தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தர்ப்பூசணி சாகுபடி

Go down

தர்ப்பூசணி சாகுபடி Empty தர்ப்பூசணி சாகுபடி

Post  meenu Fri Mar 22, 2013 1:28 pm

வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. இப்பயிரில் உள்ள பல ரகங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் குறைந்த செலவில் சாகுபடி செய்து அதிக லாபத்தை தரக்கூடியதாகும்.

விவசாயிகள் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து அதிக வருவாயைப் பெறலாம்.

இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல தோட்டக்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கே.மணிவண்ணன் தெரிவித்தது:

Courtesy: Dinamani





தர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
அர்கா மானிக், அர்கா ஜோதி, டி.கே.எம். 1, சுகர்பேபி, அசாகியமாடோ, சார்லஸ்டன் கிரே, அம்ரூத், பூசா பேடானா மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.

விதையும், விதை நேர்த்தியும்:

3 முதல் 4 கிலோ வரை நல்ல தரமான விதைகளாக தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். விதைகளையும், இளம் செடிகளையும் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கமலிருக்க ஒரு ஹெக்டேருக்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற பூஞ்சாணக் கொல்லி அல்லது 2 கிராம் கார்பண்டாசிம் அல்லது திரம் என்ற பூஞ்சாண மருந்தில் ஏதேனும் ஒன்றை கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.

நிலம் தயார் செய்தல்:

நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய உழவில்லா குழி நடவு முறையைப் பின்பற்றலாம். இம்முறையில் நெல் தரிசு நிலத்தில் உள்ள நெல் பயிர் அடித்தாழ் மற்றும் உளுந்துப் பயிரின் அடிச்சக்கையை நன்று சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
இவைகளை தர்ப்பூசணிக்கு மண் போர்வையாக அல்லது மண்புழு உரம் அல்லது மட்கு தயார் செய்ய பயன்படுத்தலாம். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலத்தில் 15ஷ்15 மீட்டர் இடைவெளியில் 50ஷ்50ஷ்50 செ.மீ. குழிகளை அமைக்க வேண்டும்.
இக்குழியில் உள்ள மண்ணை நன்கு கடப்பாரை மற்றும் மண்வெட்டி போன்ற கருவிகளால் கொத்தி, விதை நடவுக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வேண்டும்.
இங்ஙனம் தயார் செய்யப்பட்ட குழிகளில் அடிஉரம் இட்டு குழிக்கு 5 விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் நட்டவுடனும், நட்ட மூன்று நாள் இடைவெளியில் மூன்று நீர்ப்பாசனம் முழுமையாக தர வேண்டும்.

உர நிர்வாகம்:

ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரத்துடன் 30:65:85 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இட வேண்டும்.
இதில் பாதியளவு தழை, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை உழவில்லா சாகுபடி முறையில் குழியமைக்கும் போதும், மீதமுள்ள தழைச்சத்தை இரண்டு பகுதியாக நட்ட 30 மற்றும் 60 நாள்களில் இட வேண்டும்.
தொழு உரத்துக்கு பதிலாக 25 டன் மக்கிய அல்லது சாண எரிவாயுக்கு பயன்படுத்திய கரும்பு ஆலைக்கழிவு அல்லது 2.5 டன் மண்புழு உரம் அல்லது 12.5 டின் செரிவூட்டப்பட்ட தாவரமட்கு அல்லது 2.5 டன் செரிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவு மட்குகளை பயன்படுத்தலாம்.
இத்துடன் ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து பயன்படுத்த வேண்டும்.

நீர்ப்பாசனம்:

தர்ப்பூசணி சாகுபடிக்கு தகுந்த நீர்ப்பாசன முறையை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் அப்பருவத்தில் பாசன நீரின் அளவு மிகக்குறைவு. ஆழ்துளை கிணற்றுப் பாசன வசதியுள்ளவர்கள் நல்ல முறையில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய முடியும்.
இவர்கள் பாத்தி பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனம் அல்லது தெளிநீர்ப் பாசனம் என வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். கிணற்றுப் பாசன வசதியில்லாதவர்கள் அருகிலிருந்து வடிகால் வாய்க்காலில் இருக்கும் தண்ணீரை குடிநீர் பாசன முறையில் பயன்படுத்தலாம்.

வளர்ச்சி ஊக்கிகள்:

எத்தரல் என்னும் பயிர் வளர்ச்சி ஊக்கியை 250 பி.பி.எம். (2.5 மி.லி எத்தரல் மற்றும் 10 லிட்டர் தண்ணீர்) கரைசலாக தயார் செய்து, விதை முளைத்து செடியில் 2 இலை மற்றும் நான்கு இலை உற்பத்தியாகும் சமயத்திலும், அடுத்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிப்பதால் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகரித்து மகசூலை அதிகரிக்கலாம்.
புகைமூட்டம் போடுதல்: எத்தரல் கரைசல் தெளிக்க இயலாதவர்கள், நட்ட 15 நாள்களிலிருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை வயலில் ஒரு ஓரமாக காற்றடிக்கும் திசையில் புகைமூட்டம் போட்டால், அதிக பெண் பூக்கள் உற்பத்தியாவது அறியப்பட்டுள்ளது.
இது ரசாயன முறை சாகுபடியில் தெளிக்கும் எத்திலீன் என்ற வினையூக்கி தெளிப்பதற்கு சமமானது.

களை நிர்வாகம்:

செடி வளர்ந்து படரும் இடங்களில் உள்ள களைச் செடிகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

இலை வண்டு மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி 1 மிலி அல்லது மிதைல் டெமடான் 25 இசி 1 மிலி தெளிக்கவும், சாம்பல் நோயை கட்டுப்படுத்த 1 மிலி டினோகாப் அல்லது கார்பண்டாசிம் 0.5 கிராம் லிட்டர் என்ற அளவில் நட்ட 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.

அறுவடை:

பூ மகரந்த சேர்க்கையடைந்ததிலிருந்து 40 நாள்களில் பழங்களை அறுவடை செய்யலாம். நன்குப் பழுத்த பழங்களை மட்டுமே அறுவை செய்ய வேண்டும்.
பழக்காம்பு காய்தல், பழத்தைத் தட்டினால் ஏற்படும் சப்தம் மற்றும் பழம் மண்ணில் படும் இடங்கள் பச்சை நிறத்திலிருந்து வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவற்றை கணித்து பழமுதிர்ச்சியை அறிந்து அறுவடை செய்யலாம்.
தமிழக விவசாயிகள் நெல் பயிரிடாத காலங்களில் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 50 முதல் 60 டன்கள் வரை மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம் என்கிறார் பேராசிரியர் கே.மணிவண்ணன்.
தர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம். அர்கா மானிக், அர்கா ஜோதி, டி.கே.எம். 1, சுகர்பேபி, அசாகியமாடோ, சார்லஸ்டன் கிரே, அம்ரூத், பூசா பேடானா மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum