தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரம்பொருள் ஒன்றே சிறகை விரி, பற!

Go down

 பரம்பொருள் ஒன்றே சிறகை விரி, பற! Empty பரம்பொருள் ஒன்றே சிறகை விரி, பற!

Post  meenu Sat Mar 09, 2013 1:22 pm

கல்லூரி நாட்களில் சென்னை கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டேன். அதற்காக இஸ்லாமிய இலக்கியமான சீறாப்புராணத்தைப் புரட்டிப் பார்த்த போது ஒரு சம்பவத்தை கவனித்தேன். நபிகள் நாயகம் அவர்களும், அவரின் உறவினர் ஒருவரும் பகைவர் துரத்த ஒரு குகையில் வந்து மறைந்திருந்தனர். ‘அவர்கள் பலர், நாமோ இருவர்’ என்று உறவினர் பதற, ‘நாம் இருவர் அல்ல; மூவர்’ என்றார் நபிகள். ‘இருவர்தானே இருக்கிறோம். மூன்று பேர் எப்படி?’ என்று, கூட இருந்தவர் குழம்ப, ‘இறைவனும் நம்மோடு இருக்கும் போது, நாம் மூவர்தானே?’ என்று நபிகள் விளக்கும்

படலத்தை சீறாப்புராணத்தில் படித்தபோது, என்னுள் ஒரு மின்னல் - ‘‘மூவரல்ல நாம் நால்வர்’’ என்று முதலாழ்வார்கள் உணர்ந்த வைணவ மரபுச் சம்பவம் ஒன்று உண்டே!
ஒரு கரிய மழை நாள் இரவு. கொட்டும் மழையில் ஒரு வீட்டின் திண்ணையில் பொய்கையாழ்வார் ஒதுங்கினார். சிறிய இடம். ஒருவர் மட்டும் படுக்கலாம். படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். ‘ஒருவர் படுக்க, இருவர் உட்காரலாம்’ என்று இருவரும் உட்கார்ந்தார்கள். சற்று நேரத்தில் மூன்றாவதாக பேயாழ்வார் வந்து சேர்ந்தார். ‘இருவர் உட்காரலாமெனில் மூவர் நிற்கலாம்’ என்று அவரும் ஒதுங்க மூவரும் நின்று கொண்டார்கள். இருளில் அவர்களுடன் நான்காவதாக ஒருவர் இருப்பதை உணர்ந்தார்கள். மூவரல்ல; நாம் நால்வர் - கடவுளும் நம்முடன் இருக்கிறார் என்று கண்டு கொண்டனர். இது திருக்கோவலூரில் நடந்த சம்பவம்.

‘‘இருவரல்ல நாம் மூவர்’’ என்று நபிகள் சொன்னதும், ‘‘மூவரல்ல நாம் நால்வர்’’ என்று ஆழ்வார்கள் உணர்ந்ததும் ஒரே கோட்டில் சந்திக்கும் இந்த விந்தைதான் நம் மதங்களை இணைக்கும் வசீகரமான பாலம். இறைவன் கால எல்லைகளைக் கடந்தவன் என்கிறது இந்து மதம். ‘‘காலமும் கணக்கும் நீத்த காரணன்’’ என்று கம்பர் சொல்கிறார். அந்த இறைவனை சத்ஸ்ரீஅகால் என்று சீக்கிய மதம் அழைக்கிறது. அகால் என்கிற வார்த்தைக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். காலமில்லாதது எதுவோ, காலத்தை விஞ்சியது எதுவோ அதுவே கடவுள். காலத்தை விஞ்சிய கடவுளின் கால்களைப் பற்றினால் காலனையே வெல்லலாம் என்பது இரு மதங்களும் விளக்கும் நம்பிக்கை.

சீனாவின் தொன்மையான மதமான ஷெனிஸம் வழங்கும் பாரம்பரிய கதை இது. ஒவ்வொரு ஆண்டும் சீனப் பேரரசர் தன் குடிகளில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அங்கு விருந்துக்குப் போவார். அப்படி யார் வீட்டை அவர் தேர்ந்தெடுக்கிறாரோ, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் தன் சொத்து முழுவதையும் விற்று மன்னருக்குப் பெருவிருந்து படைப்பார். அப்படி ஒரு விருந்துக்கு பேரரசர் போனபோது, கூட்டம் கூட்டமாக எறும்புகள் எங்கோ செல்வதைக் கண்டார். எறும்புகள் மொழியை அறிந்த, தன்னுடன் வந்த ஞானியிடம், எறும்புகள் எங்கே போகின்றன என்று கேட்டறியச் சொன்னார்.

எறும்புகளிடம் பேசிய ஞானி சொன்னார். ‘‘ஒரு பேரரசனுக்கு வழங்கப்படும் மகத்தான விருந்துக்கு இவை செல்கின்றன!’’ இதைக் கேட்ட சீன மன்னருக்கு பெருமை தாங்கவில்லை. ஆனால் இதென்ன? எறும்புகள் வேறு திசையில் அல்லவா செல்கின்றன? அவற்றின் பாதையை மன்னரின் படை தொடர்ந்தது. எறும்புகள் போனதோ ஒரு மிக எளிய ஒரு குடிசைக்கு. ‘‘இதுவா பெரு விருந்து? என்ன நடக்கிறது?’’ மன்னர் கோபப்பட்டார். அந்நேரம் அவ்வழியே போன பிச்சைக்காரர் ஒருவர் தள்ளாடி விழ, குடிசைக்குச் சொந்தக்காரர் அவரை உள்ளே அழைத்துச் சென்று, நல்ல நீரும் உணவும் கொடுத்து, களைப்பு தீர விசிறியபடி நின்றார். எறும்புகளிடம் விசாரித்த ஞானி தயக்கத்துடன் மன்னரிடம் சொன்னார்: ‘‘மன்னா தனக்கான உணவை, பசியால் தள்ளாடும் விருந்தாளிக்குக் கொடுத்த குடிசையின் சொந்தக்காரர் தந்த விருந்தே பெரியது என்று எறும்புகள் நினைக்கின்றன. அங்கு சிதறும் உணவைத் தின்பதே அவற்றின் பசியைத் தீர்க்குமாம். சுயநலத்துடன் வழங்கப்படும் ஆடம்பர விருந்துகள் வெறும் கேலிக் கூத்துகளாம்.’’ சீன மன்னருக்கு ஞானம் பிறந்தது என்று கதை போகிறது.
இது வேறு எங்கோ நாம் கேட்ட கதை போல இருக்கிறது அல்லவா? மிகப் பிரமாண்டமான வேள்வியைச் செய்து விட்டு பெருமை பொங்க தானம் அளித்தார் தர்மபுத்திரர். தானம் செய்த இடத்தில் வந்து புரண்டு புரண்டு எழுந்தது ஒரு கீரி. அதன் உடலில் பாதி தங்கம் போல் மின்னியது. ‘‘எதற்காகப் புரள்கிறாய்?’’ கீரியைக் கேட்டார்கள். ‘‘மிகப் பெரும் தானம் நடக்கும் இடத்தில் புரண்டால், மீதி உடலும் தங்கமாகும் என்று நம்பி வந்தேன். இந்த இடத்தில் பெரும் தானம் நடக்கவில்லை போலும். அதனால்தான் என் மீதி உடல் தங்கமாகவில்லை’’ என்றது, கீரி.

அதைக் கேட்ட தர்மர் பதறிப் போனார். ‘‘இது என்ன விந்தை? இதை விடப் பெரிய அளவில் யாராவது தானம் செய்யமுடியுமா என்ன? எந்த இடத்தில் நடந்த யாகத்தில் பாதி உடல் தங்கமானது?’’ என்று கீரியை விசாரித்தார். ‘‘அது யாகத்தில் கிடைத்ததல்ல,’’ கீரி பதில் சொன்னது. ‘‘மிகச் சிறிய குடும்பம். சாப்பிட ஒன்றும் இல்லை. கொஞ்சம் மாவு கிடைத்தது. அதைக் குடும்பத் தலைவர் கொண்டு வரும் வரையில் உயிரைக் கையில் பிடித்திருந்த குடும்பம் அவர் வந்ததும் அந்த மாவில் ரொட்டி செய்து உண்ணத் தயாரானது. அந்த நேரத்தில் பசியோடு ஒருவர் வர, தன் பங்கு ரொட்டியை கணவன் அவரிடம் தந்தான். அது போதாமல் போகவே மனைவி, பின் மகன், பின் மருமகள் என நால்வரும் தம் பங்கு ரொட்டியை, பசியோடு வந்தவருக்கு முழுமையாக விட்டுக் கொடுத்த அந்த வீட்டில் சிதறிய சிறு மாவின் மீது நான் நகர்ந்தபோது என் பாதி உடல் தங்கமாகியது’’ என்றது கீரி. அதைக் கேட்ட தர்மபுத்திரர் அயர்ந்து போனார். ‘தானே எல்லாம்’ என்ற தற்பெருமை அப்போதே அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற கதையை மகாபாரதம் பேசுகிறது.

சீனப் பாரம்பரிய சமயத்தையும் மகாபாரதத்தையும் இணைக்கும் புனித சரடு எது? உன் மதம் பெரிதா? என் மதம் பெரிதா? உன் கோயில் உயர்ந்ததா? என் கோயில் உயர்ந்ததா? முதல் மரியாதை எனக்கா? உனக்கா? எது முதலில் வந்தது? எது பின்னால் சேர்ந்தது - ஆயிரம் சர்ச்சைகள் நமக்குள். எல்லா மதங்கள், எல்லா நம்பிக்கைகள், எல்லா கலாசாரங்களும் சொல்லும் அடிப்படை உண்மைகள் மிக எளியவை. மிக அடிப்படையானவை. ஒரு சிறு ஊற்றிலிருந்து கிளம்பும் வேறு வேறு பேரருவிகள். ஒன்று பரம்பொருள். நாம் அதன் மக்கள். உலகின்பக் கேணி என்றான் மகாகவி. எந்த வீட்டில் இருந்தாலும் தாய் ஒன்றுதான். எந்தக் கோயிலுக்குப் போனாலும் கடவுள் ஒன்றுதான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum