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் வீட்டில் மீண்டும் நிவேதிதாவைச் சந்தித்தேன். பேஸ்தன்ஜியின் வயதான தாயாருடன் சகோதரி நிவேதிதா பேசிக் கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே போக நேர்ந்தது. ஆகவே, அவ்விருவருக்கும் மொழி பெயர்த்துக் கூறுபவனானேன். அவருடன் எந்த ஒருமைப்பாட்டுக்கும் என்னால் வரமுடியவில்லை என்றாலும், ஹிந்து தருமத்தினிடம் அவருக்கு இருந்த அளவுகடந்த அன்பைக் கண்டு வியக்காமல் இருக்க என்னால் முடியவில்லை. அவர் எழுதிய நூல்களைக் குறித்து பின்னால் தான் அறிந்தேன்.

தென்னாப்பிரிக்காவிலிருக்கும் வேலை சம்பந்தமாக கல்கத்தாவில் இருக்கும் முக்கியமானவர்களை சந்தித்துப் பேசுவதிலும் நகரில் இருக்கும் மத சம்பந்தமான பொது ஸ்தாபனங்ககளுக்குச் சென்று. அவற்றை அறிந்து கொள்வதிலும் ஒவ்வொரு நாளும் என் நேரத்தைச் செலவிட்டு வந்தேன். டாக்டர், மல்லிக்கின் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், போயர் யுத்தத்தில் இந்திய வைத்தியப் படையினர் செய்த வேலைகளைக் குறித்துப் பேசினேன். இங்கிலீஸ்மன் பத்திரிக்கையுடன் எனக்கு ஏற்பட்டிருந்த அறிமுகம் இச் சமயத்தில் எனக்கு உதவியாக இருந்தது. அப்பொழுது அதன் ஆசியரியர் ஸ்ரீ சாண்டர்ஸ் நோயுற்றிருந்தார். என்றாலும், 1890ல் உதவி செய்ததைப் போன்றே அதிக உதவியைச் செய்தார். என் பிரசங்கம் ஸ்ரீ கோகலேக்கு அதிகமாகப் பிடித்திருந்தது. டாக்டர், ராய் அதைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு, அதிக மகிழ்ச்சியடைந்தார். கோகலேயுடன் நான் தங்கியிருந்ததனால் இவ்வாறு கல்கத்தாவில் என் வேலைகள் மிகவும் எளிதாயின. முக்கியமான வங்காளிக் குடும்பங்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. வங்காளத்துடன் நான் நெருங்கிய தொடர்பு கொள்ளுவதற்கு இது ஆரம்பமாகவும் அமைந்தது.

மறக்க முடியாத அந்த மாதத்தைப்பற்றிய மற்றும் பல நினைவுகளைக் கூறாமல் தாண்டிச் செல்ல வேண்டியவனாகவே நான் இருக்கிறேன். இதற்கிடையில் பர்மாவுக்குப் போய் விட்டுச் சீக்கிரமே திரும்பியதைக் குறித்தும் அங்கிருக்கும் பொங்கிகளைப் பற்றியும் மாத்திரம் கொஞ்சம் குறிப்பிட்டு விட்டு, மேலே செல்லுகிறேன். பொங்கிகள் என்னும் அந்தச் சந்தியாசிகளின் சோம்பல் வாழ்க்கையைக் கண்டு என் மனம் வேதனைப்பட்டது. அங்கே தங்கக் கோபுரத்தையும் பார்த்தேன். கோயிலில் எண்ணற்ற சிறு மெழுகுவத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கர்ப்பக் கிரகத்தில் எலிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. இது, மோர்வியில் சுவாமி தயானந்தருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எனக்கு நினைவூட்டியது. பர்மியப் பெண்களின் சுயேச்சையும் சுறுசுறுப்பும் என்னைக் கவர்ந்தன. ஆனால் பர்மிய ஆண்களின் மந்தப் போக்கோ எனக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. நான் பர்மாவிலிருந்த சில தினங்களுக்குள்ளேயே ஒன்று தெரிந்து கொண்டேன். அதாவது பம்பாய் எவ்விதம் இந்தியா ஆகிவிடாதோ அதே போல் ரங்கூன் பர்மா ஆகிவிடாது என்பதை அறிந்தேன். இந்தியாவிலிருக்கும் நாம் எவ்விதம் பிரிட்டிஷ் வர்த்தகர்களின் தரகர்களாக இருக்கிறோமோ அதேபோல் பர்மாவிலும் நம்மவர்கள் ஆங்கில் வியாபாரிகளுடன் சேர்ந்து கொண்டு, பர்மிய மக்களைத் தமது தரகர்களாக்கியிருக்கிறார்கள் என்பதையும் கண்டுகொண்டேன்.

பர்மாவிலிருந்து நான் திரும்பி வந்ததும் கோகலேயிடம் விடை பெற்றுக் கொண்டேன். அவரிடமிருந்து பிரிவது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் வங்காளத்தில் முக்கியமாகக் கல்கத்தாவில் எனக்கு இருந்த வேலைகள் முடிந்து விட்டன. இனியும் அங்கே நான் தங்குவதற்கு எவ்வித முகாந்தரமும் இல்லை. ஓரிடத்தில் நிலையாகத் தங்கிவிடுவதற்கு முன்னால், இந்தியா முழுவதையும் மூன்றாம் வகுப்பு ரெயிலில் பிரயாணம் செய்து பார்த்து மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் கஷ்டங்களை நானே அறிந்து கொள்ளுவது என்று எண்ணினேன். இதைப்பற்றிக் கோகலேயிடம் பேசினேன். ஆரம்பத்தில் என் யோசனையை அவர் பரிகசித்தார். நான் காண விரும்புவது இன்னதென்பதை அவருக்கு விளக்கிக் கூறியதும் அவரும் உற்சாகமாக என் யோசனையை அங்கீகரித்தார். ஸ்ரீமதி அன்னி பெஸன்ட் நோயுற்று, அப்பொழுது காசியில் இருந்து வந்தார். அவருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துவதற்கு முதலில் காசிக்குப் போவது என்று திட்டமிட்டேன்.

மூன்றாம் வகுப்பு வண்டிப் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் புதிதாகச் செய்து கொள்ள வேண்டியதாயிற்று. கோகலே எனக்கு ஒரு பித்தளைச் சாப்பாட்டுப் பாத்திரத்தைக் கொடுத்தார். அதில் மிட்டாய்களையும் பூரியையும் நிறைய வைத்தார். பன்னிரென்டு அணாக் கொடுத்து, ஒரு கித்தான் பை வாங்கினேன். சாயக் கம்பளியினாலான மேற் சட்டை ஒன்றையும் வாங்கி கொண்டேன். இந்த சட்டை, ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஓர் உள்சட்டை ஆகியவைகளை வைத்துக் கொள்ள அந்த கித்தான் பை. போர்த்துக் கொள்ள ஒரு துப்பட்டியும், தண்ணீர் வைத்துக் கொள்ளுவதற்குச் செம்பும் என்னிடம் இருந்தன. இவ்விதமான ஏற்பாடுகளுடன் நான் பிரயாணத்திற்குத் தயாரானேன். என்னை வழியனுப்புவதற்காகக் கோகலேயும் டாக்டர் ராயும் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். ஸ்டேஷனுக்கு வரும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றே அவர்கள் இருவரையும் கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. நீங்கள் முதல் வகுப்பில் சென்றால் நான் வந்திருக்க மாட்டேன். இப்பொழுதோ நான் கட்டாயம் வர வேண்டும் என்றார், கோகலே.

கோகலே, பிளாட்பாரத்திற்குள் வந்தபோது அவரை யாரும் தடுக்கவில்லை. அவர் வேட்டி கட்டிக் கொண்டு, பட்டுத் தலைபாகையும் குட்டைச் சட்டையும் போட்டிருந்தார். டாக்டர் ராய், வங்காளி உடையில் வந்தார். அவரை டிக்கெட் பரிசோதகர் நிறுத்தி விட்டார். அவர்தமது நண்பர் என்று கோகலே சொன்ன பிறகே அவரை அனுமதித்தார். இவ்விதம் அவர்களுடைய நல்லாசியுடன் என் பிரயாணம் ஆரம்பமாயிற்று.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum