தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில்

Go down

பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில் Empty பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில்

Post  birundha Fri Mar 22, 2013 11:13 pm

டர்பனில் இருக்கும் இந்தியக் கிறிஸ்தவர்களுடன் எனக்குச் சீக்கிரத்திலேயே தொடர்பு ஏற்பட்டது. கோர்ட்டில் மொழி பெயர்ப்பாளராக இருந்த ஸ்ரீபால், ஒரு ரோமன் கத்தோலிக்கர். அவருடன் பழக்கம் வைத்துக் கொண்டேன். பிராட்டஸ்டன்டு மிஷனின் கீழ், அப்பொழுது உபாத்தியாராக இருந்த ஸ்ரீசுபான் காட்பிரேயும் எனக்குப் பழக்கமானார். 1924-ல் இந்தியாவுக்கு வந்த தென்னாப்பிரிக்கத் தூது கோஷ்டியினரில் ஒருவராக இருந்த ஸ்ரீ ஜேம்ஸ் காட்பிரேயின் தந்தையே அவர். அதைபோல், காலஞ்சென்ற பார்ஸி ருஸ்தம்ஜி, காலஞ்சென்ற ஆதம்ஜி மியாகான் ஆகியவர்களையும் அச் சமயத்தில் சந்தித்தேன். வியாபார சம்பந்தமாக அல்லாமல் இதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் இவர்கள் சந்தித்ததே இல்லை. ஆனால், பின்னால் இந்த நண்பர்கள் எல்லோரும் நெருங்கிப் பழக நேர்ந்த விவரத்தைப் போகப் போகப் பார்ப்போம்.

இவ்வாறு நான் புதிது புதிதாக பலருடன் பழக்கம் செய்து கொண்டு வந்த சமயத்தில், கம்பெனிக்கு அவர்களுடைய பிரிட்டோரியா வக்கீலிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வழக்கை நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்றும், அப்துல்லா சேத் பிரிட்டோரியாவுக்கு வர வேண்டும் என்றும், இல்லாவிடில் ஒரு பிரதிநிதியையாவது அனுப்ப வேண்டும் என்றும் வக்கீல் எழுதியிருந்தார்.

அக் கடிதத்தை அப்துல்லா சேத் என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். பிரிட்டோரியாவுக்குப் போகிறீர்களா? என்று என்னைக் கேட்டார். உங்களிடமிருந்து வழக்குச் சம்பந்தமான விவரங்களைக் கேட்டுக் தெரிந்து கொண்ட பிறகே அதைப்பற்றி நான் சொல்ல முடியும் என்றேன். இப்பொழுது அங்கே நான் செய்ய வேண்டியது இன்னது என்பது தெரியவில்லை என்றேன். அதன் பேரில் வழக்குச் சம்பந்தமான விவரங்களை எனக்கு விளக்கிக் கூறுமாறு அவர் தமது குமாஸ்தாக்களிடம் கூறினார்.

இவ்வழக்குச் சம்பந்தமாக நான் அரிச்சுவடியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது என்பதை வழக்குப்பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பித்ததுமே கண்டு கொண்டேன். கப்பலில் வரும்போது ஜான்ஸிபாரில் சில தினங்கள் தங்கிய சமயத்தில் அங்கே கோர்ட்டு வேலைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் பார்க்கக் கோர்ட்டுக்குச் சென்றேன். அப்பொழுது ஒரு பார்ஸி வக்கீல், ஒரு சாட்சியை விசாரித்துக் கொண்டிருந்தார். கணக்குப் புத்தகங்களில் கண்ட பற்று, வரவு இனங்களைக் குறித்து அவர் கேள்விகள் கேட்டு வந்தார். அவையெல்லாம் எனக்குக் கொஞ்சங்கூடப் புரியவில்லை. கணக்குவைக்கும் முறையைக் குறித்துப் பள்ளிக்கூடத்திலோ, பிறகு இங்கிலாந்தில் இருந்தபோதோ நான் கற்றுக் கொண்டதில்லை. நான் எந்த வழக்குக்காகத் தென்னாப்பிரிக்காவுக்குப் போயிருந்தேனோ அந்த வழக்கு, கணக்கு சம்பந்தமானது. கணக்கு வைக்கும் முறையைத் தெரிந்தவர்கள் மாத்திரமே அதைப் புரிந்து கொள்ளவும், விளக்கவும் முடியும். இது பற்று எழுதப்பட்டது, இது வரவு வைக்கப்பட்டது என்றெல்லாம் குமாஸ்தா சொல்லிக் கொண்டே போனார். எனக்கோ மேலும் மேலும் அதிகக் குழப்பமாகிக் கொண்டிருந்தது. பி. நோட்டு ( பிராமிசரி நோட்டு ) என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது. அகராதியிலும் இந்த வார்த்தையைக் காணவில்லை. என்னுடைய அறியாமையைக் குமாஸ்தாவுக்கு வெளிப்படுத்தினேன். பி. நோட்டு என்றால் பிராமிசரி நோட்டு என்று அவர் சொல்ல, நான் தெரிந்து கொண்டேன். கணக்கு வைக்கும் முறையைப் பற்றிய புத்தகம் ஒன்றை வாங்கி அதைப்படித்தேன். அதன் பிறகு எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. வழக்கையும் புரிந்து கொண்டேன். கணக்கு எழுதுவது எப்படி என்பது, அப்துல்லா சேத்துக்கும் தெரியாது. என்றாலும் அவருக்கு இருந்த நல்ல அனுபவ ஞானத்தினால் கணக்கு முறையில் ஏற்படும் எந்தச் சிக்கலையும் உடனே தீர்த்துவிடும் திறமை அவருக்கு இருந்ததைக் கண்டேன்.

பிரிட்டோரியாவுக்குப் போக நான் தயாராக இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். நீங்கள் அங்கு எங்கே தங்குவீர்கள் ? என்று சேத் கேட்டார். நான் எங்கே தங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அங்கே தங்குகிறேன் என்றேன். அப்படியானால் நம் வக்கீலுக்கு எழுதுகிறேன். நீங்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்வார். அதோடு அங்கே இருக்கும் என் மேமன் நண்பர்களுக்கும் எழுதுகிறேன். ஆனால், அவர்களுடன் தங்குங்கள் என்று உங்களுக்குச் சொல்ல மாட்டேன். எதிர்க் கட்சியினருக்குப் பிரிட்டோரியாவில் அதிகச் செல்வாக்கு உண்டு. நமது அந்தரங்கக் கடிதங்களை அவர்களில் எவராவது படித்து விட்டால் அதனால் நமக்கு அதிகத் தீமைகள் ஏற்படும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அவர்களுடன் நெருங்கிப் பழகாமல் இருக்கீறீர்களோ அவ்வளவும் நமக்கு நல்லது என்றார்.

உங்கள் வக்கீல் என்னை எங்கே இருக்கச் சொல்கிறாரோ அங்கே தங்குகிறேன். இல்லாவிட்டால் நானே என் இருப்பிடத்திற்கு ஏற்பாடு செய்துகொள்ளுகிறேன். நமக்குள் ரகசியமாக இருக்கும் எதையும் மற்றொரு ஆத்மா அறிந்து கொண்டு விடமுடியாது. பிரதிவாதிகளை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்றே எண்ணியிருக்கிறேன். சாத்தியமானால், இவ் வழக்கைக் கோர்ட்டுக்கு வெளியிலேயே சமரசம் செய்து விட விரும்புகிறேன். எப்படியும் தயாப் சேத் உங்கள் உறவினர்தானே என்றேன். பிரதிவாதியான சேத் தயாப் ஹாஜி கான் முகம்மது, அப்துல்லா சேத்திற்கு நெருங்கிய உறவினர்.

சமரசம் ஏற்படக்கூடும் என்ற சொல்லைக் கேட்டதுமே சேத் திடுக்கிட்டுவிட்டார் என்பதை நான் காண முடிந்தது. நான் டர்பனில் ஆறு, ஏழு நாட்களாக இருந்திருக்கிறேன். நாங்கள் ஒருவரையொருவர் அறிந்து, புரிந்து கொண்டும் இருக்கிறோம். என்னை வைத்திருப்பது இப்போது யானையைக் கட்டித்தீனி போடுவது போல் இல்லை. ஆகையால் அவர் சொன்னார், ஆம்.. .ம் கோர்ட்டுக்கு வெளியிலேயே சமரசமாகப் போய்விடுவதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை தான். ஆனால் நாங்கள் எல்லோரும் உறவினர்கள். ஆகையால் ஒருவரையொருவர் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறோம். தயாப் சேத் அவ்வளவு எளிதில் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டுவிடக்கூடியவரல்ல. நம்மளவில் நாம் கொஞ்சம் அஜாக்கிதையாக இருந்தாலும், நம்மிடம் இருக்கும் ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொண்டு, முடிவில் நம்மையே கவிழ்திவிடப் பார்ப்பார். ஆகையால் எதையும் தீர யோசித்துச் செய்யுங்கள்.

அதைப்பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். வழக்கை குறித்துத் தயாப் சேத்திடமோ, மற்றவர்களிடமோ, நான் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சமரசத்திற்கு வந்து, அனாவசியமான கோர்ட்டு விவகாரக் கஷ்டத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளும்படி மாத்திரமே அவருக்குச் சொல்லுவேன் என்றேன். நான் டர்பன் சேர்ந்த ஏழாவது அல்லது எட்டாவது நாள் அங்கிருந்து புறப்பட்டேன். எனக்கு ரெயிலில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கப்பட்டிருந்தது. இரவில் படுக்கையும் வேண்டும் என்றால் அதற்காகத்தனியாக ஐந்து ஷில்லிங் கொடுத்துச் சீட்டுப் பெறுவது அங்கிருந்த வழக்கம். எனக்கு படுக்கை சீட்டும் வாங்கி விட வேண்டும் என்று அப்துல்லா சேத் வற்புறுத்தினார். ஆனால் பிடிவாதத்தினாலும், கர்வத்தினாலும் ஐந்து ஷில்லிங் மிச்சப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தினாலும், அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

இந்நாடு இந்தியா அல்ல என்பதைக் கவனத்தில் வையுங்கள். எங்களுக்கு போதிய செல்வத்தை ஆண்டவன் அளித்திருக்கிறார். செலவு செய்யவும் முடியும். உங்களுடைய தேவைக்குச் செலவு செய்து கொள்ளுவதில் தயவு செய்து வீண் சிக்கனம் பிடிக்க வேண்டாம் என்று சேத் எச்சரிக்கை செய்தார். அவருக்கு நன்றி தெரிவித்தேன். என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றேன்.

நான் சென்ற ரெயில், இரவு 9 மணிக்கு நேட்டாவலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க் போய்ச் சேர்ந்தது. அந்த ஸ்டேசனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம் ஒரு ரெயில்வே சிப்பந்தி வந்து எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார். வேண்டாம் , என் படுக்கை இருக்கிறது என்றேன். அவர் போய்விட்டார். ஆனால் ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். நான் கறுப்பு மனிதன் என்பதை அறிந்ததும் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது வேறு ஒரு அதிகாரி என்னிடம் வந்து, இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்றார்.

என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே என்றேன். அதைப்பற்றி அக்கறையில்லை, நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன் என்றார். நான் உமக்குச் சொல்லுகிறேன். இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, இதில் தான் நான் பிரயாணம் செய்வேன் என்றேன். இல்லை. நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர் இறங்கிவிட வேண்டும். இல்லையானால் உம்மைக் கீழே தள்ளப் போலீஸ்காரனை அழைக்க வேண்டி வரும் என்றார். அழைத்துக் கொள்ளும் நானாக இவ் வண்டியிலிருந்து இறங்க மறுக்கிறேன் என்று சொன்னேன்.

போலீஸ்காரர் வந்தார். கையைப் பிடித்து இழுத்து என்னை வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்கிப் போட்டு விட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது. போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு, கைப் பையை மாத்திரம் என்னுடன் வைத்துக் கொண்டு, பிரயாணிகள் தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன். சாமான்கள் ரெயில்வே அதிகாரியின் வசம் இருந்தன.

அப்பொழுது குளிர்காலம். தென்னாப்பிரிக்காவில் உயரமான பகுதியில் குளிர்காலத்தில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க் உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக் கடுமையாக இருந்தது. என் மேல் அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது. அதை ரெயில்வே அதிகாரிகளிடம் போய் கேட்க நான் துணியவில்லை. கேட்டால், திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வறையில் விளக்கும் இல்லை நடுநிசியில் ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச விரும்புவது போல் இருந்தது. ஆனால் பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.

என் கடமை என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்கலானேன். என்னுடைய உரிமைகளுக்காக போராடுவதா, இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா ? இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய் வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா ? என் கடமையை நிறைவேற்றாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுவது என்பது கோழைத்தனமாகும். எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது, நிறத்துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி மாத்திரமே அது. சாத்தியமானால், இந்த நோயை அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும். அதைச் செய்வதில் துன்பங்களை அனுபவிக்க வேண்டும். நிறத்துவேஷத்தைப் போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே, நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.

எனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன். மறுநாள் காலையில் ரெயில்வே ஜெனரல் மானேஜருக்கு நீண்ட தந்தி ஒன்று கொடுத்தேன், அப்துல்லா சேத்துக்கும் அறிவித்தேன். அவர் உடனே ஜெனரல் மானேஜரைப் போய்ப் பார்த்தார். மானேஜரோ, ரெயில்வே அதிகாரிகள் செய்தது சரியே என்றார். ஆனால் நான் சேர வேண்டிய இடத்திற்குப் பத்திரமாகப் போய்ச் சேரப் பார்க்குமாறு தாம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு அறிவித்து விட்டதாக அப்துல்லா சேத்திடம் கூறினார். என்னைச் சந்தித்து, எனக்கு வேண்டியதைச் செய்யுமாறு மாரிட்ஸ்பர்க்கிலும் மற்ற இடங்களிலும் இருந்த இந்திய வர்த்தகர்களுக்கு அப்துல்லா சேத் தந்திகள் கொடுத்தார். வர்த்தகர்கள் என்னைப் பார்க்க ஸ்டேஷனுக்குப் வந்தார்கள். தாங்கள் அனுபவித்திருக்கும் கஷ்டங்களை யெல்லாம் சொன்னார்கள். எனக்கு நேர்ந்தது சர்வ சாதாரணமான அனுபவம் தான் என்று கூறி, எனக்கு ஆறுதல் அளிக்க முயன்றார்கள். முதல் வகுப்பிலும், இரண்டாம் வகுப்பிலும் பிரயாணம் செய்யும் இந்தியர்கள், ரெயில்வே அதிகாரிகளிடமிருந்தும் வெள்ளையரிடமிருந்தும் தொல்லையை எதிர்ப்பார்க்கவே நேரும் என்றார்கள். இவ்விதம் துன்பக் கதைகளைக் கேட்பதிலேயே அன்று பொழுது போயிற்று. மாலை வண்டியும் வந்தது. எனக்காக ஏற்பாடு செய்திருந்த இடம் அதில் இருந்தது. டர்பனில் நான் வாங்க மறுத்த படுக்கைச் சீட்டை மாரிட்ஸ்பர்க்கில் வாங்கிக் கொண்டேன். ரெயிலும் என்னைச் சார்லஸ் டவுனுக்கு கொண்டு போய்ச் சேர்த்தது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum