தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணல் மேல் எழுதியதும் பாறை மேல் செதுக்கியதும்

Go down

மணல் மேல் எழுதியதும் பாறை மேல் செதுக்கியதும் Empty மணல் மேல் எழுதியதும் பாறை மேல் செதுக்கியதும்

Post  meenu Sat Mar 09, 2013 2:40 pm

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோவொரு நல்ல தன்மை இருக்கும். சில சமயம் அது வெளிப்படையாகத் தெரியாதபோது, நாம் அவரது உள் மனதை ஆழமாய் அறிய வேண்டியிருக்கும். இது தவிர, மற்றவரிடத்திலும் என்ன தவறு இருக்கிறது என்பதைப் பார்க்கப் பழகி விட்டதால், சரியானது எது என்பதைக் கண்டறிய நாம் மறந்து விடுகிறோம். நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும்தான். கொடுப்பவர்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவர் அல்ல. இந்த உலகில் நம்முடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இதன் வழியாக தூய்மையும் பரிபூரணத்தன்மையும் நம்மை வந்தடையும்.

‘‘தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர் நிலைக்கு வாருங்கள். கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள். தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள். காசு பணமின்றி, திராட்சை ரசமும், பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவி கொடுங்கள். நல்லுணவை உண்ணுங்கள். கொடுத்ததை உண்டு மகிழுங்கள். ‘‘எனக்குச் செவி கொடுங்கள். என்னிடம் வாருங்கள், கேளுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் என்றுமுள உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன்.

தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்கு காட்சியாகவும் வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ நீ அறியாத பிற இன மக்களை அழைப்பாய். உன் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டு உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடி வருவர். ஏனெனில் அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ‘‘ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள். அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும் தீயவர் தம் எண்ணங்களையும் விட்டு விடுவார்களாக. அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும். அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார். அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.

‘‘என் எண்ணங்கள், உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள், என் வழிமுறைகள் அல்ல என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும் உங்கள் எண்ணங்களை விட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன. அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள். அமைதியுடன் நடத்திச் செல்லப்படுவீர்கள். மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும். காட்டு மரங்கள் கை காட்டி ஆர்ப்பரிக்கும். இது ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும். அழிவில்லா என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும்’’ (எசாயா 55:1-13) மனிதன் உணர்ச்சிக்கு அடிமை. உணர்ச்சி மிகும்போது சில சமயம் அறிவு மழுங்கிப் போகும். ஆவேசத்தில் செய்வதறியாது, அறிவிற்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்பவர் பலர். மன அடக்கம் சிதறிப் போனால் அறிவும் கை விட்டுப் போகலாம். அறிவு வீழ்ச்சி என்பது வாழ்க்கையின் வீழ்ச்சியே.
நெருங்கிய நண்பர் இருவர் ஒரு பாலைவனத்தின் வழியே பயணம் செய்து கொண்டிருந்தனர். அது ஒரு நீளமான கடினப் பயணம்.

பயணத்தினிடையே மிகவும் களைப்புடனும் பசியுடனும் தாகத்துடனுமிருந்த நண்பர்களிடையே ஒரு சிறுவாக்குவாதம் வந்தது. அது முற்றி கோபமுற்ற ஒரு நண்பன் மற்றொருவனைக் கன்னத்தில் அறைந்தான். அடி வாங்கியவன் மிகவும் வருத்தப்பட்டு, ‘இன்று என் உயிர் நண்பன் என்னைக் கன்னத்தில் அறைந்து விட்டான்’ என்று தன் விரல்களால் மணலில் எழுதினான். இருவரும் மீண்டும் எழுந்து பயணிக்கத் தொடங்கினர். கஷ்டப்பட்டு ஒரு பாலைவனச் சோலையை அடைந்தனர். அங்கு கனிகள் உண்டு. நீரருந்தி இளைப்பாறினர். பின்பு அங்கு இருவரும் குளிக்கும்போது, அடிவாங்கிய நண்பன் ஒரு புதைகுழியில் மாட்டித் தவித்தான். இதைப் பார்த்த அவனது நண்பன் கஷ்டப்பட்டு அவனைக் காப்பாற்றினான்.

வெளியே வந்தவுடன் காப்பாற்றப்பட்டவன் பக்கத்திலிருந்த பாறையில் தனது கூரிய ஆயுதத்தைக் கொண்டு, ‘இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்’’ என்று எழுதினான். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த நண்பன், ‘‘நான் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதினாய். இப்போது உன்னை காப்பாற்றியபோது அதைப் பாறையில் செதுக்குகிறாயே ஏன்?’’ என்று கேட்டான். ‘‘நமக்கு யாராவது தீங்கு செய்தால் அதை மணலில் எழுதுவதைப் போன்று எளிதாக, நம் மனதிலிருந்து அழியக் கூடியதாக நாம் பாவிக்க வேண்டும்; நமக்கு யாராவது நன்மை செய்யும்போது அதை பாறையிலுள்ள எழுத்துகளைப் போல் அழியாததாக மனதில் பதிய வைக்க வேண்டும்’’ என்றான், நண்பன்.

நல்ல மனமுடைய மக்கள் அன்பாகவும் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் தன்னடக்கத்துடனும் இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் மேலும் பிறர் மேலும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். எப்போதும் அவர்கள் நல்லவிதப் பலன்களை எதிர்பார்த்து இருப்பார்கள். நல்ல மனம் கொண்டவர்கள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கின்ற பழம் போன்றவர்கள். அவர்களை எல்லோரும் விரும்புவார்கள். நல்ல மனப் போக்கானது நம்மில் உள்ள திறமைகளைப் பெருக்குகிறது. ஒரு குழுவாக ஒன்றிணைந்து கருத்தொருமித்து வேற்றுமையின்றி, ஒருங்கிணைந்த உணர்வோடு வேலை செய்யும் பக்குவத்தை வளர்க்கிறது. பிரச்னைகளை வளரவிடாது தீர்க்கிறது. மாறுபட்ட எண்ணங்களைப் போக்குகிறது. நல்ல சுமுகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

தரத்தை மேம்படுத்துகிறது. விசுவாசத் தன்மையை வளர்க்கிறது. உறவின் முறை வளர்ச்சிகளை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சமுதாயத்திற்கு உதவும் அங்கத்தினராகவும் அரிய சொத்தாக நாம் ஆவதற்கும் உதவுகிறது. இனிய குணநலனுள்ளவராக நம்மை ஆக்குகிறது. ‘‘ஆண்டவர் கூறுவது இதுவே. ஞானி தன் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். பெருமை பாராட்ட விரும்புபவர், ‘நானே ஆண்டவர்’ என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும் பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் ஆண்டவர்’’. (எரேமியா:23-24)
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum