இனிமையோ இனிமை!
Page 1 of 1
இனிமையோ இனிமை!
அடுத்த தலைமுறைக் கலைஞர்களில் அசாத்தியமான திறமைசாலி என்று யாரை மதிப்பிடுவீர்கள் என்று யாராவது நம்மிடம் கேட்டால் சற்றும் யோசிக்காமல் சட்டென்று நாம் சொல்லும் பெயர் கே.காயத்ரியாகத்தான் இருக்கும். இந்த வயதிலேயே இப்படியொரு வித்வத்தை அந்தக் காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி போன்றோரிடம் பார்த்திருக்கக் கூடும். ஆனால், நமது தலைமுறையில் அப்படியொரு அசாத்தியமான மனோதர்மமும் பாவமும் கணக்கு விவகாரங்களில் பிரமிப்பான தேர்ச்சியும் உள்ள இளம் கலைஞர் கே. காயத்ரி மட்டுமே. சர்வ லகுவில் மிருதங்கம் வாசிப்பதுபோல சிக்கலான கணக்கு விவகாரங்களை சர்வசாதாரணமாக சிரித்துக் கொண்டே அவரால் மட்டுமே பாட முடியும்.
கிருஷ்ணகான சபா சார்பில் புதன்கிழமை மாலை 6.30 மணி கச்சேரி கே.காயத்ரியுடையது. உஷா ராஜகோபால் வயலின், திருவனந்தபுரம் வைத்தியநாதன் மிருதங்கம், ராஜாராமன் கடம். அன்றைய கச்சேரியைக் கேட்காதவர்கள் துர்பாக்கியசாலிகள்.
எடுத்த எடுப்பிலேயே "கல்யாணி' ராகத்தில் "வனஜாக்ஷி' வர்ணம். அதுவல்ல விசேஷம். அதைக் கீழ்க் காலம், மேல் காலம், மத்திம காலம் என்று மூன்று காலத்தில் பாடி திஸ்ரம் செய்ததுதான் விசேஷம். பெரிய வித்வான்களேகூட இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு சிரமப்படுவதில்லை. காயத்ரி சிரமமே படாமல் அதை சாதித்துக் காட்டுகிறார்.
தொடர்ந்தது "ஹரிகாம்போதி'யில் "தினமணி வம்ச'. பல்லவியில் ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு, "முகாரி' ராகத்தை ஆலாபனை செய்யத் தொடங்கினார். ஆலாபனைக்கு எடுத்துக்கொண்ட முதல் ராகமே "முகாரி'யா என்று யாராவது முகம் சுளித்தால், அவர்கள் அன்றைய காயத்ரியின் கச்சேரியைக் கேட்காதவர்கள். அப்படியொரு லட்சணமான "முகாரி'. "எந்தநினே வர்ணிந்துனு சபரி பாக்யமு' என்கிற தியாகய்யரின் சாகித்யம். அதில் "கனுலார சேவிஞ்சி' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார் அவர்.
விஸ்தாரமான ஆலாபனையுடன் கூடிய "முகாரி'க்குப் பிறகு ரசிகர்களுக்கு சற்று ரிலீஃபுக்காக பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்காரின் "நீ கேலநாயெட' என்கிற "தேவமனோகரி' சாகித்யத்தைப் பாடினார். தொடர்ந்து அற்புதமான "பூர்விகல்யாணி'. அதை ஆலாபனை செய்தார் என்பதைவிட, "பூர்விகல்யாணி'யை ஆவாஹனம் செய்தார் என்பதுதான் நிஜம். காயத்ரியின் குரல்வளத்துக்கும் அவருடைய ராக பாவத்துக்கும் "பூர்விகல்யாணி' அப்படியே அரங்கத்தை வியாபித்தது போங்கள்! தேர்ந்தெடுத்துக் கொண்ட சாகித்யம் வழக்கம்போல தீட்சிதரின் "மீனாட்சி மேமுதம் தேஹி'. அதில் "மதுராபுரி நிலையே' என்ற இடத்தில் எல்லோரையும் போல நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார். ஆனால், அவருடைய "பூர்விகல்யாணி' எல்லோருடையதையும் போல அல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாக இருந்ததுதான் சிறப்பு. தொடர்ந்து தனி.
அன்றைய ராகம் தானம் பல்லவிக்கு அவர் எடுத்துக்கொண்ட ராகம் "லலிதா'. அதற்கே அவருக்கு ஒரு சபாஷ் போட வேண்டும். கண்டதிரிபுடை தாளத்தில் திஸ்ர நடையில் அமைந்த "லலிதா பரமேஸ்வரி பாஹி பவானி ஸ்ரீ' என்கிற பல்லவி. வீச்சுக்கு ரெண்டு தள்ளி அதீத எடுப்பு. இந்தத் துணிச்சல் பெரிய பெரிய வித்வான்களுக்கே வராதே என்று வியப்படைய தேவையில்லை. சுகுணா புருஷோத்தமனின் தயாரிப்பு. இல்லையில்லை, அப்படிச் சொல்லி விட்டுவிட்டால் எப்படி? சுகுணா புருஷோத்தமனின் பெயரை நிலைநிறுத்த வந்த தயாரிப்பு என்றல்லவா சொல்ல வேண்டும்!
"லலிதா பரமேஸ்வரி பாஹி பவானி ஸ்ரீ ' என்கிற பல்லவியில் உள்ள "லலிதா', "பவானி', "ஸ்ரீ' என்கிற மூன்று இடத்திலும் ஸ்வரம் பாடினார். அனுலோமமும் பிரதிலோமமும் பண்ணினார். பூச்சி அய்யங்கார் "பரஸ்' ராகத்தில் அமைத்த தில்லானா ஒன்றைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் காயத்ரி.
ஒரு இடத்தில்கூட தொய்வில்லாத காத்திரமான அவரது சாரீரம் என்ன பிருகா வேண்டுமானாலும் பேசுகிறது. இலக்கண சுத்தமான சங்கீதம். எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு மணி நேரம் இனிமையோ இனிமை. கே. காயத்ரியின் கச்சேரியைப் பற்றிச் சொல்வதாக இருந்தால், பிரமாதம்! அதற்குமேல் வர்ணிக்க வார்த்தையில்லை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum