தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலசுந்தரம்

Go down

பாலசுந்தரம் Empty பாலசுந்தரம்

Post  birundha Fri Mar 22, 2013 10:46 pm

மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்பதே என் உள்ளத்தின் ஆசை. அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது.

தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த இந்தியரும், குமாஸ்தாக்கள் வகுப்பினரும், நேட்டால் இந்தியர் காங்கிரஸில் அங்கத்தினர்களாக இருந்த போதிலும் நுட்பப் பயிற்சி பெறாதவர்களான சாதாரணத் தொழிலாளரும், ஒப்பந்தத் தொழிலாளரும் அதில் இன்னும் இடம் பெறாமலேயே இருந்து வந்தனர். சந்தா கொடுத்துச் சேர்ந்து அதன் அங்கத்தினர்கள் ஆகிவிட அவர்களால் இயலாது. அவர்களுக்குச் சேவை செய்வதன் மூலமே, காங்கிரஸ் அவர்களுடைய அன்பைப் பெற முடியும். அதற்கு நானோ காங்கிரஸோ தயாராக இல்லாத தருணத்தில் அதற்கான வாய்ப்பு, தானே வந்து சேர்ந்தது. நான் வக்கீல் தொழிலை நடத்த ஆரம்பித்து மூன்று, நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. காங்கிரஸும் இன்னும் அதன் குழந்தைப் பருவத்தில்;தான் இருந்தது. அப்பொழுது ஒரு தமிழர், கந்தை அணிந்து, முண்டாசுத் துணியைக் கையில் வைத்துக்கொண்டு, முன்னம் பற்கள் இரண்டும் உடைந்துபோய், ரத்தம் வழியும் கோலத்தில் நடுங்கிக்கொண்டும், அழுது கொண்டும் என் முன்னே வந்து நின்றார். அவர் தம்முடைய எஜமானால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார். என் குமாஸ்தா ஒரு தமிழர். அவர் மூலம் எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். வந்தவரின் பெயர் பாலசுந்தரம் டர்பனில் குடியிருப்பவரான ஒரு பிரபலமான ஐரோப்பியரின் கீழ் அவர் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய எஜமான் அவர் மீது கோபம் கொண்டார். அத்து மீறிப்போய், பாலசுந்தரத்தைப் பலமாக அடித்து, அவருடைய முன்னம் பற்கள் இரண்டை உடைத்துவிட்டார்.

அவரை ஒரு டாக்டரிடம் அனுப்பினேன். அந்த நாளில் வெள்ளைக்கார டாக்டர்களே உண்டு. பாலசுந்தரத்திற்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மையைக் குறித்து, டாக்டரிடமிருந்து ஓர் அத்தாட்சி வேண்டுமென்று கேட்டேன். அத்தாட்சியைப் பெற்றேன். காயமடைந்தவரை நேரே மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் சென்றேன். அவரிடம் பால சுந்தரத்தின் பிரமான வாக்கு மூலத்தைச் சமர்ப்பித்தேன். அதை படித்ததும் மாஜிஸ்டிரேட் எரிச்சலுற்றார். எஜமானுக்கு சம்மன் அனுப்பினார்.

அந்த எஜமான் தண்டிக்கப்பட வேண்டும் என்பதன்று என் விருப்பம். அவரிடமிருந்து பாலசுந்தரம் விடுதலை பெற வேண்டும் என்றே நான் விருமபினேன். ஒப்பந்தத் தொழிலாளரைப்பற்றிய சட்டங்களைப் படித்தேன். சாதாரண வேலைக்காரன் ஒருவன் முன் கூட்டி அறிவிக்காமல் வேலையை விட்டுப் போய் விடுவானாயின், எஜமான் அவன் மீது சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடரலாம். ஆனால் ஒப்பந்தத் தொழிலாளியின் விஷயத்திலோ இம் முறை முற்றும் மாறானது. அதே போன்ற நிலையில் முன் கூட்டி அறிவிக்காமல் ஓர் ஒப்பந்தத் தொழிலாளி போய்விட்டால், எஜமான் அத்தொழிலாளிமீது கிரிமினல் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துத் தண்டித்துச் சிறையில் இடலாம். இதனாலேயே இந்த ஒப்பந்த முறை, அடிமைத் தனத்தைப் போல் மிக மோசமானது என்று, ஸர் வில்லியம் ஹண்டர் கூறினார். ஓர் அடிமையைப் போன்றே ஒப்பந்தக் கூலியும் எஜமானனின் சொத்து.

பாலசுந்தரத்தை விடுவிப்பதற்கு, இருந்த வழிகள் இரண்டுதான். ஒப்பந்தத் தொழிலாளரின் பாதுகாப்பாளரைக் கொண்டு, பாலசுந்தரத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி செய்யலாம். அல்லது வேறு ஓர் எஜமானிடம் அவரை மாற்றிவிடச் செய்யலாம். இல்லையாயின் பாலசுந்தரத்தின் எஜமான் அவரை விடுவித்து விடுமாறு செய்யலாம். அந்த எஜமானிடம் சென்று பின்வருமாறு கூறினேன். உங்கள் மீது வழக்குத் தொடுத்து, நீங்கள் தண்டனை அடைய வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவரைப் பலமாக அடித்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள் என்றே நம்புகிறேன். அவருடைய ஒப்பந்தத்தை மற்றொருவருக்கு நீங்கள் மாற்றி விடுவீர்களாயின் நான் திருப்தியடைவேன். இதற்கு அவர் உடனே சம்மதித்து விட்டார். பிறகு ஒப்பந்தத் தொழிலாளரின் பாதுகாப்பாளரைப் போய் பார்த்தேன். புதிய எஜமான் ஒருவரை நான் கண்டுபிடிப்பதாக இருந்தால் அதற்குத் தாமும் சம்மதிப்பதாக அவர் கூறினார்.

எனவே, ஓர் எஜமானைத் தேடிப் புறப்பட்டேன். ஒப்பந்தத் தொழிலாளியை இந்தியர் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாதாகையால், நான் தேடும் எஜமான் வெள்ளைக்காரராகவே இருக்க வேண்டும். அப்பொழுது எனக்கு மிகச் சில ஐரோப்பியர்களையே தெரியும். அவர்களில் ஒருவரைச் சந்தித்தேன். பால சுந்தரத்தை வைத்துக் கொள்ள அவர் மிக அன்புடன் ஒப்புக் கொண்டார். அவருடைய அன்பை நன்றியறிதலோடு ஏற்றுக் கொண்டேன். பால சுந்தரத்தின் எஜமான் குற்றஞ்செய்திருப்பதாக மாஜிஸ்டிரேட் முடிவு கூறினார். ஒப்பந்தத்தை வேறு ஒருவருக்கு மாற்றிவிட அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் பதிவு செய்தார்.

பாலசுந்தரத்தின் வழக்கு, ஒப்பந்தத் தொழிலாளர் ஒவ்வொருவருடைய காதுக்கும் எட்டிவிட்டது. அவர்கள் என்னைத் தங்களுடைய நண்பனாகக் கருதினார்கள். இந்தத் தொடர்பைக் குறித்து, நான் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓயாமல் என் காரியலயத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுடைய இன்ப துன்பங்களை அறிந்து கொள்ளுவதற்கு எனக்குச் சிறந்த வாய்ப்பு அதனால் ஏற்பட்டது.

பாலசுந்தரம் வழக்கின் எதிரொலி, தொலை தூரத்தில் இருக்கும் சென்னையிலும் கேட்டது. அம்மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஒப்பந்தத் தொழிலாளராக நேட்டாலுக்கு வந்திருந்தவர்கள் தஙகள் சகோதரத் தொழிலாளர்களின் மூலம் இவ்வழக்கைக் குறித்து அறியலாயினர். அவ் வழக்கைப் பொறுத்தவரையில் அதில் விசேஷமானது எதுவும் இல்லை. ஆனால், தங்கள் கட்சியை எடுத்து பேசுவதற்கும், நேட்டாலில் ஒருவர் இருக்கிறார் என்பது ஒப்பந்தத் தொழிலாளருக்கு ஆனந்தத்தோடு கூடிய அதிசயமாக இருந்ததோடு அதனால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் உண்டாயிற்று.

முண்டாசுத் துணியைக் கையில் வைத்துக்கொண்டு, பாலசுந்தரம் என் காரியாலயத்திற்குள் வந்தார் என்று ஆரம்பத்தில் கூறினேன். இதில் நமது மானக்கேட்டைக் காட்டும் துக்ககரமான அம்சம் ஒன்று இருக்கிறது. என் தலைப்பாகையை எடுத்துவிடும்படி தலையில் வைத்திருப்பது குல்லாயாக இருந்தாலும் தலைப்பாகையாக இருந்தாலும், தலையில் சுற்றிய ஒரு துண்டாக இருந்தாலும் ஓர் ஐரோப்பியரைப் பார்க்கப் போகும்போது ஒவ்வோர் ஒப்பந்தத் தொழிலாளியும், புதிதாக வந்த ஒவ்வோர் இந்தியரும், அதைத் தலையிலிருந்து எடுத்தாக வேண்டும். இரண்டு கைகளால் சலாம் போட்டாலும் போதாது. இந்தப் பழக்கம் நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டு வந்திருக்கிறது. என் விஷயத்திலும் அதே பழக்கத்தை அனுசரிக்க வேண்டும் என்று பாலசுந்தரம் கருதியிருக்கிறார். அதனாலேயே முண்டாசுத் துணியைக் கையில் எடுத்துக் வைத்துக்கொண்டு என்னிடம் வந்தார். என் அனுபவத்தில் இவ்விதம் நிகழ்ந்தது இதுவே முதல் தடவை. அவமானத்தினால் என் மனம் குன்றியது. தலையில் முண்டாசைக் கட்டும்படி அவரிடம் கூறினேன். கொஞ்சம் தயங்கிக்கொண்டே அவர் கட்டினார். என்றாலும், அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர் முகத்தில் நான் காணமுடிந்தது. மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது, எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum