தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவன் அதிகாரம்

Go down

கணவன் அதிகாரம் Empty கணவன் அதிகாரம்

Post  birundha Fri Mar 22, 2013 5:56 pm

எனக்கு விவாகமான அந்தக் காலத்தில், காலணா அல்லது ஒரு தம்படி விலையில் ( எவ்வளவு விலை என்று இப்பொழுது எனக்குச் சரியாக நினைவில்லை ) சிறு பிரசுரங்கள் வெளியாகி வந்தன. தாம்பத்தியக் காதல், சிக்கனம், குழந்தை மணங்கள் முதலிய விஷயங்களையெல்லாம் பற்றி அவைகளில் விவாதிக்கபட்டிருக்கும். அவை எனக்கு கிடைத்த போதெல்லாம் ஒரு வரி விடாமல் அவற்றைப் படிப்பேன். எனக்குப் பிடிக்காதவற்றை மறந்துவிடுவதும், பிடித்தமானவற்றை அனுபவத்தில் நிறைவேற்றி வருவதும் என்னிடம் இருந்த பழக்கமாகும். மனைவியிடம் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் இருந்து வர வேண்டியது ஒரு கணவனின் கடமை என்று இப்பிரசுரங்களில் கூறப்பட்டிருந்தது. அத்துடன், சத்திய வேட்கையும் என்னுள் இருந்ததால் மனைவியிடம் உண்மைக்கு மாறாக நடந்து கொள்ளுவது என்பதற்கே இடமில்லை. மேலும், அந்தச் சிறு வயதில் மனைவிக்குத் துரோகம் செய்யத் சந்தர்ப்பமும் கிடையாது.

ஆனால் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தினால் எதிரிடையான ஒரு விளைவு ஏற்பட்டது. நான் என் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ளுவதென்றால், அவளும் என்னிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இந்த வண்ணம் என்னைச் சந்தேகம் கொண்ட கணவனாக ஆக்கிவிட்டது. அவள் உண்மையோடு நடப்பவளாக இருக்கும்படி செய்வதற்கு, அவளுடைய கடமையை எளிதில் என் உரிமையாக ஆக்கிக் கொண்டேன். அந்த உரிமை விஷயத்தில் நான் விழிப்புடன் இருந்து வலியுறுத்துவது என்றும் தீர்மானித்தேன். அவளுடைய பக்தி விசுவாசத்தில் நான் சந்தேகம் கொள்ளுவதற்குக் காரணமே இல்லை. ஆனால், காரணங்களுக்காகச் சந்தேகம் காத்துக் கொண்டிருப்பதில்லை.

ஆகவே, அவள் செய்வதையெல்லாம் எப்பொழுதுமே கவனித்து வரவேண்டியது அவசியம் அல்லவா? என் அனுமதியின்றி அவள் எங்குமே போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். இது எங்களுக்குள் கடுமையான சச்சரவுக்கு விதை ஊன்றிவிட்டது. நான் விதித்திருந்த கட்டுப்பாடு உண்மையில் அவளுக்கு ஒரு வகையான சிறைத்தண்டனையே, இத்தகைய காரியத்திற்கு உடன் பட்டுவிடக் கூடிய பெண்ணல்ல, கஸ்தூரிபாய். தான் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய போதெல்லாம் அவள் பிடிவாதமாகப் போய்க் கொண்டுதான் இருந்தாள். நான் கட்டுப்பாடுகளை அதிகமாக விதிக்க விதிக்க, அவள் தன் இஷ்டம்போல் நடப்பதும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அதனால் எனக்கு ஆத்திரமும் அதிகமாகிக் கொண்டே போயிற்று. குழந்தைத் தம்பதிகளான எங்களுக்குள், ஒருவரோடடொருவர் பேசாமல் இருந்துவிடுவது என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. என்னுடைய கட்டுத் தி;ட்டங்களைக் கஸ்தூரிபாய் மீறியதில் யாதொரு தவறுமில்லை என்றே நான் இன்று எண்ணுகிறேன். கோயிலுக்குப் போகக் கூடாது என்றும், தன் தோழிகளைப் போய் பார்க்க கூடாது என்றும் தடைவிதித்தால், கபடமற்ற ஒரு பெண் அவற்றை எப்படிச் சகிப்பாள் ? அவளுக்குக் கட்டுத் திட்டங்களை யெல்லாம் விதிக்க எனக்கு உரிமை இருக்கிறதென்றால், அதே போன்ற உரிமை அவளுக்கும் உண்டு அல்லவா ? இவையெல்லாம் இன்று எனக்குத் தெளிவாகப் புரிகின்றன. ஆனால் அப்பொழுதோ கணவனுக்குரிய அதிகாரங்களைச் செலுத்தியாக வேண்டும் என்றே நினைத்து வந்தேன். என்றாலும், எங்களுடையே வாழ்க்கை மாறாத கசப்பு நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது என்று வாசகர்கள் நினைத்துவிட வேண்டாம். நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கெல்லாம் அன்பே காரணம் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்ய வேண்டும் என்பதே என் அபிலாஷை.

கஸ்தூரி பாய்க்கு அப்படிப்பட்ட அபிலாஷை ஏதாவது இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அவள் எழுதப் படிக்கத் தெரியாதவள். சுபாவமாகவே அவள் கபடமற்ற தன்மையும், சுயேச்சை நோக்கும், விடாமுயற்சியும் உடையவள். குறைந்தபட்சம் என் விஷயத்தில் மாத்திரம் பேச வெட்கப்படுபவள். தன்னுடைய அறியாமையைக் குறித்து அவளுக்குக் கவலையே இல்லை. நான் படித்து வந்தது, தானும் அவ்வாறு படிக்க வேண்டும் என்று முயற்சியில் ஈடுபடும் உற்சாகத்தை அவளுக்கு அளித்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆகையால் நான் கொண்டிருந்த அபிலாஷையெல்லாம் என்னோடு தான் நின்றது என்று எண்ணுகிறேன். அவள் ஒருத்தி மீதே நான் என் முழு ஆசையும் வைத்திருந்ததுபோல அவளும் என்மீது ஆசை வைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படி அவள் ஆசை வைக்காது போனாலும் வாழ்க்கை மீளாத் துன்பமாக இருந்திருக்க முடியாது. ஏனெனில், ஒரு பக்கத்திலாவது தீவிரமான அன்பு இருந்தது.

அவளிடம் எனக்கு அடங்காப் பிரேமை என்பதை நான் சொல்லவே வேண்டும். பள்ளிக்கூடத்தில்கூட எனக்கு அவள் நினைப்புத்தான். இரவானதும் அவளைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் மனத்தில் தோன்றிக் கொண்டே இருக்கும். பிரிந்திருப்பது என்பதோ சகிக்க முடியாததாகும். இரவில் நெடுநேரம் வரையில் ஏதோதோவெல்லாம் பேசி அவளைத் தூங்கவிடமாட்டேன். இத்தகைய அடங்காத காமவெறிக்கு மாற்றாகக் கடமையில் தீவிரமான பற்றுமட்டும் எனக்கில்லாதிருந்தால், நான் நோய்வாய்ப்பட்டு அகால மரணத்தை அடைந்திருப்பேன், இல்லையானால், பிறருக்குப் பாரமாக இருந்து வாழ வேண்டியவனாகியிருப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கென்றிருந்த வேலைகளை நான் செய்த தீரவேண்டியிருந்தது. யாரிடமும் பொய் சொல்லுவது என்பதோ என்னால் ஆகவே ஆகாது. கடைசியாகச் சொன்ன இந்தக்குணமே படுகுழியில் விழாமல் பல தடவைகளிலும் என்னைக் காத்தது.

கஸ்தூரிபாய் எழுத்து வாசனை இல்லாதவள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அவளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்று நான் மிகவும் ஆவலோடு இருந்தேன். ஆனால், காமமே மேலோங்கி நிற்கும் காதலினால் அதற்கு நேரமே இல்லாது போயிற்று. அவளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதனால், அவளுடைய இஷடத்திற்கு மாறாக, அதுவும் இரவில்தான் சொல்லிக் கொடுக்க முடியும். பெரியவர்கள் இருக்கும்போது அவளைச் சந்திப்பதற்கே எனக்குத் துணிவு இல்லையென்றால், அவளுடன் பேசுவது எப்படி ? கத்தியவாரில் அப்பொழுது ஒரு விசித்திரமான, உபயோகமற்ற, காட்டு மிராண்டித்தனமான பர்தா முறை ( கோஷா முறை ) இருந்தது. இப்பொழுதும்கூட அது ஒரளவுக்கு இருந்து வருகிறது. இவ்விதம் சந்தர்ப்பங்கள் சாதகமானவையாக இல்லை. ஆகையால் வாலிபப் பருவத்தில் கஸ்தூரி பாய்க்குக் கல்வி கற்பிக்க நான் செய்த முயற்சிகளெல்லாம் வெற்றி பெறவில்லை. என்பதை நான் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். காமத் தூக்கத்திலிருந்து நான் விழித்தெழுவதற்கு முன்பே பொது வாழ்க்கையில் இறங்கி விட்டேன். ஆகையால், எனக்குப் போதிய ஓய்வு நேரம் இல்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட உபாத்தியாயர்களைக் கொண்டு போதிக்கவும் தவறிவிட்டேன். இதன் பயனாக, இன்று கஸ்தூரிபாய் சிரமத்தின் பேரில் சாதாரணக் கடிதங்களை எழுதிக் கொள்ளவும், எளிய குஜராத்தி மொழியைப் புரிந்து கொள்ளவுமே முடியும். நான் அவளிடம் கொண்டிருந்த அன்பு, காமக் கலப்பே இல்லாததாக இருந்திருக்குமாயின், இன்று அவள் சிறந்த படிப்பாளியாக இருப்பாள். ஏனென்றால் படிப்பதில் அவளுக்கு இருந்த வெறுப்பையும் அப்பொழுது நான் போக்கியிருக்க முடியும். பரிசுத்தமான அன்பினால் ஆகாதது எதுவுமே இல்லை என்பதை நான் அறிவேன்.

காமம் மிகுந்த அன்பினால் ஏற்படும் நாசங்களிலிருந்து என்னை அநேகமாகக் காப்பாற்றிய ஒரு சந்தர்ப்பத்தை மட்டும் இங்கே சொன்னேன். குறிப்பிடத்தக்க மற்றொன்றும் உண்டு. நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருளுவார் என்பதை எத்தனையே உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன. ஹிந்து சமூகத்தில் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடும் கொடிய வழக்கம் இருந்தாலும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகளை ஒரளவுக்குக் குறைக்கக் கூடிய மற்றொரு வழக்கமும் அதனிடம் இருந்தது. இளம் தம்பதிகள் நீண்ட காலம் சேர்ந்து இருக்கப் பெற்றோர்கள் விடுவதில்லை. குழந்தைப் பருவ மனைவி. பாதிக்காலத்தைத் தன் பெற்றோரின் வீட்டிலேயே கழித்து விடுகிறாள். எங்கள் விஷயத்திலும் இப்படியே ஆயிற்று. அதாவது, எங்கள் மண வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் ( அதாவது 13-இலிருந்து 18-ஆம் வயது வரையில் ) மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் சேர்ந்திருந்ததில்லை. ஆறு மாதகாலத்தை ஒன்றாக இருந்து கழித்திருப்போம். அதற்குள் என் மனைவியை அவளுடைய பெற்றோர்கள் அழைத்துப் போய்விடுவார்கள். அப்படி அiதுத்துக் கொண்டு போய்விடுவது அந்தச் சமயத்தில் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காமல்தான் இருந்தது. ஆனால் அவ்விதம் அழைத்துச் சென்றதே எங்கள் இருவரையும் காப்பாற்றியது. பதினெட்டாவது வயதில் நான் இங்கிலாந்துக்குப் போனேன். இதனால் ஏற்பட்ட நீண்ட பிரிவு, எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது. இங்கிலாந்திருந்து நான் திரும்பி வந்த பிறகும் கூட ஆறு மாதங்களுக்கு மேல் நாங்கள் சேர்ந்து வாழ்ந்ததில்லை. ஏனெனில் ராஜ கோட்டுக்கும் பம்பாய்க்கும் நான் ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. பிறகு நான் சிற்றின்ப இச்சையிலிருந்து பெரிதும் விடுபட்ட நிலையில் இருந்தேன்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum