தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு துக்கமான சம்பவம்

Go down

ஒரு துக்கமான சம்பவம் Empty ஒரு துக்கமான சம்பவம்

Post  birundha Fri Mar 22, 2013 6:09 pm

உயர்தரப் பள்ளியில் பல சமயங்களிலும் எனக்கு இருந்த நண்பர்பகள் மிகச் சிலரே. அவர்களில் இருவர் நெருங்கிய நண்பர்கள் எனலாம். அவர்களில் ஒருவருடைய நட்பு வெகு காலம் நீடிக்கவில்லை. அவரை நான் கைவிடவில்லை. மற்றவர்களுடன் நான் நட்புக் கொண்டிருந்ததற்காக அவர் தான் என்னக் கைவிட்டு விட்டார். பின்னால் ஏற்பட்ட இந்த நட்பை என் வாழ்க்கையில் நேர்ந்த ஒரு துக்கமான சம்பவமாகவே நான் கருதுகிறேன். இந்நட்பு நீண்ட காலம் நீடித்தது. சீர்திருத்த வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்புக் கொண்டேன்.

இந்த நண்பர், முதலில் என் அண்ணனின் நண்பர். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அவரிடமிருந்த குறைபாடுகளை நான் அறிவேன். ஆயினும், விசுவாசமுள்ள நண்பர் என்று அவரைக் கருதினேன். எனக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கிறது என்று என் தாயார், என் மூத்த அண்ணன், என் மனைவி முதலியவர்கள் எல்லோரும் எனக்கு எச்சரிக்கை செய்தார்கள். என் மனைவியின் எச்சரிக்கையை நான் மதிக்கவில்லை. ஆனால், என் தாயார், மூத்த அண்ணன் ஆகியோருடைய கருத்துக்கு விரோதமாக நான் நடக்கத் துணியவில்லை. ஆகவே, அவர்களுக்குப் பின் வருமாறு சமாதானம் கூறினேன். நீங்கள் கூறும் குறைகளெல்லாம் அவரிடம் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் அவரிடம் இருக்கும் நற்குணங்கள் உங்களுக்குத் தெரியா. அவரைத் திருத்திவிட வேண்டும் என்பதற்காகவே, நான் அவருடன் பழகுவதால் அவர் என்னைக் கெடுத்துவிட முடியாது. அவர் தம்முடைய வழிகளை மாத்திரம் திருத்திக் கொண்டு விட்டால் மிகச் சிறந்தவராகி விடுவார் என்பது நிச்சயம். ஆகையால், எனக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

நான் இவ்விதம் கூறியது அவர்களுக்குத் திருப்தியளித்திருக்கும் என்று நான் எண்ணவில்லை என்றாலும், அவர்கள் என் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு என் வழியே போக என்ன அனுமதித்து விட்டார்கள்.

நான் அப்பொழுது எண்ணியதெல்லாம் தவறு என்பதைப் பிறகு கண்டேன். சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்தக் கொள்ளலாகாது. ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு. ஆனால், அத்தகைய நட்பை இவ்வுலகில் காண்பது அரிது. ஒரே வித சுபாவமுள்ளவர்களிடையே ஏற்படும் நட்பே முற்றும் சிறந்ததாகவும் நீடித்ததாகவும் இருக்கும். நண்பர்களில் ஒருவர் குணம் இன்னொருவருக்குப் படிகிறது. ஆகவே நட்பினால் சீர்திருத்துவது என்பதற்கு அதிக இடமே இல்லை. தனிப்பட்டு அன்னியோன்யமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம். ஏனெனில், மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன. கடவுளோடு தோழமை கொள்ள விரும்புவோர் தனியே விலகி இருக்க வேண்டும், அல்லது உலகம் முழுவதையுமே தமது நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். நான் கூறுவது தவறாக இருக்கலாம். என்றாலும், ஒரு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள நான் செய்த முயற்சியில் தோல்வியே ஏற்பட்டது.

ராஜ;கோட் முழுவதிலும் சீர்திருத்தம் என்ற அலையின் வேகம் மிகுந்திருந்த சமயத்திலேயே இந்த நண்பரை முதல் முதலில் நான் சந்தித்தேன். எங்கள் ஆசிரியர்களில் பலர் ரகசியமாக மதுவும், மாமிசமும் சாப்பிடுகிறார்கள் என்று இந்த நண்பர் என்னிடம் கூறினார். ராஜ;கோட்டில் இருக்கும் பல பிரமுகர்களின் பெயர்களை சொல்லி அவர்களும் இந்த ரகத்தில் சேர்ந்தவர்களே என்றார். உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிலரும் இப்படிச் செய்கிறார்கள் என்றார்.

இதைக்கேட்டு நான் ஆச்சரியமும் மனவேதனையும் அடைந்தேன். அவர்கள் இவ்விதமானதற்குக் காரணம் என்ன என்று நான் கேட்டதற்குப் பின்வருமாறு அவர் சொன்னார். புலால் உண்ணாததால் நாம் பலமில்லாதவர்களாக இருக்கிறோம். புலால் உண்பவர்களாக இருப்பதனாலேயே ஆங்கிலேயரால் நம்மை ஆளமுடிகிறது. நான் எவ்வளவு திடகாத்திரத்துடன் இருக்கிறேன் என்பதை நீயே பார்க்கிறாய். ஓட்டப் பந்தயத்தில் நான் வல்லவன் என்பதும் உனக்குத் தெரியும். இதற்குக் காரணம் நான் புலால் உண்பதுதான். மாமிசம் உண்போருக்குக் கட்டிச் சிரங்குகள், கொப்பளங்கள் முதலியன வருவதில்லை, எப்பொழுதாவது அவர்களுக்கு வந்து விட்டாலும் சீக்கிரத்தில் குணமாகி விடுகின்றன. புலால் உண்ணும் நமது உபாத்தியாயர்களும் மற்ற முக்கியஸ்தர்களும் முட்டாள்கள் அல்ல. அதிலிருக்கும் நன்மை அவர்களுக்குத் தெரியும். நீயும் அவர்களைப் போல் சாப்பிட வேண்டும். சோதனை செய்து பார்ப்பதைப் போல நல்லது எதுவும் இல்லை. சாப்பிட்டு அது எவ்வளவு பலத்தைக்கொடுக்கிறது என்று பார்.
புலால் உண்பதை வற்புறுத்திச் சொல்லப்பட்ட இவை யாவும் ஒரே சமயத்தில் கூறப்பட்டவை அல்ல. என் மனத்தில் படும்படி செய்வதற்காக என் நண்பர் பல சமயங்களில் நீண்ட விரிவான பாதம் புரிந்திருக்கிறார். அதன் சாரமே இது. என மூத்த சகோதரர் இதற்கு முன்னாலேயே அந்தப் படுகுழியில் விழுந்து விட்டார். ஆகையால் நண்பரின் வாதங்களை அவரும் ஆதரித்துப் பேசினார். என் அண்ணனோடும், இந்த நண்பரோடும் ஒப்பிடும்போது, நான் நிச்சயமாக நோஞ்சலாகவே இருந்தேன். அவர்கள் இருவரும் திடகாத்திரம் உடையவர்கள், பலசாலிகள், அதிக தைரியசாலிகள்.

இந்த நண்பரின் பராக்கிரமச் செயல்களைக் கண்டு மயங்கி விட்டேன். அவர் நீண்ட தூரம் ஓடுவார். உயரத்திலும், நீளத்திலும் தாவிக் குதிப்பதில் சமர்த்தர். எவ்வளவு அடி கொடுத்தாலும் சரி, தாங்கிக் கொள்ளுவார். இந்தப் பராக்கிரமச் செயல்களை யெல்லாம் அவர் என்னிடம் செய்து காட்டுவார். தமக்கு இல்லாத திறமையைப் பிறரிடம் காணும்போது யாரும் பிரமித்து விடுவது இயல்பு. அதே போல நண்பரின் பராக்கிரமச் செயல்களைப் பார்த்த நானும் பிரமித்துப் போனேன். அவரைப் போல் நானும் இருக்க வேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. என்னால் தாண்டவோ, ஓடவோ முடியாது. அவரைப் போன்றே நானும் ஏன் பலமுள்ளவனாக இருக்கக் கூடாது ?

மேலும், அப்பொழுது நான் ஒரு கோழையாகவும் இருந்தேன். திருடர்கள் பயமும், பிசாசுகள், பாம்புகள் ஆகியவற்றின் பயமும் எனக்கு இருந்தன. இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். இருட்டு என்றாலே எனக்கு பயங்கரமாக இருக்கும் ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும், மற்றொரு பக்கத்திலிருந்து திருடர்களும், வேறொரு பக்கத்திலிருந்து பாம்புகளும் வருவது போலக் கற்பனை செய்து கொண்டிருக்கும் காரணத்தால், இருட்டில் விளக்கு இல்லாமல் என்னால் முடியாத காரியம். எனவே, அறையில் விளக்கு இல்லாமல் என்னால் தூங்க முடியாது.

என் மனைவி அப்பொழுது குழந்தையல்ல, வாலிபப் பருவத்தையடையும் தறுவாயில் இருந்தாள். அவள் என் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பாள். எனக்கு இருந்த பயங்களையெல்லாம் அவளிடம் எப்படிச் சொல்லுவது ? என்னை விட அவள் தைரியசாலி என்பதை நான் அறிவேன். இதனால் என்னைக் குறித்து நானே வெட்கப் படுவேன். பாம்பு, பிசாசு, என்ற பயம் அவளுக்கு இல்லை. இருட்டில் எங்கே வேண்டுமானாலும் போவாள். என்னிடமிருந்த இந்தப் பலவீனங்களை எல்லாம் என் நண்பர் அறிவார். உயிரோடு பாம்பைத் தம் கையில் பிடிக்க முடியும் என்றும், திருடர்களை எதிர்த்து விரட்டத் தம்மால் முடியும் என்றும், பிசாசுகள் உண்டு என்றே தாம் நம்புவதில்லை என்றும் அவர் என்னிடம் கூறுவார். இவ்வளவும் புலால் உண்பதன் பலன்கள் என்பார்.

குஜராத்திக் கவியான நர்மத்தின் சிந்துப் பாடல் ஒன்றைப் பள்ளிச் சிறுவர்கள் பாடுவார்கள். அது பின் வருமாறு,

பிரம்மாண்டமான ஆங்கிலேயனைப் பார்,
சின்னஞ் சிறிய இந்தியனை அவன் ஆளுகிறான்.
காரணம் - புலால் உண்பதால்.
அவன் ஐந்து முழ உயரம் இருப்பதே.

இவையெல்லாம் தமக்குரிய விளைவை என்னிடம் உண்டு பண்ணி விட்டன. நான் தோற்றுப் போனேன். புலால் உணவு நல்லது, அது என்னைப் பலமுள்ளவனாகவும் தைரியசாலியாகவும் மாற்றும், நாடு முழுவதுமே புலால் உணவு கொள்ள ஆரம்பித்து விட்டால் ஆங்கிலேயரை வென்று விடலாம் என்ற எண்ணங்கள் என்னுள் வளர்ந்தன.

அதன்பேரில் பரிசோதனையைத் தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது. அது ரகசியமாக நடைபெற வேண்டும். காந்தி சமூகத்தினர் வைஷ்ணவர்கள். முக்கியமாக என் பெற்றோர்கள் தீவிர வைஷ்ணவர்கள். நாள் தவறாமல் அவர்கள் விஷ்ணு கோயிலுக்குப் போவார்கள். குடும்பத்திற்கு என்றே சொந்தமான கோயில்களும் உண்டு. ஜைன சமயம் குஜராத்தில் பலமாக பரவி இருந்தது. அதன் செல்வாக்கு எங்கும், எல்லா சமயங்களிலும் உணரப்பட்டது. குஜராத்தில் ஜைனர்களிடத்திலும், வைஷ்ணவர்களிடத்திலும் புலால் உணவுக்கு இருந்த அவ்வளவு பலமான எதிர்ப்பையும், அதன் மீது இருந்த கடுமையான வெறுப்பையும் போல் இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ காண முடியாது. இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன் நான். அதோடு என் பெற்றோரிடம் எனக்கு மிகுந்த பக்தியும் உண்டு. நான் புலால் உண்டேன் என்பதை அறிந்து கணத்திலேயே அவர்கள் அதிர்ச்சியினால் செத்து விடுவார்கள் என்பதையும் அறிவேன். மேலும் சத்தியத்தில் நான் கொண்டிருந்த பற்று, என்னை அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் செய்தது.

மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுவேனாயின், என் பெற்றோரை நான் ஏமாற்ற வேண்டியிருக்கும் என்பதை எனக்கு அப்பொழுது தெரியாது என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் என் புத்தியெல்லாம் சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ருசிக்கு சாப்பிவது என்பதே அதில் இல்லை. அதற்கு தனிப்பட்ட ருசி இருப்பதாக எனக்குத் தெரியாது. பலசாலியாகவும் தைரியசாலியாகவும் ஆகவேண்டும் என்று விரும்பினேன். ஆங்கிலேயரை தோற்கடித்து இந்தியா சுதந்திரமடையும்படி செய்வதற்கு என் நாட்டினரும் அப்படி ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டேன். சுயராஜ;யம் என்ற சொல்லை அதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் சுதந்திரம் என்றால் என்ன என்பது எனக்கு தெரியும். சீர்திருத்தத்தில் இருந்த உற்சாகம் என்னைக் குருடனாக்கி விட்டது. ரகசியமாகவே இருக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிடவே, இக்காரியத்தை என் பெற்றோருக்குத் தெரியாதபடி மறைத்துவைப்பது சத்தியத்தினின்று தவறியதாகாது என்றும் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

முடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம், வாழ்க்கையில் முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில் இந்தக் காரியத்தைத் திருடனைப் போல ஒளிந்து கொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது. ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும் அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை ஆட்டிறைச்சி, தின்பதற்குத் தோலைப்போல் கடினமாக இருந்தது. என்னால் அதைத் தின்னவே முடியவில்லை. எனக்கு அருவருப்பாக இருந்தது. தின்ன முடியாதென்று விட்டுவிட்டேன்.

அதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பயங்கரம் எனக்குச் சதா இருந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கண் அயரும் போதெல்லாம், உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள் இருந்து கொண்டு கத்துவதுபோல் தோன்றும். திடுக்கிட்டு எழுவேன். செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் புலால் உண்பது ஒரு கடமை என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன், உற்சாகத்தையும் அடைவேன்.

என் நண்பர் பிடித்த பிடியைச் சாமானியத்தில் விட்டுவிடக் கூடியவர் அல்ல. இறைச்சியை ருசியுள்ள பலகாரங்களாகத் தயார் செய்து, அவை கண்ணுக்கும் அழகாக இருக்கும்படி செய்ய ஆரம்பித்தார். அவற்றைச் சாப்பிடுவதற்கு இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரையில் தன்னந் தனியான இடத்தைத் தேடிப் போவதும் இல்லை. ராஜாங்க மாளிகை ஒன்று கிடைத்தது. மேஜை நாற்காலிகளெல்லாம் போடப்பட்டிருந்த அம்மாளிகையின் போஜன மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன் பேசி, அந்த நண்பர் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் தூண்டிலில் நான் விழுந்துவிட்டேன். கடை ரொட்டியிடம் எனக்கு இருந்த வெறுப்பையும், ஆடுகளிடம் கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் மாமிசப் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார் ஓராண்டு நடந்து வந்தது. ஆனால் ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில் , தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க மாளிகை கிடைக்கவில்லை. அத்துடன் மாமிசப் பலகாரங்களைத் தயாரிப்பது அதிக செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன. இந்தச் சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை.

ஆகையால் இந்தச் செலவுக்கு வேண்டியதையெல்லாம் என் நண்பர் தான் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியாது. என்னை மாமிசம் தின்பவனாக்கி விடவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தால் இதற்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்து வந்தார். ஆனால், இதில் அவருடைய சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே வேண்டும். எனவே, இந்த விருந்துகள் சுருக்கமாகவும், நீண்ட நாட்களுக்கு ஒரு முறையும்தானே நடைபெற முடியும் ?

இந்த ரகசிய விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். வந்து சாப்பிடும்படி வழக்கம்போல என் தாயார் கூப்பிடுவார். வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் என்ன என்றும் கேட்பார். எனக்கு இன்று பசியே இல்லை. எதோ வயிற்றில் கோளாறு இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். இவ்விதம் நான் சாக்குப் போக்குச் சொல்லும்போது, என் மனம் வேதனைப்படாமல் இராது. நான் ரொம்ப சொல்லுகிறேன். அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன். அதோடு நான் மாமிசம் சாப்பிடுகிறேன் என்பது என் தாயாருக்கும் தந்தைக்கும் தெரிந்து விடுமாயின் அவர்கள் அதிர்ச்சியடைந்து வருந்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவற்றை நான் அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துக் தின்று கொண்டே இருந்தது.

ஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன், மாமிசம் சாப்பிவேண்டியது முக்கியம்தான், நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே என்றாலும், தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்பிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால், அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவதற்கில்லை. அவர்களுக்குப் பிற்காலம் நான் சுதந்திரம் பெற்றுவிடுவேன். ஆனால் அச்சமயம் வரும் வரையில் நான் அதைச் சாப்பிடாமல் இருந்து விடுவேன்.

நான் செய்துகொண்ட இந்த முடிவை என் நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பின்னர் மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை. தங்கள் குமாரர்களில் இருவர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எனது புனிதமான ஆசையின் காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை நான் விட்டேன். ஆனால், என் நண்பருடன் பழகுவதை மாத்திரம் விடவில்லை. அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று நான் கொண்ட ஆர்வம் எனக்கே பெருந்தீங்காக விளைந்தது. இந்த உண்மையை அப்பொழுதெல்லாம் நான் அறிந்து கொள்ளவே இல்லை.

இதே சிநேகம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்யும் படியும் செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு சிறு மயிரிழையில் தப்பிக்கொண்டேன். என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன். ஆனால் கடவுள் தமது எல்லையில்லாக் கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நா எழவில்லை. படுக்கையில் அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியவில்லை. ஆகவே, அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் என்னைக் காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு நினைவிருக்கின்றன.

அநேகமாக இவற்றிக்கெல்லாம் என்னளவில் நான் செய்த முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக் கொண்டு கவனித்தால், இந்தச் சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது. அது காரியத்தைச் செய்தவிட்டதற்குச் சமமே. ஆனால் சாதாரண நோக்கோடு கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன் காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான். நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும் இந்த அர்த்தத்திலேதான்.

சில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது. அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும்போது, அவ்விதம் தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான் முயன்றாலும் அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள் குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம்.

இவையெல்லாம் எவ்விதம் நிகழ்சின்றன? மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது ? என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்று மர்மங்களாகவே இருந்து வரும் இனிக் கதையைத் தொடர்ந்து கவனிப்போம். என் நண்பரின் சகவாசம் தீமையானது என்பதை அறிய, இந்த விபசாரி நிகழ்ச்சி கூட என் கண்களைத் திறந்து விடவில்லை. எனவே, நான் எதிர்பாராத வகையில் அவரிடம் இருக்கும் சில குறைகளை என் கண்ணாலேயே கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது வரையில் நான் மற்றும் பல கசப்பான மருந்துகளை விழுங்கியாக வேண்டியிருந்தது. நாம் காலவாரியாகப் போய்க் கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன்.

என்றாலும் ஒரு விஷயம் அதே சமயத்தில் நடந்ததாகையால் அதைப்பற்றி இப்பொழுது நான் கூறவே வேண்டும். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம், இந்த நண்பரோடு நான் சேர்ந்திருந்ததே என்பதில் சந்தேகமில்லை. மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன் நான். என் மனைவி மீது நான் கொண்டிருந்த சந்தேகத்தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார். அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே இல்லை. அவர் கூறியவைகளைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியை இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின் அவதாரம் என்று போற்றுகிறேன்.

ஓரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறி விடுவான். நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் இருந்துவிடுவாள். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள் எங்கே போவது ? ஒரு ஹிந்து மனைவி, கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம் இல்லை. என் மனைவியையும் நான் இத்தகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது, என்னை மன்னித்துவிடவும் முடியாது.

அகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன். அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும் போதெல்லாம் என்னுடன் தவறுக்காகவும் காமக் குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நன்பரிடம் நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாடுக்காகவும் வருந்துகிறேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum