தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடித்தனக்காரனாக ...

Go down

குடித்தனக்காரனாக ... Empty குடித்தனக்காரனாக ...

Post  birundha Fri Mar 22, 2013 10:44 pm

ஒரு குடித்தனம் வைப்பதென்பது எனக்குப் புதிய அனுபவம் அன்று. ஆனால், பம்பாயிலும் லண்டனிலும் நான் நடத்திய குடித்தனத்திற்கும் நேட்டாலில் வைத்த குடித்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு. இத்தடவை செலவில் ஒரு பகுதி, முற்றும் கௌரவத்திற்காக மட்டுமே ஆயிற்று. நேட்டாலில் இருக்கும் இந்தியப் பாரிஸ்டர் என்ற வகையிலும், ஒரு பிரதிநிதி என்ற வகையிலும், என் அந்தஸ்திற்கு ஏற்றதான ஒரு குடித்தனத்தை அமைக்க வேண்டியது அவசியம் என்று எண்ணினேன். பிரபலமான பகுதியில் அழகான ஒரு சிறு வீட்டை அமர்த்தினேன். தக்க வகையில் அதில் மேசை, நாற்காலி முதலிய சாமான்களெல்லாம் போடப்பட்டன. சாப்பாடு எளிமையானது. ஆனால் ஆங்கில நண்பர்களையும் இந்தியச் சக ஊழியர்களையும் நான் சாப்பிடக் கூப்பிடுவதால் குடித்தனச் செலவு எப்பொழுதும் அதிகமாகவே இருந்தது.

ஒவ்வொரு குடித்தனத்திற்கும் ஒரு நல்ல வேலைக்காரன் அத்தியாவசியம். ஆனால், ஒருவரை வேலைக்காரனாக வைத்து நடத்துவது எப்படி என்பதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்குச் சகாவாகவும் உதவி செய்பவராகவும் ஒரு நண்பர் இருந்தார். சமையற்காரர் ஒருவர் உண்டு. அவர் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே ஆகிவிட்டார். என் காரியாலயகுமாஸ்தாக்களும் என்னோடு தங்கி, அங்கேயே சாப்பிட்டும் வந்தனர். இந்தப் பரிசோதனையில் ஓரளவுக்கு நான் வெற்றி பெற்றேன் என்றே நினைக்கிறேன். ஆனால், வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களில் ஒரு சிறிது இதில் இல்லாமல் போகவில்லை. என்னுடைய சகா அதிக சாமர்த்தியசாலி. அவர் என்னிடம் உண்மையாக நடந்து கொண்டு வருகிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால், இதில்தான் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். என்னுடன் தங்கியிருந்த ஆபீஸ் குமாஸ்தா ஒருவர்மீது, என்னுடைய அந்தச் சகாவுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டது. குமாஸ்தா மீது நான் சந்தேகம் கொள்ளும் வகையில் அவர் ஒரு வலையை விரித்து விட்டார். அந்தக் குமாஸ்தா நண்பரோ, அதிக ரோஷக்காரர். தம்மீது எனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என்பதைக் கண்டதுமே அவர் வீட்டை மாத்திரமே அன்றிக் காரியாலயத்தையும் விட்டுப் போய்விட்டார். இது எனக்கு வருத்தமாக இருந்தது. ஒரு வேளை அவருக்கு நான் அநீதி செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்தேன். என் மனச்சாட்சியும் சதா உறுத்திக் கொண்டே இருந்தது.

இதற்கு மத்தியில் சமையற்காரர், சில தினங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டதாலோ, வேறு காரணத்திற்காகவோ வீட்டில் இல்லை. அவர் இல்லாதபோது வேறு ஒரு சமையற்காரரை வைக்க வேண்டியது அவசியமாயிற்று. புதிதாக வந்தவர், அசல் போக்கிரி என்பது பின்னால் தெரிய வந்தது. ஆனால் எனக்கோ, அவர் கடவுள் அனுப்பிய தூதர் போன்றே ஆனார். என் வீட்டில் எனக்குத் தெரியாமலேயே சில ஒழுங்கீனங்கள் நடந்து வருகின்றன என்பதை அவர், தாம் வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே கண்டுபிடித்தார். என்னை எச்சரிக்கை செய்வதென்றும் தீர்மானித்தார். யாரையும் நான் எளிதில் நம்பிவிடக் கூடியவன். ஆனால் நேர்மையானவன் என்ற பெயர் அப்பொழுதே எனக்கு உண்டு. இதனால் அந்தப் புதுச் சமையற்காரர் கண்டு பிடித்த விஷயம், அவருக்கு இன்னும் அதிக அதிர்ச்சியை அளித்தது. தினமும் மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு மணிக்குக் காரியாலயத்திலிருந்து நான் வீடு திரும்புவேன். ஒரு நாள் 12 மணிக்குச் சமையற்காரர் தலைதெறிக்க காரியாலயத்திற்கு ஓடி வந்தார். தயவு செய்து உடனே வீட்டுக்கு வாருங்கள் நீங்கள் பார்க்க வேண்டிய அதிசயம் ஒன்று இருக்கிறது என்றார்.

அது என்ன ? சங்கதி இன்னது என்பதை நீ இப்பொழுது சொல்லியாக வேண்டும். அதைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த நேரத்தில் நான் காரியாலயத்தை விட்டு எப்படி வரமுடியும் ? என்றேன். நீங்கள் இப்பொழுது வராவிடில் அதற்காகப் பிறகு வருத்தப் படுவீர்கள். அவ்வளவுதான் நான் சொல்ல முடியும் என்றார் சமையற்காரர். அவர் பிடிவாதத்தில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஒரு குமாஸ்தா உடன் வர வீட்டுக்குப் போனேன். சமையற்காரர் எங்களுக்கு முன்னால் வேகமாகப் போனார். என்னை நேரே மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார் என் சகாவின் அறையைச் சுட்டிக் காட்டினார். அந்தக் கதவைத் திறந்து நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

எனக்கு அப்பொழுது எல்லாம் விளங்கிவிட்டன. கதவைத் தட்டினேன். பதில் இல்லை * சுவர்களெல்லாம்கூட அதிரும்படியாகக் கதவைப் பலமாக இடித்தேன். கதவு திறந்தது. உள்ளே ஒரு விபசாரியைக் கண்டேன். திரும்ப அங்கே அடியெடுத்து வைக்கச் கூடாது என்று கூறி, அவளை வெளியே போகச் சொன்னேன். என் சகாவிடம், இந்தக் கணத்திலிருந்து உமக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. நெடுக நான் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறேன். எனக்கு நானே பைத்தியக்காரப் பட்டம் கட்டிக் கொண்டேன். உம்மிடம் நான் வைத்த நம்பிக்கைக்கு நீர் செய்யும் பிரதியுபகாரம் இதுதானா ? என்றேன்.

அப்பொழுதும் நல்லறிவு பெறாத அவர், என் சங்கதிகளை அம்பலப்படுத்தி விடுவதாக என்னை மிரட்டினார். மறைத்து வைக்க என்னிடம் எதுவுமே இல்லை. நான் செய்தது ஏதாவது இருந்தால் அம்பலப்படுத்தும். ஆனால், இந்தக் கணமே நீ இந்த இடத்தை விட்டுப் போயாக வேண்டும் என்றேன். இதைக் கேட்டதும் அவர் இன்னும் அதிகமாகக் கோபாவேசம் கொண்டார். வேறு வழி இல்லாது போகவே, கீழே இருந்த குமாஸ்தாவைக் கூப்பிட்டேன். உடனே, போலீஸ் சூப்பரின்டென்டிடம் போய், என் வந்தனங்களை அவருக்குத் தெரிவித்து விட்டு, என்னிடம் வசித்து வந்த ஒருவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்றும், என் வீட்டில் அவரை வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்றும், அவர் வெளியே போக மறுக்கிறார் என்றும், போலீஸ் உதவியை அனுப்பினால் மிக்க நன்றியறிதல் உள்ளவனாவேன் என்றும் அவரிடம் சொல்லும் என்றேன்.

நான் கண்டிப்பாகத்தான் இருக்கிறேன் என்பதை இது அவருக்குக் காட்டியது அவர் குற்றமே அவரைப் பலவீனப் படுத்தியும் விட்டது, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். போலீஸுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். வீட்டை விட்டு உடனே போய் விடவும் ஒப்புக் கொண்டார். போயும் விட்டார்.

இச் சம்பவம் என் வாழ்க்கையில் தக்க சமயத்தில் செய்ததோர் எச்சரிக்கையாக அமைந்தது. கெட்டிக்காரத்தனமுள்ள இந்தத் தீய ஆசாமி, நெடுக, என்னை எவ்வளவு தூரம் ஏமாற்றி வந்திருக்கிறார் என்பதே இப்பொழுதுதான் என்னால் தெளிவாகக் காண முடிந்தது. அவர் என்னிடம் இருக்க இடம் கொடுத்தது. நான் ஒரு நல்ல காரியத்திற்குக் கெட்ட முறையை அனுசரித்தாதாயிற்று. நெருஞ்சிச் செடியிலிருந்து அத்திப் பழம் எடுக்கலாம் என்று நான் எதிர் பார்த்து விட்டேன். அந்தத் தோழர் கெட்ட நடத்தை உள்ளவர் உண்மையாக நடந்து கொள்ளுவாரென்று நம்பிவிட்டேன். அவரைச் சீர்திருத்துவதற்கு நான் செய்த முயற்சியில் என்னையே நாசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நெருங்கி வந்து விட்டேன். அன்புள்ள நண்பர்களின் எச்சரிக்கைகளையெல்லாம் உதாசீனம் செய்து விட்டேன். அவரிடம் நான் கொண்டிருந்த பிரியம் என்னை முற்றும் குருடனாக்கி விட்டது.

புதிய சமையற்காரர் காட்டாதிருந்தால், உண்மையை நான் கண்டுகொண்டிருக்கவே மாட்டேன். இச்சம்பவத்திற்குப் பிறகு நான் பற்றாற வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டேன். இச்சம்பவத்தை நான் அறியாமல் இருந்திருந்தால், அந்தச் சகாவின் தொடர்பினால் இந்த பற்றாற வாழ்க்கையை நான் நடத்த முடியாமலும் போயிருக்கக் கூடும். என்னை இருட்டிலேயே வைத்திருந்து, நான் தவறான வழியில் சென்றுவிடும்படி செய்துவிடும் சக்தி, அவருக்கு உண்டு. ஆனால், முன்பு போலவே கடவுள் என்னைக் காத்தருள வந்தார். என் நோக்கங்கள் தூய்மையானவை. ஆகையால், நான் தவறுகள் செய்திருந்தும், காப்பாற்றப்பட்டேன். ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்த அனுபவம், வருங்காலத்திற்கான ஒரு நல்ல முன்னெச்சரிக்கையாயிற்று.

அந்தச் சமையற்காரர், கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர் போன்றே ஆனார். அவருக்குச் சமையல் வேலை தெரியாது. ஆகையால், சமையற்காரராக அவர் என்னிடத்தில் இருந்திருக்க முடியாது. ஆனால், வேறு யாரும் என் கண்களைத் திறந்திருக்க முடியாது. என் வீட்டிற்குள் அந்த விபசாரி அழைத்துக் கொண்டு வரப்பட்டது. அது முதல் தடவை அன்று என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். அவள், முன்னால் அடிக்கடி வந்திருக்கிறாள். ஆனால், இந்தச் சமையற்காரருக்கு இருந்த தைரியம் வேறு யாருக்கும் இல்லை. ஏனெனில், கண்ணை மூடிக்கொண்டு அந்தச் சகாவை நான் எவ்வாறு நம்பி வருகிறேன் என்பதை எல்லோரும் அறிவார்கள். இந்தச் சேவையைச் செய்வதற்கென்றே அச்சமையற்காரர் அனுப்பப்பட்டது போல் இருந்தது. ஏனெனில் அக்கணத்திலேயே தாம் போய்விடப் போவதாக என்னிடம் அவர் அனுமதி கேட்டார்.

நான் உங்கள் வீட்டில் இருக்க முடியாது. உங்களைத் சுலபமாகப் பிறர் ஏமாற்றி விடுகிறார்கள். இது எனக்கு ஏற்ற இடம் அல்ல என்று சமையற்காரர் கூறினார். அவர் போக அனுமதியும் கொடுத்துவிட்டேன். குமாஸ்தாவைக் குறித்து சந்தேகம் ஏற்படும்படி செய்ததும் இந்த என் சகாவைத் தவிர வேறு யாரும் அல்ல என்பதையும் இப்பொழுது கண்டு கொண்டேன். குமாஸ்தாவுக்கு நான் செய்துவிட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட எவ்வளவோ கஷ்டப்பட்டு முயன்றேன். அவருக்கு முற்றும் திருப்தி ஏற்படும்படி செய்ய முடியாது போனது எனக்கு நிரந்தரமான துக்கமாக இருந்து வருகிறது. ஒருமுறை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு என்னதான் ஒட்டுப்போட்டாலும், பிளவு பிளவுதான்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum