தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிறத் தடை

Go down

நிறத் தடை                       Empty நிறத் தடை

Post  birundha Fri Mar 22, 2013 10:57 pm

புத்தி கூர்மையுள்ள ஒரு பெண். அவளுக்குக் கண் பார்வை இல்லை. பாரபட்சமற்றவள். ஒரு தட்டுக்கு மற்றொரு தட்டு ஏற்றத்தாழ்வின்றி நடுநிலையாக வைத்து, ஒரு தராசைக் கையில் ஏந்தியிருப்பாள். இதுவே ஒரு நீதிமன்றத்திற்குச் சின்னம் ஒருவேளை அவனுடைய வெளித் தோற்றத்தைக் கொண்டு அவள் மதித்துவிடக் கூடாது, அவனுடைய உண்மையான உள் யோக்கியதையைக் கவனித்தே முடிவு கூற வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே விதி அவளைக் குருடாக்கியிருக்கிறது. ஆனால், நேட்டால் வக்கீல்களின் சங்கமோ, இந்தக் கொள்கைக்கு முற்றும் மாறாக அந்தச் சின்னத்தைப் பொய்யாக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு நடக்கும்படி செய்ய முனைந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் அட்வகேட்டாகத் தொழில் நடத்த என்னை அனுமதிக்க வேண்டும் என்று மனுச் செய்தேன். பம்பாய் ஹைகோர்ட்டில் நான் வக்கீலாக இருந்ததற்குரிய அத்தாட்சி என்னிடம் இருந்தது. இங்கிலாந்தில், பாரிஸ்டரானதற்கு எனக்குக் கொடுத்த அத்தாட்சிப் பத்திரத்தைப் பம்பாய் ஹைகோர்ட்டில் நான் வக்கீலாகப் பதிவு செய்து கொண்டபோது அங்கே தாக்கல் செய்து விட்டேன். சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுப் போடும்போது, அத்துடன் நன்னடத்தை அத்தாட்சிப் பத்திரங்கள் இரண்டும் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இந்த அத்தாட்சிப் பத்திரங்களை; ஐரோப்பியர்கள் கொடுத்ததாக இருந்தால் அவற்றிற்கு அதிக மதிப்பிருக்கும் என்று எண்ணி, சேத் அப்துல்லாவின் மூலம் எனக்குத் தெரிந்தவர்களான இரு பிரபல ஐரோப்பிய வர்த்தகர்களிடம் அந்த அத்தாட்சிப் பத்திரங்களையே வாங்கினேன். வக்கீலாக இருப்பவர் ஒருவர் மூலமாக இம்மனுவைக் கொடுக்க வேண்டும். எத்தகைய கட்டணமும் வாங்கிக் கொள்ளாமல் அட்டர்னி ஜெனரல் இத்தகைய மனுக்களைச் சமர்பிப்பதுதான் வழக்கம். ஸ்ரீ எஸ்கோம்பு, தாதா அப்துல்லா கம்பெனிக்குச் சட்ட ஆலோசகராக இருந்தார் என்பதை முன்பே படித்தோம். அவரே இப்பொழுது அட்டர்னி ஜெனரல். அவரிடம் சென்றேன் அவரும் என் மனுவைக் கோர்ட்டில் சமர்ப்பிக்க மனம் உவந்து ஒப்புக்கொண்டார்.

நான் எதிர்பாராத விதமாக வக்கீல்கள் சங்கத்தினர் எதிர்க்கக் கிளம்பினர். என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கொடுத்திருந்த மனுவை எதிர்த்து, எனக்கு ஒரு தாக்கீது அனுப்பினார்கள். நேட்டாலில் வக்கீல் சங்கத்தினர் வெளிப்படையாகக் கூறிய ஓர் ஆட்சேபம், இங்கிலாந்தில் பெற்ற அசல் அத்தாட்சிப் பத்திரத்தை மனுவுடன் நான் தாக்கல் செய்யவில்லை என்பது. ஆனால் அவர்களுக்கு இருந்த முக்கியமான ஆட்சேபம், ஒரு கருப்பு மனிதனும் அட்வகேட்டாகப் பதிவு செய்துகொள்ள மனுப்போடக்கூடும் என்பதை அட்வகேட்டுகளை அனுமதிப்பது சம்பந்தமான விதிகளைச் செய்தபோது சிந்திருக்க முடியாது என்பதுதான். ஐரோப்பியரின் முயற்சியால்தான் நேட்டால் இன்று வளம் பெற்று வளர்ந்திருக்கிறதாகையால், வக்கீல் தொழிலிலும் ஐரோப்பியர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும். வெள்ளையர் அல்லாதவரையும் இத்தொழிலுக்குள் வர விட்டுவிட்டால், நாளாவட்டத்தில் அவர்கள் தொகை ஐரோப்பிய வக்கீல்களின் தொகையைவிட அதிகமாகிவிடும். அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரண் தகர்ந்துவிடும் இதுவே அவர்களுடைய முக்கியமான ஆட்சேபம்.

தங்களுடைய எதிர்பை ஆதரித்து, வாதாட ஒரு பிரபலமான வக்கீலை, வக்கீல்கள் சங்கத்தினர் அமர்த்தியிருந்தார்கள். அந்த வக்கீலும் தாதா அப்துல்லா கம்பெனியுடன் தொடர்புள்ளவர். ஆகவே, தம்மை வந்து பார்க்குமாறு சேத் அப்துல்லா மூலம் அவர் எனக்குச் சொல்லியனுப்பினார். நான் போனேன். அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். என்னுடைய பூர்வோத்தரங்களை விசாரித்தார். சொன்னேன். பிறகு அவர் கூறியதாவது.

உமக்கு விரோதமாக நான் சொல்லக் கூடியது எதுவும் இல்லை. குடியேற்ற நாட்டில் பிறந்த, எதற்கும் துணிந்துவிடும் ஒர் ஆசாமியாக நீர் இருப்பீரோ என்றுதான் நான் பயந்தேன். அசல் அத்தாட்சியை உம்முடைய மனுவுடன் நீர் அனுப்பாதது என் சந்தேகத்தை அதிகமாக்கியது. மற்றவர்களுடைய அத்தாட்சிப் பத்திரங்களைத் தங்களுடையவை எனக்காட்டி ஏமாற்றுபவர்களும் உண்டு. ஐரோப்பிய வியாபாரிகளிடம் வாங்கி, நீங்கள் அனுப்பிருக்கும் நன்னடத்தை அத்தாட்சிகள் என்னைப் பொறுத்தவரை பயனற்றவை உங்களைக் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும் ? அவர்களுக்கு உங்களிடம் எவ்வளவு பழக்கம் இருக்க முடியும் ?

இங்கே எனக்கு எல்லோருமே புதியவர்கள்தான் சேத் அப்துல்லாவும் இங்கேதான் முதன் முதலாக என்னை அறிவார் ? என்றேன். ஆனால், அவர் உங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்கிறீர்களே ? உங்கள் தகப்பனார் அங்கே முதல் மந்திரியாக இருந்தார் என்றால், சேத் அப்துல்லாவுக்கு உங்கள் குடும்பம் தெரிந்தே இருக்கவேண்டும். அவரிடமிருந்து உறுதிமொழிப் பத்திரத்தை நீங்கள் தாக்கல் செய்வதாக இருந்தால், எனக்குக் கொஞ்சமும் ஆட்சேபமே இல்லை. அப்பொழுது உங்கள் மனுவை நான் எதிர்த்துப் பேசுவதற்கில்லை என்று வக்கீல்கள் சங்கத்திற்குச் சந்தோஷமாகவே அறிவித்து விடுவேன் என்றார்.

அவருடைய இந்த பேச்சு எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஆனால் என் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன். என்னுள்ளேயே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன். தாதா அப்துல்லாவின் அத்தாட்சியை நான் தாக்கல் செய்திருந்தால் அதை நிராகரித்திருப்பார்கள், ஐரோப்பியரிடமிருந்து அத்தாட்சி வேண்டும் என்றும் கேட்டிருப்பார்கள். நான் அட்வகேட்டாகப் பதிவு செய்து கொள்ளுவதற்கும் என் பிறப்புக்கும் பூர்வோத்தரங்களுக்கும் என்ன சம்பந்தம் ? என் பிறப்பு எளிமையானதாகவோ, ஆட்சேபகரமானதாகவோ இருக்குமாயின், அதை எப்படி எனக்கு எதிராக உபயோகிக்க முடியும் ? ஆனால் என் கோபத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு அமைதியாக அவருக்குப் பின்வருமாறு பதில் சொன்னேன்.

அந்த விவரங்களையெல்லாம் கேட்பதற்கு வக்கீல்கள் சங்கத்திற்கு எந்தவிதமான அதிகாரமும் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நீங்கள் விரும்பும் அத்தாட்சிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன். சேத் அப்துல்லாவின் அத்தாட்சியைத் தயாரித்து வக்கீல்கள் சங்கத்தின் ஆலோசகரிடம் சமர்ப்பித்தேன். தாம் திருப்தியடைந்து விட்டதாக அவர் சொன்னார். ஆனால் வக்கீல்கள் சங்கத்தினர் திருப்தியடையவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் என் மனுவை எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்புக்குப் பதில் சொல்லுமாறு என் மனுவைத் தாக்கல் செய்த ஸ்ரீ எஸ்கோம்பைக்கூட அழைக்காமலே, கோர்ட்டு, அச்சங்க எதிர்ப்பை நிராகரித்த விட்டது. பிரதம நீதிபதி கூறியதாவது. மனுதாரர், தம்முடைய மனுவுடன் அசல் அத்தாட்சிப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்ற ஆட்சேபம் அர்த்தம் இல்லாதது. அவர் பொய்ப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தால், அவர் மீது வழக்கத் தொடுத்து, அவர் குற்றம் செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் வக்கீல் பட்டியலிலிருந்து இவர் பெயரை நீக்கிவிடலாம். வெள்ளையருக்கும் வெள்ளையர் அல்லாதவர்களுக்கும் இடையே எந்தவிதமான பாகுபாட்டையும் சட்டம் கற்பிக்கவில்லை. ஆகவே ஸ்ரீ காந்தி அட்வகேட்டாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளுவதைத் தடுக்கக் கோர்ட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவருடைய மனுவை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஸ்ரீ காந்தி, இப்பொழுது நீர் பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம்.

நான் எழுந்துபோய் ரெஜிஸ்டிரார் முன்பு பிரமாணம் எடுத்துக்கொண்டேன். நான் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பிரதம நீதிபதி என்னைப் பார்த்துக் கூறியதாவது. ஸ்ரீ காந்தி, நீர் உம்முடைய தலைப்பாகையை இப்பொழுது எடுத்துவிட வேண்டும். தொழில் நடத்தும் பாரிஸ்டர்கள் சம்பந்தமாக உள்ள கோர்ட்டின் விதிகளை அனுசரித்து நீங்கள் நடக்க வேண்டும். எனக்குரிய வரம்புகளை நான் உணரலானேன். ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நான் எடுக்க மறுத்த தலைப்பாகையைச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப் பணிந்து எடுத்து விட்டேன். இந்த உத்தரவை நான் எதிர்த்திருந்தால். அந்த எதிர்ப்பு நியாயமானதாக இருந்திருக்காது என்பதல்ல. ஆனால் என் பலத்தைப் பெரிய விஷயங்களில் போராடுவதற்காகச் சேமித்து வைக்க நான் விரும்பினேன். தலைப்பாகையை வைத்துக் கொண்டுதான் இருப்பேன். என்பதை வற்புறுத்துவதில் என்னுடைய ஆற்றலையெல்லாம் நான் செலவிட்டுவிடக்கூடாது அது, சிறந்த லட்சியத்திற்காகப் பாடுபடுவதற்கு உரியதாகும்.

நான் பணிந்துவிட்டது (அல்லது என் பலவீனமோ என்னவோ ?) சேத் அப்துல்லாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை. கோர்ட்டில், வக்கீல் தொழிலை நடத்தி வரும்போது என் தலைப்பாகையை வைத்துக்கொள்ள எனக்குள்ள உரிமையை கருதினர். என் நியாயத்தை எடுத்துக் கூறி அவர்களுக்குத் திருப்தியளிக்க முயன்றேன். ரோமில் இருக்கும்போது ரோமர்கள் செய்வதைப் போலவே நீயும் செய் என்ற பழமொழியினை அவர்கள் உணரும்படி செய்ய முயன்றேன். இந்தியாவில் ஓர் ஆங்கில அதிகாரியோ, நீதிபதியோ உங்கள் தலைப்பாகையை எடுத்து விடுமாறு சொன்னால் அதற்கு உடன்பட மறுத்துவிடுவது சரியானதாக இருக்கும். ஆனால், நேட்டால் மாகாணத்தில் கோர்ட்டில் இருக்கும் ஒரு வழக்கத்தை அந்தக் கோர்ட்டில் தொழில் செய்யும் நான் மதிக்க மறுப்பது நேர்மையானதல்ல என்று சொன்னேன்.

இவ்வாறும், இது போன்ற வாதங்களினாலும் நண்பர்களை ஒருவாறு சமாதானப்படுத்தினேன். ஆனால், வௌ;வேறான விஷயங்களை வௌ;வேறான நோக்குடன் கவனித்து முடிவுசெய்ய வேண்டும் என்ற கொள்கைகளை இக்காரியத்திலும் அனுசரிப்பது என்பதில், அவர்களுக்கு நான் திருப்தி உண்டாக்கிவிட்டதாக கருதவில்லை. எனினும், சத்தியத்தை நான் விடாப்பிடியாகப் பின்பற்றியதால், சமரசத்திலுள்ள அழகை என் வாழ்நாள் முழுவதிலுமே உணரும் சக்தியை அது எனக்கு அளித்துவிட்டது. இந்தச் சமரச உணர்ச்சி, சத்தியாக்கிரகத்தில் ஓர் அத்தியாவசியமான பகுதி என்பதை என் வாழ்க்கையில் நான் பின்னால் கண்டேன். இதனால் அடிக்கடி என் உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொள்ளவும், நண்பர்களின் வருத்தத்திற்கு ஆளாகவும் நேர்ந்திருக்கிறது. ஆனால், சத்தியமானது பூத்த மலர்போல் மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானதும் ஆகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum